Thursday, August 6, 2009

பளபளக்கும் நிக்கல்-டங்ஸ்டன்

குரோமியப்பூச்சு பூசப்பட்ட பளபளப்பான வாகனபாகங்களும் குளியலறை சாதனங்களும் மனதை மயக்குபவை. உலோகங்களை பளபளப்பாக்குவதற்கு மட்டுமன்றி, அரிமானத்திலிருந்து பாதுகாப்பளிப்பதற்காகவும் குரோமியப்பூச்சு பூசப்படுவது வழக்கம். உலோகங்களுக்கு குரோமியப்பூச்சு கொடுக்கும் வழக்கம் 1940களில் தொடங்கியது. குரோமியப்பூச்சு மலிவானது; உபயோகிப்பவர்களுக்கு தீமை தராதது. ஆனால் குரோமியப்பூச்சு பூசும் தொழில் ஆபத்தானது; தொழிலாளர்களுக்கு தீமை தரக்கூடியது; சுற்றுச்சூழலை மாசுபடுத்தக்கூடியது.

Nickel குரோமியப்பூச்சுக்கு மாற்றுப்பொருள் கண்டுபிடிக்கும் முயற்சி நீண்ட காலமாகவே நடைபெற்று வருகிறது. குரோமியப்பூச்சுக்கு மாற்றாக உள்ள பொருள் உறுதித்தன்மையுடையதாகவும், அரிமானத்தை தடுப்பதாகவும், நீண்டகாலம் பளபளப்புத்தன்மையுடையதாகவும் இருத்தல் வேண்டும் என்பதுதான் ஆராய்ச்சியாளர்களின் நோக்கம். அண்மையில் ஆராய்ச்சியாளர்களின் கனவு நனவாகி உள்ளது. குரோமியப்பூச்சுக்கு மாற்றாக நிக்கல்-டங்ஸ்டன் உலோகக்கலவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கலவை குரோமியப்பூச்சில் உள்ள தீமைகள் இல்லாததாகவும், நீண்ட காலம் பளபளப்புத்தன்மையை பாதுகாப்பதாகவும் உள்ளது.

குரோமியஅயனிகள் நிறைந்த ஒரு தொட்டியில் மின்சாரத்தை செலுத்தி உலோகங்களின் மீது மெல்லிய படலத்தை படியவைப்பதன்மூலம் குரோமியப்பூச்சு செய்யப்படுகிறது. குரோமியத்தின் இணைதிறன் ஆறு என்பதால் குரோமியஅயனிகள் நிலத்தடி நீரை மாசுபடுத்தக்கூடியது; மேலும் நச்சுத்தன்மையுடையது. எனவே இந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் போதுமான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது. குரோமியம் எஃகைக்காட்டிலும் உறுதியானது. குரோமியத்தின் உறுதித்தன்மைக்கு அதனுடைய நானோபடிக வடிவம்தான் காரணம்.

குரோமியப்பூச்சுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ள நிக்கல்-டங்ஸ்டன்கலவையை மின்முலாம் பூசுவது எளிதாகவும் சிக்கனமாகவும் உள்ளது. ஒரே சமயத்தில் பல அடுக்குகளாக மின்முலாம் பூசமுடியும் என்பது கூடுதல் சிறப்பு. மின்னியல் துறையில் இணைப்புகள் ஏற்படும் இடங்களில் அரிமானத்தைத் தடுப்பதற்காக தங்கமுலாம் பூசுவதுண்டு. நிக்கல்-டங்ஸ்டன் பூச்சுக்கு மேலாக தங்க முலாம் பூசும்போது தங்கத்தின் உபயோகத்தை குறைக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2009/05/090520181103.htm

நன்றி : மு.குருமூர்த்தி

No comments: