Monday, March 2, 2009

காலநிலை மாற்ற பேச்சுவார்த்தைகள் - தர்மசங்கடமான உண்மைகள் சமரசங்கள் தீர்வைத் தருமா?

aligore காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான உலகின் முதல் சர்வதேச உடன்படிக்கையான கியோட்டோ உடன்படிக்கை 2009 உடன் காலாவதி ஆகும் நிலையில், புதிய உடன்படிக்கை எப்படி அமைய வேண்டும் என்பதற்கான பேச்சுவார்த்தை இந்தோனேசியத் தீவான பாலியில் கடந்த டிசம்பர் மாதம் நடந்து முடிந்துள்ள நிலையில் நாம் இருக்கிறோம். கோபன்ஹேகனில் 2009ம் ஆண்டு நடைபெறும் மாநாட்டில் புதிய உடன்படிக்கை இறுதி செய்யப்படும்.

இந்த நிலையில் பாலி பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றதாக இந்திய பிரதிநிதிகளும், வளரும் நாட்டு பிரதிநிதிகள் சிலரும் தெரிவிக்கின்றனர். இது எந்த அளவு உண்மை?

காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதற்கான சர்வதேச கூட்டு முயற்சிகளை ஒருங்கிணைக்க ஐ.நா. காலநிலை மாற்ற பணித்திட்ட பேரவை 1990ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளுக்கு இடையே பொதுவான அதேநேரம் வேறுபட்ட பொறுப்புகள் இருக்க வேண்டும் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆனால் இந்த நோக்கத்தை அடைவதில் அமெரிக்கா, கூட்டாளி நாடுகள் எப்பொழுதுமே தடையாக நிற்கின்றன. நோபல் பரிசு பெற்ற அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல் கோர் கியோட்டோ உடன்படிக்கை அமெரிக்க பிரதிநிதிகள் குழுவுக்கு தலைமை வகித்துச் சென்றபோதிலும் மாற்றங்கள் ஏற்படவில்லை.

கியோட்டோ உடன்படிக்கையில் கையெழுத்திடாதது மட்டுமின்றி, வாயு வெளியீட்டு கட்டுப்பாடுகளை அமெரிக்கா எந்தக் காலத்திலும் ஏற்கவில்லை. பாலி பேச்சுவார்த்தையிலும் அதுதான் நடந்தது. வளரும் நாடுகளுக்கு வரையறுக்கப்பட்ட எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இது பற்றிய கருத்து பாலி தீவு வரைவு அறிக்கையில் இடம்பெற்ற போதும், இறுதி அறிக்கையில் அது ஒரு அடிக்குறிப்பாக மட்டுமே இடம்பெற்றுள்ளது. கட்டுப்பாடுகள் புறந்தள்ளப்பட்டுவிட்டன.

கியோட்டோ உடன்படிக்கையை ஏற்க மறுத்த அமெரிக்கா, இந்தியா, சீனா, பிரேசில், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட வளரும் நாடுகள் அளவிடத்தக்க கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அப்பொழுது வலியுறுத்தியது. பாலி பேச்சுவார்த்தையிலும் அமெரிக்க இதையே வலியுறுத்தியது. கடைசியாக, மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் வளரும் நாடுகள் பங்கேற்கும், அது அளவிடத்தக்கதாக அமையத் தேவையில்லை என்று இந்தியா வலியுறுத்திய கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

உலகை கடுமையாக மாசுபடுத்தி வரும் வளரும் நாடுகள், மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் நேரடியாகப் பங்கேற்கத் தயாராக இல்லை. மாறாக, வளரும் நாடுகளில் மக்கள்தொகை அதிகமாக இருப்பதை போலிக் காரணமாகக் கூறி வருகின்றன. வளரும் நாடுகளின் மீது காலனி ஆதிக்கம் செலுத்தி இயற்கை வளங்களைச் சுரண்டி தங்களை வளர்த்துக் கொண்ட மேற்கு நாடுகள், 21ம் நூற்றாண்டிலும் அதைத் தொடர முயற்சிக்கின்றன.

