வீட்டைவிட்டு வெளியே தெருவிற்கு வந்து, நடந்தோமானால் நமக்கு சுவாசிப்பதே மிகவும் சிரமமாக ஆகிவிடுகிறது. தொடர்ந்து செல்லும் நான்கு சக்கர வாகனங்களும், இரண்டு சக்கர வாகனங்களும், ஆட்டோக்களும், டிராக்டர்களும் வெளிவிடும் புகை காரணமாக, நாம் சுவாசிக்கவே முடியவில்லை. மேலும் தூசியும் ஓரங்களில் ஓடும் கழிவு நீர்களின் துர்நாற்றமும், பிளாட்பாரம் நடுவில் நிறுத்தப்பட்டுள்ள தள்ளுவண்டியில், கோழி இறைச்சி, மீன் முதலியவற்றை எண்ணையில் வறுத்தெடுக்கும் நெடியும் சேர்ந்து அதன் கழிவுநீரை ரோட்டின் நடுவில் கொட்டுதலும் சேர்ந்து, நம்மை பயமுறுத்துகிறது. வெளியில் சென்ற நாம் நம் வேலைகளை விரைவில் முடித்து, வீடு திரும்பினால் போதும் என்று ஆகிவிடுகிறது.
பருவநிலை மாற்றத்தால் நாட்டின் சில பகுதிகளில் அதிக மழை பெய்து வெள்ளக்காடாக பெருகி, விவசாயத்தை அழித்து மக்களுக்கு உண்ண உணவு கூட கிடைக்காமல் செய்து விடுகிறது. சில நேரங்களில் தேவையான அளவு கூட மழை பெய்யாமல் வறட்சியாக்கி, நீருக்காக நெடுந்தூரம் அலைய வேண்டியதாய் ஆகிவிடு கிறது. மனித குலத்திற்கு கிடைக்கவேண்டிய நீரின் அளவும் குறைய ஆரம்பித்துவிட்டது. பூமி உருண்டையும் வெப்பம் அடைய ஆரம்பித்து விட்டது. தொழிற்சாலையிலிருந்து வெளியிடும் புகையும், கழிவு நீரும், வானத்தையும், நிலத்தையும் நஞ்சாக மாற்றிக் கொண்டேயிருக்கிறது. அணு ஆயுத கழிவுகள், யுரேனிய தாது கழிவுகளும் வளி மண்டலத்தையும், கடல் நீரையும் கெடுத்துக் கொண்டே வருகிறது. நம் பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தையும் தாண்டி, பூமிக்கு பாதுகாப்பாக இருக்கும் ஓசான் மண்டலத்தில் ஓட்டை விழுந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அந்த துவாரத்தின் வழியாக அல்ட்ரா வயலட் கதிர்களும், இன்பரா ரெட் கதிர்களும், பூமியை தாக்குகின்றன. அதனால் மனிதனுக்கு தோல் புற்று நோயும், உடல் பாதிப்புகளும் ஏற்பட போகின்றன என்று எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
முதலில் நாம் உயிர்வாழ நல்ல சுத்தமான காற்றாவது வேண்டாமா? நல்ல பிராணவாயு நிறைந்த காற்றை சுவாசித்தால்தானே, அதை நம் உடல் ஏற்று, ரத்தம் சுத்தமடைந்து, அதிலுள்ள கழிவுகளை கரியமில வாயுவாக மாற்றி, நம் உடலானது நம் நாசிகள் மூலம் வெளியேற்ற முடியும்!
மக்கட்தொகை பெருகி, ஜனநெருக்கம் அதிகம் ஆகும்பொழுது அத்தனை மக்களும், உயிர் வாழ் பிராணிகள், மிருகங்கள் அனைத்தும் சேர்ந்து மூச்சுவிடும் பொழுது வெளியேற்றும் கரியமில வாயு, காற்றில் கலந்து, அந்த பகுதியில் உள்ள காற்று மாசு படாதா! என்று எண்ணத் தோன்றும்.
செடி கொடிகளும், மரங்களின் இலைகளும் சுவாசிக்கின்றன. ஆனால் அவைகள் காற்றில் உள்ள கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு, நல்ல பிராணவாயுவை வெளியிடுகின்றன. இதனால் காற்றில் கரியமில வாயு குறைந்து, பிராண வாயு அதிகரிக்கிறது. இயற்கை, இப்படி ஒரு சமன்பாட்டு நிலைமை ஏற்படுத்துகிறது! இதனை எத்தனை பேர் உணருகிறார்கள். இதனால்தான் காட்டை அழிக்கக் கூடாது என்ற இயக்கம் தோன்றியது. மழை வரவழைக்க மரம் நடுவிழா நடத்த வேண்டும் என்று மக்கள் நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
மழை நிறைய பெய்தால், மண்ணில் நிறைய செடி கொடிகள், புல்பூண்டுகள் தழைத்து வளரும்.
ஒவ்வொரு சிறுசெடியும், புல்லு கூட, அதிலுள்ள இலைகளால் கரியமில வாயுவை உறிஞ்சி, பிராண வாயுவை வெளியிடுகிறது. சிறுதுளி பெரு வெள்ளம் என்பது போல, அது காற்றோடு கலந்து நம்மை வாழ வைக்கிறது.
டாக்டர்கள் கூட மக்களை அதிகாலை வேளைகளில் வெறும் காலால் புல்வெளியில் நடந்து செல்லுங்கள் என்று கூறுகிறார்கள். செருப்பு அணியாமல் வெறும் கால்களால் காலை வேளைகளில் புல்தரைகளில் நடந்து செல்லும் பொழுது அதில் படிந்திருக்கும் பனித்துளிகள் கால் பாதங்களில் பட நமக்கு புத்துணர்வு ஏற்படுகிறது. அப்பொழுது புல்லின் நறுமணத்துடன் அவை வெளியிடும் பிராண வாயுவையும் நாம் சுவாசிக் கின்றோம். அந்த காற்று நம்மை புத்துணர்வு கொள்ள வைக்கிறது. உள்ளத்தில் உவகை உண்டாகி உற்சாகம், சுறுசுறுப்பு ஏற்படுகிறது.
செடி, கொடிகள், மரங்கள் உருவாக்குவதற்கு நம் வீட்டைச் சுற்றி இடம் இல்லாவிட்டாலும், வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும், வீட்டைச் சுற்றியும், மொட்டை மாடியிலாவது தொட்டிகள் வைத்து செடிகளை வளர்க்க வேண்டும் என்ற எண்ணங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. சிலரது வீட்டு வரவேற்பறையில் நிறைய தொட்டிகளை வைத்து அழகான செடிகளை வளர்க்கிறார்கள். அழகுக்காக இருந்தாலும், அவை ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. மிக ரம்மியமான சூழல் அங்கு நிலவுகிறது. நம் வீட்டிற்குள்ளேயும் வெளியிலும் உருவாகும் அசுத்தமான காற்று, தொட்டியில் வளர்க்கப்படும் செடி கொடிகளால் உறிஞ்சப்பட்டு பிராண வாயுவாக வெளியிடட்டும் வீட்டிற்குள் ளேயே! நமக்கு நல்ல பிராண வாயு கிடைக்கட்டும்!
நம் சூரிய மண்டலத்தில், பூமியைச் சுற்றியுள்ள எந்த கிரகத்திலும் நீர் இல்லை. அதனால் அங்கு தாவரங்கள் உண்டாகவில்லை. நீர் இருந்திருந்தால், பாசி பச்சை படர்ந்து செடி கொடிகள் மரங்கள் உருவாகியிருக்கும். மரங்கள் உருவாகியிருந்தால், அதன் இலைகள் அங்குள்ளநச்சுகாற்றை உறிஞ்சி, பிராண வாயு வெளியிட்டிருக்கும். சந்திரனுக்கு போய் இறங்கிய மனிதன் கூட பிராண வாயுவை உருவாக்கி மூச்சு விடுவதற் காக தலைக் கவசம் அணிந்து சென்றுதான் ஆராய்ச்சி செய்தான்.
பிராணவாயுவை தாவரங்களினால் மட்டுமே உருவாக்க முடியும் இயற்கையாக!
சிறுதொழில்கள் மூலமாக பலவித கைத் தொழில் பொருட்கள் செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, பணம் கொழிக்கும் நாடாக முன்னேறிய நாடு ஜப்பான். அந்த நாட்டில் எரிமலை சீற்றங்களால் சுற்றுச்சூழல் காற்று மாசடைந்து வருகிறது. மேலும் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குடிசைத் தொழிலாக ஏதோ ஒரு பொருள் செய்வதற்காக, மூலப்பொருளை உஷ்ணமாக்கி, உருவாக்கி வடிவமைத்து செய்து கொண்டிருக்கிறார்கள். அதன்மூலம் வெப்பத்தையும், கழிவு பொருளின் நாற்றத்தையும் புகை போக்கி மூலமாக வானத்தில் விடப்படுகிறது. அதனால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இதனால் ஜப்பானில் பல முக்கிய நகரங்களில் பல இடங்களில் ஆக்ஸிஜன் பார்லர்கள் உள்ளன. அங்குள்ள மக்கள் பார்லருக்கு சென்று பணம் கொடுத்து சுத்தமான காற்றை சுவாசித்துவிட்டு வருகிறார்கள். முதன்முதலில் பொது இடத்தில் ஆக்ஸிஜன் பார்லர்கள் அமைத்தவர்கள் ஜப்பானியர்களே!
இன்று நம்நாட்டிலும் பம்பாய் போன்ற நகரங்களில் ஆக்ஸிஜன் பார்லர்கள் உள்ளன. நாமும் அந்த பார்லர்களில் போய் பணம் கொடுத்து, சுத்தமான ஆக்ஸிஜனை சுவாசித்து புத்துணர்ச்சி பெறலாம்.
இப்பொழுது நம்நாட்டில் சுத்தமான தண்ணீர் தேவைக்கு மினரல் வாட்டர் கேன், பாட்டில் நீர் விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இன்னும் சில ஆண்டுகள் கழித்து காற்றையும் விலை கொடுத்து வாங்கி சுவாசிக்க வேண்டிவரும். வீட்டில் ஒவ்வொரு அறைக்கும் குழாய்கள் பதித்து, அதில் ரெகுலேட்டர் பொருத்தி, ஆக்ஸிஜன் சிலிண்டர் வாங்கி இணைத்து, நல்ல காற்றை திறந்து, அறை முழுவதும் நிறைத்து சுவாசிக்க வேண்டி வரும்!
நம் வீட்டு அருகில் செடி கொடி தாவரங்கள் நிறைய வளர்ப்போம். வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும், திறந்தவெளி மாடியிலும் தொட்டி களில் செடிகளை அதிகமாக வளரச் செய்வோம். நம்வீட்டில் நாம் ஆரோக்கியமாக இருக்க, சுத்த மான பிராணவாயு கிடைக்க முயற்சி செய்வோம்.
மரம் நடுவோம், சுத்தமான ஆக்ஸிஜன் காற்றை உருவாக்கி சுவாசிப்போம்.
நன்றி: மாற்று மருத்துவம் இதழ்
1 comment:
//மரம் நடுவோம், சுத்தமான ஆக்ஸிஜன் காற்றை உருவாக்கி சுவாசிப்போம். //
நல்ல விழிப்புணர்வுள்ள பதிவு நண்பா. ஆனால் இங்கு ஒருத்தர் கூட கருத்துரை எழுதவில்லை என்பதை நினைத்து வருத்தமாக இருக்கிறது. இதுவே கவிதை அல்லது காமெடியா இருந்தால் ஆயிரத்தெட்டு பின்னூட்டம் வந்திருக்கும். என்ன கொடுமையான உலகமடா இது. மீண்டும் வாழ்த்துக்கள்.
http://panangoor.blogspot.com/2011/08/blog-post_05.html
Post a Comment