Monday, October 18, 2010

விடிந்தால் என்ன ஆகுமோ...?

தலைக்கு மேல் வெள்ளம் போயிருச்சு... இனி சாண் போனா என்ன, முழம் போனா என்ன” என்ற நிலைக்கு அமெரிக்கா வந்துவிட்டது. மந்த நிலை போய்விட்டது. வளர்ச்சிப் பாதையில் நடைபோடத் துவங்கிவிட்டோம் என்று ஜனாதிபதி ஒபாமா முதல் அதிகாரிகள் வரை உரக்கக்கூவினாலும், இதெல்லாம் கதையாகாது என்று உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார் பிரபல பொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ். 2008 ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடி முற்றியபோது, அதை ஆய்வு செய்யப் போடப்பட்ட நிபுணர்கள் குழு இவர் தலைமையில் தான் செயல்பட்டது. இவரது ஆலோசனைகளை யாரும் கேட்கவில்லை என்பது தனிக்கதை.

வளர்ச்சி என்று சொல்லிக் கொண்டாலும், ஏற்கெனவே இருக்கும் வேலைக்கான தேவையைப் பூர்த்தி செய்ய அது உதவாது என்று கூறும் அவர், நெருக்கடியிலிருந்து அமெரிக்கப் பொருளாதாரம் இன்னும் மீளவில்லை என்கிறார். ஜூன் 2009லேயே நெருக்கடியிலிருந்து மீண்டு விட்டோம் என்று அமெரிக்க அரசு கடந்த மாதம் அறிவித்தது. ஆனால் வேலை யின்மை விகிதம் ஒன்பது அல்லது பத்து விழுக்காடாக தொடர்கிறது என்பதை ஸ்டிக்லிட்ஸ் சுட்டிக்காட்டுகிறார்.

மீட்பு நடவடிக்கைகள் என்று அமெரிக்க மத்திய வங்கி எடுத்து வருபவை பற்றி கருத்து தெரிவித்த அவர், எக்கச்சக்கமான குழப்பங்களைத்தான் அந்த நடவடிக்கைகள் ஏற்படுத்துகின்றன என்று காரசாரமாக விமர்சிக்கிறார். மத்திய வங்கி அளித்த நிதி பங்குச்சந்தையில் ஏராளமான புழக்கத்தை உருவாக்கியது. ஆனால் அமெரிக்காவின் உள்நாட்டு முதலீடுகளில் அவை தலை காட்டவில்லை. தங்கள் கணக்கு வழக்குகளில் இருக்கும் ஏற்ற இறக்கங்களை சரி செய்யவே மத்திய வங்கி தந்த பணத்தை வங் கிகள் பயன்படுத்திக் கொண்டன.

சமையலுக்கான ஊழியர் களே இல்லாமல், சமையலுக்கு பல நிபுணர்களை மட்டும் அமர்த்திக் கொண்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் மீட் புக்கான குழுவும் ஆகிவிட்டது. எக்கச்சக்கமான நிபுணர்கள் அதில் இடம் பெற்றிருக்கிறார் கள் என்று ஸ்டிக்லிட்ஸ் சலிப் போடு கூறுகிறார். தேசிய பொருளாதார கவுன்சிலுக்கு தலைமைப் பொறுப்பேற்றுக் கொள்வீர்கள் என்று கூறப் படுகிறதே என்றவுடன், கூட்டத் தோடு கூட்டமாக நானுமா என்று பத்திரிகையாளர்களிடம் திருப்பிக் கேட்டுள்ளார்.

விடிந்தால் என்ன ஆகும் என்ற கவலையோடுதான் அமெரிக்க நடுத்தர மற்றும் ஏழை மக்கள் படுக்கைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.ஊக வணிகம்தான் இதற்குக் காரணம்...

இந்தியாவின் பெருநகரங்களில் ஏராளமான தேவையிருக்கும் நிலையிலும் வீடுகளின் விற்பனை பெரும் அளவில் சரிந்துள்ளது. பெருநிறுவனங்களின் அமைப்பான அசோசெம் மேற்கொண்ட ஆய்வில்தான் இந்த விபரம் வெளிப்பட்டது. 2010-11 ஆம் ஆண்டின் முதல் பாதியில் கடந்த ஆண்டை விட 40 விழுக்காடு குறைவான எண்ணிக்கையில்தான் வீடுகள் விற்பனையாகியுள்ளன.

தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ஐதராபாத் மற்றும் புனே ஆகிய நகரங்களில் உள்ள ரியல் எஸ்டேட்காரர்களிடமிருந்துதான் இந்தத் தகவலைத் திரட்டியுள்ளார்கள். இந்த சரிவுக்கு முதல் காரணமாகச் சொல்லப்படுவது வீடுகளின் விலைகள் அபரிமிதமான ஏற்றத்தைக் கண்டுவிட்டதுதான் காரணம் என்கிறார்கள், வீடுகளை வாங்கும் கனவில் மிதந்து கொண்டிருப்பவர்கள்.

கடந்த ஆண்டு 30 லட்சம் ரூபாய்க்கு விற்பனையான வீடு தற்போது 45 லட்சம் ரூபாயைத் தொட்டுவிட்டது. உயர் நடுத்தர மற்றும் நடுத்தர மக்கள் வீடுகளில் முதலீடு செய்யக் காத்துக் கொண்டிருக்கும் வேளையில் ஏன் இந்த நிலைமை என்றால் கச்சாப் பொருட்களின் விலை ஏறிவிட்டதே என்கிறார்கள் ரியல் எஸ்டேட்காரர்கள். இரும்பு மற்றும் சிமெண்ட் போன்றவற்றின் விலைகள் ஏறியுள்ளன என்பது உண்மைதான். ஒட்டுமொத்த செலவில் இந்த இரண்டும் 35 விழுக்காட்டை விழுங்கிவிடும் என்பதும் உண்மையே.

இதெல்லாம் இருந்தாலும் ஊக வணிகம்தான் பிரதான காரணம் என்பதையும் அசோசெம் ஆய்வு தெரிவிக்கிறது. உடனடியாக பெரும் லாபம் சம்பாதிப்பதற்காக ஊக வணிகத்தில் ரியல் எஸ்டேட்காரர்கள் ஈடுபடுகிறார்கள். இதுபற்றி ரியல் எஸ்டேட்காரர்களிடம் கேட்டால் அதை அவர்கள் மறுக்கவில்லை. ஆனால், இரும்பு மற்றும் சிமெண்ட் விலைகளிலும் ஊக வணிகம்தானே விளையாடியிருக்கிறது என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

மொத்தத்தில் நவீன தாராளமயக் கொள்கைகளின் செல்லக் குழந்தையான ஊக வணிகம் பலரின் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறது.

2 comments:

மங்குனி அமைசர் said...

குட , நன்றாக சொல்லி இருக்கின்க்த்ரீர்கள்

மங்குனி அமைசர் said...

சார் இந்த வேர்டு வெரிபிகேசன எடுத்து விடுங்க