பாலித் தீவு பேச்சுவார்த்தையும் அதையே பிரதிபலிக்கிறது. வளரும் நாடுகளின் பிடிவாதத்தால் கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை தொடக்கப்புள்ளியில் நிற்பது போலவே தெரிகிறது. வளரும் நாடுகளின் இந்த ஆதிக்க உணர்வை ஜி 77 கூட்டமைப்பு என்ற குடையின் கீழ் இணைந்து வளரும் நாடுகள் எதிர்க்க வேண்டும்.

ஆனால் அமெரிக்க பிடிவாதத்தால் தெளிவான வரையறைகளை உருவாக்காமலேயே பாலி பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. இதை வெற்றி என்று கூறத் தோன்றவில்லை.

காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதில் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்ள அமெரிக்கா எல்லா காலமும் மறுத்து வருகிறது. இந்தியாவும் அந்த வழியையே பின்பற்றுகிறது. அதைத்தான் பாலி பேச்சுவார்த்தையிலும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. பேச்சுவார்த்தையின் முடிவுகள் அதையட்டியே அமைந்துள்ளன. இதை வெற்றி என்று கூற முடியுமா?

காலநிலை மாற்றம் தீவிரமடைந்து வருகிறது. ஆனால் அதை மட்டுப்படுத்த வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகள் தேவையில்லை. இயன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் போதும் என்பது உயிர் போகத்தான் போகிறது, மெதுவாக சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று கூறுவது போல இருக்கிறது.

இதுபோன்ற நமது மனப்பான்மைகள் மாறவேண்டும். காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படப் போவது இந்தியா போன்ற வளரும் நாடுகள்தான். அதிலும் குறிப்பாக ஏழைகள், ஒடுக்கப்பட்டோர்தான் அதிகமும் பாதிப்பைச் சந்திப்பர். ஏற்கெனவே பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகிவரும் விளிம்புநிலையில் உள்ளோர், சுற்றுச்சூழல் ரீதியிலும் ஒடுக்கப்படுகின்றனர். இது பற்றி சொல்லாடலை உருவாக்கி, அரசுக்கு நெருக்கடியை ஏற்படுதத வேண்டும்.

(1992 ரியோடிஜெனிரோவில் நடைபெற்ற ரியோ பூமி மாநாடு என்றழைக்கப்பட்ட மாநாட்டில் ஐ.நா. காலநிலை மாற்ற பணித்திட்டப் பேரவை உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1997ம் ஆண்டு கியோட்டோ உடன்படிக்கை உருவானது.)

இ.பி.டபிள்யு.

காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்த உடனடியாகச் செயல்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஐ.பி.சி.சி. நான்காவது மதிப்பீட்டு அறிக்கை எச்சரிக்கிறது. ஆனால் அதற்குப் பிறகு கூட்டப்பட்ட பாலி பேச்சுவார்த்தை 'எதைப் பற்றியும் கவலைப்படாத தன்மை'யையே வெளிப்படுத்துகிறது. ஐ.நா. காலநிலை மாற்ற பணித்திட்ட பேரவையின் 'வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளிடையே பொதுவான அதேநேரம் வேறுபட்ட பொறுப்புகளை ஏற்றுக் கொள்வது' என்ற அடிப்படைக் கொள்கை விட்டுக்கொடுக்கப்படவில்லை. காலநிலை மாற்ற மட்டுப்படுத்தும் சர்வதேச பேச்சுவார்த்தையில் கடந்த முறையைப் போல அமெரிக்கா விலகவில்லை.

ஆனால் இந்தியா இன்னமும் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளத் தயாராகவில்லை. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் வரலாற்று ரீதியிலும், நடப்பு ரீதியிலும் வளரும் நாடுகளுக்கு அதிக பொறுப்பு உள்ளது என்பது உண்மையே. சர்வதேச பேச்சுவார்த்தைகளில் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் இதை வலியுறுத்த வேண்டும். ஆனால் அதேநேரம் மட்டுப்படுத்தும் முயற்சிகளில் வளரும் நாடுகள் நடவடிக்கை எடுக்கட்டும், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற மனப்பான்மை பயன்தராது.

காலநிலை மாற்றம் 'பாயத் தயாராக இருக்கும் பிசாசைப் போன்றது'. தூண்டிவிடப்பட்ட பிறகு அதன் செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியாது. எனவே, இந்தியாவும் மட்டுப்படுத்தும் முயற்சியில் அளவிடத்தக்க மேற்கொள்ள வேண்டும். இதற்காக தேசிய அளவில் கொள்கை மாற்றங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதுடன், அவற்றை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச பேச்சுவார்த்தைகளில் தன் இடத்தை தெளிவுபடுத்த வேண்டும்.

காலநிலை மாற்றம் முக்கியத்துவம்

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெல் காலநிலை மாற்றத்துக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருகின்றனர். இவ்வளவு காலம் கியோட்டோ உடன்படிக்கையில் கையெழுத்திடாமல் இருந்து வந்த ஆஸ்திரேலியாவில், ஆட்சி மாற்றத்தை நிர்ணயிப்பதாக காலநிலை மாற்றப் பிரச்சினை உருவாகியுள்ளது.

அமெரிக்கா முன்னாள் அதிபர் அல் கோர், காலநிலை மாற்ற பன்னாட்டு அரசுகள் குழுவுக்காக அதன் தலைவர் ராஜேந்திர குமார் பச்சௌரி ஆகியோர் நோபல் அமைதிப் பரிசு பெற்றுள்ளனர்.

கியோட்டோ உடன்படிக்கை தொடர்பான விவாதத்தின்போது, அமெரிக்க வாழ்க்கை முறையை எதற்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது என்று அமெரிக்கா தெரிவித்தது. குளிரை எதிர்க்க அதிக புதைபடிம எரிபொருள் தேவை என்கிறது கனடா. பொருளாதார வளத்துக்கு எண்ணெய் ஏற்றுமதியை மட்டுமே சார்ந்திருப்பதால், கச்சா எண்ணெய்க்கு வரி விதித்து கட்டுப்படுத்தக் கூடாது என்கிறது சவுதி அரேபியா. தனித்தனியாகப் பார்க்கும்போது இந்த அக்கறைகள் சரியானவை போலத் தோன்றலாம். ஆனால் காலநிலை மாற்றத்தைப் பொருத்தவரை இவையெல்லாம் பயங்கர எதிர்விளைவுகளை உருவாக்கக் கூடியவை. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உடனடியாக மட்டுப்படுத்தும் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய கூட்டமைப்பு, தென்னாப்பிரிக்கா, சீனா போன்றவை வலியுறுத்துகின்றன.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் புதிய சர்வதேச உடன்படிக்கையை உருவாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஆக்கப்பூர்வமான பங்கேற்பை இந்தியா உறுதி செய்ய வேண்டும். அதற்கு இப்பிரச்சினை குறித்து நாட்டில் விரிவான பொது விவாதம் நடத்தப்பட வேண்டும். புவி அதிவிரைவாக வெப்பமடைந்து வரும் நிலையில், அதன் எதிர்விளைவுகளை எதிர்கொள்ள ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை மட்டும் பெரும் பயன் தராது. அளவிடத்தக்க மாற்றங்களை இந்தியா ஏற்படுத்த வேண்டிய நேரம் வந்தாகிவிட்டது.

டவுன் டு எர்த்

வளரும் நாடுகளின் சுயநல முகம் மீண்டும் பாலியில் வெளிப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் 1990களில் தொடங்கி தற்போது வரை நீண்டாலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் உடன்படிக்கைகள் எதுவும் கையெழுத்தாகவில்லை. எல்லாம் தொடக்கப்புள்ளியிலேயே நிற்கிறது. இந்தக் காலத்தில் பசுமையில்ல வாயு வெளியீடு அதிகரித்திருக்கிறது. காலநிலை மாற்றம் விளைவுகள் பயங்கர நிலையை எட்டி வருகின்றன. உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்தப் பேரழிவை தடுக்க முடியாது.

இவ்வளவுக்கும் பாலி பேச்சுவார்த்தை சர்வதேச உடன்படிக்கையை தொடங்குவதற்கான பேச்சுவார்த்தை மட்டுமே, அந்தப் பேச்சுவார்த்தையிலும் அமெரிக்கா தன் பிடிவாதத்தை அரங்கேற்றியுள்ளது.

கார்பன் டை ஆக்சைடு வெளியீடு எப்பொழுது உச்சத்தை அடையும், எப்பொழுது சரியத் தொடங்கும் என்பதற்கான கால வரையறையை நிர்ணயிக்க இந்த ஒப்பந்தம் தவறிவிட்டது. கார்பன் டைஆக்சைடு வெளியீட்டை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும், குறிப்பிட்ட காலத்துக்குள் இந்த அளவு பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயம் இந்த பேச்சுவார்த்தையில் இறுதி செய்யப்படவில்லை. பணக்கார அல்லது கார்பன் கடன் நாடுகள் பசுமையில்ல வாயு வெளியீட்டு கட்டுப்பாட்டு இலக்குகளை சர்வதேச பேச்சுவார்த்தைகள் மூலம் கண்டடைவது. சட்டத்துக்கு கட்டுப்பட்ட, தண்டனை விதிக்கத்தக்கதாக இருக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தைகளின் தொடக்கத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது

இதற்கு சர்வதேச உடன்படிக்கைகள் மூலம், கட்டுப்பாட்டு இலக்குகள் நிர்ணயித்து, வாழ்க்கை முறையில் அளவிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதே உலக நாடுகளின் விருப்பம். ஆனால், தொடக்கத்தில் இருந்தே அமெரிக்கா இதை ஏற்றுக் கொள்ளவில்லை. 30 கோடி மக்கள்தொகையைக் கொண்டுள்ள அமெரிக்கா வரலாற்று ரீதியிலும், நடப்பிலும் 25 சதவிகித பசுமையில்ல வாயுக்களை வெளியிட்டு வருகிறது. காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்தும் முதல் சர்வதேச உடன்படிக்கையான கியோட்டோ உடன்படிக்கையில் கையெழுத்திடாமல் வெளியேறியது. எல்லா காலமும் தன்னார்வ நடவடிக்கைகள் எடுத்தால்போதும், காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்தலாம் என்று வலியுறுத்தி வருகிறது. அந்த அம்சம் பாலி பேச்சுவார்த்தையிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

வளரும் நாடுகளை அடக்க அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. காலநிலை மாற்றப் பேச்சுவார்த்தையிலும் இதே ஆதிக்க போக்கை அமெரிக்கா நீட்டிக்க முயற்சித்து வருகிறது. ஆனால் வளரும் நாடுகள் இதை இணைந்து எதிர்க்க வேண்டும்.

கியோட்டோ உடன்படிக்கையில் விதிக்கப்பட்ட கட்டாய கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை. அதனால் அதுபோன்ற கட்டுப்பாடுகள் தேவையில்லை. பணக்கார நாடுகளை எதிர்ப்பது கடினம் என்று வளரும் நாடுகளும் கூறுவது ஆக்கப்பூர்வமான நடைமுறை அல்ல. இதுபோன்ற சமரசம் அமெரிக்காவுக்கே நன்மை பயக்கும். உலகுக்கு தீமை பயக்கும்.

பாலி பேச்சுவார்த்தைகளின் இறுதிக் கட்டத்தில் வளரும் நாடுகள் மீது சுமத்தப்பட்ட கட்டுப்பாடு என்னவென்றால், அளவிடத்தக்க, அறிவிக்கத்தக்க, பரிசோதனை செய்யத்தக்க மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதாவது, வளரும் நாடுகள் கார்பன் டைஆக்சைடை மட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பங்கேற்க வேண்டும் என்று வளர்ந்த நாடுகள் வலியுறுத்தின. இந்தியாவின் வலியுறுத்தலை அடுத்து உகந்த மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை வளரும் நாடுகள் எடுக்கும் என்று பாலி பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொள்ளப்பட்டது.
நன்றி: ஆதி



No comments: