நீங்கள் சைவமா, அசைவமா? எதுவாக இருந்தாலும் சரி..,! தமிழ்நாட்டுக்காரர் என்றால், தினம் சாப்பாட்டில், கட்டாயம் ரசம் உண்டு . திருமணத்தில் எப்படி பெண் அவசியமோ, அதுபோல ரசத்தில் நிச்சயம் மிளகு உண்டு. மிளகில்லாத ரசமா? அதிலும் மிளகு ரசம் என்ற சிறப்பு ரசமும் கூட இருக்கிறதே..! அப்படி, மருத்துவ குணம் வாய்ந்த மிளகை தினமும் நாம் பயன்படுத்துகிறோம். உடல் ஆரோக்கியத்துக்கும், சீரணத்துக்கும் மிளகு பெரிதும் உதவுகிறது. அது மட்டுமல்ல இந்த சிவப்பு மிளகாய் மெக்சிகோ நாட்டிலிருந்து நமக்கு இறக்குமதியான பொருள். இதன் பிறப்பிடம் அமெரிக்கா.
மிளகு..! நம் சமையலில் மட்டுமல்ல, இன்று உலகம் முழுவதும், காரத்துக்கும், மணத்துக்கும், சுவைக்கும் மிளகு பயன்படுத்தப் படுகின்றது. மிளகின் தாயகம் கேரளத்துமண்தான். ஆனால் அதிகம் மிளகைப் பயன்படுத்துவது அமெரிக்கர்கள்தான்.
நறுமணப் பொருள் வாணிகத்தில், மிகவும் தொன்மையான பொருட்களில் ஒன்றுதான் மிளகு .நறுமணப் பொருள்களின் ராஜா மிளகு தான். இதன் சரித்திரம் மிக நீண்டது. சுமார் 5 ,000ஆண்டுகளுக்கு முன்பு , இஞ்சியுடன் சேர்த்து, மிளகும் தெற்கு ஆசியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதாம். கருப்பு குறு மிளகு ஏற்றுமதி செய்யும் துறைமுகங்களும், வணிக சந்தைகளும் தென்மேற்கு இந்தியாவிலேதான் இருந்தன. கருப்பு மிளகு வணிக சந்தையில், மதிப்பு மிக்க பொருளாக, கறுப்புத் தங்கமாகவே கருதப்பட்டது. மிளகு, மக்கள் பயன்படுத்தும் பணமாகவும், பண்டமாற்றுப் பொருளாகவும் உபயோகப்பட்டது.
உலகிலுள்ள நறுமணப் பொருள்களின் வாணிபத்தில், மிளகின் ஆதிக்கம் மட்டுமே 25 % ,ஆக உள்ளது. மேலும் இது மிகக் குறைந்த நாடுகளிலேயே விளைவிக்கப் படுகிறது. இன்று உலகில் அதிகமாக மிளகு இறக்குமதி செய்யும் நாடு அமெரிக்கா. அதே போல உலகில் அதிகமாக மிளகை ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியாதான். இன்று புதிதாக மிளகு ஏற்றுமதியில் களத்தில் இறங்கியிருக்கும் நாடு பிரேசில். இந்தியாவின் புராதன இதிகாசமான மகாபாரதத்தில், மிளகு போட்டு கறி விருந்து சமைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுஸ்ருத சம்ஹிதா என்ற மருத்துவ ஆவணத்தில், மிளகு மதிப்பு வாய்ந்த பாரம்பரிய மருந்தாக கூறப்படுகிறது.
ரோமானியர்கள் காரம் மிகுந்த மிளகை மிகவும் மதித்தனர். ஐரோப்பாவில் பேரரசர் மார்கஸ் அரேலியஸ்,அ லேசாண்டிரியாவுக்கு வந்த வெள்ளை மிளகுக்கு வணிக வரி விதித்தாராம். ஆனால் கருப்பு மிளகை விதிவிலக்காக விட்டுவிட்டாராம். ரோமப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னரும், ஐரோப்பியர்கள் மிளகை மிகவும் மரியாதையுடன் நடத்தினர். மிளகு சமையலில் முக்கிய வாசனை மற்றும் காரத்திற்கு மட்டும் பயன்படாமல், உணவை பதப்படுத்தவும் பயன்பட்டது. மிளகு விலை உயர்ந்த பொருளாக கருதப்பட்டதால் இதனை பணமாகவும், வரதட்சிணைப் பொருளாகவும் வரி கொடுக்கவும், வாடகை கொடுக்கவும் பயன்படுத்தினர். இன்றும் கூட இது மிளகு வாடகை என்று சொல்லப்படுகிறது .
மிளகு பூத்து காய்த்து படர்ந்து வளரும் கொடி. இது பூக்கும் கொடி வகையில் பெப்பர்சினியே குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் பழத்துக்காகவே இது வளர்க்கப் படுகிறது. பொதுவாக 4 மீ உயர மரத்திலோ, குச்சியிலோ கம்பிலோ படர்ந்து, ஆதாரத்துடன் வளரும். இதன் இலைகள் வெற்றிலை இலைபோல 5 -10 செ. மீ நீளத்தில் இருக்கும். இதன் பழத்தில் ஒரே ஒரு விதை தான் இருக்கும். பழம் சிவப்பாகவும், உலர்ந்தபின் கருப்பாகவும் காணப்படும். இதைத் தவிர, பச்சைமிளகு, வெள்ளை மிளகு, சிவப்பு மிளகு, பழுப்பு மிளகு போன்றவையும் உண்டு. பச்சை மற்றும் சிவப்பு மிளகு போன்றவை வேறு செடியிலிருந்து கிடைக்கின்றன. இவை கடல் மட்டத்திலிருந்து 3 ,000 அடி உயரத்திற்கு மேல் வளராது. நிலநடுக்கோட்டிலிருந்து 15 டிகிரி அட்சரேகைப் பகுதிகளில் மட்டுமே மிளகு வளர்கிறது.
மிளகு கேரளாவிலிருந்து கிடைத்தாலும், மலபார் கடற்கரையை ஒட்டி விளைவது மலபார் மிளகு என்றும், தெல்லிச்சேரியிலிருந்து விளைவது தெல்லிச்சேரி மிளகு என்றும் சொல்லப்படுகிறது. இதில் தெல்லிச்சேரி மிளகுதான் தரத்தில் உயர்ந்தது.
பண்டை காலங்களில் எகிப்து மற்றும் ரோம் நாட்டில் பயன்படுத்தப்பட்ட மிளகு, அரேபியர் மூலமாக ரகசிய வழிகளில் வந்து சேர்ந்தது. பின்னர் கிரேக்கர்களும்,ரோமானியர்களும் இதன் மூல இடத்தை அறிந்தனர். இந்த மதிப்பு மிக்க நறுமணப் பொருளுக்கான போட்டி என்பது, கிறிஸ்டோபர் கொலம்பஸ் புதிய உலகம் தேடி, அதனை கண்டுபிடிக்கும் வரை சுமார் 2000 ஆண்டுகள் வரை தொடர்ந்தது. அங்கு மிளகு இல்லை என்றதும் கதை சப்பென்று ஆகிவிட்டது.
மத்திய காலங்களில் போர்த்துகீசும், பின்னர் டச்சும் மிளகின் வாணிபத்தை ஏகபோக முதலாளியாகவே நடத்தினர். அப்போது மிளகு எடையிலும் கூட, தங்கத்தை விட மதிப்பு வாய்ந்ததாக கருதப்பட்டது. மேலும் அதுவே உடனடி பணமாகவும் பயன்பட்டது. ஒரு மிளகைக் கூட பணமாக பயன்படுத்தினர் என்றால், அதற்கு இருந்த மதிப்பை, மரியாதையை கற்பனை செய்து பாருங்கள். அதிலுள்ள முக்கியமான அம்சம் என்றவென்றால், வாணிபத்தின்போது கையாளும் தொழிலாளிகள், பை வைத்த சட்டையோ, கையை மடித்து அழகுபடுத்துவதோ கூடாது. ஏன் தெரியுமா? அங்கே, மிளகை மறைத்து வைத்து, கொண்டுபோய் விடுவார்கள் என்ற பயம்தான்.
மத்திய காலங்களில், கெட்டுப்போன மாமிசத்தை மறைக்கவும், நல்ல சுவையை நாக்குக்குத் தரவும், மிளகைக் கேட்டு வாங்கி பயன்படுத்தினர். மத்திய காலங்களில் வசதி படைத்த பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தும் பொருளாகவே மிளகு இருந்தது.
மிளகின் கார நெடியின் காரணி, அதன் நடுவிலுள்ள காப்சாய்சின் என்ற வேதிப் பொருளே. அது இதய நோய்களை கட்டுப்படுத்துகிறது: இரத்தக் குழாய்களை தூண்டிவிடுகிறது. கொழுப்பையும், மிகை இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. இரத்தக் குழாய்கள் கடினமாவதையும் குறைக்கிறது. உடலின் செல்களைப் பாதுகாத்து, வயதாவதைக் குறைக்கிறது. சீரணத்தைக் கட்டுப்படுத்துகிறது. வாயுத் தொல்லை மற்றும் வயிற்றுப் பொருமலைக் குறைக்கிறது.
நன்றி: பேரா.சோ.மோகனா
No comments:
Post a Comment