Showing posts with label விவசாயம். Show all posts
Showing posts with label விவசாயம். Show all posts

Sunday, September 4, 2011

பச்சைப் புரட்சி

உலக சுகாதார அமைப்பு 2007 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில் மனிதனால் உருவாக்கப்பட்டு வரும் காலநிலை மாற்றம் 2020ஆம் ஆண்டு முதல் உலகெங்கும் ஆண்டுதோறும் 3 இலட்சம் பேர் பலியாக காரணமாக இருக்கும் என்று கணக்கிட்டுள்ளது. இந்த கணிப்புக்கு முன்கூட்டியே 2000 மாவது ஆண்டு முதல் காலநிலை மாற்றத்தால் உலகெங்கும் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.

வளர்ச்சி அடைந்தவை என்று சொல்லப்படுகிற பணக்கார நாடுகள் இந்த கேடுகளுக்கு காரணமாக இருக்கின்றன. ஆனால், ஏழை நாட்டு மக்கள் இதன் பாதிப்புகளைச் சந்திக்கின்றனர். குறிப்பாக தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களை சேர்ந்த மக்கள் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக மலைவாழ் மக்கள், நதிக்கரை ஓரம் வாழும் மக்கள், கடலோர மக்கள் மற்றும் நிலமற்ற உழைக்கும் மக்கள் என விளிம்புநிலை மக்கள்தான் அதிக அளவில் உயிர் இழந்திருக்கின்றனர்.

பூமியைச் சுற்றி உருவாகும் சரிப்பசை வளையம் உருவாகுவதனால் ஒளி உள்ளே வருகிறது. பூமிக்கு வந்த ஒளி வானத்திற்குத் திரும்புவது தடைபடுகிறது. இதனைப் “பசுமை இல்ல விளைவு’’ என்று அழைக்கின்றார்கள். இதற்கு அடிப்படையாகச் சூழும் காற்றுக்களை பசுமை இல்லக் காற்றுக்கள் என்கிறார்கள். இத்தகைய காற்றுக்களில் கரிய அமிலகாற்றே (கார்பன் டை ஆக்சைடு) முதல் இடத்தைப் பிடிக்கிறது. காற்றும் பங்களிப்பும் கீழே தரப்படுகிறது.

கரி அமிலக் காற்று 49%

மீதேன் 18%

குளோரோ ஃபுளோரோ கார்பன் 14%

நைட்ரசன் காற்று 06%

மற்றவை 13%

கடந்த நூறு ஆண்டுகளில் வான்வெளி வெப்பம் 35% உயர்ந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில் சராசரி வெப்பம் 0.740 டிகிரி சென்சியஸ் உயர்ந்துள்ளது. 2100 ஆம் ஆண்டு இரண்டு முதல் மூன்று டிகிரி உயரக்கூடும் என்று கணிக்கிறார்கள். பனி உருகுவதால் நதிகள் கடலுக்கு நீர்க்கொடுப்பது குறையும். கடல்நீர் நிலத்திற்கு உள்ளே புகுவதால் குடிப்பதற்கான நீரின் அளவு குறையும். வெள்ளமும், வறட்சியும் மாறி மாறி வரும். பயிர் வளர்ச்சி நேரம் குறையும். விளைச்சலும் குறையும் என்றெல்லாம் கூறுகிறார்கள். கடலோரங்களில் புயலும், வெள்ளமும் பெருகுவதால் கோடிக்கணக்கான மக்கள் இடம் பெயர்வார்கள். உயிரிழப்பும், பொருளிழப்பும் பெரிய அளவில் நிகழும்.

குடிநீர்ப் பற்றாக்குறை

வடக்கு ஆசிய நாடுகளில் குடிநீர்ப் பற்றாக்குறை மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும், தட்ப வெப்ப மாற்றத்தைத் துல்லியமாக ஆய்ந்தறியும் அரசுகளுக்கு இடையிலான குழு (IPCC) கீழ்க்கண்ட புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

வடக்கு ஆசியாவில் 50 கோடி மக்கள், சீனாவில் 25 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள். பனிப்பாளம் உருகி ஆற்றோட்டம் குறைவதால் இந்திய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

2020ஆம் ஆண்டில் ஆசியாவில் 12 கோடி மக்கள் முதலாக 120 கோடி மக்கள் வரை சிக்கல்களுக்கு ஆளாவார்கள். ஆப்பிரிக்க நாடுகளில் 7 கோடி 50 லட்சம் மக்கள் வரை பாதிப்புக்கு ஆளாவார்கள். தென் அமெரிக்க நாடுகளில் 1 கோடி 20 லட்சம் முதல் 8 கோடி 10 லட்சம் வரையான மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

பயிர் விளைச்சல் சரியும்

பயிர்களின் வளர்ச்சிப் பருவம் சுருங்கும். அதனால் 2020 ஆம் ஆண்டு வாக்கில் ஆப்பிரிக்க நாடுகளில் 50 விழுக்காடு விளைச்சல் குறையும். மத்திய ஆசியா மற்றும் தெற்கு ஆசிய நாடுகளில் 2050ஆம் ஆண்டு வாக்கில் 50சதவீதம் விளைச்சல் குறையும்.

உலக உற்பத்தி பாதிப்புக்கு ஆளாவதால் ஏழை நாடுகள் உணவை இறக்குமதி செய்வதிலும் பெரும் சிக்கல் ஏற்படும்.

கடலோரப் பகுதி வெள்ளம்

கடல் மட்டம் உயர்வதால் மக்கள் நெருக்கம் மிகுந்த கல்கத்தா, டாக்கா, ஷாங்காய் போன்ற பெருநகரங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படும். வறட்சியினாலும் மக்கள் இடம் பெயருவார்கள். இதனால் உலகத்தில் பாதுகாப்பும் அமைதியும் பாதிக்கப்படும். இத்தகைய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அரசாங்கங்களின் கவனம் முழுவதும் இப்பிரச்சனையின் மீது குவிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது.

காற்றில் கலந்த கரி மண்டலம் உழவுத் தொழிலைப் பாதிக்கிறதா?

ஆம். இரசாயன உரங்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் புகையைக் கக்குகின்றன. உரத்தைச் சுமந்து செல்லும் வாகனங்கள் புகையைக் கக்குகின்றன. உப்பு உரம் நைட்ரசன் காற்றைக் கக்குகிறது. பயிர்த் தொழிலில் பயன்படுத்தும் இதர பொருள் உற்பத்தி செய்யும் ஆலைகளும் புகையைக் கக்குகின்றன. நிலத்தில் பயன்படுத்தும் எந்திரங்கள் புகையைக் கக்குகின்றன. ஆக மொத்தம் பூமி சூடாவதற்கான காரணிகளில் பயிர்த்தொழிலின் பங்கு 35 விழுக்காடாகும். அதே போல, தட்பவெப்ப நிலை மாற்றத்தால் பயிர்த்தொழிலும் பாதிப்புக்கு ஆளாகிறது.

2008ஆம் ஆண்டு தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் அறுவடைக்குக் காத்திருந்த நெற்பயிர்கள் அடை மழையால் நீரில் மூழ்கிப் போயின.

2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் காலம் தவறிப் பெய்த அடைமழையால் திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் உளுந்து, பயறு வகைப் பயிர்கள் அழிந்துபட்டன.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையில் கடலோரப் பகுதியில் அறுவடைக்குக் காத்திருந்த நெற்பயிர் அழிந்துபட்டது.

ஆழிப்பேரலை தொடங்கி நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் சாகுபடிக்கு ஒவ்வாததாக மாறியுள்ளது.

2009ஆம் ஆண்டு மழைக் காலத்தில் வங்காளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நெற்பயிர்கள் அழிந்து போயின.

2010 ஆம் ஆண்டிலும் இரண்டு இலட்சம் ஏக்கர் பரப்பில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகிப்போயின.

இரசாயனத்தைப் புகுத்தியது பசிப்பணி போக்கவா?

இவ்வளவு உண்மைகள் அம்பலமான பின்பும் உழவாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் உழவாண்துறை அலுவலர்களும் இரசாயன உரம், பூச்சி கொல்லிகள், பூஞ்சானக் கொல்லிகள், களைக் கொல்லிகள் போன்றவற்றை பரிந்துரை செய்வதை நிறுத்தவில்லை. இவையாவும், இவற்றை விற்று இலாபம் பார்ப்பதற்காகவே குள்ளரகப் பயிர்களைப் புகுத்தினார்கள் என்ற வாதத்தை உறுதிப்படுத்துவனவாக உள்ளன. இந்தியாவில் பசிப் பிணியைப் போக்குவதற்காகவே பச்சைப் புரட்சி வந்ததாக ஒரு கட்டுக்கதை உலவுகிறது. உண்மையோ வேறு விதமாக உள்ளது. ஒட்டுக்கட்டி உருவாக்கிய குட்டை ரகத்தை அமோக விளைச்சல் ரகம் என்று உழவர்களுக்கு விளம்பரம் செய்தார்கள். ஆனால், விஞ்ஞானிகள் மத்தியில் அதிகம் இரசாயன உரம் ஏற்கும் ரகம் என்ற கருத்துப் பரிமாறினார்கள். அதிக ரசாயன உரம் இட்டபோது நாட்டு நெல் ரகம் சாய்ந்து போனது. அதனால் அதிக ரசாயனத்தை இந்திய உழவர் தலையில் கட்டுவதற்காகவே குள்ளரகத்தைப் புகுத்தினார்கள். அதனால்தான், ஆல்பர்ட் ஓவார்டு சொன்னதை ஏற்கவில்லை. ரிச்சார்யா சொன்னதை ஏற்கவில்லை. எக்ன நாராயன் ஆவணத்தை சீர்தூக்கவில்லை.

பச்சை புரட்சியினுடைய கொடுமைகளிலிருந்து உழவரையும் உண்போரையும் காப்பாற்றும் வகையில் இயற்கை உழவாண்மை வளர்ந்து கொண்டிருக்கும் போது அப்படி ஏதும் நடந்துவிடாதபடி அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த மான்சாண்டோ கம்பெனி இந்திய அரசாங்கத்தை நெருக்குகிறது. இந்தியாவில் ஒட்டுவிதை விற்றுக் கொண்டிருந்த மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த மகிக்கோ கம்பெனியின் பங்குத் தொகைகளை மேலே சொல்லப்பட்ட மான்சாண்டோ கம்பெனி விலைக்கு வாங்கிவிட்டது. அதே போல சேலம் மாவட்டத்தில் உற்பத்தி செய்து விற்றுக் கொண்டிருந்த ராசி கம்பெனியின் பங்குத் தொகைகளையும் மான்சாண்டோ கம்பெனி விலைக்கு வாங்கிவிட்டது. இந்திய கம்பெனிகளை வாங்கிவிட்டதன் அடையாளமாக மான்சாண்டோ மகிக்கோ என்றும் மான்சாண்டோ ராசி என்றும் கடைப்பெயர்களையும் மாற்றிவிட்டது. இதன் பிறகு மான்சாண்டோ மகிக்கோ கம்பெனியின் பெயரில் பி.டி. கத்திரிக்காய் விற்பதற்கு நடுவண்அரசிடம் அனுமதி கேட்டு கம்பெனி அழுத்தம் கொடுக்கிறது.

“பச்சைப் புரட்சி’’ என்று பெயர் சூட்டியதே ஓர் அமெரிக்கன் என்று எம். எஸ். சுவாமிநாதன் எழுதியுள்ளார். “உலக வரலாற்றில் நடந்தேறியுள்ள புரட்சிகள் அனைத்தும் சிவப்பாக இருந்ததுதான் சரித்திரம் “பச்சைப் புரட்சி’’ என்ற பெயர் புரட்சியையே இழிவுபடுத்துவதாக அமைந்தது.

பச்சைப் புரட்சியின் விளைவுகள்

இந்தியாவில் உழவுத்தொழில் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது என்று கூறும் தேசிய உழவர் ஆணையத்தின் தலைவர் திரு. எம்.எஸ். சுவாமிநாதன் அறிக்கையில்...

1. 1947இல் அன்றைய பிரதமர் ஜவகஹர்லால் நேரு சொன்னார், “வேறு எதுவும் காத்திருக்கலாம், ஆனால் உழவுத் தொழில் காத்திருக்க முடியாது’’ என்று. ஆனால் 59 ஆண்டுகள் கடந்த பின்பும் உருப்படியான கொள்கை ஏதும் உழவுக்காக உருவாக்கப்படவில்லை.

2. 65 கோடி மக்களுக்கு உழவைத் தவிர வேறு வழி இல்லை. உழவொன்றே அவர்கள் வாழ்கைக்கு ஆதாரம்.

3. 65 கோடி மக்களுக்கு வருவாய் குறைந்தவண்ணம் உள்ளது. செலவுகளும், எதிர்பாராத இழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

4. உழவர்கள் வாங்கியுள்ள கடன் அதிகரித்த வண்ணம் உள்ளது.

5. விளைபொருட்களை விற்பதற்கான உட்கட்டமைப்பு மிகவும் சொற்பம்.

6. காய்கறி, பழம் போன்ற அழுகும் பொருட்களுக்கு சந்தையும், சேமிப்புக் கிடங்கு வசதிகளும் மிக மிகச் சொற்பம்.

7.உருப்படியான கொள்கை ஏதும் இல்லாமையால் கால்நடை பராமரிப்பு நொறுங்கிப் போயுள்ளது.

8. உழவை நம்பியுள்ள குடும்பங்களில் நான்கில் ஒருவருக்கு மட்டுமே வங்கிக்கடன் கிடைக்கிறது.

9. உழவர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடர்வது மட்டுமல்ல, அதிகரித்த வண்ணம் உள்ளது.

10. முப்பதாயிரம் உழவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகத் தெரிய வருகிறது.

11. தற்கொலைக்கு அடிப்படைக் காரணங்கள்: அ. வாங்கிய கடனுக்கு வட்டி மிக அதிகம். ஆ. அதிகரித்து வரும் இடுபொருள் செலவு. இ. விளைபொருளுக்கான நியாயமான விலை கிடையாது.

12. கம்பு, தினை, சாமை போன்ற சத்து மிகு தானியங்கள், பருப்பு, எண்ணெய் வித்து, கிழங்கு போன்றவை அனாதைப் பயிர்கள். இவற்றுக்குச் சந்தையோ, நியாயமான விலையோ கிடையாது.

13. பள்ளி செல்லும் வயது வராத குழந்தைகளில் நான்கில் மூவருக்கு சத்துணவுப் பற்றாக்குறை, இரும்புச் சத்து குறைவு (சோகை)

14. 55% குழந்தைகளுக்கு வைட்டமின் A பற்றாக்குறை. அதனால் பார்வைக் கோளாறு.

15. பயிர்த் தொழிலில் அரசு முதலீடு குறைந்தவண்ணம் உள்ளது.

16. கோதுமையும், நெல்லும் தீவிரமாக சாகுபடி செய்ததால் நிலம் உப்பாகிப் போனது. நிலத்தடி நீர் குறைந்தவண்ணம் உள்ளது.

17. நுண்ணூட்டங்களின் பற்றாக்குறை அதிகரித்தவண்ணம் உள்ளது.

18. ஆண்டு சராசரி மழை போதுமானதாகத் தோன்றுகிறது. ஆனால், மழையின் பெருமளவு 100 மணி நேரத்தில் கொட்டி விடுகிறது.

19. கிடைக்கும் நீர் அனைத்தும் பூச்சிக்கொல்லி நஞ்சாலும், மிகக் கொடிய நச்சுப் பொருட்களாலும் மாசுபட்டுக் கிடக்கின்றன.

20. மக்கள் குடிப்பதற்கும், சமைப்பதற்கும், பயிருக்குப் பாய்ச்சவும் மேலும் மேலும் குழாய்க் கிணற்றையே சார்ந்துள்ளார்கள். இந்தக் குழாய்க் கிணறுகளில் மிகக்கொடிய ஆர்சனிக் நஞ்சு வருகிறது. மேலூற்று கிணறுகள் வற்றிப்போய் விட்டன.

இப்படி உழவர் நிலைமையை வருணித்தாலும் எம்.எஸ். சுவாமிநாதன் இக்குறைபாடுகளுக்கான வேர்க் காரணத்தைக் தோண்டவில்லை. குறைபாடுகளைத் தீர்ப்பதற்கும் வழிசொல்லவில்லை.

அமைச்சர்களும் புதுவழி தேடவில்லை. மாறாக ஆளுவோரும் அவர்களது ஆலோசகர்களும் மக்கள் தலையில் பேரிடியை இறக்குகிறார்கள். அதன் பெயர் “இரண்டாம் பச்சைப் புரட்சி’

நன்றி: கோ.நம்மாழ்வார்

Friday, August 12, 2011

இயற்கை

இயற்கை இயல்பாக இயன்றதை இந்த பூமி பந்தில் உள்ள ஜீவராசிகள் அனைத்திற்கும் அளித்து வருகிறது. ஆனால் அதிகரித்து வரும் மக்கள் பெருக்கம் இந்த இயற்கையின் இயல்பின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆதாயம் அடைகிறது. பெருகிவரும் மக்கள் தொகையினால் தேவைகளும் அதிகரிக்கிறது. இந்த இயற்கை இதுநாள் வரை பூமியில் பிறந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் வாழ்வதற்கான இடத்தை, வாழ்வியல் தேவைகளை என ஜீவிப்பதற்கான அனைத்தையும் அளித்து வருகிறது. ஆனால் மனிதனின் தேவைகள் இந்த இயற்கையின் வளங்களை ஒட்டு மொத்தமாக உறிஞ்சி எடுப்பதிலேயே கவனம் செலுத்தி வருகிறது.

இந்தியாவில் பசுமைப் புரட்சி (1965\-1980) தானிய உற்பத்தியில் தன்னிறவு என்ற முழக்கத்துடன் முன்வைக்கப்பட்டு அமல்படுத்தப்படும் காலகட்டத்தில் ஏராளமான அந்நிய ரக பொருட்கள் (வீரிய ரக விதைகள், இரசாயன உரங்கள், பூச்சிமருந்துகள் என) இந்த மண்ணிற்கு பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டது. இவை அனைத்தும் மண்ணின் இயல்பு தன்மையை அன்றைய தினம் முதலே மாற்ற துவங்கி இன்று இயற்கை சமநிலையின் மீது தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் கோதுமை களஞ்சியமான பஞ்சாபில் இன்று இந்த தாக்கம் பரவலாக உணரப்படுகிறது. பசுமைப் புரட்சி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பல உரங்கள், பூச்சி மருந்துகள் இன்று அதே மண்ணின் இயற்கை தன்மையை முற்றிலுமாக பாதித்து இருக்கிறது. 2009 ஆம் ஆண்டு கீரின்பிஸ் பஞ்சாபின் மக்ட்ஸர், பதின்டா, லூதியானா ஆகிய மாவட்டங்களில் சுமார் 50 கிராமங்களில் நடத்திய ஆய்வில், 20 சதவிதத்திற்கு மேலான குடிநீர் கிணறுகளில் நைட்ரேட் அளவு 50 சதம் உள்ளது என கண்டறிப்பட்டுள்ளது. இது சர்வதேச சுகாதார மையம் அனுமதித்த அளவை விட அதிகம். இந்த நைட்ரேட் மனிதனுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் ஆகும். செயற்கை நைட்ரேட் உரங்களின்தாக்கம் இந்த மண்ணையும், தண்ணீரையும் வெகுவாக நச்சாக்கியுள்ளது. இந்த மாவட்டங்களில் இந்த இரசாயனங்கள் மண்ணின் இயல்பு தன்மையை பயிர் உற்பத்திற்கு உதவும் அதன் குணத்தை பாதித்துள்ளது.

Sold soul of infinity life முடிவில்லா வாழ்க்கையின் உயிர் என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். இத்தகு மண் இயற்கை நமக்களித்த வாழ்க்கைக்கு அஸ்திவாரம் இயற்கையினால் நாம் உணவாக உட்கொள்ளும் அனைத்தும் இந்த மண் அளித்த மாற்று வடிவங்களே. இயற்கையை தவிர்த்து செயற்கையாக உண்டாக்கப்படும் உணவு வகைகள் இயற்கையின் தேர்வில் வாழும் மனிதனுக்கு பல உடற்கூறு தொந்தரவுகளை அளிக்கிறது.

இந்த பசுமைப்புரட்சி கால கட்டத்தில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நெல்ரகங்கள் ஆரம்ப காலத்தில் நல்ல விளைச்சலை அளித்தது. இரசாயன உரங்கள், பூச்சிமருந்துகள் என விளைச்சலை அதிகரிக்கும் நோக்குவுடன் அரசு வேளாண் அதிகாரிகளின் வழிகாட்டுதலுடன் தமிழகத்தின் மண்ணும் மாசுபட ஆரம்பித்து, இன்று அதன் பிரச்சனையை தமிழக விவசாயிகளும் உணர துவங்கியுள்ளார்கள். அதனால்தான் தமிழகத்தில் இன்று இரசாயனம் இல்லாத வேளாண்மை எனும் முறை வேகமாக விவசாயிகளிடத்தே பிரபலமாகி வருகிறது.

இந்த இயற்கை வேளாண்மை என்பது மீண்டும் நமது பாரம்பரிய வேளாண்மை முறைக்கு மாறுவது என்பதாகும். ஏராளமான இரசாயனங்களை இந்த மண்ணிற்கு ஊற்றி அதில் வாழ்ந்து வந்த விவசாயத்திற்கு உதவிய பல நுண்ணுயிரிகளை (சூடோமோனஸ், ப்ளேரசன்ஸ், டிரைகோடெர்மா விரிடி) நாம் இந்த இயற்கை சமநிலையில் இருந்து அகற்றினோம் இன்று மீண்டும் இந்த நன்மை செய்யும் நுண்ணுயிரிவுகளை இந்த மண்ணிற்கு அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த நுண்ணுயிரிகள் மண்ணின் இயல்பு தன்மையை அதை சார்ந்து வாழும் இன்னும் பல உயிரிகள் மண்புழுக்கள், ஓட்டுண்ணிகள் என அவற்றின் உயிரி-பன்முகத்தன்மை பாதுகாத்திட தேவைப்படுகின்றன.

நமது பாரம்பரிய விவசாய முறையில் விவசாயிகளிடத்தே ஒரு விவசாய சமநிலையை பாதுகாத்திடும் செயல்முறை இருந்து வந்தது. விவசாயிகள் கால்நடைகளை வளர்ப்பதும் அவற்றின் சாணங்களை எருவாக்கி அதில் நுண்ணுயிர்கள் பல வளர்ப்பதற்கு வாய்ப்பளித்து அதனை நிலத்திற்கு அடி உரமாக இடுவார்கள். நிலத்தில் விளையும் களைச் செடிகளை புல் மற்றும் கரும்பு சோலை ஆகியவற்றை கால்நடைகளுக்கு வழங்குவார்கள். இன்று இவையனைத்தும் பெரும்பாலும் வழக்கத்தில் இருந்து மாறியுள்ளது. அடியுரமாக இரசாயனத்தை இடுவது, பயிர் வளர்ச்சியுடன் அனைத்து படிகளிலும் இரசாயன உரங்களையே ஈடுவது என இந்த மண்ணின், நீரின் இயல்பு தன்மையை வெகுவாக மாற்றியுள்ளார்கள். இதனால் தேவைக்கு அதிகமாக நிலத்தில் தங்கும் உப்புகள் காரணமாக நிலம் கடினமாகிறது. அதனால் நிலத்தடி நீரும் மாசுபடுகிறது.

மனிதர்களின் இதுபோன்ற தொடர் தாக்குதல்களால் இயற்கையில் ஏற்படும் பல விளைவுகளை இந்த மனித இனம் இன்று பரவலாக எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இங்கு பிரடெரிக் எங்கெல்ஸ் வரிகளை குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

இயற்கையின் மீது நமது மானுட வெற்றிகளை வைத்துக்கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்து கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் இப்படிப்பட்ட வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மை பழிவாங்குகிறது. ஒவ்வொரு வெற்றியும் முதலாவதாக நாம் எதிர்பார்க்காத முற்றிலும் வேறுபட்ட பலன்களை அளிக்கிறது. இயற்கையுடன் இணைந்த வாழ்வு முறையும், வேளாண்மையும் இந்த மனித இனம் கைவிடாமல் வாழ வேண்டும் என்பதையே இன்றைய சூழல் நமக்கு உணர்த்துகிறது.

நன்றி: இளைஞர் முழக்கம்

Wednesday, February 9, 2011

விளைச்சலைப் பெருக்க `ஃபெர்டிகேஷன்’ முறை

“மானியங்களையும் உதவித் திட்டங்களையும் விட நிலத்திலிருந்து கிடைக்கும் உத்தரவாதமான வருமானமே ஒரு விவசாயியை வேளாண்துறையில் தொடர்ந்து நீடிக்க வைக்க முடியும்; இளைஞர்களிடம் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்த முடியும். ஒரு விஞ்ஞானமோ, தொழில்நுட்பமோ விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தைத் தருமானால் அந்த முறையைப் பயன்படுத்திக் கொள்ள அவர்கள் தயாரா கவே இருப்பார்கள்” என்கிறார் திரு வெண்ணைநல்லூரில் தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநராக இருக்கும் டேவிட் ராஜா பியூலா.

விழுப்புரம் மாவட்டம் ஓகையூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி கோகிலா குமார் தன்னுடைய இரண்டு ஏக்கர் நிலத்திலிருந்து 26,000 கிலோகிராம் மஞ்சளை அறுவடை செய்து ஒன்பதே மாதங்களில் 11 லட்ச ரூபாய் வருமானத்தை ஈட்ட முடிந் தது என்றால், அவர் `ஃபெர்டிகேஷன்’ முறையை மேற்கொண்டதுதான் காரணம். இதைப் பார்த்ததும் அப்பகுதியி லுள்ள ஏராளமான விவசாயிகள் அதே முறையைப் பயன்படுத்தி மஞ்சள் சாகுபடியில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

தோட்டக்கலை அதிகாரிகள்தான் திருமதி கோகிலாவுக்கு இந்த புதிய முறையை அறிமுகப்படுத்தினர். உரங்களையும் தண்ணீரையும் கலந்து சொட்டுநீர்ப் பாசனத்தை மேற்கொள்வதுதான் `ஃபெர்டிகேஷன்’ முறை. இந்தத் தொழில் நுட்பத்தை செயல்பாட்டிற்குக் கொணர சுமார் ஒரு லட்ச ரூபாய் முதலீடு தேவைப் படும். இதில் 50000 ரூபாயை அரசு மானியமாகப் பெற முடியும். “ஃபெர்டிகேஷன் முறையின் மூலம் விளைச்சலைப் பெருக்க முடியும், களைகளைக் குறைக்க முடியும் என்பதைத் தற்போது நான் நேரடியாகத் தெரிந்து கொண்டு விட்டேன்” என்கிறார் கோகிலா.

“ஃபெர்டிகேஷன் முறையை நிறுவிக்கொள்ள வங்கிக் கடன்களுக்கு விண்ணப்பிப்பதைவிட, சொந்தப் பணத்தை முதலீடு செய்வதே சிறந்தது. காரணம், வங்கிக் கடன் கிடைப்பதற்கு ஆகும் ஒரு வருட காலத்திற்குள் விவசாயிகளின் ஆர்வமே தணிந்துபோய் விடுகிறது.
கருணை, சேனை, மரவள்ளிக் கிழங்குகள், மஞ்சள் ஆகியவற்றைப் பயி ரிடும் பல ஓகையூர் விவசா யிகள் இந்தப் பணத்தை முதலீடு செய்யுமளவுக்கு வசதியாகவே உள்ளனர். அதே சமயம், மூன்று கிலோ மீட்டர் தள்ளியுள்ள பக்கத்து கிராமங்களில் உள்ள விவசாயிகள் கடன்களில் மூழ்கியுள்ளனர். அவர்களிடமும் இந்த ஃபெர்டிகேஷன் முறையைக் கொண்டு செல்ல தோட்டக்கலைத் துறை முயற்சி செய்து வருகிறது.... புதிய பாசன முறையை நேரடியாகப் பார்த்து திருப்தியடைந்தால்தான் எந்தவொரு விவசாயியும் அதை ஏற்கவேண்டும் என்ற முடிவுக்கு வருவார். மாறாக, இனிமையாகப் பேசி மட்டும் அவரை ஏற்கவைத்துவிட முடியாது” என்கிறார் டேவிட் பியூலா.

“பல தலைமுறைகளாக நாங்கள் விவசாயம் செய்து வந்தாலும் மிகக் குறைந்த நிலத்திலிருந்து அதிகமான வருமானத்தை நாங்கள் ஈட்டுவது இதுவே முதல் முறை. இன்று விவசாயம் பல்வேறு காரணங்களால் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. வேளாண் துறை ஒரு தங்கச் சுரங்கம் என்பதை உணர்ந்து கொள்ள நமது ஆட்சியாளர்கள் தவறி விட்டதால்தான், பன்னாட்டுக் கம்பெனிகள் உள்ளே நுழைந்து நம் விவசாயிகள்பால் அக்கறை உள்ளவர்கள்போல் நடித்து இந்தியச் சந்தையைக் கைப்பற்ற முடிந்துள்ளது” என்று விவசாயத்தைப் பற்றிய தெளிவான புரிதலுடன் பேசுகிறார் கோகிலா.

ஓகையூர் உதாரணத்தை நாட்டிலுள்ள மற்ற பயிர்களுக்கும் விரிவுபடுத்த முடியுமானால் நமது விவசாயிகள் மவுனமாகத் துன்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படாது என்பது கோகிலாவின் கருத்து. மேலும் இந்தப் புதிய வகைப் பாசன முறை பற்றித் தெரிந்து கொள்ள அவரையோ (செல் : 9047618171) டேவிட் பியூலாவையோ (செல் : 9486285704) தொடர்பு கொள்ளலாம்.

ஆதாரம் : தி இந்து நாளிதழில் திரு எம்.ஜெ. பிரபு எழுதிய கட்டுரை.

Sunday, December 26, 2010

வீழ்ந்து வரும் விவசாயம் - ஓர் பார்வை

இந்தியாவில் 115 மில்லியன் குடும்பங்கள் வேளாண் தொழிலை நம்பியுள்ளன. ஆனால் நமது நாட்டின் விவசாய வளர்ச்சி இறங்குமுகமாகவே இருந்து வருகிறது. இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 34.8 சதவீதமாயிருந்து வந்த விவசாயத்தின் பங்கு இன்றைக்கு 21 சதவீதமாய் குறைந்திருக்கிறது. மேலும், இதே நிலை நீடித்தால் 2020ல் இந்த சதவீதம் 15 ஆக குறையுமெனப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து உயர்ந்து வரும் இடுபொருட்களின் விலையினாலும் அதிக அளவிலான வேதிப்பொருட்கள் உபயோகத்தினாலும் நிலத்தின் தன்மை மாறிப் போயிருப்பதாலும் ஆண்டுதோறும் விவசாய உற்பத்தி குறைந்து வருகிறது. பருவ மாற்றங்கள் விவசாயத்தைப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் நிலையான நம்பத்தகுந்த முயற்சிகள் விவசாயத்துறையில் ஏற்படுத்தப்படாததால் பருவ நிலை சாதகமான காலகட்டங்களில் கூட விவசாய உற்பத்தியில் அபரிமிதமான மாற்றங்கள் எதுவும் ஏற்படுவதில்லை.

2026ல் இந்தியாவின் மக்கட்தொகை 1420 (ஐ.நா சபை அறிக்கை 1998) மில்லியனாக உயரும் என்றும், அதில் 45-50% வரையிலான மக்கள் விவசாயத்தை நம்பியிருப்பார்கள் என்றும் மக்கட்தொகை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே இந்தளவு மக்களுக்கான உணவுத் தேவையை எதிர்கொள்ளக்கூடிய அளவில் விவசாயத் துறையை வளமானதாக மாற்ற வேண்டிய தேவையிருக்கிறது.

2007-08ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்த உணவுப் பொருட்கள் உற்பத்தி 23.078 மில்லியன் டன்களாக இருந்துள்ளது. ஆனால் அன்றைய நாளில் ஒவ்வொரு இந்தியனும் உட்கொண்ட சராசரி உணவு 174 கிலோவாக இருந்துள்ளது. இது ஆப்பிரிக்க நாட்டின் சராசரி உணவை (196) விட 12 கிலோ குறைவானதாகும். ஆனால் உலக வல்லரசு எனப்பட்ட அமெரிக்கர்களின் சராசரி உணவு என்பது 889 கிலோவாக இருக்கிறது. அதே நேரத்தில் சைனாவின் சராசரி உணவு உட்கொள்ளும் திறன் இதே காலகட்டத்தில் 196 கிலோவாக இருந்துள்ளது. 889 கிலோ உணவை உட்கொள்ளும் அமெரிக்கா உணவு நெருக்கடிக்கு காரணம் இந்தியர்களும் சீனர்களும் தங்களுடைய உணவு உட்கொள்ளும் தன்மையை அதிகப்படுத்தியதுதான் என வதந்தி பரப்பி வருகிறது.

தமிழகத்தில் விவசாய உற்பத்தி

ஒரு காலகட்டத்தில் விவசாயிகள் கம்பு, சோளம், கேழ்வரகு, தினை போன்ற சத்தான சிறுதான்யங்களையும், மழை பெய்து போதுமான தண்ணீர் இருந்த இடங்களில் மட்டும் நெற்பயிரும் பயிரிட்டு வாழ்ந்து வந்தனர். புதிய புதிய கண்டுபிடிப்புகளின் காரணமாக மனிதன் அனைத்து இடங்களிலும், அனைத்துப் பயிர்களையும், அனைத்து காலங்களிலும் பயிரிட ஆரம்பித்தான். கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நிலத்தடி நீழ் முழுவதுமாக சுரண்டப்படும் சூழ்நிலை ஏற்பட்டதுடன் உற்பத்தியை பெருக்குவதற்காக உபயோகப்படுத்தப்பட்ட அபரிமிதமான வேதியப்பொருட்களாகிய உரம், பூச்சி மருந்து ஆகியன மண்ணின் தன்மையை மாற்றி உற்பத்தியில் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் உயரிய விதைகள், ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் உபயோகத்தால் உற்பத்திச் செலவும், உற்பத்தி செய்வதற்கான முதலீடும் அதிகரித்து போதுமான விலையின்மை மற்றும் பருவகால விபரிதங்கள் (மழை, வெள்ளம், வறட்சி) ஏற்படும் போது அதனை ஈடுகட்ட முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும், விவசாயத்தைவிட்டு கூலித் தொழிலாளர்களாக மாறுவதும் தொடர்ந்து வருகிறது. இவ்வாறு விவசாயத்தைவிட்டு வெளியேறியவர்கள் நல்ல மழைப் பொழிவு உள்ள காலகட்டத்தில் மீண்டும் விவசாயத்திற்கு திரும்பாமல் அந்தநிலத்தை தரிசாகவே விட்டு வைத்திருக்கக்கூடிய சூழ்நிலையும் நிலவுகிறது.

நிலப்பயன்பாடு-பயிர் அடர்த்தி விவரம் - தமிழகம்

(பரப்பு இலட்சம் ஹெக்டேர்)

வ. எண் விவரம் 1990-91 1998-99 2008-09 2008-09 90-91 வித்தியாசம்

1. மொத்தப்பரப்பு 13.019 129.97 13.026 ரூ.007

2. விவசாயத்திற்கு லாயக்கான நிலம் 2.90 3.48 3.33 ரூ.043

3. தற்காலிக தரிசு 12.49 9.55 1.013 -2.36

4. இதர தரிசு 1.044 11.10 14.97 -4.53

5. நிகர விதைக்கப்பட்ட பரப்பு 55.78 56.34 5.042 -4.86

6. மொத்த விவசாயப் பரப்பு 81.61 8.047 78.85 -2.76

7. ஒருமுறைக்குமேல் பயிரிடப்பட்ட பரப்பு 1.053 9.92 7.81 -2.70

8. நிகர விதைக்கப்பட்ட பரப்பு 66.31 66.26 58.23 -8.08

9. பயிர் அடர்த்தி 118.9 117.6 115.48 -3.42

1.0 விவசாயம் அல்லாத வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்ட நிலம் 18.35 19.67 21.72 ரூ3.37

மேலே கண்ட அட்டவணையை உற்று நோக்கும் பொழுது 1990-91லிருந்து 2008-09ல் மொத்த விவசாயப் பரப்பில் இரண்டு இலட்சத்து எழுத்தாராயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு குறைந்துள்ளது. அதே போன்று ஒருமுறைக்கு மேல் பயிரிடப்பட்ட பரப்பும் 1.053 இலட்சம் ஹெக்டேரிலிருந்து 7.81 இலட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. இப்பரப்பு கடந்த இருபதாண்டுகளில் 2.70 இலட்சம் ஹெக்டேர் குறைந்துள்ளது. கோவை விவசாயக் கல்லூரி ஆய்வறிக்கையின்படி, 1990-91லிருந்து 2001-2002 ஆகிய பத்தாண்டுகளுக்கிடைப்பட்ட காலத்தில் விதைக்கப்பட்ட பரப்பில் நான்கு இலட்சம் ஹெக்டேர் பரப்பு மட்டுமே குறைந்திருந்தது. அதே காலகட்டத்தில் மொத்த விவசாயப் பரப்பிலும் மிகுந்த வேறுபாடு ஏதுமில்லை. இது 81.50 இலட்சம் ஹெக்டேராயிருந்தது 8.000 இலட்சம் ஹெக்டேராய் குறைந்திருப்பதாய் தெரிவிக்கிறது. பயிர் அடர்த்தி 118லிருந்து 120ஆக உயர்ந்துள்ளது. ஆனால் 1990-91க்கும் 2008-09க்கும் இடைப்பட்ட காலத்தில் பயிர் அடர்த்தி 118லிருந்து 115 ஆகக் குறைந்துள்ளது.

ஆனால் இதே காலகட்டத்தில் குத்தூசி கொண்டு துளையிட்டதுபோல் ஆழ்குழாய் கிணறுகளும் (போர்வெல்) காளான்கள் போன்று கட்டிடங்களும், வைகை ஆற்றில் வண்ணார் துணி துவைத்து காயவைப்பது போன்று குத்துக்கற்களால் கோலம் போடப்பட்ட வீட்டடிமனைகளாலும், யாரும் எங்கேயும், எத்தொழிலும் தொடங்கலாம் என்ற தங்குதடையற்ற தொழிற் கொள்கைகளாலும், இதற்கெல்லாம் உறுதுணையாய் உள்ள நான்கு வழி, ஆறு வழிச்சாலைகளாலும், புதிய பொருளாதார மண்டலங்களாலும் விவசாய நிலங்கள், விவசாயமல்லாத பிற உபயோகத்திற்காக பயன்படுவது நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. 1990-91ல் விவசாயமல்லாத வேறு விதங்களில் பயன்படுத்தப்பட்ட பரப்பு 18.35 இலட்சம் ஏக்கரிலிருந்து 2008-09ல் 21.72 இலட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. இதனால் பயிர் உற்பத்தி பயன்பட்டு வந்த 8,32,396 ஏக்கர் பரப்பு குறைந்துள்ளது. இதனால் தான் தமிழக வேளாண் துறை அமைச்சர் சமீபத்தில் மூன்றாண்டுகளுக்குள் பயிரிடப்பட்டு வந்த பரப்புகள் எதுவும் வீட்டு மனையிடங்களாக மாற்றப்படக் கூடாதெனவும், அவ்வாறு மாற்றம் செய்யப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் சமீபத்தில் தெரிவித்துள்ளார். இவ்வாறு விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்ட பரப்பு குறைந்ததன் காரணமாக உணவுப்பொருட்களின் மொத்த உற்பத்தியும், உற்பத்தி விகிதமும் வெகுவாகக் குறைந்துள்ளது.

முக்கிய உணவுப் பொருட்கள் உற்பத்தி - தமிழகம்

1998-99 - 2008-09

பயிர்கள் உற்பத்தி (டன்களில்) உற்பத்தி விகிதம் (ஒரு ஹெக்டேருக்கு)

1998-99 2008-09 1998-99 2008-09

நெல் 8141300 5183385 3579 2682

சோளம் 369110 213436 1011 824

கம்பு 206110 84021 1339 1483

ராகி 240610 169944 2004 1887

மக்காட்சோளம் 88340 1257882 1587 4338

கொண்டக்கடலை 6280 4363 619 637

துவரை 47800 16703 644 608

பாசிப்பயறு 67470 31336 543 226

உளுந்து 117070 82983 518 315

நிலக்கடலை 1569790 974768 1829 1990

ஆதாரம். பருவம் மற்றும் பயிர் விவரம் அறிக்கை பசலி 1408-1418, புள்ளிஇயல் துறை

1998-99 மற்றும் 2008-09க்குட்பட்ட பத்தாண்டு உற்பத்தியை ஒப்பிடும் போது அனைத்து முக்கிய உணவுப் பயிர்களின் உற்பத்தியும் வெகுவாகக் குறைந்துள்ளது. இதற்கு முதன்மையான காரணம் உற்பத்திப் பரப்பு குறைந்ததேயாகும். ஆனால் இந்த காலகட்டத்தில் மழையளவிலும் மிகப்பெரிய வித்தியாசம் இருந்திடவில்லை. 1998-99ல் 108.04 மிமில் இருந்து 2008-09ம் ஆண்டில் 1023.1 மிமி ஆகக் குறைந்துள்ளது. ஆனால் இதே காலகட்டத்தில் நெற்பயிர் பரப்பு 22,74,961 ஹெக்டேரிலிருந்து 19,31,603 ஹெக்டேராகக் குறைந்துள்ளது.

பசுமைப்புரட்சிக்குப்பின்பு பஞ்சாப், மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் விவசாய உற்பத்தியில் குறிப்பாக கோதுமை உற்பத்தியில் அபரிமிதமான மாற்றம் ஏற்பட்டது. இக்காலகட்டத்தில் தென்னிந்தியாவின் முக்கிய உணவுப்பொருளான நெல் உற்பத்தியில் தமிழகம் முன்னணியில் இருந்தது. ஆனால் தற்சமயம் விவசாயப்பரப்பும், உணவுப் பொருட்கள் உற்பத்தி விகிதமும், குறிப்பாக நெல் உற்பத்தியும் வெகுவாக குறைந்து வருகிறது. தஞ்சை தமிழ் பல்கலைகழக பூமிஇயல்துறை ஆய்வின்படி, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் 1995-96ல் மொத்த பயிரிடப்பட்ட பரப்பில் 82.2 சதவீதமாயிருந்த நெற்பயிரின் பரப்பு 2008-09ஆம் ஆண்டில் 74.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் வணிகப்பொருள் எனக் கண்டறியப்பட்ட கரும்பு 6.5 சதவீதத்திலிருந்து 2.7 சதவீதமாகவும், பருத்தி 1.9 சதவீதத்திலிருந்து .07 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கிறது. மேலும், பயறு வகைகள் உற்பத்தி பரப்பு 4.1 சதவீதத்திலிருந்து 12.9 சதவீதமாகவும், எண்ணெய் வித்துக்கள் 4.5 சதவீதத்திலிருந்து 6.2 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடுகிறது. இதற்கு முதன்மையான காரணம் உத்தரவாதப்படுத்தப்பட்ட நீர் இல்லாதததும் பருவ மாற்றங்களினால் ஏற்படும் முதலீட்டு இழப்பை சந்திக்க இயலாத கையறு நிலையில் விவசாயிகள் இருப்பதுமே ஆகும்.

இந்தியாவில் ஜுன் 2010 நிலவரப்படி 859 இலட்சம் குடும்பங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்வதாக விவரங்கள் தெரிவிக்கின்றன. உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ள நிலையிலும் இந்தளவு வறுமைக்கோடு நிலவுகிறது. இவ்வுற்பத்தியில் ஆண்டுதோறும் பெருமளவில் குறைவு ஏற்படுமாயின் உணவுப்பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு அல்லது பஞ்சம் பட்டினியை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்படலாம்.

இந்தியாவில் 60 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்துக்குறைவுடையவர்களாக உள்ளனரெனவும் 0-3 வயதுடைய குழந்தைகளில் 46 சதவீதம் பேர் எடைகுறைவுடையவர்களாக உள்ளனரெனவும் விவரங்கள் தெரிவிக்கின்றன. உணவு தான்ய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றபோதும் இந்நிலை தொடரும் போது, உணவு உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படுமாயின் வறுமைக் கோடும் ஊட்டச்சத்துக் குறைவான குழந்தைகளின் எண்ணிக்கையும் மேலும் அதிகமாகலாம். இது வளமான இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாகும்.

எனவே, 75 சதவீதத்திற்கு மேல் விவசாய நிலங்களைக் கொண்ட கிராமங்களை விவசாய சிறப்புப் பொருளாதார மண்டலங்களாக அறிவித்திடல் வேண்டும். விவசாயிகளுக்கு தங்கு தடையற்ற மின்சாரம் மட்டுமல்லாது விளை நிலத்தை பாழாக்காத புதிய உயிர் உரங்களையும், விதைகளையும் பயன்படுத்திட ஊக்குவித்திடல் வேண்டும்.

விவசாயம் செய்வோரை தேசிய சேவைப்பணி செய்வோராய் அங்கீகரித்து விவசாய் உற்பத்தியை பெருக்கிட வழிகாணுதல் வேண்டும். மேலும், விவசாயத்தைவிட்டு வெளியேறியவர்களை மீண்டும் அப்பணியில் ஈடுபடுத்திட சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளுதல் வேண்டும்.

வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களின்போது கட்டுபடியான, நியாயமான நிவாரணத்தொகையை வழங்கிடுதல் வேண்டும். அதேபோன்ற உற்பத்தி செய்யப்பட்ட விவசாயப் பொருட்களுக்கு கட்டுபடியான விலை வழங்கிடுதல் வேண்டும். நீர் ஆதாரங்களை ஆக்கிரமிப்புகளிலிருந்து பாதுகாத்து, பராமாpத்து நீர் கொள்ளளவை உயர்த்துதல் வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களின் சோர்வினைப் போக்கி மீண்டும் விவசாயத்தில் ஈடுபட வழி வகுக்கும்.

இந்து நாளிதழின் கிராமப்புற விவகாரங்கள் துறை ஆசிரியர் சாய்நாத் கூறுகையில் ‘விவசாயமே நாட்டின் வாழ்வாதாரத்தின் மையம். விவசாயம் செய்வது சமூக சேவையாகும். அவ்வாறு சமூக சேவையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவற்றை ஈடுகட்ட தங்களாலான அனைத்தையும் செய்யுங்கள் அவர்களுக்கு தேவையான மான்யம் வழங்கிட ஏற்பாடு செய்யுங்கள். உலகின் வளர்ச்சியடைந்த நாடுகள் அனைத்துமே தங்கள் நாட்டின் விவசாயிகளுக்கு மான்யங்கள் அளிக்கின்றன. எந்த அளவிற்கு அவை வளர்ச்சி அடைந்துள்ளனவோ அந்த அளவிற்கு விவசாயிகளுக்கு மான்யங்கள் அளிக்கின்றன என்கிறார்.

எனவே, விவசாயிகளுக்கு நம்பிக்கை தரக்கூடிய நடவடிக்கைகளில் துரிதமான செயல்பாடே வீழ்ந்துவரும் விவசாயப்பரப்பை உற்பத்தியை பெருக்குவதற்கு வழிவகை செய்திடும்.

நன்றி: மதுரை சு.கிருஷ்ணன்

Thursday, December 23, 2010

அழிந்து வரும் பூச்சியினமும் நசிந்து வரும் விவசாயமும்

கண்மூடித் தனமாக பூச்சிகொல்லி மருந்து பயன்படுத்துவதால் நன்மை பயக்கும் பூச்சிகளும் அழிந்து வருகின்றன. அதன் தொடர் விளைவாக விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயம் பெரும் சிக்கலை சந்திக்கிறது என சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கை கூறுகிறது. கொல்கத்தா பல்கலை கழகத்தை சார்ந்த உயிரியல் ஆய்வாளர் பார்த்திபோ போஸ் என்பார் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வு இதனை தெரிவிக்கிறது.

பெரும்பாலான தாவரங்கள் இனப்பெருக்கம் செய்வது பூக்களில் மகரந்த சேர்க்கை வழி தான். இந்த மகரந்த சேர்க்கை என்பது ஒரு பூவிலிருந்து மற்றொரு தாவர பூவிற்கு மகரந்தம் செல்வது எனும் அயல் மகரந்த சேர்க்கை; மற்றும் ஒரு தாவரத்தின் ஒரு பூவிலிருந்து அதே தாவரத்தின் மற்றொரு பூவிற்கு மகரந்தம் செல்வது எனும் தான் மகரந்த சேர்க்கை என இரு வகை படும். இரண்டு வகை மகரந்த சேர்க்கையும் தானே நடைபெறாது, தாவரத்திற்கு மகரந்த சேர்க்கை நடைபெற்று இனப்பெருக்கம் செய்ய துணை தேவை.

அரிசி, கோதுமை போன்ற புல் வகை தாவரங்களுக்கு, அதாவது தானிய விளைச்சல் தரும் தாவரங்களுக்கு காற்று தான் துணை. இவற்றின் பூக்கள் மிக சிறிதாய், கண்களுக்கு புலப்படத அளவில் இருக்கும். மென் காற்று வீசும் போது பூக்களின் மகரந்தம் அடித்து செல்லப்பட்டு அடுத்த தாவரத்தில் படியும். இவ்வாறு இந்த வகை தாவரங்களில் மகரந்த சேர்க்கை இயல்பில் நடைபெறும். காற்று தான் இந்த வகை தாவரங்களுக்கு துணை.

ஆனால் வேறு பல தாவரங்களில் மகரந்த சேர்க்கை நடைபெற பூச்சிகளின் உதவி தேவை. பொதுவாக தேனீ, வண்டு, பட்டாம் பூச்சி என பல்வேறு வகை பூச்சிகள் மகரந்த சேர்க்கைக்கு உதவு கின்றன. பூவின் தேன் குடிக்க வரும் தேனீ அதன் கால்களில் மகரந்தத்தை எடுத்து சென்று மற்றொரு பூவில் அமரும்போது அந்த பூவில் மகரந்தத்தை செலுத்துகிறது. இவ்வாறு மகரந்த சேர்க்கைக்கு உதவுகிறது. அயல் மகரந்த சேர்க்கை, தான் மகரந்த சேர்க்கை இரண்டிற்கும் பூச்சியினம் இன்றியமையாதது.

பெருமளவு தானிய பயிர்களுக்கு பூச்சிகள் மகரந்த சேர்க்கைக்கு அவசியமில்லை என்றாலும், பல்வேறு காய் கனிகள் பயிர் செய்ய தேனீயின் உதவி அவசியம். பூசணி, பரங்கி, வெள்ளரிக்காய் என பல்வேறு காய்கனி தாவரங்கள் விளைச்சல் தர பூச்சிகள் அவசியம். தான் மகரந்த சேர்க்கை ஏற்படும் கத்தரிக்காய் போன்ற தாவரத்திலும், உள்ளபடியே அயல் மகரந்தசேர்க்கை நடைபெற்றால் சூல் கொள்ளுதல் மிகுந்து அதிக பூ காய் தரும். எனவே மகசூல் அதிகரிக்கும்.

வகை தொகை இல்லாமல் பூச்சிமருந்து பயன்படுத்துவதால் மகரந்த சேர்க்கைக்கு உதவும் பூச்சியினம் அழிந்து இந்தியாவில் விளைச்சல் மட்டுபட்டுள்ளது என பார்த்திபோ போஸ் அவர்களின் ஆய்வு தெரிவிக்கிறது. மேலை நாடுகளில் தேனீ வளர்ப்பு என்பது பரவலாக நடைபெறுகிறது. எனவே இதுகாறும் செயற்கையாக வளர்க்கப்படும் தேனீக்கள் அருகில் உள்ள வயல் வெளிகளில் மகரந்த சேர்க்கைக்கு உதவி விளைச்சலை பெருக்கி வந்தது. சமீபத்தில் அங்கு பெருமளவு செயற்கை தேனீ கூடுகள் பதிக்கபட்டு தீடீர் என தேனீக்கள் மடிந்தன. இதன் தொடர்ச்சியாக அங்கு சமீப ஆண்டுகளில் மகசூல் பெருமளவு பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைந்துள் ளது. ஐரோப்பா அமெரிக்க முதலிய நாடுகளை போல செயற்கை தேனீ வளர்ப்பு இந்திய போன்ற ஆசிய நாடுகளில் இல்லை. எனவே இங்கு இயற்கை தேனீ மற்றும் பூச்சிகள் பயிர் தொழிலுக்கு மிக அவசியம்.

ஒவ்வொரு ஆண்டும் பூச்சியினத்தின் நிலை அறிந்து, அந்த ஆண்டு ஏற்படும் காய்கனி விளைச்சலை அதனுடன் ஒப்பிட்டு பார்த்து ஆராய்வது தான் சால சிறந்ததது. பூச்சிகள் அருகும் போது விளைச்சல் குறைகிறதா; பூச்சிகள் பெருகும் போது விளைச்சல் கூடுகிறதா என அறியமுடியும். ஆனால், இந்தியாவில் பூச்சியினங்களின் நிலை குறித்த ஆய்வு விவரங்கள் இல்லை. எனவே நேரடியான ஆய்வு சாத்தியமில்லை. இதன் காரண மாகத்தான், நேரடியான ஆய்வுக்கு பதிலாக மறைமுக ஆய்வு நடத்த திட்டமிட்டனர்.

தமது ஆய்வுக்காக பூச்சியினால் மகரந்த சேர்க்கை ஏற்படும் தாவரம், மற்றும் காற்றினால் மகரந்த சேர்க்கை ஏற்படும் தாவரம் இரண்டையும் எடுத்துக் கொண்டனர். நவீன விவசாய முறையில், பூச்சிகொல்லி, வேதி உரம் முதலியன இட்டு பயிர் தொழில் செய்யும் போது, இடு பொருள் கூட கூட காற்றினால் மகரந்த சேர்க்கை ஏற்படும் பயிர்களில் விளைச்சல் உயர்ந்துகொண்டே சென்றது. மண் தான் செழிப்பை இழப்பது போன்ற காரணங் களினால் விளைச்சல் விகிதம் சற்றே குறைந் தாலும், மொத்த விளைச்சல் கூடியது. ஏக்கருக்கு பயிர் விளைச்சல் தரும் மகசூல் கூடியது.

ஆனால் பூச்சிகளால் மகரந்த சேர்க்கை ஏற்படும் பயிர்களில் பூச்சிமருந்து வேதி உரம் முதலிய முதலில் விளைச்சலை பெருக்கினாலும், காலப் போக்கில் விளைச்சல் பெருகவில்லை; ஏக்கருக்கு மகசூல் குறைந்தது என்பது புலனாகியது. அதாவது, வேதி பொருள் கொண்டு நடத்தப்படும் விவசாயத் தினால் பூச்சிகள் பாதிக்கப்பட்டு விளைச்சல் மட்டுப்பட்டது என்பது குறிப்பால் விளங்கியது.

விவசாயத்தில் நேரடியாக புலப்படும், நீர், மண், பதிப்பு தரும் பூச்சி தொல்லை முதலிய தவிர கண் களுக்கு புலப்படாத மகரந்த சேர்க்கையும் முக்கிய மானது என இந்த ஆய்வு நமக்கு தெரிவிக்கிறது.

உலகில் சுமார் 146 நாடுகளின் 90 சதவிகித உணவு தேவையை பூர்த்திசெய்யும் நூறு தாவரங்களில் எழுபதொன்று தாவரங்கள் பூச்சியினால் மகரந்த சேர்க்கை ஏற்படும் தாவரங்கள் ஆகும். இதிலிருந்து மகரந்த சேர்க்கை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை புரிந்து கொள்ளலாம். இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 7.5 டன் காய்கனி உற்பத்தியாகிறது. உலக காய்கனி உற்பத்தியில் இது 14 சதவீதம் ஆகும். சீனாவிற்கு அடுத்தபடியாக உலகில் இரண்டவது இடத்தில் உள்ள நாடு இந்தியா. மகரந்த சேர்க்கை செய்யும் பூச்சி யினங்கள் அருகினால் இந்திய விவசாயம் பெருமளவு பதிக்கப்படும் என்பது திண்ணம். உணவு உற்பத்தி குறைந்தால் உணவு பாதுகாப்பு மட்டுப்படும்; பஞ்சநிலை ஏற் படலாம் என அறிஞர்கள் கவலை தெரிவிக் கின்றனர்.

வேதிப்பொருள் சார்ந்து நடைபெறும் இன்றைய விவசாயமுறை நிலைதகு முறையல்ல என கூறும் பர்த்திபோ போஸ், சூழலியல் விவசாய முறைக்கு நாம் மாறவேண்டும் என அறிவுறுத்து கிறார். சூழலியல் விவசாய முறை என்பது பண்டைய முறைக்கு செல்வதல்ல என விளக்கும் போஸ், இயற்கையில் தாவர வளர்ச்சி குறித்து அறிந்து, சூழலியல் பார்வையில் மிகு நவீன அறிவியலின் பயன்பாடே சூழலியல் விவசாயம் என கூறுகிறார்.

பூச்சிகொல்லி மருந்து பயன்படுத்திட வேண்டு மென்றாலும், எந்த நேரத்தில் பூச்சிகொல்லி மருந்தை தெளிப்பது என்பதில் தேர்வு வேண்டும். பொதுவாக அதிகாலையில் நன்மை தரும் பூச்சிகள் மற்றும் தேனீக்கள் இயங்காது. எனவே அதிகாலை யில் பூச்சிமருந்தை அடித்தால் ஒரளவு நன்மை பயக்கும் பூச்சிகளை தீங்கிலிருந்து பாதுகாக்கலாம். சில தாவரங்களின் பூக்கள் நண்பகலில் இதழ் மூடிக் கொள்ளும் தன்மை வாய்ந்தவை. இந்த தாவரம் பயிரிடப்படுள்ள நிலத்தில் மகரந்த சேர்க்கை செய்யும் பூச்சிகள் இதழ் மூடிய நண்பகலில் பூவை அண்டாது. எனவே இங்கு நண்பகலில் பூச்சி மருந்தை அடிப்பதே சிறந்தது. இவ்வாறு பூச்சிகள் இயக்கம், தாவர இயல்பு முதலிய அறிந்து அள வோடு பூச்சிமருந்தை பயன்படுத்துவது அறிவு டைமை என்கின்றனர் சூழலியல் வேளாண்மை ஆய்வாளர்கள்.

உள்ளபடியே இன்று அளவுக்கு அதிகமான பூச்சி மருந்து மற்றும் உர பயன்பாடு விழலுக்கு இறைத்த நீர் போல எதிர்மறை விளைவை தருகிறது. தீமை பயக்கும் பூச்சிகளை மட்டுமல்ல நன்மை தரும் பூச்சிகளையும் கொல்கிறது; உரம் தாவர வளர்ச்சிக்கு உதவுவது தவிர மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளை பாதித்து மண் செழிப்பை நசிக்கிறது. கண்மூடித்தனமான பூச்சிகொல்லி மருந்து பயன்பாடு; உர பயன்பாடு முதலிய தவிர்த்து, தாவரமும், நன்மை தரும் பூச்சிகளும் தீங்கு தரும் பூச்சிகளும் எவ்வாறு ஒன்றோடு ஒன்று உறவாடுகிறது என்பதை புரிந்து விவசாயம் செய்வதே சூழலியல் விவசாயம். இதற்கு நுட்பமான நவீன சூழலியல் அறிவு அவசியம்.