பேக் செய்யப்பட்ட உணவு பண்டங்களால், சிறுநீரகங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக, பாக்கெட்டுக்களில் அடைக்கப்பட்ட உணவுப் பண்டங்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். நேர விரயத்தை தவிர்ப்பதை தவிர, இந்த உணவுப் பண்டங்களால் வேறு பயன் இல்லை. மாறாக, உடலுக்கு தீங்கையே அவை விளைவிக்கின்றன என்று மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றன.
இதுகுறித்து, மும்பை மருத்துவ அறிவியல் மைய பேராசிரியர் டாக்டர் கிருபாளினி, மும்பை ஏசியன் இருதய மருத்துவமனையின் சிறுநீரகத்துறை மருத்துவர் உமேஷ்கண்ணா உள்ளிட்டோர் கூறியதாவது: பாக்கெட் செய்யப்படும் உணவு பண்டங்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்கும் கவர்ச்சியாக தெரிவதற்கும் அதில் செயற்கையான வண்ணக் கலவைகள், அதிகப்படியான உப்பு ரசாயன பவுடர்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன. அவைகள் மனித சிறுநீரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்தியாவில் சிறுநீரக நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் இரண்டு லட்சம் பேர் சிறுநீரகம் செயலிழப்பால் பாதிக்கப்படுகின்றனர். சிறுநீரக நோய்க்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மாறிவரும் உணவுப் பழக்கங்கள் முக்கிய காரணமாக உள்ளன. நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் தற்போது பாக்கெட்டுக்களில் அடைக்கப்பட்ட உணவுப் பண்டங்களை பயன்படுத்துகின்றனர். இந்த பண்டங்களில் எந்தவிதமான சத்துக்களும் இருப்பதில்லை.
மாறாக, உடலுக்கு தீங்கு இழைக்கக் கூடிய ரசாயனங்கள் தான் உள்ளன. மேலும், சிறுநீரகம் தொடர்பாக சிறுசிறு பாதிப்பு இருப்பவர்களுக்கும், இந்த உணவுப் பண்டங்கள் நோயை அதிகப்படுத்துகின்றன. சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் பாக்கெட் உணவுப் பொருட்களை அறவே தவிர்ப்பது நல்லது. பழங்கள், பழச்சாறுகள், காய்கறிகள் உள்ளிட்ட இயற்கை உணவு பொருட்களை எடுத்துக்கொள்வது நல்லது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
நன்றி: தினமலர்
No comments:
Post a Comment