Sunday, August 22, 2010

டார்வினின் விதி மீறும் நாய்கள்

தக்கவையே வாழும்'' என்பது டார்வினின் சித்தாந்தம். சுற்றச் சூழலுக்கு எது தக்கதாக இருக்கிறதோ அதுவே வெற்றியுடன் வாழும், ஏனையவை இயற்கைத் தேர்வில் வாழத் தகுதியிழந்து மறைந்து, சந்ததிகள் இல்லாமல் அழியும் என்பது டார்வின் விதி. நாய்களைப் பொருத்தவரை டார்வின் குறிப்பிடும் இயற்கைத் தேர்வினை விட மனிதர்களின் செயற்கைத் தேர்வே அவற்றின் பரிணாமத்தை நிர்ணயிக்கின்றன.

பூனை, நரி, ஓநாய், புனுகு பூனை, கரடி போன்ற விலங்குகளுக்கு நெருங்கிய இனம்தான் நாய்கள். இருந்தாலும் அவற்றின் தலை அமைப்புகளில் கடந்த சில மில்லியன் ஆண்டுகளில் ஏற்பட்டிராத அளவுக்கு பிரமிப்பூட்டும் அளவுகளில், வடிவங்களில் நாய்களின் கபால அமைப்புகள் மாற்றமடைந்திருக்கின்றன. இத்தனை மாற்றங்களும் கடந்த சில நூற்றாண்டுகளில்தான் ஏற்பட்டிருக்கிறது என்பது அதிர்ச்சி தரும் உண்மை.

புல்டாக், பூச், டாபர்மேன், பாமரேனியன், கண்விழி பிதுங்கியிருக்கும் சிக்குவாக்குவா, கோல்லி, ராஜபாளையம் என்று குறைந்தது 500 வகை நாய் வகைகள் உலகில் மனிதனது செயற்கை இனவிருத்தி முறைகளால் தோன்றியுள்ளன.

நாய் ஒரு மாமிச பட்சனி. ஆனால் தன்மானமுள்ள எந்த ஒரு மாமிச பட்சனியாவது நாயின் தலை அமைப்பைப் பார்க்க நேர்ந்தால் அது அவமானத்தால் குன்றிப் போய்விடும். அந்த அளவுக்கு நாய்களின் தலை இஷ்ட்டத்திற்கு பல டிசைன்களில் மாற்றப்பட்டிருக்கிறது. வேட்டை ஆட வேண்டியதில்லை, கடித்துக் குதறி சாப்பிட வேண்டியதில்லை என்பதால் வீட்டு நாய்களின் வாய், பற்கள், கபாலம் ஆகியவை பிஸ்க்ட், கடலை, தயிர்சாதம் சாப்பிடும் வகையில் மிருதுவாகிவிட்டது. எஜமானனின் செருப்புத்தான் ஒரு நாய் தன் வாழ்நாளில் கடித்துக் குதறும் மிகவும் கெட்டியான பொருள் என்றால் அது மிகையாகாது.

மான்செஸ்ட்டர் பல்கலைக்கழக விலங்கியல் அறிஞர் டிரேக் என்பவர் மாமிசப் பட்சனிகளின் கபாலத்தில் குறிப்பிடத்தக்க 50 வகை அமைப்புகளை அளந்து அவை நாய்களிடம் எப்படி இருக்கிறது என்று கணக்கிட்டுப் பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சிதான் எஞ்சியது. அத்தனை தூரத்திற்கு நாய்களின் கபால அமைப்பு மாறியிருந்தது.

மனிதன் நாய்களின் திறமையை விட அவற்றின் வெளித் தோற்றத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்ததால் டார்வினின் விதியில் சிறு திருத்தம் ஏற்பட்டது. வலுவுள்ளவை வாழும் என்பதற்கு பதிலாக அழகுள்ளவை வாழும் என்று மாறிவிட்டது. இது நாய்களுக்கு மட்டும் பொருந்தும் என்பதை தயவு செய்து நினைவில் வைத்துக்கொள்ளவும். ஏனெனில் இன்னமும் (நாய்களைத் தவிர) டார்வினின் தக்கவையே வாழும் என்ற கொள்கையே நிலவுகிறது.

- முனைவர் க.மணி

No comments: