Tuesday, March 2, 2010

உயிரி கார்பன்

உயிரி கார்பன் என்பது பாறைவடிவிலான செறிவுமிகுந்த கார்பன் ஆகும். சாதாரண கரியில் நீர் மூலக்கூறுகள் காணப்படும். ஆக்சிஜன் இல்லாத சூழலில் சாதாரணகரியை வெப்பப்படுத்தினால் இந்த நீர் மூலக்கூறுகளை அகற்றமுடியும். நீர் மூலக்கூறுகள் அற்ற கார்பன் ‘உயிரி கார்பன்’ (bio char) எனப்படுகிறது. ஆதிவாசிகளான அமேசான் இந்தியர்கள் மண்வளத்தைப்பெருக்குவதற்காக உயிரி கார்பனை பயன்படுத்தியிருக்கிறார்கள். இதுபற்றிய கட்டுரை அண்மையில் வெளிவந்த Environmental Science & Technology இதழில் வெளியாகியுள்ளது.




கார்பன் டை ஆக்சைடு ஒரு பசுமை இல்ல வாயு. புவி வெப்பமடைவதற்கு காரணமான கார்பன் டை ஆக்சைடில் கார்பன் என்னும் கரிமம் அடங்கியுள்ளது. உயிரி கார்பனை அதிக அளவில் தயாரிப்பதன் மூலம் காற்றில் கலந்துபோகும் கரிமத்தை மண்ணிலேயே நிலைபெறச் செய்யலாம்.இதன்மூலம் மண்வளம் பெருகும் என்பது இந்தக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொலம்பியாவின் ஆதிவாசிகளான அமேசான் இந்தியர்கள் வேளாண் கழிவுகளில் இருந்து உயிரி கார்பனை உற்பத்தி செய்திருக்கிறார்கள். மரம், புல், தட்டைகள் இவற்றை காற்றில்லா சூழலில் எரித்து மண்வளத்தை பெருக்கியிருக்கிறார்கள். மக்கும் பொருட்களுடன் இந்த உயிரி கார்பனையும் கலந்து நிலத்திற்கு உரமாக இட்டார்கள் என்னும் செய்தி விஞ்ஞானிகளிடம் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. மேலும் கரிமப்பொருளை காற்றில் கலக்கவிடாமல் நிலத்திலேயே உயிரி கார்பன் வடிவில் நிலைபெறச்செய்தார்கள் என்பது நமக்கெல்லாம் வியப்பூட்டும் செய்தி ஆகும்.

காற்றில்லா சூழலில் கரிமப்பொருட்களை எரிக்கும்போது கார்பன் மோனாக்சைடு - ஹைட்ரஜன் வாயுக்கலவை (synthesis gas) வெளியாகும். இந்த வாயுவை சேமித்து எரிபொருளாக பயன்படுத்தலாம். இது ஒரு ஆற்றல் குறைந்த எரிபொருள். ஆனால் வற்றாத வளமுடையது.

நன்றி: மு.குருமூர்த்தி

No comments: