மனிதர்களின் இன்றைய வாழ்க்கைமுறை இயற்கையோடு இயைந்ததாக இல்லை. விளைவாக புவிமாசுபடுதல், புவிவெப்பமடைதல் போன்ற ஆபத்துகளிடையே நாம் தளர்ந்தநடை போட்டுக்கொண்டிருக்கிறோம். நம்மை இன்னுமொரு ஆபத்தும் எதிர்நோக்கியிருப்பதாக அறிவியல் வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். வனவிலங்குகளிடமிருந்து மனிதர்களை தொற்றக்கூடிய நோய்களின் அச்சுறுத்தல் உச்சத்தில் இருப்பதாக அறிவியல் அறிஞர்கள் அறிவித்துள்ளார்கள்.
வனவிலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ்கள் மற்றும் நோயூக்கிகளினால் உருவாகக்கூடிய புதிய நோய்களைத் தடுக்கும்பணியில் U.S.Agency for International Development (USAID) என்னும் அமைப்பு இயங்கிவருகிறது. விஞ்ஞானிகளின் பார்வையில் முழுசுகாதாரம் என்பது மனிதர்கள், விலங்குகள், சுற்றுச்சூழல் ஆகிய மூன்றையும் உள்ளடக்கியது. உலகநாடுகள் அனைத்திலும் நோய்க்கிருமிகளின் பரவலை கண்காணித்து கட்டுப்படுத்தும் பணியில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது. தென் அமெரிக்காவின் அமேசான் வடிநிலம், ஆப்பிரிக்காவின் காங்கோ வடிநிலம், அதனை ஒட்டிய ரிஃப்ட் பள்ளத்தாக்கு, தெற்கு ஆசியாவின் கங்கை சமவெளி, தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகள் இந்த உலகளாவிய நிறுவனத்தின் கண்காணிப்பில் உள்ளன. இங்கெல்லாம் விலங்குகளிடையே தோன்றி மனிதர்களிடம் பரவக்கூடிய நோயூக்கிகள் கண்காணிக்கப்படுகின்றன.
பெருவாரியான மக்களை அழித்தொழிக்கும் கொள்ளை நோய்கள் ஒவ்வொரு 30 முதல் 40 ஆண்டுகளில் தோன்றுவதாக வரலாறு கூறுகிறது. நவீன உலகத்தில் இதுவரை தோன்றியிராத புதிய நோய்கள் மனிதர்களைத்தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துவருகின்றன. நம்முடைய வாழ்க்கை முறை மாறிக்கொண்டிருக்கிறது. முன்னெப்போதையும் விட மனிதர்கள் இப்போது அதிகமாக பயணம் மேற்கொள்கிறார்கள். நம்முடைய குடியிருப்புகளும் சாலைகளும் காடுகளை அடுத்தும், பல இடங்களில் காடுகளுக்குள்ளும் அமைந்திருக்கின்றன. நாம் வளர்க்கும் விலங்குகளும், பறவைகளும் வனவிலங்குகளுடன் நெருங்கிவருவதால் நாம் இதுவரை அறிந்திராத வைரஸ்களும், பாக்டீரியாக்களும் வெகுவேகமாக மனிதர்களிடம் பரவுகின்றன. மனிதர்களிடம் நோயை உண்டாக்குபவை என்று இதுவரை சுமார் 1,461 நோயூக்கிகள் கண்டறியப்பட்டுள்ளன. ஏறத்தாழ 60 சதவீதம் நோயூக்கிகள் விலங்குகளிடமிருந்து தோன்றியவைதான். இவ்வாறு மனிதகுலம் தாக்குதலுக்குள்ளான நோய்களின் பட்டியல் நீளமானது.
1918ல் உலகை உலுக்கிய இன்புளூயன்சா என்னும் கொள்ளைநோய் ஏறத்தாழ 50 மில்லியன் மக்களை பலிவாங்கியது. இந்த நோய்க்குக்காரணமான வைரஸ் பறவைகளிடமிருந்துதான் மனிதருக்குப் பரவியது. The human immunodeficiency எனப்படும் HIV வைரஸ் உலகில் மில்லியன் மக்களை பீடித்திருக்கிறது. சிம்பன்ஸி குரங்குகளிடமிருந்து இந்த வைரஸ்கள் மனிதர்களுக்கு தாவின. 2003ல் சீனாவின் தெற்குப்பகுதியில் SARS எனப்படும் Severe acute respiratory syndrome நோய் தாக்கியது. அந்தப்பகுதியில் சேறுநிறைந்த சந்தைகளில் உணவிற்காக விற்கப்பட்ட வன விலங்குகளிடமிருந்துதான் இந்த நோய் தொற்றியது. இன்று நம்மை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஃப்ளூ நோய்க்கு காரணமான H5N1 வைரஸ் தோன்றிய இடம் பறவைகள்தான்.
உலகம் முழுவதிலும் பரவும் இத்தகைய கொள்ளை நோய்களால் மொத்தமக்கள் தொகையில் கால்பகுதியினர் பாதிக்கப்படுவார்கள். இவர்களுள் 51 மில்லியன் முதல் 81 மில்லியன் மக்கள் மரணத்தை சந்திப்பார்கள். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மட்டும் 4,00,000 உயிரிழப்புகள் ஏற்படும். உலகின் பொருளாதார இழப்பை கணக்கிட்டால் அது நான்கு டிரில்லியனை தாண்டும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
1 comment:
தொடர்ந்து விழிப்புணர்வு செய்திகளைத் தருவதற்கு நன்றி.....
Post a Comment