சமீபகாலமாக இந்தியாவின் பல பகுதிகளில் பருவம் தவறி மழை பெய்து வருகின்றது. பருவநிலை மாற்றம், வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள அசைவுகள் என்றெல்லாம் காரணங்கள் சொல்லப்படுகின்றது. இப்படி மழைவெள்ளம் பாதிப்புகள் ஒரு பக்கம், மற்றொரு பக்கம் தண் ணீர் பற்றாக்குறை. இந்த விதவிதமான பிரச்சனைகளால் ஒட்டு மொத்தத்தில் பாதிப்படைவது நம் நாட்டு நடுத்தர மற்றும் கிராமப்புற உழைப்பாளி மக்களும்தான். பொதுவாகவே, மழை கூடுதலாக பெய்தாலும் கிருமிகள் பெருகும். நோய் தாக்குதல் அதிகமாகும். தண்ணீர் குறைந்தாலும் வேறு பல பிரச்சனைகள் உருவாகி அதே நிலை நீடிக்கும். இதனால் நோய் தடுப்பு நடவடிக்கைகள் அதுவும் வேகமாக பரவும் நோய்களுக்கென கூடுதல் கவனமும் அக்கறையும் முறையான சிகிச்சையும் அரசின் பங்கேற்போடு தேவைப்படுகின்றது.
கடந்த இருபது ஆண்டுகளாக இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மக்கள் விரோத தனியார்மய பொருளாதார கொள்கைகளின் விளைவாக, அரசு தன் கடமையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி, மக்களை தனியாரை சார்ந்து இருக்கும் நிலைக்கு தள்ளிச் செல்கின்றது.
இந்தியாவில் இந்த இருபது ஆண்டுகளாக, மீண்டும் நம்மை அச்சுறுத்தி கொண்டிருப்பது மூன்று முக்கிய நோய்கள். அவைகளை கட்டுப்படுத்திட, நோய் தாக்குதலில் அகப்படுவோரை குறைத்திட, பல முயற்சிகள் தேவைப்படுகின்றன. அதிலும் திரிசூலங்களாக நம் முன் சவாலை வைக்கும் எய்ட்ஸ், மலேரியா, காசநோய் ஆகியவற்றை எதிர்கொள்ள கூட்டு முயற்சி (அரசு -அரசு சாரா தன்னார்வ நிறுவனங் கள் + மக்கள்) தேவைப்படுகின்றது.
எய்ட்ஸ்-எட்டாக்கனியாகும் மருத்துவம்
இந்திய மண்ணில் இறக்குமதியான இந்நோய் இன்று பல லட்சம் மக்களை பாதித்துள்ளது. பச்சிளங் குழந்தை முதல் படுவயோதிகர்களையும் என இந்நோய் எவரையும் விட்டுவைக்கவில்லை. இந்நோய் நாட்டில் பேராபத்தை விளைவிக்கும் என்பதை உணர்ந்த அரசுகள் பல்வேறு வடிவங்களில் கலாச்சார மாற்றத்தை உருவாக்கிட, நோய் பரவலை தடுத்திட முயற்சிகள் மேற்கொண்டது. விளம்பரங்கள், விழிப்புணர்வு பிரச்சாரம் என மக்களை சென்றடையும் வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கென எய்ட்ஸ் தடுப்பு நிறுவனம் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. கிராமம் முதல் நகரம் வரை தகவல்கள் சேகரிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் தயாரானது.
அதற்கான சிகிச்சை முறை என்று அழைக்கப்படும் எய்ட்ஸ் தடுப்பு மருத்துவ சிகிச்சை பெற வேண்டியவர்களின் இல்லம் நோக்கி சென்றது. இப்படியெல்லாம் பல கட்டங்களில் பல தரப்பட்ட முயற்சிகள் எடுக்கப்பட்ட பிறகு, இன்று, பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளது. இது ஒரு பெரிய முன்னேற்றம்தான். ஆனால் மறுபுறம், போதிய விழிப் புணர்வு இல்லாமல் இன்னும், எய்ட்ஸ் நோய்க்கு ஆளாவோர் எண்ணிக்கையில் பலருக்கு உரிய சிகிச்சை முறைகள் கிடைப்பதில்லை.
மலைக்க வைக்கும் மலேரியா
இப்படி நாம் எய்ட்சை பற்றி விவாதிக்கையில் மீண்டும் பெரும் சவாலாக நம்முன் எழுந்துள்ளது மலேரியா காய்ச்சல். இந்தியாவின் வளர்ச்சி அறிக்கை பின்வருமாறு மலேரியாவை பற்றி விவரிக்கின்றது. “சமீபகாலமாக மலேரியா நோயின் தாக்கம் குறைந்துள்ளது. ஆனாலும் அந்நோய் மூலம் ஏற்படும் இறப்பு விகிதம் இன்னும் குறையவில்லை” அப்படியென்றால் பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை.
இந்தியாவில் கொசு கட்டுப்பாடு என்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லாத காரியம் என்று இறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெருங்கடமை அரசுக்கு தான் உள்ளது. ஒட்டு மொத்த சுகாதார மேம்பாட்டிற்கு அரசின் கவனம் போதுமானதாக இல்லை. காரணம் நோயினால் இறந்து போவோர் எண்ணிக்கைக்கும் அரசின் புள்ளி விபரத்திற்கும் சம்பந்தமே இல்லை. இதை தேசிய மலேரிய ஆராய்ச்சி நிறுவனமும் ஒத்துக் கொள்கின்றது. ஆக, ஏதாவது ஒரு மூலையில் பிரச்சனைகள் நீடிக்கின்றது.
சுதந்திர இந்தியாவில் நடத்தப்பட்ட பெரு முயற்சியால், 1965-66 ஆம் ஆண்டுகளில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சமாக குறைந்து இருந்தது. இறப்பு என்பதே இல்லாமல் இருந்தது. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக காலம் நகர்ந்துவிட்டது. அரசின் முயற்சிகள் தளர்ந்ததால்-பலவீனம் அடைந்ததால் மீண்டும் மலேரியா அச்சம் தலை தூக்கியுள்ளது. இதன் காரணமாக பன்னாட்டு மற்றும் இந்திய பெருநிறுவனங்கள் கூட மலேரியாவிற்கான புதிய சிகிச்சை முறைகளுக்கான மருந்துகளை அறிமுகம் செய்துள்ளது. இதிலிருந்தே விஷயமும் விளங்கும்.
முன்னாட்களில் மலேரியா ஒழிப்பு என்று இருந்த அரசின் நிலை மாறி, இன்று மலேரியா தடுப்பு என்றாகிவிட்டது. பெயர் மாறியதால் - நிலைமையும் மாறியுள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் சராசரி யாக 15-18 மில்லியன் மக்கள் (சுமார் ஒரு கோடியே 50 லட்சம் பேர்) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இறந்தவர்களின் எண் ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
கலங்க வைக்கும் காசநோய்
எய்ட்சும்-மலேரியாவும் படுத்தும்பாடு ஒரு பக்கம் இருக்க, மீண்டும் தலைதூக்கியுள்ள காசநோய் - அதன் தாக்கம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே காசநோய் ஏழைகளின் நோய். ஏனென்றால் மாசுபட்ட சுற்றுச்சூழல், பணியாற்றும் இடம் என்று வெவ்வேறு பிரச்சனைகளால் ஆட்படும் இவர்களின் கஷ்டங்கள் சொல்லிமாளாது.
காசநோய்க்கு மருந்து கண்டு பிடிக்கும் முன்பே ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இந்நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. ஆனால் இன்றும் சுமார் 25லட்சம் மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டு, அவதிக்குள்ளாகின்றனர். ஒரு வரியில் கூறினால் காசநோயின் உலக தலைநகர் இந்தியாதான். ஏனென்றால் உலகில் காசநோயால் பாதிக்கப்படும் ஐந்தில் ஒருவர் இந்தியர்.
கடந்த பத்தாண்டுகளாக, மறு சீரமைக்கப்பட்ட காசநோய் தடுப்பு திட்டம் அமலில் இருந்த போது, காசநோயால் மடிந்துபோவோர் எண்ணிக்கை பாதியானது. இதற்கு முக்கிய காரணம் அரசு எடுத்த முயற்சி அல்ல, மாறாக காசநோயை கட்டுப்படுத்த புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட புதுவகை மருந்துகளின் பயன்பாடுதான். இது சிகிச்சை காலத்தை 18 மாதத்திலிருந்து ஆறு மாதமாக குறைத்தது. இது மட்டுமல்லாமல், கூட்டு மருந்து சிகிச்சை யும் புது நோய் எதிர்ப்பு மருந்துகளும் உதவியது. இப்படித்தான் கட்டுக்குள் உள்ளது காசநோய்.
தேவை உடனடி மாற்றம்
உலகிலேயே மக்கள்தொகை யில் இரண்டாவது இடத்தை பிடித் திருக்கும் நாட்டில் அதற்கேற்ப அரசின் திட்ட ஒதுக்கீடுகள் இல்லை. மாறாக ஒவ்வொரு ஆண்டும் சுகாதாரத்திற்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டு இத்துறையை தனியார்மயம் ஆக்குவதற்கான சகல முயற்சிகளும் நடைபெறுகின்றது. அதன் ஒரு பகுதியாகத்தான் நிதிநிலை அறிக்கையில் கடைசி பகுதியாக சுகாதாரத்திற்கான ஒதுக்கீடு சொல்லப்படுகின்றது.
ஆனாலும் நமது ஆட்சியாளர்கள், வல்லரசு, நல்லாட்சி எனும் வெத்து கோஷங்களை-கவர்ச்சிகர மான திட்டங்கள் என்று நாடகமாடும் பின்புலத்தில் தனியார்மயம் கன ஜோராக நடைபெறுகின்றது
No comments:
Post a Comment