Showing posts with label சுற்றுசூழல். Show all posts
Showing posts with label சுற்றுசூழல். Show all posts

Monday, April 23, 2012

பருவநிலை மாற்றம்

இயந்திரமயமான இந்த உலகில் நொடிக்கு நொடி மணிக்கு மணி, நாளுக்கு நாள் புவி வெப்பமடைந்து வருகிறது. ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்துள்ளது. இதனால் அண்டார்டிகா உருகும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது என்று ஆராய்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இவ்வாறு வெப்பமடைவதால் உலகின் பல்வேறு பகுதிகள் பாதிப்படைந்துள்ளது. இதற்கு உதாரணமாக அன்மையில் ஹைட்டி தீவிலும், சிலி நாட்டிலும் பூமியதிர்வு, சுனாமியால் பல பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய வானிலை ஆய்வுத்துறை 2009 ஆம் ஆண்டை கடந்த 110 ஆண்டுகளில் மிகவும் வெப்பமான ஆண்டாக அறிவித்தது. கடந்த 2001 ஆம் ஆண்டிற்குப் பிறகு வருட வெப்பநிலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இவ்வாறு வெப்பநிலை உயர்ந்து கொண்டே சென்றால் இன்னும் 50 ஆண்டுகளில் கடல்நீர் மட்டம் உயர்ந்து உலகில் 200 கோடி பேர் வெள்ளத்தால் சூழப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளனர். இவ்வாறு வெள்ளத்தால் சூழப்பட்டால் கடற்கரை நகரங்கள் அனைத்தும் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படும். வளரும் நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைவது இந்த பருவநிலை மாற்றம்தான். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கடந்த 100 ஆண்டுகளில் பேரிடர்களினால் மனித உயிர் இழப்புகள் எத்தகையதாய் இருக்கிறது என்பதை பெல்ஜி புருசேல்ஸ் கத்தோலிக்க பல்கலைக்கழக சர்வதேச பேரிடர் தகவல் தொகுப்பு மையம் ஒரு புள்ளிவிபரத்தை வெளியிட்டிருக்கிறது. நமது நாட்டில் ஏற்பட்ட வறட்சியால் மட்டும் சுமார் 42,00,000 பேரும் கொள்ளை நோய் பரவல் மூலம் சுமார் 45,00,000 பேரும், சுறாவளி புயல்களால் 1,40000 பேரும், பேரலைகளின் தாக்கத்தால் 17,000 பேரும் வெள்ளப் பெருக்கால் 52,000 பேரும் உயிரிழந்துள்ளனர் என்று வெளியிட்டிருக்கிறது. உலக வெப்பமயமாதலின் தாக்கத்தை உணர இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்தியாவில் அதன் தாக்கத்தை உணரமுடிகிறது. உதாரணமாக கொல்கத்தாவை ஒட்டியுள்ள வங்கக் கடலில் 10 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட ஒரு தீவு கடலில் மூழ்கியிருக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தை ஒட்டிய கடற்பகுதியில் இச்சாமதி ஆறும், இராய்மங்கல் ஆறும் கலக்குமிடத்தில் மூர் என்ற தீவு இருந்தது. இது 3 கி.மீ. நீளமும் 3.5 கி.மீ. அகலமும் கொண்டது. இந்த தீவு யாருக்கு சொந்தம் என்று 1980ல் இந்தியா‍வங்க தேசம் இடையே பிரச்சனை எழுந்து பின்பு இந்தியாவிற்கே சொந்தம் என்று கூறப்பட்ட அந்தத் தீவு, பருவநிலை மாற்றத்தால் கடல்நீர்மட்டம் உயந்து மூழ்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தீவைப் பற்றி விளக்கிய ஜாதவ்பூர் பல்கலைக்கழத்தின் கடல் ஆராய்ச்சிப் பிரிவு இயக்குநர் "சுகதோ ஹஸரா" மூர் தீவு இருந்ததற்கான அடையாளங்கள் இப்போது இல்லை என்றும் 2009 ஆம் அண்டு எடுக்கப்பட்ட செயற்கைக் கோள் படங்கள் மூலம் மூர் தீவு கடலில் முழ்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஹிக்ஸி முகத்துவாரத்தை ஒட்டியுள்ள கோமார தீவு, ஐம்பு தீவு ஆகியவை படிப்படியாக மூழ்கி வருவதாக கடல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இவ்வாறு உலகில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க கூட்டம் டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் நகரில் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 7 முதல் 18ந் தேதி வரை நடைபெற்றது. இதில் 2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாலித்தீவில் நடைபெற்ற பேச்சுகளை அடிப்படையாகவும், கியோட்டர் உடன்படிக்கையின் படி 37 தொழில் மய நாடுகள் 2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு கடைபிடிக்க வேண்டிய பசுமை இல்ல வாயு வெளியேற்ற குறைப்பு நடவடிக்கைகளுக்கான உறுதி மொழியைப் பெறுவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. உலகில் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்படும் கார்பன்டை ஆக்ஸைடு அளவில் இந்தியாவின் பங்களிப்பு 4 சதவீதம் தான் என்றாலும் தட்பவெப்பநிலையை பாதுகாக்க தன் பங்களிப்பைச் செய்ய இந்தியா உறுதி பூண்டுள்ளது. இவ்வாறு அனைத்து நாடுகளும் ஒன்றினைந்து பசுமை இல்ல வாயுக்களின் அளவை கட்டுப்படுத்தவேண்டும். வரும் 2020 ஆண்டிற்குள்ளாக குறைந்த அளவு 2 டிகிரி செல்சியஸ் அளவாவது வெப்பத்தை கட்டுப்படுத்தவில்லையென்றால் இந்த உலகம் பல்வேறு இயற்கை சீற்றங்களை எதிர்நோக்க வேண்டிருக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆகவே நமது பூமித் தாயை பாதுகாப்பது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். பசுமை இல்ல வாயுக்களை குறைப்போம். வளமான எதிர்காலத்தை பெறுவோம். நன்றி: திருமிகு அரசுமதி

Sunday, December 11, 2011

வளங்குன்றா விவசாயமும் பல்லுயிர்ப் பாதுகாப்பும்

தேசியப் பூங்காக்கள், சரணாலயங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளே இந்தியாவில் பல்லுயிரியத்தின் புகலிடமாக உள்ளன. அரிய தாவரங்களும் காட்டுயிரும் இப்பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மட்டும்தான் பார்க்க முடியுமா? அவை அப்பகுதிகளில் மட்டும்தான் குடிகொண்டிருக்க வேண்டுமா? எல்லைக்கோடு என்பது மனிதனுக்கு மட்டும்தானே, மற்ற உயிரினங்களுக்குக் கிடையாதல்லவா?

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பல இடங்களில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை ஒட்டியே தேயிலை, காப்பி, ஏலக்காய் போன்றவை விளைவிக்கப்படுகின்றன. இது போன்ற அரசுக்குச் சொந்தமில்லாத தனியார் விளைநிலங்களிலும் அரிய தாவரங்களும் காட்டுயிரும் தென்படும். இவற்றை பாதுகாக்க வேண்டியது மிகவும் முக்கியம். ஏனெனில் வனப்பகுதிகளுக்கு இடையே உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டும், வனப்பகுதிகள் குறைந்தும், சிதைவுற்றும், அங்கு வாழும் உயிரினங்கள் வேட்டையாடப்பட்டும், வாழிட இழப்பால் அருகியும் வரும் இச்சூழலில் பல்லுயிர் பாதுகாப்பு என்பது பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமல்லாமல், வனச்செல்வங்கள் தென்படும் இடங்கள் அனைத்தையும் நல்ல முறையில் பாதுகாப்பது அவசியம்.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் நிலப்பரப்பு பல ஆண்டுகளாக பல்வேறு மாற்றங்களை சந்தித்து வந்திருக்கிறது. இப்பகுதியில் இருந்த அடர்ந்த வனப்பகுதி 1920லிருந்து 1990 வரை 40% திருத்தப்பட்டு காப்பி, தேயிலை போன்ற தோட்டங்களாகவும், நீர்மின் திட்டங்களுக்காகவும் மாற்றப்பட்டுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களின் மொத்தப் பரப்பு சுமார் 1,19,000 ஹெக்டேர், காப்பி சுமார் 3,40,000 ஹெக்டேர் மற்றும் ஏலக்காய் சுமார் 73,000 ஹெக்டேர். இவை அனைத்தும் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகப் பகுதிகளில் பரவியுள்ளன. மிகப்பெரிய நிலப்பரப்பில் இத்தோட்டங்கள் இருந்தாலும், இவற்றில் பெரும்பான்மையான பகுதிகள் அரசால் பாதுகாக்கப்பட்ட, பல்லுயிரியம் மிகுந்த இடங்களுக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளன. பலவிதமான காட்டுயிர்களும், அரிய தாவரங்களும் காப்பி மற்றும் தேயிலைத் தோட்டங்களில் தென்படுவதற்கு இதுவே காரணம். ஆனால் இப்பகுதிகளில் வாழும் இந்த உயிரினங்களைப் பாதுகாக்கவோ, சரியான முறையில் பராமரிக்கவோ எந்த முறையான திட்டமோ, சரியான மேலாண்மைக் கொள்கைகளோ இல்லை.

தேயிலை, காப்பி மற்றும் இதர தோட்டங்களில் அவற்றைப் பராமரிக்கவும் உற்பத்தியைப் பெருக்கவும் கையாளப்படும் செயற்கை, வேதி முறைகள் அப்பகுதியில் உள்ள பல்லுயிரியத்தையும், சுற்றுச்சூழலையும் பெரும்பாலும் பாதிக்கின்றன. இதற்கு பல உதாரணங்களைப் பட்டியலிடலாம். உற்பத்தியை பெருக்குவதற்காக எஞ்சியுள்ள மழைக்காட்டுத் தீவுகள், மலை உச்சியிலமைந்த புல்வெளிகள் ஆகியவற்றை முழுவதுமாகத் திருத்தி ஓரினப் பயிர்களை பயிரிடுதல், எஞ்சியுள்ள வனப்பகுதிகளையும் சீரழித்தல், திருட்டு வேட்டை, தோட்டங்களில் தென்படும் உயிரினங்களுக்கு எந்த வகையிலும் பயன்படாத வெளிநாட்டு மரங்களை நிழலுக்காகவும், விறகுக்காகவும் வளர்த்தல், நச்சுமிக்க, தடைசெய்யப்பட்ட வேதி உரங்களை கட்டுப்பாடில்லாமல் பரவலாக பயன்படுத்துதல், தொழிற்சாலை, குடியிருப்புக் கழிவுகளை ஓடையில் கலந்து நல்ல தண்ணீரை மாசுபடுத்துதல், தோட்டத்தில் அம்மண்ணில் இயற்கையாக வளரும் இயல்தாவரங்களை களைக்கொல்லிகளை அடித்தும், வெட்டியும் அப்புறப்படுத்துதல், ஓடைகளின் கரைப்பகுதி வரை பயிரிட்டு வேதி உரங்களை தெளிக்கும்போது அவை தூய நீரோடு கலத்தல் போன்றவை இதற்கான உதாரணங்களில் சில.

தேயிலை, காப்பித் தோட்ட நிர்வாகிகளில் பெரும்பாலோர் அவற்றின் உற்பத்தியை பெருக்கும் வியாபார நோக்குடன் மட்டுமே செயல்படுகின்றனர். மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலுள்ள இத்தோட்டங்களால் அங்குள்ள பல்லுயிரியத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் எப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதைப் பற்றிய விழிப்புணர்வும், அந்த பாதிப்புகளை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் தோட்ட நிர்வாகத்தின் அடிப்படைக் கடமை. வியாபாரத்தையும், பயிர் உற்பத்தியையும் மேம்படுத்த சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத நடவடிக்கைள் எடுப்பது அவசியம். எனினும் அது போன்ற செயல்பாடுகள், இந்தியாவில் மிகச்சில இடங்களில், மிகச்சொற்பமான அளவிலேயே நிகழ்கின்றன.

தோட்ட நிர்வாகம் எவ்வாறு சுற்றுச்சூழலுக்கும் பல்லுயிர்ப் பாதுகாப்புக்கும் எவ்வாறு துணைபுரிய முடியும்? மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தேயிலை, காப்பி மற்றும் இதர தோட்டங்களில் எஞ்சியுள்ள, அங்குமிங்கும் சிதறிக்கிடக்கும் சிறுசிறு மழைக்காட்டுத் தீவுகளையும், சோலைப் புல்வெளிகளையும், ஓடைகளையும், ஓடையோரக் காடுகளையும் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். முக்கியமாக பல்லுயிரியம் மிகுந்துள்ள ஆனைமலை மற்றும் நீலகிரிப் பகுதிகளில் அமைந்துள்ள தீவுக்காடுகளை மேலும் சீரழிக்காமல் அங்கு தஞ்சமடைந்துள்ள அரிய உயிரினங்களான யானை, பெரிய இருவாசி (Hornbill) மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டுமே வாழும் ஓரிட வாசிகளான சோலை மந்தி (சிங்கவால் குரங்கு), நீலகிரி கருமந்தி, மலபார் இருவாசி போன்ற உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும்.

இத்தோட்டங்களில் நிழலுக்காக வளர்க்கப்படும் சில்வர் ஓக், அல்பீசியா, மீசோப்சிஸ் போன்ற நம் மண்ணுக்குச் சொந்தமில்லாத அயல்மரங்களை வளர்ப்பதைத் தவிர்த்து தோட்டம் அமைந்துள்ள இடம், மழையளவு மற்றும் உயரத்துக்கு ஏற்றவாறு அப்பகுதியில் இயற்கையாக வளரும் மரங்களை வளர்க்கலாம். இது அப்பகுதியிலுள்ள உயிரினங்களுக்கு வாழ்வதற்கான இடத்தையும், உணவையும், இடம்பெயர்வதற்கு உதவியாகவும், அம்மண்ணுக்கு இயற்கையான செழிப்பையும் தரும். மண்ணரிப்பைத் தடுக்கும் வகையில் தாவரங்களை மலைச்சரிவுகளில் வளர்த்தல், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, வேதி உரங்களின் பயன்பாட்டைக் குறைத்தல் அல்லது முற்றிலுமாக தவிர்த்தல், தோட்டப் பண்ணைகளிலும் அது சார்ந்த தொழிற்சாலைகளிலும், வீட்டுக் குடியிருப்புப் பகுதிகளிலும் சரியான கழிவுக் கட்டுப்பாடு மற்றும் கழிவு மேலாண்மையை கடைபிடித்தல் போன்றவை தோட்ட நிர்வாகங்கள் கடைபிடிக்க வேண்டிய நல்ல செயல்பாடுகளில் சில. அதோடு மட்டுமல்லாமல் தோட்டத் தொழிலாளர்களுக்கு முறையான வீடு, கல்வி, மருத்துவ வசதி, சரியான சம்பளம் போன்ற செயல்பாடுகள் தோட்ட நிர்வாகத்தின் சமுதாய கடமையுணர்வை எடுத்துக்காட்டவும், சமூகத்தில் நற்பெயரைப் பெறவும், விளைபொருளின் தரத்தை உயர்த்தவும் உதவும்.

சரி, இவ்வாறு ஒரு தோட்ட நிர்வாகம் நல்ல செயல்பாடுகளை கடைபிடிப்பதால் அவர்களுக்குக் கிடைக்கும் நற்பெயரைத் தவிர வேறு என்ன லாபம்? இது எவ்வாறு அவர்களது தொழில் முன்னேற்றதுக்கும், விளைபொருளின் தரத்தை உயர்த்தவும் வழி அமைக்கும்?

நமக்கு பரிச்சயமான ISI, Agmark போன்ற ஒரு பொருளின் தரத்தைக் குறிக்கும் முத்திரைகளைப் போல் “வளங்குன்றா விவசாய கட்டமைப்பு” (Sustainable Agriculture Network SAN) வகுத்துள்ள நியமங்களை பின்பற்றி தேயிலை, காப்பித் தோட்டங்களில் நடவடிக்கை மேற்கொண்டால், “மழைக்காடு கூட்டமைப்பு” (Rainforest Alliance) தரும் சான்றிதழையும், அதன் முத்திரையையும் தங்களது விளைபொருட்களின் மீது பதித்துக்கொள்ளும் உரிமையையும் அந்நிர்வாகம் பெறலாம். சர்வதேச சந்தையில் இம்முத்திரை கவனம் பெற்று அவர்களின் விளைபொருள்கள் சிறந்த அளவில் விலைபோகும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.

