மனித உடலில் எழுபது சதம் தண்ணீர் இருப்பதும், இரத்தத்தில் தொண்ணூரு சதம் தண்ணீர் இருப்பதும், மனிதனுக்கு காற்றுக்கு அடுத்து, உடலியல், உயிரியல் தேவையாக மிக,மிக அவசியமானதாக தண்ணீர் இருந்து வருகிறது. நம் உடலின் தண்ணீர் தேவையை சமன் செய்யவும், உடம்பை வெப்பம் அடையாமல் உடலின் தட்டை சமன்செய்யவும் தண்ணீரால் மட்டுமே முடியும். நம் உடலின் உள்ளேயும், வெளிப்புறமாகவும், தினந்தோறும் சுத்தம் செய்வதும் பராமரிப்பதும், என தண்ணீர் தினந்தோறும் நமக்கு தேவைப்படுகிறது.
தண்ணீர் உடம்பில் உயவு பொருளாகவும், உடம்பை நெகிழ்வு உடையதாக வைத்துக் கொள்ளவும் தண்ணீர் உதவுகிறது. இதன் மூலம் மனிதன் தன் இருப்பை தக்கவைத்துகொள்கிறான். உடம்பில் ஒரு சதம் நீர் குறைந்தால் தாகம், வறட்சி ஏற்பட்டு விடும். தண்ணீர் தேவையை ஈடுசெய்ய தண்ணீர் அருந்தாவிட்டால், மயக்கமும், சோர்வும் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியும் என மருத்துவ விஞ்ஞானம் கூறுகிறது. எனவே, மனிதன் தண்ணீர் இல்லாமல் வாழ இயலாது என்பது நமக்கு தெளிவானது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தண்ணீரை உலக மனிதர்கள் தினந்தோறும் தங்கள் பயன்பாட்டிற்கென சென்னையில் 60 லிட்டரும், தில்லியில் 160 லிட்டரும், சீனாவில் 500 லிட்டரும், அமெரிக்காவில் 1000 லிட்டரும் பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலி போன்றவகைளில் 1700 லிட்டரும் சராசரி அளவாக ஒவ்வொரு மனிதனால் உபயோகபடுத்தப்பட்டு வருகிறது.
பல்வேறு வகையான உணவு பொருட்களை விவசாயத்தில் உற்பத்தி செய்யவும், நுகர்வு பொருட்களை உற்பத்தி செய்கின்ற நவீன தொழிற்சாலைகளிலும் தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு டன் உணவு தானியம் உற்பத்தி செய்ய ஆயிரம் டன் தண்ணீர் தேவைப்படுகிறது. உலகின் பல கோடி மக்களுக்கு உணவு தேவையை நிறைவு செய்ய பல ஆயிரம் டி.எம்.சி (ஒரு டி.எம்.சி ஆயிரம் கோடி கன அடி நீர்) தண்ணீர் தினந்தோறும் தேவைப்படுகிறது. இச்சூழலுக்கு ஏற்றாற் போல் உலகின் நீர்வளம் இல்லை எனலாம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தண்ணீர் உலகில் எழுபது சதம் இருந்தாலும் மனித பயன்பாட்டில் இருப்பது பெரும்பாலும் ஆற்று நீர் தான். உலக ஆறுகளின் நீர் வளம் உலகின் ஒட்டுமொத்த நீர்வளத்தில் பத்து லட்சத்தில் இரண்டு பங்காக இருந்து வருகிறது.
உலக நீர் வளத்தில் தொண்ணூற்றி ஏழு சதம் உப்பு நீராக உள்ளது. மூன்று சதம் மட்டுமே நன் நீராக உள்ளது. 3.5 சதம் உப்புள்ள நீர் நன்னீராகவும் இருக்கிறது. மூன்று சதம் நன்னீர் 68.7 சதம் பனிக்கட்டியாகவும் 30.1 சதம் பயன்படுத்த முடியாத நிலத்தடி நீராகவும், 0.3 சதம் மேற்பரப்பு நீராகவும் இருந்து வருகிறது. மேற்பரப்பு நீரில் 87 சதம் ஏரிகளிலும், 11 சதம் சதுப்பு நிலங்களிலும் உள்ளது. உலக நீர்வளத்தில் பத்து லட்சத்தில் இரண்டு பங்காக உள்ள மனிதன் பயன்படுத்தக்கூடிய நீரின் அளவு 48000 கன கிலோ மீட்டராகும். ஒரு கன கிலோ மீட்டர் நீர் 353 டி.எம்.சிக்கு சமமாகும். ஒரு டி.எம்.சி நீர் 1000 கோடி கன அடிக்கும் ஒரு கன அடி நீர் 28 லிட்டர் என கொள்ளலாம்.
பண்டைய சிந்துவெளி நாகரிக மக்களும், எகிப்து, அமேரியா, ரோம், மாயன் கலாச்சார மக்கள், அதீத தண்ணீர் நுகர்வு மற்றும் தவறான முறை களில் தண்ணீரை வீணடித்ததன் வழியாக தங்களின் நாகரிகங்களுக்கு தங்களுக்கு தாங்களே சவக்குழி தோண்டிக் கொண்டனர் என்பதை கவனத்தில் கொண்டால் நவீன நாகரிக மக்கள் ஆகிய நாம் தண்ணீரை பயன்படுத்துவதிலும், உபயோகப்படுத்துவதிலும் அதிக எச்சரிக்கை உணர்வோடு இருப்பது மிக அவசியமாகியுள்ளது. இல்லையெனில் அப்பண்டைய மக்களுக்கு ஏற்பட்ட கதிதான் நவீன மனிதனுக்கும் ஏற்படும்.
உலகில் தண்ணீரின் தேவை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி செய்ய பல நாடுகள் முயற்சி செய்வதால் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. உலகின் தானிய உற்பத்தியில் சரிபாதிக்கும் மேல் உற்பத்தி செய்துவரும் சீனா, இந்தியா, அமெரிக்க நாடுகள் தங்களின் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவை வெகுவாக குறைத்துகொண்டே வருகின்றன. இந்நாடுகளில் ஆண்டுதோறும் சுமார் மூன்று அடி நிலத்தடி நீர்மட்டம் குறைந்துகொண்டே செல்கிறது. இந்தியாவில் பாசனத் திட்டங்கள் மூலமே பஞ்சு£ப், ஹரியானா, குஜராத், ராஜஸ்தான், ஆந்திரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அதிக அளவு தண்ணீரை உறிஞ்சுவதால், இங்கு நீலத்தடி நீர்மட் டம் ஆண்டுக்கு ஒரு மீட்டர் வீதம் குறைந்து கொண்டே வருகிறது. அமெரிக்காவில் தானிய உற்பத்தியில் பெருமளவு ஈடுபடும் மாநிலங்களான டெக்சாஸ், ஒக்லகாமா, காந்சாஸ் ஆகியவற்றில் நிலத்தடி நீர் மட்டம் 30 மீட்டர் வரை தற்போது குறைந்து போயுள்ளது.
சீனாவிலோ நீர் மட்டம் ஆண்டுக்கு 3 மீட்டர் வரை குறைந்துகொண்டே வரு கிறது. பாகிஸ்தானிலுள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் ஆண்டு தோறும் 3.5 மீட்டர் வரை நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. 15 ஆண்டுகளில் தண்ணீர் துளியும் கிடைக்காமல் அல்லாடும் நிலைமையில் இருக்கிறது. வரும் 50 ஆண்டுகளில் தண்ணீரே தன் நாட்டில் இல்லாமல் போகச் செய்யும் அளவுக்கு சௌதி அரேபியா மிக அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது, ஆப்பிரிக்கா, அராபியா, நாடுகளில் மறு நிரப்பீடு செய்ய இயலாத நூற்றுக்கணக்கான நீர் நிலைகளைக் கொண்டு உள்ளது. இவை தீர்ந்து போகும் பட்சத்தில் அந்நாடுகள் தீராத தண்ணீர் பஞ்சத்தில் மாட்டிக் கொள்ள இருக்கின்றன. உலகம் தழுவிய அளவில் வறட்சியான ஒதிபடுகைகளைமட்டும் விட்டுவிட்டு தண்ணீரை பாசனத்திற்காக உறிஞ்சுவதும், பின் வரும் ஆண்டுகளில் மனிதகுலம் சந்திக்கின்ற மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும்.
உலகின் மனிதன் பயன்பாட்டிற்கான நீரின் அளவு 48000 கன கிலோ மீட்டர்கள் எனில், தமிழ்நாட்டில் 4.8 கனகிலோ மீட்டர்கள் தான் உள்ளது. உலக அளவில் பத்தாயிரத்தில் ஒரு பங்கே உள்ளது. ஆனால் தமிழ் நாட்டில் மக்கள் தொகை நூறில் ஒரு பங்காக இருப்பதை நினைவில் கொண்டால் உலக மாந்தனுக்கு கிடைக்கும் நீரில் நூறில் ஒரு பங்கு நீரே தமிழ் மக்களுக்கு கிடைத்து வருகிறது. எனவே, தமிழ்நாடு மிகமிக அதிக நீர் பற்றாக்குறையோடு இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் பிரம்மபுத்திராநதி 1000 கனகிலோ மீட்டர் நீரையும், மகாநதி 500 கன கிலோ மீட்டர் நீரையும், ஒவ்வொரு ஆண்டும் வீணாக கடலில் சென்று கலப்பதை ஒப்பிட்டால் தமிழ்நாட்டின் தேவையைப் போல 30 மடங்கு நீரை நாம் வீணாக்கி வருகிறோம். இவ்வகையான அதிகபட்ச உபரி நீர்கள், நதிகள் அனைத்தையும் தேசியமயமாக்கினால் தான் தமிழ்நாட்டைப் போல நீர் பற்றாக்குறை மாநிலங்களை பாதுகக்க முடியும்.
தமிழ்நாட்டின் ஆறுகளின் மேற்பரப்பு நீர் 830 டி.எம்.சியும், மற்ற மாநிலங்களிலிருந்து வரும் நீரின் அளவு பயன்பாட்டிலுள்ள நிலத்தடி நீரின் அளவு 440 டி.எம்.சியும் சோர்த்து 1700 டி.எம்.சி நீரையும் தமிழ்நாடு ஆண்டு தோறும் பெற்று வருகிறது. தமிழ்நாட்டின் ஆண்டு சராசரி மழை அளவு சுமார் 1000 மில்லிமீட்டராகும். இதன் மூலம் நமக்கு 4,343 டி.எம்.சி மழை நீர் கிடைத்தாலும் இவற்றை சேமித்து பயன்படுத்த எந்தவித உருப்படியான நடவடிக்கையும் எடுக்காததாலும் இருக்கின்ற ஏரிகள், குளங்களை ஒழுங்காக பராமரிக்காததாலும,அனைத்தும் கடலில் சென்று வீணாக கலந்துவிடுவதால் நமக்கு கிடைக்கும் சொற்ப அளவான 83 டி.எம்.சி நீரே, அதாவது மொத்த மழை அளவில் 20 சதம் மட்டுமே நாம் பயன்படுத்தி வருகிறோம்.
தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பு 325 லட்சம் ஏக்கர் நிலமாகும். இதில் நிளங்கள், தரிசு நிலங்கள் 48 சதமாகும் பிற வகைகள் 12 சதமாகும். மீதியுள்ள 40 சதமானமான 130 லட்சம் ஏக்கர் நிலம் மட்டுமே விவசாயம் செய்யப்படுகிறது. 75 லட்சம் ஏக்கர் நீர்ப்பாசன வசதியுடையவை. ஆற்று கால்வாய்கள் மூலம் 20 லட்சம் ஏக்கரும், ஏரிகள் மூலம் 15 லட்சம் ஏக்கரும், கிணறுகள் மூலம் 40 லட்சம் ஏக்கரிலும் பாசனம் நடைபெறுகின்றன. இதில் 45 லட்சம் ஏக்கரில் நெற்பயிர், கரும்பு, தென்னை பயிர்களும், பிற பயிர்கள் அனைத்தும் சுமார்30லட்சம் ஏக்கர் பரப்பளவிலும் பயிரிடப்படுகின்றன. இதற்கு தேவைப்படும் நீரின் அளவு 1500 டி.எம். சி மொத்தமுள்ள 1700 டி.எம்.சி யில் மீதியுள்ள 200 டி.எம்.சி நீர், குடிநீர் தொழில் துறைஎன பயன்படுத்தப்படுகிறது.
வரும் ஆண்டுகளில் தொழிற் சாலைகள் பெருகி வருவதால் அதனின் தண்ணீர் தேவை500 டி.எம்.சி யாக உயர வாய்ப்புள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீரின் அளவும் மாறுபடக் கூடும். விவசாய நிலம் அதிகரிக்குமாணால் அங்கு நீரின் தேவை அதிகரிக்கும். இந்த நிலைமையில் நம் தண்ணீர் தேவையை ஈடுகட்ட நவீன உத்திகளை பயன்படுத்த வேண்டி உள்ளது. இவைகளை பயன்படுத்தி 2040ஆம் ஆண்டுகளுக்கு பிறகு நமது தண்ணீர் தேவையான சுமார் 2600 டி.எம்.சி அளவை எட்ட வேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு மேலதிக தண்ணீர் பற்றாக்குறை மாநிலமாக மாறிவிடும் அபாயம் உள்ளது. அதற்கான குறைந்தபட்ச முன் தயாரிப்பு பணிகளை நாம் இப்போத துவங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் நம் முன்னோர்கள் மழை நீரை சேமிக்க கட்டிய 39200 ஏரிகளை மிகச்சரியாக பயன்படுத்துவதன் மூலம், நம் தண்ணீர் தேவைகளில் சுமார் 80 சதம் பூர்த்தி செய்து கொள்ள முடியும். எனவே வரும் காலங்களிலாவது ஏரிகளில் வீட்டு மனைகள் வணிக வளாகங்கள், நீதி மன்றங்கள் பேருந்து நிலையங்கள் கட்டுவதை நாம் தவிர்க்க வேண்டும். (எ.கா) முன்னூறுஏரிகள் மீது தற்போது உள்ள சென்னை மாநகரம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலதிக தொழில் நுட்பங்களோடு வாங்கவுள்ள இடங்களில் அணைகள் கட்டுவதும், காட்டாறுகளில் தரம்வாய்ந்த தடுப்பணைகள் கட்டுவதும் மிக அவசியம்.
நெல் உற்பத்திக்கு தற்போது பயன்படுத்தப் படும் அதிகபட்ச அளவான ஒரு டன் நெல்லுக்கு ஆயிரம் டன் தண்ணீர் என குறைக்கப்பட வேண்டும். நூறுடன் நீரே போதும் என்பதே நவீன விஞ்ஞானத்தின் முடிவு.
சிறு தானியங்களான கம்பு, கேழ்வரகு, சோளம், மக்காசோளம், திணை, வரகு போன்ற பயிர் வகைகளை பயிரிட விவசாயிகளை ஊக்குவிக்கப்பட வேண்டும். இதனால் பாசனத்திற்கு என செலவாகும் தண்ணீரை பெரும் அளவில் சேமிக்க முடியும்.
மக்கள் தற்போது பிரதானமாக அரிசி உணவையே நம்பி உள்ள நிலைமையை மாற்றி மற்ற உணவு வகைகளுக்கு பெரும் அளவில் மாற வழி காண வேண்டும்.
சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசன முறைகளை கைகொள்வது.
நீர் வளத்தை பாதுகாத்திடவும், பராமரிப்பு, சேமிப்பு, பயன்படுத்துவது போன்றவற்றில் தமிழக மக்களுக்கு போதிய அளவில் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.
தனியார் மயத்தை தடுத்து நிறுத்தி, அரசே நீர் நிலைகளை ஏற்று நடத்த வழி காணுதல் வேண்டும். நீர் நிலைகளை பொதுவில் வைத்தல்.
நீர் நிலைகளை பராமரிக்க, பாதுகாக்க மக்கள் குழுக்களை உருவாக்குவது என நாம் செயல்பட வேண்டி இருக்கிறது.இதன் மூலம் மட்டுமே தமிழகத்தின் தண்ணீர் தேவையை வருங்காலத்தில் ஈடுசெய்ய முடியும்.
Courtesy: Ilaignar Muzhakkam
No comments:
Post a Comment