Sunday, July 10, 2011

சனிக்கிரக நிலவில் உப்புநீர்!

சனிக்கிரக நிலவுகளில் ஒன்றான என்கிளேடசில் உப்பு நீர் இருப்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நாசா என்றழைக்கப்படும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய காசினி விண்கலம்தான் இதை உறுதிப்படுத்தியுள்ளது. என்கிளேடஸ் நிலவிலிருந்து வெளியேறும் துகள்களைப் பிடித்த காசினி விண்கலம், அதை பரிசோதனை மூலம் ஆய்வு செய்து, அந்த நிலவில் உப்பு நீர் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது. சனிக்கிரகத்திற்கு 19 நிலவுகள் இருக்கின்றன என்பது பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்ட விஷயமாகும். மேலும் பல நிலவுகள் இருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாகும். கண்டுபிடிக்கப்பட்ட நிலவுகளில் ஒன்றான என்கிளேடசிலிருந்து நீர்த்துகள்கள் வெளியேறுவதை 2005 ஆம் ஆண்டே காசினி விண்கலம் கண்டுபிடித்தது.

இந்த நீர்த்துகள்களால் சனிக்கிரகத்தைச் சுற்றி ஒரு வளையமே உருவானது. ஏற்கெனவே சனிக்கிரகத்தைச் சுற்றி ஏராளமான வளையங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று உருவாவதற்கு என்கிளேடஸ் நிலவிலிருந்து வெளியேறும் நீர்த்துகள்கள் காரணமாக இருந்திருக்கின்றன. 2005 ஆம் ஆண்டில் இந்த நிலவு கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, நாசாவின் பார்வை இந்த நிலவை நோக்கி அதிகமாக இருந்தது.

காசினியை இந்த நிலவை நோக்கி நாசா திருப்பியது. 2008, 2009 ஆம் ஆண்டுகளில் இந்த நீர்த்துகள்களைப் பிடிக்கும் வேலையில் காசினி இறங்கியது. அந்த நீர்த்துகள்களை ஆய்வு செய்த நாசா உப்பு நீர் வெளியேறிக் கொண்டிருப்பதை உறுதி செய்தது. இந்த உப்புநீர் பனிக்கட்டிகளாக மாறி சனிக்கிரகத்தைச் சுற்றிவரும் கோடிக்கணக்கான துகள்களில் ஒன்றாக இணைந்து வளையமாக மாறிவிடுகிறது என்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

No comments: