ஒவ்வொரு காந்தமும் வடக்கு தெற்கு என இரண்டு துருவங்களைக் கொண்டது. ஓரினத் துருவங்கள் அருகருகே வரும்போது அவற்றிற்கிடையே விலக்குவிசை தோன்றும். எதிரினத் துருவங்கள் அருகருகே வைக்கப்படும்போது அவற்றிற்கிடையே கவர்ச்சி விசை தோன்றும். காந்தங்களின் இந்த அடிப்படைப் பண்பு காந்த மிதவை ரயிலை இயக்க பயன்படுகிறது.
காந்த மிதவை இரயில் வழக்கமான இரும்புத் தண்டவாளங்களில் ஓடும் இரயில் அல்ல. guideway எனப்படும் சிறப்புப்பாதைகள் வழியாக இந்த மிதவை இரயில்கள் ஓடுகின்றன. guideway யின் வழியாகச் செல்லும் வலிமையான காந்தச்சுருள் இரயில் பெட்டியின் அடிப்பகுதியுடன் ஒரு விலக்கு விசையை தோற்றுவிப்பதால் guideway யில் இருந்து 1 முதல் 10 செமீ தொலைவிற்கு இரயில் வண்டி உயர்த்தப்படுகிறது. Guideway ன் பக்கச்சுவர்களுக்கு கொடுக்கப்படும் மின்னோட்டம் காரணமாக மற்றொரு காந்தப்புலம் தோற்றுவிக்கப்படுகிறது. மின்னோட்டத்தின் திசை மாறும்போதெல்லாம் காந்தவிசையின் துருவங்களும் மாறிக்கொண்டிருக்கும். இதன் விளைவாக ஒரு இழுத்தல் - தள்ளுதல் விசை தோற்றுவிக்கப்படுகிறது.
இரயில் வண்டியின் முன்புறம் இழுத்தல் விசை தோற்றுவிக்கப்படும் அதே வேளையில் பின்புறம் தள்ளுதல் விசை தோற்றுவிக்கப்படும். எனவே, இரயில் வண்டி காற்றுமெத்தையின்மீது சுகமான பயணத்தை மேற்கொள்ளுகிறது. உராய்வு இல்லை என்பதாலும், இரயில் வண்டியின் உடலமைப்பு காற்றை கிழித்துச்செல்லும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதாலும் வண்டியின் வேகம் அதிகமாக இருக்கும். அதாவது ஒரு மிதவை இரயிலின் வேகம் போயிங்-777 விமானத்தின் வேகத்தை விட அதிகமாக இருக்கும்.
மிதவை இரயிலில் பயன்படும் காந்தவிசையின் கவர்ச்சி-விலக்கல் தத்துவம் உணவுப்பொருட்களின் இயற்பியல், வேதியியல் பண்புகளை ஆராயப் பயன்படுகிறது என்பது அண்மைக்கால கண்டுபிடிப்பாகும். காந்த மிதவை மண்டலத்தில் வைக்கப்படும் உணவு, நீர் மற்றும் பானங்கள் இவற்றின் தன்மைகள் எளிதில் அளவிடப்படுகின்றன. உணவுசார்ந்த தொழில்நுட்பங்களில் ஒரு பொருளின் அடர்த்தி முக்கியமான பங்கு வகிக்கின்றது.
ஒரு உணவுப்பொருளில் அடங்கியுள்ள வேதிப்பண்புகளை அறிந்துகொள்ள அதன் அடர்த்தி பற்றிய அறிவு அவசியம். ஒரு மென்பானத்தில் அடங்கியுள்ள சர்க்கரையின் அளவு, ஒயினில் அடங்கியுள்ள ஆல்கஹாலின் அளவு, பாசன நீரில் அடங்கியுள்ள உப்பின் அளவு, பாலில் அடங்கியுள்ள கொழுப்பின் அளவு இவையெல்லாம் அடர்த்தியை சார்ந்தவை. இதுவரை உபயோகத்தில் இருந்துவந்த ஆய்வுக்கருவிகள் அனைத்தும் விலை கூடியவை, எளிதில் கையாள முடியாதவை, மேலும் சிக்கலானவை.
காந்த மிதவை மண்டலத்தில் அளவீடுகளை செய்வதற்கென ஒரு உணர்கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு முனைகளிலும் காந்தங்கள் பொருத்தப்பட்ட இந்த உணர்கருவியில் ஒரு திரவம் நிரப்பப்பட்டிருக்கும். சோதித்து அறிய வேண்டிய உணவுப்பொருட்களின் மாதிரிகள் இந்த திரவத்திற்குள் கடந்துசெல்லும்போது உணவுப்பொருட்களின் அடர்த்தியை எளிதில் அளவிட்டுக் கொள்ளலாம்.
Courtesy: Mr.Mu.Gurumoorthy
No comments:
Post a Comment