Wednesday, August 17, 2011

மூன்றடுக்கு அணுஉலைத் திட்டம்... தேவை மறுபரிசீலனை

ஒரு அணு உலைக்குத் தரப்படும் எரி பொருளைவிடக் கூடுதலான எரிபொருளை அந்த உலையிலிருந்து பெற முடியு மானால், அது ஈனுலை என அழைக்கப்படுகிறது.

இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தில் 99 சதவீதத்திற்கு மேல் உள்ள யுரேனியம் 238-ன் மீது நியூட்ரான்கள் மோதும் போது புளூட்டோனியம் என்ற தனிமம் கிடைக்கிறது. தோரியம் 232 என்ற தனி மத்தின் மீது நியூட்ரான்கள் மோதும்போது யுரேனியம் 233 என்ற தனிமம் கிடைக் கிறது. புளூட்டோனியம், யுரேனியம் 233 ஆகிய இரு தனிமங்களும் யுரேனியம் 235-ஐப் போன்றவை. அதாவது, அவற்றின் அணுக்கருக்களைப் பிளந்து ஏராளமான சக்தியைப் பெற முடியும்.

உலகிலும் சரி, இந்தியாவிலும் சரி தோரியம் தாராளமாகக் கிடைக்கக் கூடிய ஒரு தனிமம். தோரியத்தையும் அணு உலையில் மீதமிருக்கும் எரிபொருளை யும் சரியான விகிதத்தில் பயன்படுத்தி னால், தோரியத்திலிருந்து யுரேனியம் 233, மீதமிருக்கும் எரிபொருளிலிருந்து புளூட்டோனியம் ஆகிய இரு தனிமங்கள் கிடைக்கும். அதிவேக இரட்டை ஈனுலை தயாரிப்பதற்கு இவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என மும்பை அணு ஆராய்ச்சி மைய (பி.ஏ.ஆ.ர்.சி) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தோரியத்தைப் பயன்படுத்தி அதிவேக இரட்டை ஈனுலை வடிவமைப்பை உலகிலேயே முதன்முதலாக உருவாக்கியவர்கள் பி.ஏ.ஆர்.சி விஞ்ஞானிகள்தாம்.

அணு உலையில் யுரேனியம் எரி பொருளாகப் பயன்படுத்தப்பட்ட பிறகு மீத மிருக்கும் எரிபொருளில் கழிவுப் பொருளுடன் புளூட்டோனியமும் கலந்திருக்கும். உலகில் உள்ள அதிவேக ஈனுலைகளில் - கல்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் உலையில் உட்பட - புளுட்டோனியம் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதற்குத் தேவையான அளவில் புளூட்டோனியம் கிடைப்பதற்கு யுரேனிய அணு உலைகளிலிருந்து புளூட்டோனியத்தைச் சிறிது சிறிதாகச் சேகரிக்க வேண்டியுள்ளது.

நம் நாட்டில் யுரேனிய இருப்பு 73,000 டன்கள் மட்டுமே என்று கணிக்கப்பட்டதால், இந்தியா மூன்றடுக்கு அணு உலைத் திட்டத்தை உருவாக்கியது. யுரேனிய இருப்பைக் கொண்டு 20,000 மெகாவாட் மின்சாரத்தை 30 ஆண்டுகளுக்கு உற்பத்தி செய்ய முடியும் என்பதால், முதல் கட்டத்தில் யுரேனியத்தை மட்டுமே எரிபொருளாகப் பயன்படுத்தி அதிக அழுத்த கனநீர் அணு உலைகளை அமைப்பது. இந்த உலைகளிலிருந்து உபபொருளாக புளூட்டோனியத்தைப் பெறுவது - என்றும்

இரண்டாவது கட்டமாக, அதிவேக ஈனுலைகளை உருவாக்குவது. இதற்கு யுரேனிய அணு உலைகளிலிருந்து கிடைக்கும் புளூட்டோனியத்தையும், யுரேனியம் 238-யும் எரிபொருட்களாகப் பயன்படுத்துவது. இந்த உலைகளிலிருந்து உபபொருளாக மேற்கொண்டு புளூட்டோனியத்தைப் பெறுவது - என்றும்

மூன்றாவது கட்டமாக தோரிய உலைகளை அமைப்பது - என்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

யுரேனியம், புளூட்டோனியம் ஆகிய இரு தனிமங்களைப் பயன்படுத்தி மின்சக்தியை உற்பத்தி செய்த பிறகு, தோரிய உலைகள் அமைப்பதை மூன்றாவது கட்டமாக வைத்துக் கொள்ளலாம் என்று நமது ஆட்சியாளர்களும் விஞ்ஞானிகளும் கருதியதால் இந்த மூன்றடுக்குத் திட்டம் உருவாக்கப்பட்டது.

ஆனால் தற்போது நிலைமை வெகுவாக மாறிவிட்டது. தோரிய உலைகளை அமைப்பதற்கு காலம் தாழ்த்த வேண்டிய அவசியம் இல்லை என்பதை பி.ஏ.ஆர்.சி. விஞ்ஞானிகள் நிரூபித்து விட்டனர். நம் நாட்டில் யுரேனிய இருப்பு குறைவு என்ற முடிவுக்கு அரசு வந்ததும் சரியல்ல. யுரேனியத்தைத் தேடி எடுக்க உளப்பூர்வமான முயற்சிகள் செய்தால் நம் நாட்டிலேயே கணிசமான அளவில் யுரேனியத்தைப் பெற முடியும். (விவரங்கள், நம்மிடம் யுரேனியம் இல்லையா? என்ற கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளன). அதோடு, அண்மையில் ஆந்திர மாநிலம் துமலப்பள்ளியில் கணிசமான யுரேனிய இருப்பு உள்ளதையும் நமது அணுசக்தித்துறை கண்டுபிடித்துள்ளது.

எனவே, அணு உலைகளே வேண்டாம் என ஜெர்மனி முடிவு செய்தது போலவும் நாம் முடிவு செய்யலாம். அல்லது அணு ஆற்றலைப் பயன்படுத்தி நமது மின்தேவையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என ஆட்சியாளர்கள் முடிவுக்கு வந்தாலும் யுரேனியத்திற்காகவோ அணு உலைகளுக்காகவோ நாம் பிற நாடுகளிடம் கையேந்த வேண்டிய அவசியம் இல்லை.

இந்தப் பிரச்சனை குறித்து பரவலான விழிப்பணர்வும் மக்கள் இயக்கங்களும் மலர வேண்டும். நம் நாட்டு விஞ்ஞானிகள் இதற்கு வழிகாட்ட வேண்டும்.

நன்றி: தீக்கதிர்

No comments: