Tuesday, February 17, 2009

கார்பன் கிரகிப்பானாகச் செயல்படும் நெல்வயல்கள்


மேற்கத்திய விஞ்ஞானிகளின் மோசடி அம்பலம்


riceland நெல்வயல்கள் மீதேனை வெளியிடும் என்று பணக்கார நாடுகள் முன்வைத்த குற்றச்சாட்டு பொய் என்கிறது இந்திய விஞ்ஞானிகள் புதிதாக மேற்கொண்ட ஓர் ஆராய்ச்சி. புவி வெப்பமடைதலுக்கு பசுமையில்ல வாயுக்களே காரணம். கார்பன் டை ஆக்சைடு, மீதேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்றவை பசுமையில்ல வாயுக்கள் எனப்படுகின்றன. மனித செயல்பாடுகளே இந்த வாயுக்களை உருவாக்குகின்றன. சர்வதேச பேச்சுவார்த்தைகளில் ஒவ்வொரு முறை பசுமையில்ல வாயுக்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என்று பணக்கார நாடுகளை வலியுறுத்தும்போதும், அவை பதிலுக்கு இந்தியா, சீனாவை கைகாட்டுகின்றன. இங்குள்ள நெல்வயல்களும், கால்நடைகளும் பெருமளவு மீதேனை வெளியிடுவதே முக்கிய காரணம் என்று அவை குற்றஞ்சாட்டுகின்றன. ஆனால் இது எந்த அளவு உண்மை?

நெல்வயல்கள் பெருமளவு மீதேனை உற்பத்தி செய்யும் என்ற நம்பிக்கைக்கு மாறாக, நெல் வயல்களை கார்பன் கிரகிப்பான்களாகச் செயல்படுகின்றன என்ற புதிய ஆராய்ச்சி முடிவை இந்திய விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். நெல் வயல்கள் வளிமண்டலத்தில் இருந்து கரிம கார்பனை கிரகித்துக் கொண்டு புவி வெப்பமடைதலை குறைக்கின்றன என்று இந்த ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.

ஒரு ஹெக்டேரில் நெல் பயிரிடுவதன் மூலம் 5.5 டன் கரிம கார்பன் நிலத்தில் சேகரிக்கப்படுகிறது என்று இந்த ஆராய்ச்சியை நடத்திய ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் பிதிஷா மஜும்தார் மற்றும் கொல்கத்தாவிலுள்ள கல்யாணி பல்கலைக்கழகத்தின் விஸ்வபதி மண்டல் தெரிவிக்கின்றனர். ஒரிசா நெல் வயல்களில் சேகரித்த மண்ணில் அவர்கள் சோதனை நடத்தினர்.

நெல்வயல்கள் வளிமண்டலத்தில் பெருமளவு மீதேனை வெளியிடுகின்றன என்றே இதுவரை நம்பப்பட்டு வந்தது. இதற்கு மாறாக, மீதேனை உருவாக்க மண்ணிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும் கார்பனைவிட பெருமளவு கார்பன் மண்ணில் சேகரமாகிறது. நெல் வயல்கள் மண்ணில் சேகரிக்கும் கார்பனில் வெறும் 2.5-5 சதவிகிதம் மட்டுமே மீதேனாக மாறுகிறது, எஞ்சியது முழுவதும் மண்ணில் சேருகிறது. நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி இருப்பதால் கார்பன் ஆக்சிஜனேற்றம் அடைந்து வெளியேறாமல் மண்ணில் சேகரிக்கப்படுகிறது என்று தெரிய வந்துள்ளது.

''இது உண்மைதான். வயல்கள் உருவாக்கும் மீதேனில் 90 சதவிகிதம் வேரால் கிரகித்துக் கொள்ளப்படுகிறது'' என்கிறார் ஐ.நா. காலநிலை மாற்ற பணித்திட்ட பேரவைக்கான (யு.என்.எப்.சி.சி.சி.) இந்தியாவின் தேசிய தொடர்பு அதிகாரி மகாதேஸ்வர சாமி.

''வளரும் நாடுகளில் உள்ள நெல்வயல்களில் இருந்து வெளியாகும் மீதேனின் அளவை மேற்கத்திய விஞ்ஞானிகள் அதிகப்படியாக காட்டிவிட்டார்கள்'' என்று 1998ம் ஆண்டிலேயே வளிமண்டல விஞ்ஞானி ஏ.பி. மித்ரா தெரிவித்திருக்கிறார். நெல்வயல்களில் நடந்துள்ள புதிய ஆராய்ச்சிகளின் அடிப்படையில் காலநிலை மாற்ற பன்னாட்டு அரசுக் குழு (ஐ.பி.சி.சி.), மீதேன் வெளியிடும் அம்சங்கள் எவை என்பதை மறுநிர்ணயம் செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

''கொல்கத்தா விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. இந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் இன்னும் அதிக ஆதாரங்கள் தேவை. வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டைஆக்சைடில் இருந்து நிலத்தில் சேகரமாகும் கார்பனின் அளவை மதிப்பிடுவது தொடர்பாக இன்னும் அதிக ஆராய்ச்சிகள் நடத்த வேண்டும்.

மேலும் கார்பன் தற்காலிகமாக மண்ணில் சேகரமாகலாம். வெயில் காலத்தில் வெப்பநிலை மிக அதிகரிக்கும்போது, அவை ஆக்சிஜனேற்றம் அடைந்து கார்பன் டைஆக்சைடாக வெளியேறலாம். 'தேசிய வேளாண் புதுப்பித்தல் திட்ட'த்தின் கீழ் இதேபோன்று இன்னும் சில ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன'' என்கிறார் லூதியானாவில் உள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் பிஜய் சிங்.

எப்படியோ, காலநிலை மாற்ற பேச்சுவார்த்தைகளில் இந்தியாவின் வாதத்தை வலுப்படுத்த புதிய ஆராய்ச்சி உதவும் என்று நம்புவோம்.

நன்றி : ஆதி



No comments: