“பாதுகாப்பான உணவைப் பெறுவது பற்றிய அச்சம் நிலவுவது இது முதல் முறையல்ல. ஜெர்மனியை ஈ கோலி என்ற ஆபத்தான நுண்ணுயிர் தாக்கி 25 பேருடைய உயிரைப் பறித் திருக்கிறது. 2300 பேரைப் பாதித்திருக்கிறது. உணவு கெட்டுப் போனதின் காரணத்தை அறிய முனைந்த ஜெர்மானிய உணவு ஆய்வாளர்கள், ஸ்பெயினிலிருந்து வந்த வெள்ளரியும், முளைவிட்ட பீன்ஸ் காய்களும்தான் இதற்குக் காரணம் என்று கருதுகின்றனர்.
பிரச்சனையின் ஆணிவேரை நாம் பார்க்க மறுப்பதால் இத்தகைய புலனாய்வுகளால் எந்தப் பலனும் இருக்கப் போவதில்லை. நமக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்வதிலும், அதைப் பாதுகாப்பதற்கான விதிகளை வகுத்துக் கொள்வதிலும் மிகவும் தவறான வழி முறைகள் பின்பற்றப்படுகின்றன என்ற உண்மையை நாம் பார்ப்பதில்லை.
கடந்த கால நெருக்கடிகளை நாம் சந்தித்த விதத்தை சற்று திரும்பிப் பார்ப்போம். 2005-ஆம் ஆண்டில் நாம் உட் கொண்ட கோழி இறைச்சியை ஏவியன் இன்ஃப்ளூயன்சா தாக்கியது. கலவரப் பட்ட உலகம் கோழிகளையும் காட்டுப் பறவைகளையும் கொன்று தள்ளியது. கோழி வர்த்தகம் உலகமயமாக்கப்பட்டதையோ, அது கோழி இறைச்சியை உணவாக அல்லாமல், ஆலை உற்பத்திப் பண்டமாக மாற்றிவிட்டதையோ பலர் புரிந்து கொள்ளவில்லை. உலக அள வில் உற்பத்தி செய்வது, அதன் விளைவாக உற்பத்திச் செலவைக் குறைப்பது, விற்பனையில் கொள்ளை லாபம் அடிப்பது ஆகியவை தற்போதைய உணவு வர்த்தக நடைமுறையாகி விட்டன. கோழிகள் நோய்வாய்ப்படுவதற்கும், அவற்றின் இறைச்சியை உண்பவர்கள் நோய்க் கிருமிகளால் தாக்கப்படுவதற்கும் இந்த உலகளாவிய உற்பத்தி முறையே காரணம்.
அடுத்து 2009-ல் இன்புளூயன்சா ஏ வைரசின் தாக்குதலுக்கு உள்ளானோம். இந்த நோய்க்கு பன்றிக் காய்ச்சல் எனப் பெயரிடப்பட்டது. வளரும் நாடுகளில் ஏழை-எளிய மக்களின் உணவாக இருப்பது பன்றி இறைச்சிதான். ஆனால் அந்த நாடுகளில் பன்றிகள் கூட்டம் கூட்ட மாகக் கொல்லப்பட்டன. இப்போதும் பெரிய பெரிய கம்பெனிகள் குற்றச்சாட்டிலிருந்து தப்பிவிட்டன. இந்தக் கம்பெனிகள் பன்றிகளை வளர்ப்பதற்கு ஆன்ட்டி பயாடிக்ஸ், ஹார்மோன்களிலிருந்து பல்வேறு உயிரிகள், தடுப்பு மருந்துகள் வரை பயன்படுத்துகின்றன. அது மட்டு மல்ல, சுகாதாரமற்ற சூழ்நிலைகளிலேயே அவை வளர்க்கப்படுகின்றன. இம்மாதிரி யான மோசடிகளையல்லவா நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும்?
`ஈ கோலி’ ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரை மட்டுமே தாக்கிய போதும், ஐரோப்பா முழுவதும் உள்ள விவசாயிகளையும் நுகர்வோரையும் அது உலுக்கி எடுத்துவிட்டது. காரணம், உணவு உற்பத்தி என்பது இன்று உள்ளூர் சமாச்சாரம் அல்ல. தேசிய வர்த்தகம் கூட அல்ல. உற் பத்தி ஓரிடத்தில், பெட்டிகளில் அடைப்பது இன்னொரு நாட்டில், பதப்படுத்துவது வேறொரு நாட்டில் எனத் தயாரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் உள்ள சூப்பர்மார்க்கெட்டுகளில் வந்து இடம் பிடிக்கிறது உணவுப் பொருள். இப்படி பெரிய அளவில் நடத்தப்படுவதால் லாபம் கொழிக்கும் வர்த்தகமாக அது ஆகிவிட்டது. மக்கள் உடல்நலத்தைப் பற்றி இந்த உணவு வர்த்தகர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. இந்த வர்த்தகத்தை முறைப்படுத்தக் கொண்டுவரப்படும் கட்டுப்பாடுகள், இந்த மோசடியான உற்பத்தித் துறையை மேலும் வளர்த்துவிடும் திருப்பணியையே செய்கின்றன. சிறிய அளவில் உணவு உற்பத்தியில் ஈடுபடுவோர் செலவினங்களைத் தாக்குப் பிடிக்க முடியாமல் இந்த பந்தயத்திலிருந்தே விலகி விடுகின்றனர்.
மக்கள் உடல்நலனைப் பேண வேண்டுமெனில், உணவை உணவாகப் பார்க்க வேண்டுமே தவிர, வர்த்தகமாக அல்ல. சிறிய உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். நுகர்வோர் என்ற முறையில் இந்த விளைபொருளுக்கு சற்று கூடுதல் விலை கொடுக்கக் கூட நாம் தயாராக வேண்டும். மலிவானது என்பதற்காக விஷத்தை வாங்கி உட்கொள்ள முடியாதல்லவா? நமது உடல் நலனைக் கருத்தில் கொண்டு, அருகாமையில் விளைவிக்கப்பட்ட, வீட்டில் சமைக்கப்பட்ட, பருவ நிலைக்கேற்ற உணவுப் பொருட்களைச் சார்ந்திருக்கும் வகையில் நமது உணவுக் கலாச்சாரத்தை நாம் மாற்றிக் கொண்டாக வேண்டும்.
நன்றி: தீக்கதிர்
No comments:
Post a Comment