Friday, October 29, 2010

ஆடம்பரப் பள்ளிகள் சிறந்த மாணவர்களை உருவாக்குகிறதா?

பள்ளிகள் மாறி வருகின்றன. ஆடம்பரமான தனியார் பள்ளிகள் பகட்டான விளம்பரங்களை செய்து வருகின்றன. அவற்றின் தோற்றப்பொலிவும் அழகும் கண்ணைக் கவர்கிற விதத்தில் உள்ளன என்றால் மிகையல்ல. முன்பு பள்ளிகளில் கரும்பலகைகள் இருந்தன. வெள்ளைச் சாக்பீஸ் இருந்தது. இப்போது வெள்ளைப் பலகைகள் உள்ளன. கருப்புமை ஸ்கெட்ச் பேனாக்கள் பயன் படுத்தப்படுகின்றன. கணினி ஆய்வகம் உள்ளது. கழிப்பறை வசதிகள் உள்ளன. புல்வெளிகள், மைதானங்கள் அருமையாக உள்ளன. ஆனால், சுமைதூக்கியைப் போல பாடப்புத்தகங்களைச் சுமந்து செல்வது மட்டும் இன்னும் மாறவில்லை. ஒழுங்காக வகுப்பில் உட்கார்ந்து அனைத்துப் பாடங்களுக்கும் குறிப்பெடுப்பது, அவற்றை மனப்பாடம் செய்வது, தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது. அதிக மதிப்பெண் பெறும் மாணவ- மாணவியருக்கு காலை பிரார்த்தனைக் கூட்டத்தின்போது அதிக பாராட்டுகள். சென்ற மாதம் முதல் வகுப்பில் தேறிய மாணவி இந்த மாதம் இரண்டாவதாகவோ, மூன்றாவதாகவோ வரும் அளவிற்கு கடுமையான போட்டிகள் உள்ளன. முதலிடத்தைத் தக்க வைத்துக்கொள்வது மிகவும் கடினமான காரியமாகும். ஆனால் போட்டியிலே சாதிக்கத் தவறிய முன்னாள் சாம்பியன்கள் இரண்டாவதாகவோ, மூன்றாவதாகவோ வரும் நிலையில், அம்மாணவ- மாணவியர் கூனிக்குறுகும்படியாக உள்ளது.

பாரம்பரியமாகக் கல்வி கற்கும் முறையும் கற்பிக்கும் முறைகளும் மாறி வருகின்றன. ‘நிலா நிலா ஓடி வா’, ‘அம்மா இங்கே வா வா ஆசை முத்தம் தா தா’ பாட்டைக் கேட்கவே முடியவில்லை. அழகான சீருடையில் பூத்த நிலாக்களைப் போல மாணவர்கள். புழுதியில் புரண்டு எண்ணெய் பார்க்காத தலை, கிழிந்த சட்டை கிழிந்த டவுசர் எதையும் பார்க்க முடியாது.

காலையில் வாய்ப்பாட்டு(இசை) வகுப்பு, சனி, ஞாயிறுகளில் பரதம், வெஸ்டர்ன் ஏதோ ஒரு நடனப் பயிற்சி, அபாகஸ் வகுப்பு, இந்தி டியூசன், யோகா, கராத்தே, செஸ் விளையாட்டு வழக்கமான பாடங்களுக்கு டியூசன் குழந்தை கண் விழித்ததிலிருந்து தூங்கப் போகும் வரை ஒரே பிஸி. பிஸியோ பிஸி. ஓய்வில்லாத நிலையில் குழந்தைகள் எளிதாக மனச்சோர்வு அடைகிறார்கள். தோல்வியைத் தாங்குவதற்கு அவர்களால் இயலாமல் போகிறது. பெற்றோர்களையோ, ஆசிரியர்களையோ, நண்பர்களையோ நேருக்கு நேர் சந்திக்கக் கூச்சப்படு கிறார்கள். அக்கம்பக்கத்தார் குழந்தைகளின் கல்வி குறித்து ஏதாவது கேள்வி கேட்டு விட்டால் இருதரப்பினரும் ஜென்ம விரோதிகளாகி விடுகிறார்கள். இருதரப்புப் பிள்ளைகளும் ஒரே பள்ளி யில், அதற்கும் மேலாக ஒரே வகுப்பில் படித்துக் கொண்டிருந்தால் கேட்கவே வேண்டாம்.

குழந்தைகளின் மூளை ஓய்வில்லாமல் வேலை செய்கிறது. ஆனால் உடலளவில் அவ்வளவாக ஆரோக்கியம் இல்லை. பெற்றோர்களும் தங்களைத் தாங்களே வருத்திக் கொண்டும், பிள்ளைகளையும் வருத்துகிறார்கள்.

அங்கிளுக்கு சாமஜவரகமனா பாட்டுப்பாடிக் காட்டு, ஆடிக்காட்டு, அவனோடு செஸ் பிராக்டிஸ் செய்தால் என்ன? ஏன் சும்மாவே நின்று கொண்டிருக்கிறாய். கம்ப்யூட்டர் பாடம் படித்து விட்டாயா? ஹோம் ஒர்க் முடித்து விட்டாயா? என கேள்விகள் பதில்கள் கடி காரத்தின் இரண்டு முட்களைப் போல. ஓடிக்கொண்டேயிருக்கிறது குழந்தை.

வகுப்பிற்கு பத்து குழந்தைகளோ பதினைந்து குழந்தைகளோ அவ்வளவு தான்.குறைந்த அளவு குழந்தைகள் இருந்தால் அனைத்துக் குழந்தைகளையும் நன்றாகக் கவனிக்க முடியும் என்று நிர்வாகம் கதை விடுகிறது. நிற்பதற்கு நடப்பதற்கு அனைத்திற்கும் பீஸ். ஒரு மார்க் அரை மார்க் வித்தியாசத்தில் அத்தனை ரேங்குகளும். பள்ளிப்படிப்பில் சுட்டிகளாக கெட்டிகளாக விளங்கும் பிள்ளைகள் வாழ்க்கையில் 100 ரூபாய் நோட்டிற்கும் 500 ரூபாய் நோட்டிற்கும் வித்தியாசம் தெரியாதவர்களாகவும், யதார்த்த வாழ்க்கையைப் புரிந்து கொள்ளாமல் எளிதில் ஏமாந்து விடுகிறார்கள். பள்ளிப்படிப்பை முடித்து வெளியே வருபவர்கள் தமிழும் தெரியாமல் ஆங்கிலமும் சரியாகத் தெரியாமல் அரைகுறையாக வெளியில் வருகின்றனர். குரூப் டிஸ்கஷன், ப்ரிசே ரைட்டிங் போன்றவைகள் வாழ்க்கைக்கு உதவுவதில்லை என்பதை மாணவர்களும் பெற்றோர்களும் புரிந்து கொள்வதே இல்லை.

ஆனால் கல்லூரிக்குப் போகும் போது நன்கொடை கொடுக்காவிட்டால் இடம் கிடைக்காது. தகுந்த வேலை கிடைக்குமா? வேலை கிடைத்தாலும் செலவழித்த முதலுக்கு சம்பளம் கிடைக்குமா? எத்தனையோ பட்டதாரிகள் இரண்டாயிரத்துக்கும் மூன்றாயிரத்துக்கும் வேலை பார்க்கிறார்கள். இத்தனைக்கும் ஆண்களுக்கு பரவாயில்லை. பெண்கள் நிலைமை படுமோசம். வரைமுறையற்ற வேலைகள், காலவரம்பில்லாத உழைப்பு, குறைந்த சம்பளம். அதிக செலவில் வாங்கப்படும் டிகிரி சர்டிபிகேட், கல்யாணப் பத்திரிகையில் போடுவதற்காக, அதிக வரதட்சணை வாங்குவதற்காக, பெருமைக்காக மட்டுமே உதவுகிறது. தாராளமய மாக்கல், தனியார்மயமாக்கல், அவுட் சோர்சிங் போன்ற இடையூறுகளுக் கிடையே கல்லூரிப்படிப்பை முடித்த பின்னர் அரசு வேலைவாய்ப்புகள் ஏதாவது கிடைத்தால் பிற்கால வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். தனியார் சந்தையில் வேகமாக ஓடும் குதிரைகளுக்குத் தான் அதிக வாய்ப்பு. முன்னேறி வரும் தொழில்நுட்பத்திற்கு ஈடாக வளர வேண்டிய கட்டாயம். இல்லையென்றால் ‘நாம் நண்பர்களாகவே பிரிவோம்’ என்று பிரிவுபசாரப் பார்ட்டி நடத்தி விடுவார்கள்.

குழந்தைகளின் நிலைமை குறித்து பிரபல மனநல மருத்துவர் சியாமளா வத்சா கூறுவது,’குழந்தையின் ஆரோக்கியம், கற்பனை, திறமை போன்றவைகள் இயற்கையான ஆர்வத்தாலும் உந்து சக்தியாலும் வரவேண்டும். வகுப்பறைகள் குழந்தைகளின் கற்பனையை முடக்கி வைக்கிறது.’ எல்லாம் முடிந்த பிறகு பெற்றோர்களும் பிள்ளைகளும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான்.

நன்றி: தீக்கதிர்

No comments: