Friday, February 10, 2012

காற்று மண்டலத்தில் மாசுகள்

சென்னை போன்ற மாநகரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோரில் சிலர் தலைக்கவசம் மட்டுமின்றி மூக்கு வரை முகத்தை மூடிக்கொண்டு செல்வதைப் பார்க்க முடியும். அவர்கள் முகமூடிக் கொள்ளையர்களோ, பயங்கரவாதிகளோ அல்ல. சுற்றுப்புற மாசுகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே இப்படி முகத்தை மூடிக்கொள்ள வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டு விடுகிறது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து சிக்னல் களில் நிற்கும்போது, நூற்றுக்கணக்கான வாகனங்களிலிருந்து கிளம்பும் புகை பலரை மூச்சுத் திணறடிக்கிறது. ஆனால் அன்றாடம் வாழ்க்கைப் போராட்டத்தை நடத்தும் அவர்கள், இதையெல்லாம் பார்த்தால் தங்கள் பணியை நிறை வேற்ற முடியுமா? காற்று மண்டலத்தில் உள்ள தூசுகளும் மாசுகளும் உடல் நலத்திற்குக் கேடு விளைவிப்பவை என்று தெரிந்தாலும் பலர் அதைப் பொருட்படுத்துவதில்லை. பொருட்படுத்த முடிவதில்லை.

குளிர்பருவத்து இரவுகளில் சென்னை போன்ற கடற்கரையோர நகரங்களில் காற்றில் ஈரத்தன்மை அதிகரித்து, தூசுகள் அப்படியே தங்கிவிடுகின்றன. சாலைகளிலிருந்து கிளம்பும் புழுதி, வாகனங்கள் வெளியிடும் புகை காரணமாக காற்று மண்டலத்தில் தூசுகளும் மாசுகளும் சேருகின்றன. தூசுகளின் அளவைக் குறைக்க சாலைகளை நன்கு பெருக்கி, நீர்விட்டுக் கழுவிவிட வேண்டும் என்று சென்னை ஐ.ஐ.டி. நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக பரிந்துரைத்தது. ஆனால் மாநகராட்சியை அசைப்பது அவ்வளவு எளிதா என்ன?

தற்போது தெருக்கூட்டும் இயந்திரங்களை வாங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. இந்த இயந்திரங்கள் குடியிருப்போர் உள்ள சாலைகளிலும் உலா வருமா என்பது தெரியவில்லை. அங்கெல்லாம் வீடுகளுக்கு வெளியே பொருத்தப்படும் கண்ணாடிகளி லும் சுவர்களிலும் சாலைப்புழுதி படிந்து அசுத்தமாகி விடுகிறது. அதைச் சுத்தம் செய்ய வேண்டியது அவரவர் பாடு. சாலைகள் கிளப்பும் தூசுகள் அனைவரையும் பாதித்தாலும், கூடுதல் பாதிப்பு குழந்தைகளுக்கும் முதியோருக்கும்தான். சுற்றுப்புற மாசுகள் அதிகம் உள்ள தெருக்களில் நடைப்பயிற்சி செல்வோருக்கு சுத்தமான காற்று எங்கிருந்து கிடைக்கும்? உடற்பயிற்சிக்குப் போய் உபத்திரவத்தை வாங்கிவருவதுதான் மிஞ்சும்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சாலைகளில் சேரும் தூசுகளின் அளவைக் கண்காணித்தாக வேண் டும். கண்காணிப்பு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். ஒரு சில வாகனங்கள் நம்மைக் கடந்து சென்ற பிறகு அந்த வாகனமே கண்ணுக்குத் தெரியாத அளவில் அது கிளப்பும் புகை நம்மைச் சூழ்ந்து கொள்கிறது. நம்மை இடித்துவிட்டுத் தள்ளிவிட்டுச் சென்றால் கூட, அப்படிப்பட்ட வாகனங்களின் நம்பர் பிளேட்டைப் பார்ப்பது சாத்தியமே இல்லை. இப்படிப் பட்ட வாகனங்களை சாலைகளில் செல்ல அரசு அனுமதிக்கலாமா? சென்னையில் வாகனப் புகையைச் சோதிப்பதற்கு 1997-ல் 130 மையங்கள் இருந்தன. தற்போது 30 மையங்களாகக் குறைந்துவிட்டன.

போக்குவரத்து நெருக்கடி, நெருக்கடியின் காரணமாக மெல்ல மெல்ல ஊர்ந்து செல்லும் வாகனங்களிலிருந்து, கிளம்பும் கூடுதல் புகை, மெட்ரோ ரயில் பணி, குறுகலான சாலைகள் போன்ற காரணிகளால் சென்னை மாநகரில் தூசுகளின் அளவு மிகவும் கூடிவிட்டது. தும்மல், ஆஸ்துமா போன்ற பாதிப்புகளுக்கு டீசல் புகை முக்கியக் காரணமாக அமைகிறது. மூக்குச் சவ்வு வீக்கம், ஆஸ்துமா, மூச்சுக் குழல் பிரச்சனைகள், சுவாச உறுப்புகளில் பாதிப்பு, நுரையீரல் நோய்கள் போன்ற பல்வேறு உபாதைகளோடு நோயாளிகள் மருத்துவமனைகளை நாடுவது அன்றாடம் அதிகரித்து வருகிறது. கண், மூக்கு, தொண்டை, மார்புப் பகுதி மருத்துவர்கள் காற்றில் மாசுகள் அதிகரித்ததுதான் இதற்குக் காரணம் என்கின்றனர். முன்பு தீபா வளியை ஒட்டி வரும் இப்படிப்பட்ட நோயாளிகள் வருடம் முழுவதுமே வரத் தொடங்கிவிட்டனர் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தூசுகள், மாசுகள் நிரம்பிய காற்றைத் தொடர்ந்து சுவாசிப்பது உடல் நலத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. தில்லியில் வாகனங்கள் இயற்கை எரிவாயு உருளைகளைப் பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கிய பிறகு காற்று மண்டலத்தில் மாசுகள் கணிசமாகக் குறைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிற நகரங்களிலும் தொழில்நுட்ப ரீதியாக மாசுகளைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சிகளும் உள்ளாட்சி அமைப்புகளும் உடனடியாக எடுத்தாக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

தீக்கதிர்

No comments: