Monday, February 13, 2012

ஒரு பொருளை நாம் பார்ப்பது எப்படி?

நிறம் என்பது என்ன? இது சாதாரணமான கேள்வியாகத் தோன்றினாலும், அதன் தேடலில் இயற்கையின் பல ஆழமான இரகசியங்கள் உண்டு. ஒளி என்பது என்ன? ஒரு பொருளை அறிவது எப்படி? நாம் பார்ப்பது எப்படி? போன்ற பல கேள்விகள் இதில் ஒளிந்துள்ளன.

ஒளி என்பது என்ன?

கடந்த நூற்றாண்டின் பெரும்பான்மையான இயற்பியல் ஆராய்ச்சிகள் ஒளியை சார்ந்தே இருந்தது. ஒளியைப் பற்றிய இந்த ஆராய்ச்சிகளின் விடை தான் இயற்கையின் அடிப்படை வேக-வரம்பு, மேக்ஸ்வெல் மின்காந்த அலை (Electromagnetic Wave) சமன்பாடு, ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் (Relativity), குவாண்டம் இயக்கவியல் (Quantum Mechanics), பொருள்-ஆற்றல் சமன்பாடு E=me2, முதலியவை!

ஆக, ஒளி என்பது என்ன? மேக்ஸ்வெல் சமன்பாட்டின்படி, அது மின்காந்த அலை. இன்னும் துல்லியமாகச் சொல்ல வேண்டுமானால், குவாண்டம் இயக்கவியலின் படி, அதுஃபோட்டான் (Photon) எனப்படும் ஒரு விசை (Force) அடிப்படைத் துகள் (Elementary Particle).

ஒளிக்கு பல பண்புகள் உண்டு. அதில் முக்கியமானவை: செறிவு (Intensity), அதிர்வெண் அல்லது அலைநீளம் (Frequencey or wavelength), முனைவாக்கம் (Polarization), முதலியவை. ஒளியின் அதிர்வெண் மிகச்சிறியது முதல் மிகப்பெரியது வரை இருக்கலாம். ஒளி அதன் அதிர்வெண் அடிப்படையில் பல்வேறு பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது. கீழே உள்ள படம் அதை அதிர்வெண் மற்றும் அலைநீளம் என இரண்டு அளவுகோல்களிலும் விளக்குகின்றது. ரேடியோ மற்றும் பார்க்கக்கூடிய ஒளி-பகுதி பெரிதுபடுத்தி காட்டப்பட்டுள்ளது. இப்படி பல பண்புகள் ஒளிக்கு இருந்தாலும், நிறம் என்பது உண்மையில் ஒளியின் பண்பல்ல!



ஒரு பொருளை அறிவது எப்படி?

எந்த ஒரு பொருளைப் பற்றி (வடிவம் என்ன? எங்கே உள்ளது? அதன் வேகம் என்ன?) அறியவேண்டுமானால், அதை விட மிகச்சிறிய துகள்களை அல்லது அலைகளை அனுப்பி, அதிலிருந்து பிரதிபலித்த துகள்களை/ அலைகளை கொண்டு கணிக்கலாம். அது எவ்விடங்களிலிருந்து பிரதிபலிப்பாகி உள்ளது, துகள்களின் பண்புகள் ஏதாவது மாறியுள்ளதா என்று பல்வேறு காரணிகளைக் கொண்டு கணிக்கலாம். உதாரணமாக, எலக்ட்ரான் நுண்ணோக்கியில் எலக்ட்ரான் துகள்களும், ரேடாரில் ஒளியும், சோனாரில் ஒலியலைகளும் பயனபடுத்தப்படுகின்றது. இது போலவே வௌவால்கள் ஒலியலைகளைப் பயன்படுத்தப் படுகின்றன.

பார்ப்பது என்பது உலகிலுள்ள பொருட்களை அறிவது தான். அதற்கு நாம் ஒளியை பயன்படுத்தினாலும் அவற்றை நம்மிடமிருந்து அனுப்புவதில்லை. அதனால் வெளிப்புற ஒளிமூலம் (சூரிய ஒளி) தேவைப்படுகின்றது. நாம் ஒளியை நம்மிடமிருந்து அனுப்பாததால், பிரதிபலிப்பாகி வர ஆன நேரத்தைக் கணிக்க முடியாது; எனவே பார்க்கும் பொருளின் தூரத்தையும் கணிக்க முடியாது. இதனால், நமக்கு இரண்டு கண்கள் தேவைப்படுகின்றது. பார்க்கும் பொருளிலிருந்து வரும் ஒளி அலைகள், இரு கண்களுக்கும் வெவ்வேறு கோணத்தில் வருவதை கொண்டு தூரத்தை கணிக்கலாம்.

கண்கள் ஒளியலைகளை உணரும் உறுப்புகள். அவ்வலைகளை மின்னலைகளாக மூளைக்கு அனுப்புகின்றன. அவற்றைக் கொண்டு, மூளை பல்வேறு வகையான பொருள்களை அறிகின்றன. இரு கண்களுக்கும் வெவ்வேறு கோணத்தில் வரும் ஒளியலையின் வித்தியாசங்களைக் கொண்டு, பொருட்களின் தூரங்களையும், அவை நகரம் வேகங்களையும் மூளை கணிக்கின்றது. ஒளியலையின் செறிவு, அதிர்வெண் போன்ற பண்புகளைக் கொண்டு மறைமுகமாக பொருட்களின் பண்புகளையும் மூளை கணிக்கின்றது. இப்படி கணிக்கப்பட்ட செய்திகளை, மூளை எண்களாக அட்டவணையிட்டுக் காட்டுவதில்லை. அதற்குப் பதில் வண்ணமயமான முப்பரிமாண (3D) மாதிரிகளாகக் காட்டுகின்றது.

முப்பரிமாண (3D) படம் எப்படி செயல்படுகின்றது?

ஒரு காட்சியை நம் இரு கண்கள் வெவ்வேறு கோணத்தில் பார்ப்பது போல், இரண்டு புகைப்படக் கருவிகள் (Cameras) கொண்டு படம் எடுக்க வேண்டும். இப்பொழுது முதல் புகைப்படக் கருவியின் படத்தை ஒரு கண்ணிற்கும், மற் றொன்றை அடுத்த கண்ணிற்கும் தனித்தனியாக கொடுத்தால் மூளை அதை முப்பரிமாணத்தில் (3D) காட்டும். ஆனால் திரையரங்கில் ஒரே திரையில் தான் இரண்டு புகைப்படக் கருவிகளின் படமும் திரையிடப்படுகின்றது. இதனால், இரண்டு படங் களும் இரண்டு கண்களுக்குச் செல்லும். இதை எப்படி தனித்தனியே அனுப்புவது? இதற்கு நம் மூளை பயன்படுத்தாத, ஒளியின் மற்றொரு பண்பான முனைவாக்கம் (Polarization) பயன் படுத்தப்படுகின்றது. முதல் புகைப்படக் கருவியின் படத்தை செங்குத்து-முனைவாக்கத்திலும். இரண்டாவது புகைபடக் கருவியின் படத்தை கிடைமட்டு-முனைவாக்கத்திலும் திரையிட வேண்டும். ஒரு கண்ணிற்கு செங்குத்தாகவும், மற்றொரு கண்ணிற்கு கிடைமட்டமாகவும் முனைவாக்கம் செய்யப்பட்ட கண்ணாடி அணிந்து பார்க்க வேண்டும். இப்பொழுது இரண்டு படங்களும் தனித்தனியாக இரண்டு கண்களுக்கும் செல்வதால் மூளை அதை முப்பரிமாணத்தில் (3D) காட்டும்.

நாம் பார்ப்பது எப்படி?

எந்த ஒன்றின் தகவல்களை வேறொரு முறையில் குறிப்பதை மாதிரி-குறியீடு எனலாம். உதாரணமாக, ஒலியை (பேச்சை அல்லது பாடலை) பதிவு- தகட்டில் (Record-Disk) சேமிக்கும்போது, பதிவு-தகட்டில் உள்ள மேடு-பள்ளங்கள் அவ்வொலியின் மாதிரி-குறியீடு. அதையே காந்த-தகட்டில் (Magnetic-Disk) சேமிக்கும்போது, அதன் காந்த-புலன்-வேறுபாடுகள் அவ்வொலியின் மாதிரி-குறியீடு. அதையே எண்மயப்படுத்தி (Digitize) கணினியில் சேமித்தால் அந்த கோப்பு (File) அவ்வொலியின் மாதிரி-குறியீடு. டி.என்.ஏ (DNA) நம் உடலின் மாதிரி –குறியீடு. இது போலவே, மூளை ஒவ்வொன்றிக்கும் மாதிரி-குறியீடுகளை உருவாக்கு கின்றது. இவ்வாறே, கண்களுக்கு வரும் ஒளி வண்ணமயமான முப்பரிமாண (3D) தோற்றமாகின்றது. அதில் ஒளியலையின் செறிவை வெளிச்சமாகவும், அதிர்வெண்களை நிறங்களாகவும் குறிக்கப்படுகிறது. (இது போன்ற மாதிரி- குறியீடுகள் மற்ற உணர்வுகளுக்கு உண்டு)

புகைப்படக் கருவி (Camera) ஒளியலை அப்படியே படம் பிடிகின்றது. அது பொருட்களை அறிவதில்லை. ஆனால், பார்ப்பது என்பது பொருட்களை, அதன் பண்புகளை அறிவது. அதை மூளை கற்க வேண்டும். நடப்பது, பேசுவது போன்றவை வெளியீடு (Output) விடயங்களாக இருப்பதால், நாம் கற்பது எளிதாகத் தெரிகின்றது. கேட்பது, பார்ப்பது, போன்றவை உள்ளீடு (Input) விடயங்களாக இருப்பதால், நாம் சிறுவயதில் கற்பது எளிதாகத் தெரிவதில்லை. ஆனால், அவற்றையும் மூளை சிறுகச் சிறுக படிப்படியாக கற்றுக் கொள்கின்றது.

உலகத்திலுள்ள பொருட்கள் அறிய, அதிலிருந்து மூளை அதன் மாதிரிகளை படிப்படியாக மூளையில் உருவாக்குகின்றது. அந்த மாதிரிகளை படிப்படியாக உருவாக்க, ஒவ்வொரு படியிலும் அதற்கு முன் மூளையில் உள்ள மாதிரிகளை, மூளை அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு மூளை மாதிரிகளை உருவாக்க வேண்டும்-இது மாதிரிகளுக்கான மாதிரி! மேலும் மாதிரிகளுக்கான மாதிரி வேண்டும்- இது ஒரு முடிவில்லா தொடர்ச்சி! இப்படி தொடர்ச்சியாக மாதிரிகளை உருவாக்காமல், மூளை ஒரு மாதிரியை அதன் மாதிரியாக பயன்படுத்தலாம்-இது ஒரு வினோதமான சுழற்சி. இது கணினியின் தன்-மீள்சுரூள்-நிரல்களை (Self Recursive Programs) ஒத்து இருக்கலாம்.

இப்படி மூளை தன் மாதிரிகளை தானே நோக்குவதையே (தன்-மீள்சுருளாக), நாம் பார்ப்பதாக உணருகின்றோம். இது தான் நனவுநிலையின் (Consciousness) அடிப்படை. இந்த நனவுநிலை தான், இன்ப உணர்வு, வலி உணர்வு, காதல் உணர்வு, சுய உணர்வு என நம்முடைய அனைத்து உணர்வுகளுக்கும் காரணம். இந்த நனவுநிலை தான், காதுகளுக்கு வரும் ஒலியை சத்தமாகவும், நாக்கிற்கு வரும் சில வேதியல்-மூலக்கூறுகளின் செய்தியை சுவையாகவும், மூக்கிற்கு வரும் சில வேதியல்-மூலக்கூறுகளின் செய்தியை மணமாகவும், உடலின் அழுத்தங்கள் பரிசமாகவும் உணர வைக்கின்றன! இந்த உணர்வுகளுக்கு வெளி உலகத் தூண்டல்கள் அவசியம் இல்லை. மூளை அதன் மாதிரி குறியீடுகளைக் கொண்டு, எந்த உணர்ச்சிகளையும் நேரடியாக உருவகப்படுத்த முடியும். அப்படித் தான் நாம் கனவுகளில் பார்க்கின்றோம்.

இது மூளை உருவாக்கும் ஒரு வகையான வினோத மெய்நிகர் உலகம் (Virtual World)! இந்த மெய்நிகர் உலகில் தான், நம்முடைய அனைத்து உணர்வுகளும் உள்ளது.

நன்றி: முனைவர் க.மணி

No comments: