Saturday, February 11, 2012

மூளை - நம்பிக்கைகளின் மூலம்

கார்-எஞ்சின் எப்படி வேலை செய்கின்றது என்பதை அறியாமல், நாம் கார் ஓட்ட கற்றுக் கொள்ள முடியும். அது போலவே, எப்படி நம்-மூளை கற்கின்றது... சிந்திக்கின்றது என்பதை அறியாமல் நாம் கற்றுக் கொள்கின்றோம்... சிந்திக்கின்றோம். மூளை என்பது ஒரு கற்றுக் கொள்ளும் எந்திரம். சிறுவயது முதல், அது படிப்படியாக சிறுகச்சிறுக கற்றுக் கொள்கின்றது. இவ்வாறே நாம் கேட்க, பார்க்க, பேச. நடக்க, ஓட, சிந்திக்க, பகுத்து-அறிய என பலவற்றை கற்றுக் கொள்கின்றோம். நாம் எப்படி கற்றுக் கொள்கின்றோம் என்பதை இரு முக்கிய காரணிகள் நிர்ணயிக்கின்றன. நம் ஜீன்கள், நாம் வளர்ந்த/வாழும் சூழல். இதில் இரு முக்கிய சூழல்கள் உள்ளன: சிறுவயதில் நெருங்கிய பந்தங்கள், பிற்பாடு நாம் வாழும் சமூகம். சிறுவயதில் பதிந்து போனவை பசுமரத்தில் அடித்த ஆணி போன்றது தான்; பிறகு மாற்றுவது எளிதல்ல.

மூளை எப்படி கற்று கொள்கின்றது?

மூளை என்பது நரம்பு-செல்கள் (Neurons) பிணையப்பட்ட வலை (Neural Network). நாம் கற்கும்போது, புதிய நரம்பு-செல்-இணைப்புகளை உருவாக்கியோ அல்லது இணைப்புகளின் பலத்தை கூட்டியோ/குறைத்தோ நம் மூளை கற்றுக் கொள்கின்றது. இவ்வாறு புலன்கள் மூலமாக செல்லும் உலக விசயங்களை கொண்டு, மூளை மாதிரிகளை (Models) உருவாக்குகின்றது. இதில் ஒரு மாதிரியின் பலம் அல்லது நம்பிக்கை அதன் நிகழ்தகவை பொருத்தது. நாம் கற்று கொள்ளும்போது, அந்த மாதிரியின் நம்பிக்கை-நிகழ்தகவு அதிகரிக்கவோ, குறையவோ செய்யும்.

இந்த மாதிரிகளைக் கொண்டே, நாம் வாழ்க்கையை/உலகைப் புரிந்து/கணித்து வாழ்கின்றோம். புலன்கள் மூலமாக மூளைக்கு செல்லும் எந்த விடயங்களும் உலகைப் பற்றிய முழுமை அல்ல. அந்த முழுமையற்ற விடயங்களிலிருந்து மூளை ஒரு மாதிரியை (அறிவியல் தியரி போல்) உருவாக்கி, உலகை... வாழ்க்கையைப் புரிந்து... கணிப்பதையே அறிவு என்கின்றோம். அனைத்துமே முழுமையற்று இருப்பதால், அனைத்துமே நம்பிக்கை தான்; நம்பிக்கையின் நிகழ்தகவு வேறாக இருக்கலாம்; 100% நிச்சயம் என்று ஒன்றும் இல்லை. ஒவ்வொருவரின் மூடநம்பிக்கையும், அவரின் மூளையின்படி நம்பிக்கையே. ஆக, நம் நம்பிக்கை தற்சார்புடையது (Subjective). எனவே தான், பாரபட்சமற்ற வெளிசார்புடைய (Objective) ஆராய்ச்சி (அறிவியல்) தேவைப்படு கின்றது. அதைத் தான், கலிலியோ உட்பட பல அறிஞர்கள் நமக்கு காட்டினர். ஆனால், அதை எப்படி எல்லோருக்கும் நம்ப/புரிய வைப்பது?

எந்த ஒன்றும், பரிணாம வளர்ச்சி அடைய சில முக்கிய அம்சங்கள் உண்டு: (1) அதை சேமிக்க இடம் (Storage); (2) அதை நகல்கள் எடுத்தல் (Genes) இருக்கும்/சேமித்த இடம் DNA; அதன் நகல் எடுத்தலை இனப்பெருக்கம் என்றும் அதன் பிழைகளை மரபு-பிழைகள் என்கின்றோம். பரிணாம வளர்ச்சிக்கு நல்லது கெட்டதெல்லாம் தெரியாது; சூழலுக்கு ஏற்ப தக்கவைகள் பிழைத்து வளர்ச்சி அடையும். பரிணாம வளர்ச்சிக்கு மற்றொரு உதாரணம் மெம்கள் (Memes). மெம் என்பது ஒரு யோசனையைக் (Idea) குறிக்கும். கடவுள், மதம், அறிவியல், ஜாதகம், கலாச்சாரம், ஜாதி... இவை எல்லாம் மெம்கள் தான். இவை இருக்கும்/சேமித்த இடம் மூளை. இவை ஒரு மூளையிலிருந்து மற்றொன்றிக்கு காலகாலமாக மொழி, கலாச்சாரம் மூலம் பரவுகின்றது அல்லது நகல் எடுக்கப்படுகின்றது.

ஜீன்களைப் போலவே செத்துப்போன மெம்கள் கோடான கோடி. செத்துப்போன கடவுள்களும் கோடான கோடி. இன்று பிழைத்திருக்கும் அனைத்து மெம்களும் ஏதாவது ஒரு வகையில் சூழலுக்கு ஏற்ப வளர்ச்சி அடைந்தவைகளே! அந்த சூழலில், பல மூடநம்பிக்கைகளுக்கு நம் உணர்ச்சிகள் (உணர்ச்சிகள் ஜீன்களின் பரிணாம வளர்ச்சி) முக்கிய காரணிகளாக இருக்கின்றன. மனிதனின் ஆரம்ப கட்டத்தில், அறியாமையும் பய-உணர்ச்சியும் பல மூடநம்பிக்கைகளுக்கு முக்கிய காரணிகளாக இருந்திருக்கலாம். மெம்கள் வளர்ச்சி அடைய தேர்ந்த மொழி மற்றும் கலாச்சாரம் தேவை என்பதாலே, அதைக் கொண்ட மனிதனிடத்தில் மூடநம்பிக்கைகளும், அறிவியல் வளர்ச்சிகளும் காணமுடிகின்றது; மற்ற விலங்குகளில் அவற்றை காண முடிவதில்லை.

பகுத்தறிவு என்பது (Critical Thinking), ஒவ்வொரு விடயத்தையும் சீர்தூக்கி வெளிசார்புடன் (Objective) கற்று, அதற்கு ஏற்ப நம்பிக்கை-நிகழ்தகவுகளை அமைப்பது. ஆனால், அந்த அறிவும் நாம் வளர்ந்த/வாழும் சூழல்களைப் பொருத்தது. முறையான பகுத்தறிவு இல்லாத போது, மூளை எளிதாக ஏமாந்து நம்பிக்கை-நிகழ்தகவுகளை வெளிசார்பு-அறிவுக்கு (Objective-Knowledge) எதிராக அமைப்பதை மூடநம்பிக்கை எனலாம். ஆனால், பகுத்தறிவு என்பது நம் மூளையின் அறிவு-பகுதியைப் மட்டுமே ஏற்பதல்ல, நம் உணர்ச்சி-பகுதியையும் ஏற்பது தான்! மானிட உணர்ச்சி களுக்கு வடிகாலாகவும், சமூதாய வளர்ச்சிக்காகவும் சில விடயங்களை கடைபிடிப்பதும் பகுத்தறிவு தான்! இறந்தவருக்கு அஞ்சலி செலுத்துவதும், நினைவு சின்னங்கள் எழுப்புவதும், பாடுவதும், கொண்டாடுவதும் பகுத்தறிவு தான். பகுத்தறிவு என்பது, நாம் எதை செய்தாலும் அதை புரிந்து கொண்டு செய்கின்றோமா அல்லது குருட்டுத்தனமாக செய்கின்றோமா என்பதில் தான் உள்ளது!

Courtesy to Dr.Ka.Mani

No comments: