உணவு உற்பத்தி நம் நாட்டில் பருவமழையையே பெரும்பாலும் சார்ந் திருக்கிறது. பருவமழை தவறும் காலங் களில் ஏழை எளிய மக்கள், அரசு தரும் ரேஷன் அரிசி கிடைக்கவில்லையெனில் பட்டினி கிடக்கும் நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். இந்த அவலநிலை நீடிக்க வேண்டிய அவசியமே இல்லை. நல்ல மழை பெய்யும் நாட்களில் நீரைச் சேமித்துவைக்கும் முறையைச் சரியாகக் கடைப்பிடித்தால், இம்மாதிரியான நிலையிலிருந்து நாடும் மக்களும் தப்பிக்க முடியும் என டாக்டர் லக்ஸ் லட்சு மணன் அவர்கள், ‘தி இந்து’ பத்திரி கையில் செப்டம்பர் 6 அன்று ஒரு கட் டுரை எழுதி யிருக்கிறார்.
`நீர்வங்கி’
அப்படி ஒன்றும் நம் நாட்டில் பெய்யும் மழை குறைவானது அல்ல. மற்ற நாடுக ளோடு ஒப்பிட்டால் நமக்கு மழைநீர் அதிகமாகவே கிடைக்கிறது. ஆனால் பெய்யும் மழைநீரில் 95 சதவீதத்தை அப்படியே ஓடவிட்டு வீணாக்கிவிட்டு தேவையின்றி சிரமப்பட்டுக் கொண்டி ருக்கிறோம். கிடைக்கும் மழைநீரெல்லாம் பூமிக்குள் செல்வதற்கான ஏற்பாடு இருந் தால் மழை பெய்யாத காலங்களில் நமக் குத் தேவையான நீரை பூமியிலிருந்து எடுத்துக் கொள்ள முடியும். ஏ.டி.எம்.மி லிருந்து தேவையானபோது பணத்தை எடுத்துக்கொள்வது மாதிரி இந்த `நீர் வங்கி’யைப் பயன்படுத்திக் கொள்ள முடி யும். இதற்குப் பெரும் தடையாக இருப் பது, தரைமட்டத்திற்குக் கீழே இறுகிப் போயிருக்கும் மண்தட்டுதான்.
`அகல உழுவதைவிட ஆழ உழு’ என்பது நம் பழமொழியானாலும், நடைமுறையில் நமது விவசாயிகள் உழும் ஆழம் போது மான தல்ல. இந்த பாரம்பரிய உழவுமுறை காரணமாக தரைமட்டத்திற்குக் கீழே உள்ள மண்தட்டு காலப்போக்கில் பாறை போல் இறுகி விட்டது. இறுகிக்கிடக்கும் இத்தட்டை கடினமான இயந்திர கொழு வால் உடைத்துவிடுவதன் மூலம் மழைநீர் எளிதாக பூமிக்குள் செல்ல வழி ஏற்படும். வளர்ந்த நாடுகளில் அரை நூற்றாண் டுக்கு முன்னதாகவே வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்ட இம்முறையை தற் போதுதான் நம் நாட்டின் சில பகுதி களில் அமல்படுத்தத் தொடங்கி யிருக் கிறோம்.
யாருடைய தவறு?
பூமியை, வெவ்வேறு பயிர்களுக்கு வெவ்வேறு ஆழங்களுக்குத் தோண்ட வேண்டியிருக்கும். இதற்கு மேலைநாடு களில் 18 - லிருந்து 48 இன்ச்சுகள் வரை நீளம் உள்ள கொழுக்களைப் பயன்படுத்து கின்றனர். அம்மாதிரித் தோண்டும்போது மழைநீர் மண்ணுக்குள் ஊடுருவி நீர்மட் டத்தைப் பாதுகாக்கும். வறட்சி காலங் களில் மனிதர்களுக்கும் பயிர்களுக்கும் இந்நீர் பயன்படும். பயிர்களின் வேர்கள் பூமிக்குள் ஆழமாக ஊடுருவ முடிவதால், நீரையும் ஊட்டச்சத்துக்களையும் அதிக மாக உட்கொண்டு கூடுதல் விளைச் சலைப் பெறமுடியும்.
இதில் இன்னொரு நன்மை என்ன வெனில், பக்கத் திலுள்ள ஆற்றுப்படு கைகள், ஏரிகளில் உள்ள நீரும் பாதுகாக் கப்படும். பூமியின் மேல்பகுதியில் உள்ள மண்வளம் மழை நீரினால் அடித்துச் செல்லப்படாமலும் தடுக்கப்படுகிறது. பயிர்களுக்கு அடிக்கப்படும் பூச்சி மருந் துகள் மழைநீரோடு கலந்து ஓடி பக்கத் திலுள்ள நீர்நிலைகள் பாழாவதும் தடுக்கப்படும்.
இத்தனை நன்மைகள் கிடைக்கக் கூடிய ஓர் உழவுமுறையை நாம் பயன் படுத்திக் கொள்ளவில்லையெனில் அது யாருடைய தவறு?
முப்போக விளைச்சல்
மேலைநாடுகளைவிட நம் நாட்டு தட்பவெப்பநிலை ஒரே நிலத்தில் ஒன் றுக்கு மேற்பட்ட பயிர்களை விளைவிக்க உதவி செய்யக்கூடியது. நன்கு திட்ட மிட்டால், நாட்டின் பெரும்பாலான பகுதி களில் தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள் என மூன்று வகையான பயிர்களை சுழற்சி முறையில் பயன் படுத்தி முப்போக விளைச்சல் காணமுடியும்.
பருவமழை தொடங்குவதற்கு பல வாரங்கள் முன்னதாகவே மண்தட்டை உடைக்கும் வேலையைத் தொடங்கிவிட வேண்டும். முதன்முறையாக உடைக்கும் போது வயல் முழுவதும் டிராக்டரை ஒரு முறை பயன்படுத்திய பிறகு மீண்டும் ஒரு முறை இயக்க வேண்டியிருக்கும். வய லைச் சுற்றி எழுப்பப்படும் வரப்புகளின் உயரத்தை மேலும் அதிகரித்தால் கூடுதல் நீரைச் சேமிக்க முடியும். மண்ணைப் பரி சோதித்து, உரிய உரங்களைத் தேர்ந் தெடுத்த பிறகு அவற்றை பூமிக்கடி யில் அரை அடி ஆழத்தில் வைத்து 10, 15 நாட் களுக்கு அப்படியே விட்டுவிட வேண் டும். பருவ மழை தொடங்கியதும் முத லில் பெய்த மழைநீர் பூமிக்கடியில் உறிஞ் சப்படுகிறது. அடுத்தடுத்துப் பெய்யும் மழையும் பூமிக்கடியில் செல்வதற்கு தற்போது இடம் இருக்கும்.
நாடு முழுவதும் இத்திட்டத்தை விரிவுபடுத்தி நமது விவசாயம் பருவ மழையை நம்பியிருக்கும் அவல நிலையி லிருந்து விரைவிலேயே நாம் விடுபட வேண்டும்.
நன்றி: தீக்கதிர்
No comments:
Post a Comment