Wednesday, February 24, 2010

பசி பட்டினிக்கெதிராகப் போராடியவர்

விவசாயத்திற்கென உள்ள நோபல் பரிசைப் பெற்ற ஒரே வேளாண் விஞ்ஞானி நார்மன் போர்லோ தனது 95-வது வயதில் சென்ற ஆண்டு காலமானார். 1970-ல் அவ ருக்கு இந்த பரிசு சமாதானத்திற் காகவும் சேர்த்து வழங்கப்பட்டது.

தாவரவியல் சம்பந்தமான விஷயங்களில் தணியாத தாகத்துட னும், அறிவியல் கூர்மையுடனும் 1950-களில் அவர் மெக்ஸிகோ வில் பணிபுரிந்து வந்தார். கோது மையின் கலப்பின வகை ஒன்றி னை உருவாக்கி, இரசாயன உரங் களையும் பூச்சி மருந்துகளையும் பயன்படுத்தினால் அமோக விளைச்சலைப் பெற முடியும் என அவர் நிரூபித்தார். 1956-ல் இந்த வகை கோதுமை மெக்ஸிகோவில் வர்த்தக ரீதியாக அறிமுகப்படுத்தப் பட்டது. இதனால் 1944-ல் கிடைத்த அறுவடையை விட ஆறு மடங்கு அறுவடையை 1963-ல் மெக்ஸிகோ பெறமுடிந்தது.

பசுமைப் புரட்சி

1960-களில் மக்கள் தொகை பெருக்கம், விவசாய உற்பத்தியில் தேக்கம், அடிக்கடி தவறும் பருவ மழை போன்ற காரணங்களால் பெரும் பஞ்சத்தையும் பட்டினியை யும் தெற்காசிய நாடுகள் எதிர் நோக்க வேண்டியிருந்தது. அப் போது இந்திய அரசின் உணவு அமைச்சராக இருந்த சி. சுப்பிர மணியம், கலப்பின கோதுமை விதைகளை இறக்குமதி செய்வ தற்கு நாடாளுமன்றத்தின் ஒப்பு தலைப் பெற்றார். 1974-ல் இந்தியா தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தது. பாகிஸ் தானிலும் இப் பரிசோதனை வெற்றிகரமாக நடந் தேறியது. இது `பசுமைப் புரட்சி’ என பலராலும் பாராட்டப்பட்டது. பின்னர் மண்வளம் பாழானதற்கு அதுவே காரணம் என்ற கடுமை யான விமர்சனத்திற்கும் ஆளா னது.

உலகம் விவசாயத்துறையில் வெற்றிபெற அமைதியும் சமாதான மும் நிலவினால்தான் இயலும் என் பது டாக்டர் நார்மன் போர்லோவின் கருத்து. பாரம்பரியமான முறைக ளுக்கு மாற்றாக மரபணு ஆராய்ச்சி களை அவர் பரிந்துரைத்தார். இதன் காரணமாக அவர் கடுமை யான விமர்சனங்களுக்கும் ஆளா னார். 50 ஆண்டுகள் தொடர்ச்சி யாக பசியையும் பட்டினியையும் பார்த்து நொந்துபோன தனக்கு, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு உணவளித்திட வேண் டும் என்ற சிந்தனையே மேலோங்கி நின்றது என்று அவர் கூறுவ துண்டு. அதே சமயம் புதிய விவ சாய முறைகளினால் சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றி எழுந்த கவலைகளும் நியாயமானவைதான் என அவர் ஏற்றுக் கொண்டார்.

உலகம் முழுவதும் உள்ள 100 கோடி மக்கள் இன்று போதிய உணவின்றி வாடுவதாக ஐ.நா. மதிப்பிடுகிறது. இந்தியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர், 1975-ல் உட்கொண்ட உணவில் மூன்றில் ஒரு பகுதி குறைவாக உட்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. பசிக்கெதிராக இதுவரை போரா டியவர்களில் டாக்டர் போர்லோ முதன்மையானவர் என்பது வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் கருத்து.

இரண்டாவது பசுமைப் புரட்சியும் புதிய சவால்களும்

இன்று, இரண்டாவது பசுமைப் புரட்சியைப் பற்றிய விவாதம் எழுந்திருக்கிறது. ஆனால் அது விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக் கோடு நின்றுவிட முடியாது. மண் வளப் பரிசோதனை மற்றும் பாதுகாப்பு, நீர் நிர்வாகம், சரியான விதைகளைத் தேர்ந்தெடுத்தல், நவீன உற்பத்தி முறைகள், இயற் கை வேளாண்மை, விளைபொருட் களைப் பாதுகாத்து நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கும் தொழில்நுட் பங்கள், உணவு பதப்படுத்தல் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக் கியதாக இருக்க வேண்டும்.

விவசாயத்துறையில் புதிய சவால்கள் எழுந்திருக்கின்றன. அவற்றைச் சந்திக்க புதிய வழி முறைகளைக் கண்டறிய வேண்டிய கடமை இன்றைய சமூகத்தின் முன் நிற்கிறது. புதிய பரிசோதனை களை மேற்கொள்வதற்கு முன் அவை மக்களுக்கும் சுற்றுச்சூழ லுக்கும் பெருமளவுக்குப் பாதிப் பின்றி, கூடுதலான நல்விளைவு களைத் தரக்கூடியவையா என்று கண்காணிக்கும் சமூகப் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. புதிய மரபணு விதைகள் பற்றி வர்த்தக நோக்கம் மட்டுமே கொண்ட பன் னாட்டுக் கம்பெனிகள் சொல்வதை நம்பி நாம் ஏற்க முடியாது. அவற் றை நமது நாட்டு விஞ்ஞானி களைக் கொண்டு சுயமாக ஆராய்ச்சி செய்து, அவை மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாதவை என் பதை நன்கு உறுதி செய்த பிறகே ஏற்க வேண்டும்.

பசிக்கெதிரான போர் இன்றும் தொடர்கிறது. சர்ச்சைகளும் தொடர்கின்றன. சர்ச்சைகள் புதிய வெளிச்சத்தைத் தரட்டும்.

No comments: