அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி பல்வேறு நாடுகளையும் பாதித்துள்ளது என்பது நாமறிந்த விஷயம். இதே போன்ற பிரச்சனைகள் பல ஐரோப்பிய நாடுகளையும் உலுக்கியது. தரங்கெட்ட பொருளாதார கொள்கைகளால் மக்களின் வாழ்நிலையில் பெரும் பாதிப்புகள் உண்டானது. இப்படிப்பட்ட பாதிப்புகளிலிருந்து மக்கள் மட்டுமல்ல, நாடே திவாலாகிப் போனது என்றால் அது கிரீஸ் தான்.
பொருளாதார நிர்மூல நிலைக்கு சென்ற கிரீஸ் நாட்டில் சர்வதேச நிதி நிறுவனமும் ஐரோப்பிய யூனியனும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை கொண்டு வந்ததின் விளைவாக, அந்நாட்டின் வாழ்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டிலுள்ள 18 வயதிலிருந்து 24 வயதிற்குட்பட்டவர்கள் பெரும்பான்மையானவர்கள் வேலை யில்லாதவர்களாக மாறியுள்ளனர். 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் பகுதி நேர ஊழியர்களாக, நிரந்தரமற்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். கூடுதல் வேலை நேரத்தில் பணியாற்றி சிறு தொகையை ஊக்கமாக பெறுகின்றனர். இப்படி கஷ்டப்பட்டு செய்யும் வேலை எத்தனை நாட்களுக்கு என்பது அவர்களுக்கே தெரியாது.
சம்பளம் வேகமாக குறைக்கப்படுகின்றது. ஏன் குறைக்கப்படுகின்றது என்று கேள்வி கேட்க தொழிற்சங்கங்கள் இல்லை; வேலை நிறுத்தம் செய்ய முடியாது எனும் நிலை.
மக்கள் கூடி நின்று பேச முடியாது. சம்பளம் சரியான நேரத்தில் கொடுக்கப்பட வேண்டும் என தொழிலாளர்கள் கேட்க முடியாது. விடுமுறை என்பது எல்லாம் மறந்துபோகும் நிலை. நோயுற்றால், மீண்டும் வேலையில் சேர்வது மிகச்சிரமம்.
தற்போது உள்ள தலைமுறையினர் ஆசைப்பட்டு எதையும் வாங்க முடியாமல், எதிர்காலமே இருண்டுவிட்டது என எண்ணத் துவங்கிவிட்டனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள தலைகீழ் மாற்றம்
சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் கடைப்பிடிக்கப்படும் பொருளாதார நடவடிக்கைகளை மக்கள் மனதளவில் ஏற்கமறுக்கிறார்கள். தற்போது பெரும்பாலான கிரேக்க மக்கள் தொலைக் காட்சிகளில் செய்திகளை பார்ப்பதேயில்லை. தங்கள் நாட்டில் மட்டும் ஏன் இப்படி நடக்கின்றது என்பதை மட்டும் தீவிரமாக யோசிக்கின்றனர்.
தங்கள் குடும்பத்தினர் - உற்றார் உறவினர், நண்பர்களிடத்தில் இதைப் பற்றியே பேசுகின்றனர்.
எல்லோரிடத்திலும் இந்த சிக்கன நடவடிக்கைகள் தேவையற்றது என்ற பொதுக்கருத்தும், இந்த பொருளாதார நெருக்கடி எங்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது என்றும் கருதுகின்றனர்.
கிரேக்க தேசத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மக்கள் முந்தைய காலங்களில் தேவையற்ற-அளவுக்கு அதிகமான செலவுகளை செய்தார்கள் எனும் குற்றச்சாட்டு அரசால் முன்வைக் கப்படுகின்றது. ஆனால் நிலையை உன்னிப்பாக கவனித்தவர்கள் அரசின் குற்றச்சாட்டை வன்மையாக மறுக்கின்றனர். ஏனென்றால், அப்படி செலவு செய்வதற்கு அம்மக்களிடத்தில் பெரும் அளவுக்கு பணப்புழக்கம் இல்லை.
கடந்த ஓராண்டாக, பொருளாதார நெருக்கடி கிரீஸ் நாட்டை வாட்டத் துவங்கியதிலிருந்து, கதைகளாக சொல்லப்பட்டவை எல்லாம் உண்மை நிலைகளாக மாறி வருகின்றது.
வீடற்றவர்கள் - மூன்று வேளை உணவு கிடைக்காதவர்கள் குப்பைத் தொட்டிகளை தேடிச்செல்லும் அவல நிலை, பிரச்சனைகளுக்காக போராடும் மக்களை தாக்கும் காவல் மற்றும் ராணுவம், மூடியுள்ள பள்ளிக்கூடங்கள், இயங்காத மருத்துவமனைகள், கிட்டத்தட்ட அந்நாட்டில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் முற்றிலுமாக வேலை இழந்துள்ளார்கள்.
இது மட்டுமல்லாமல், ஊடகங்களின் பணி முடக்கப்பட்டு, பத்திரிகையாளர்கள் கடும் தணிக்கைக்குள்ளாக்கப்பட்டு, கிரேக்க நாட்டின் பிரச்சனைகள் எதுவும் வெளி உலகுக்கு தெரியக்கூடாது என்னும் எண்ணத்தில், எழுத்துக்களில் “கை” வைக்கப்படுகின்றது.
தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகள் அரசின் கழுகுப்பார்வையில் உள்ளது. போராட்டங்களில் ஈடுபடுபவர்களிடம் அரசு மூர்க்கத்தனமாக நடந்து கொள்கின்றது. தொழிற்சங்க தலைவர்கள் பெரும்பாலோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அராஜக ஆட்சி நடக்கும் இடங்களில் இன மற்றும் நிற வெறி தன் வேலையைக் காட்டும் என்னும் உலக அனுபவத்திற்கு கிரீஸ் நாடும் தப்பவில்லை. நாடு முழுவதும் இனவெறி தாண்டவமாடுகின்றது. ஜனநாயகம், சமத்துவம், பெரும்பான்மை, போன்ற வார்த்தைகள் கிரீஸ் நாட்டில் இப்போது பயன்பாட்டில் இல்லை என்றே சொல்லலாம்.
உலகத்தின் எங்கோ - வளராத நாடுகளில், பொருளாதாரத்தில் பின்தங்கிய இடங்களில் நடைபெற்றதாக படித்துக் கொண்டிருந்த கிரேக்க மக்கள் சமூக வளர்ச்சியில் முன்நின்றதாக இருந்ததாக கருதப்பட்ட ஐரோப்பாவில் அதுவும் தங்கள் நாட்டில் இப்படிப்பட்ட கொடுமைகள் நடக்கும் என கிரீஸ் மக்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதையும்விட கொடுமை என்னவென்றால், ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அனைத்திற்கும் மக்கள்தான் காரணம் என அரசு சொல்வதுதான் அவர்களை மேலும் வேதனைக்குள் தள்ளுகின்றது. பாவம் ஒரு பக்கம் - பழி ஒரு பக்கம்!
தங்கள் தவறு இல்லை - அரசுகளின் தவறுதான் என்று தெரிந்திருந்தும்கூட, சொல்லமுடியாத நிலை.
அன்றாட வாழ்வில் தாங்கள் பெரும் மாறுதலை சந்தித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை உணரும் மக்கள், நீதி - சுதந்திரம் இனி தங்கள் வாழ்நாளில் மீண்டும் வருமா என்று எண்ணத் துவங்கிவிட்டனர். பெரும் போராட்டங்கள் செய்தால் அரசின் தாக்குதலுக்கு தள்ளப்படுவோம் என தங்களால் முடிந்த சிறு எதிர்ப்புக்களை அவ்வப்போது, ஆங்காங்கே வெளிப்படுத்தி வருகின்றனர்.
போக்குவரத்து கட்டணம் - மருத்துவமனை செலவுகளை கட்டமறுக்கின்றனர். சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்த மறுக்கின்றனர். சிலர் முன்னர் வங்கிகளில் வாங்கிய கடன்களை திரும்ப செலுத்தமாட்டோம் என மறுத்துவருகின்றனர்.
மேலும் சிலர் தங்கள் பகுதிகளில் ஒத்தக் கருத்துடைய மக்களை ஒன்று திரட்டுகின்றனர். சிறு குழுக்களை உருவாக்கி வருகின்றனர். அங்கு உள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்றுத்தருகின்றனர்.
மாற்று பொருளாதாரத்தை கொண்டு வர வழி என்ன என்பதைப்பற்றி கூட்டங்கள் நடத்துகின்றனர். கணினியை பயன்படுத்த வாய்ப்புள்ளவர்கள் இணைய தளங்களில் வரும் தகவல்களை பரி மாறிக்கொள்கின்றனர். ஒவ்வொரு நாளும் தாங்கள் செய்த எதிர்ப்புக்களை பற்றி பேசிக்கொள்கின்றனர்.
ஒன்றுமட்டும் நிச்சயம். பயம் மற்றும் பழியை சுமந்துகொண்டு - ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தாங்கள் மட்டுமே காரணம் எனும் பொய்ப் பிரச்சாரம் சமீப காலத்தில் சரி செய்ய முடியாத பிரச்சனையாக உருவெடுத்திருக்கும் இத்தருணத்தில் மக்கள் எப்போதும் அடங்கி போக மாட்டார்கள். எங்கோ ஒரு மூலையில் விரைவில் எதிர்ப்பலைகள் கிளம்பும் என்பது மட்டும் திண்ணம்.
சர்வதேச நிதி நிறுவனமும் கிரேக்க ஆட்சியாளர்களும் நீண்ட நாட்களுக்கு மக்களுக்கு வாய்ப்பூட்டு போட்டுவிட முடியாது. ஒடுக்கப்பட்ட மக்கள் வாய்ப் பூட்டு போட்டாலும், தங்களுக்குள் மவுனமாக விஷயங்களை பரிமாறிக்கொண்டு; இன்னல்களுக்கு எதிராக களம் இறங்குவார்கள் என்பதையும் அவர்கள் இன்னும் சில காலத்தில் அறியப் போகிறார்கள்.
எத்தனை தடைகள் போட்டாலும் மக்கள் அதை தகர்த்தெறிவார்கள். அதையும் மீறி ஆட்சியாளர்கள் அதை ஒடுக்க நினைத்தால், 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற எதிர்ப்பலைபோல மீண்டும் எழும். அப்படி மீண்டும் நடை பெற்றால், கிரேக்க நாட்டில் உருப்படியான மாற்றங்கள் நடைபெறுவதற்கு அது கால்கோள் விழாவாக அமையும்.
ஆதாரம் : தி ஹிந்து நாளிதழ்
No comments:
Post a Comment