சர்வதேச அளவில் இதுவரை பல நாடுகளில் சுமார் 35,000 ஹெக்டேர் பரப்புள்ள தேயிலை, காப்பித் தோட்டங்கள் மழைக்காடு கூட்டமைப்பின் சான்றிதழைப் பெற்றுள்ளன. தேயிலை மற்றும் காப்பி போன்ற தோட்டப் பண்ணைகள் பின்பற்ற வேண்டிய பத்து நியமங்களை SAN வகுத்துள்ளது. அவை:

1. சமூக மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை
2. இயற்கைச்சூழல் பாதுகாப்பு
3. காட்டுயிர் பாதுகாப்பு
4. நீர்நிலைகள் பாதுகாப்பு
5. தொழிலாளர்கள் உரிமை
6. தொழிலாளர்கள் உடல்நலம், பாதுகாப்பு
7. சமூக உறவு மேம்பாடு
8. ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை
9. மண்வள மேலாண்மை, பாதுகாப்பு
10. ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை
இந்தியாவில் வளங்குன்றா விவசாயத்தின் அவசியம், பல்லுயிர்ப் பாதுகாப்பு, ஷிகிழி நியமங்களை பின்பற்றுவதால் ஏற்படும் நல்ல விளைவுகள் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வை தேயிலை, காப்பித் தோட்டப் பண்ணை நிர்வாகங்களுக்கு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

மேலும் விவரங்களுக்கு: www.ecoagriculture.in இணையதளத்தைப் பார்க்கவும்.

நன்றி: ப.செகநாதன்

Friday, June 24, 2011

மூங்கில் அறுவடையில் புதிய முடிவுகள்

தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை சமீப காலத்தில் வெளி யிட்ட அறிவிப்பின்படி, கிராமவாசிகள் காடுகளில் வளரும் மூங்கில் மரங்களை அறுவடை செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந் ததாக கருதப்படுகிறது. வனத்துறையின் கடுமையான எதிர்ப்பை சந்தித்துள்ள இத்தகைய அறிவிப்பின்படி மராட்டிய மாநிலத்தில் உள்ள மேந்தா லோக்கா கிராமத்தில் ஏப்ரல் 27ந் தேதி கிராம வாசிகள் சமுதாய உரிமையுடன் மூங்கில் சாகுபடியில் ஈடுபட்டனர்.

வரலாற்று ரீதியாக, மரமாக கருதப்பட்ட மூங்கில் சாகுபடியின் அறுவடை உரிமைகள் வனத்துறையிடம் இருந்தது. மிகவும் லாபகரமான மூங்கில் அறுவடை தொழில் இந்தியா வனச்சட்டம் 1927ம் ஆண்டின் சட்டப்படி முறையான அனுமதி பெறாத அறுவடைக்கு ஆறுமாத கடுங்காவல் தண்டனை அல்லது ரூ.500 வரை அபராதம் அல்லது அறுவடை சேதங்களை வைத்து இரண்டுமே கூட விதிக்கப்படலாம். இத்தகைய சட்டப்பிரிவு ‘மரம்’ என்ற சட்டரீதியான பொருளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.

தற்போதைய வன உரிமைகள் சட்டவிதி முறைகளின்படி மூங்கில் சிறிய அளவிலான வன உற்பத்தி பொருளாக முறைப்படுத்தப்பட்டு, அவற்றின் அறுவடை மற்றும் விற்பனை சமுதாய அளவில் மேற் கொள்ள வழிவகை செய்கிறது. வனத்துறை இத்தகைய வகைப்பாட்டை மறுப்பதுடன் மூங்கில் அறுவடை வாயிலாக மிகப்பெரிய சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிவிக்கிறது. மூங்கிலை மரமாக கருதினால் அவற்றை சம் பந்தப்பட்ட துறைகள் மரமாக அல்லது தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் இடுபொருளாக ஏலம் வாயிலாக விற்பனையை பேப்பர் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்த முடியும். தற்போது புல்லாக வகைப்படுத்தப்பட்டால் காடுகளில் உற்பத்தி செய்யப்படும் சிறிய அளவிலான பொருள் என்ற அடிப்படையில் வர்த்தக பயன்பாட்டிற்கு அறுவடை செய்யப்பட்டு மதிப்பு கூடிய வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்திக்கு பயன்படுத்த எளிதாக முடியும்.

நமது நாட்டில் மூங்கில் கொண்டு உருவாக்கப்படும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை வாயிலாக ஆண்டு தோறும் ரூ.2000 கோடி வரை வருமானம் கிடைக்கிறது. சுமார் 15 மில்லியன் மக்கள் மூங்கில் வணிகத்தை நம்பி உள்ளனர். இருப்பினும் காட்டில் பல தலைமுறை வசிக்கும் இம்மக்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட காடுகளில் இயற்கையாக உற்பத் தியாகும் மூங்கில்பொருட்களை பயன்படுத்த முடியாத நிலை காணப்பட்டது.

சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா மூங்கில் மரபணு வளங்களை கொண்டதாக உள்ளது. இரண்டுநாடுகளின் மொத்த உற்பத்தி உலகின் 50 சதவீத அளவை காட்டிலும் அதிகம். தற்போது 9.57 மில்லியன் ஹெக்டேர் நிலங்களில் பரந்து விரிந்த வடகிழக்கு மாநிலங்களில் சாகுபடி செய்யப்படும் மூங்கில் மரங்கள் நமது நாட்டின் வனப்பரப்பில் 12.8 சதவீதம் ஆகும். பேப்பர் தொழிற்சாலை மட்டும் ஆண்டிற்கு மொத்தம் 4.6 மில்லியன் டன்கள் உற்பத்தியில் 2 மில்லியன் டன் உற்பத்தியை பயன்படுத்துகிறது. தேசிய மூங்கில் பயன்பாடு இயக்கம் சார்பில் மூங்கிலை பிற மரங்களுக்கு மாற்றாக பயன்படுத்த முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போதைய மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகங்கள் மூங்கிலை புல்லாகவே கருதும் நிலையில், மத்திய வேளாண் அமைச்சகம் மூங்கிலை தோட்டபயிராக அறிவித்து அவற்றின் சாகுபடி, பயன்பாடு மற்றும் போக்குவரத்தை தடையில்லாமல் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மூங்கிலை அறுவடைக்கு விடும் முயற்சிகள் வன சுற்றுச்சூழலில் அதிகளவு பாதிப்புகள் ஏற்படுத்தும் என்றும் இதனால் பல வன விலங்குகளின் இருப்பிடச்சூழல் பாதிக்கப்படும் என்றும் மூங்கில் பூக்களை உணவாக கொள்ளும் பல வன விலங்குகள் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மூங்கிலை வனத்தில் உள்ள சிறிய அளவிலான வன உற்பத்தி பொருளாக அறிவிக்கப்பட்ட நிலை காரணமாக பல பழங்குடியினரின் வாழ்வுரிமைகள் மற்றும் பொருளாதார நலன்கள் பாதுகாக்கப்படும். எனவே வன உரிமைகள் பாதுகாப்பு சட்டம் காரணமாக அதிகளவு பழங்குடியினர், வன விவசாயிகளின் ஓட்டுகளை பெற அரசியல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் தற்போதைய சட்டம் வனவிலங்கு பூங்காக்கள், தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கு 4 ஹெக்டேர் நிலம் வரை வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய புதிய வனவிலங்குச் சட்டம் காடுகளை தனியாருக்கு திறந்து விட்டு விட்டதாகவும், காடுகளை பாதுகாக்க சட்ட பாதுகாப்பு இல்லை என்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கருதும் நிலையே காணப்படுகிறது.

நன்றி:முனைவர் தி.ராஜ்பிரவீன் உதவிப்பேராசிரியர் வேளாண்மை விரிவாக்கத்துறை

Monday, June 20, 2011

நெகிழியா? காகிதமா?

நெகிழி (பிளாஸ்டிக்) பைகள் மிகப் பெரிய சூழல் கேட்டை உருவாக்குகின்றன என்பது தெரிந்த விஷயம்தான். இதற்கு எதிராக காகித பைகளை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறது. ஆனால் இரண்டுமே இயற்கை வளத்தை அழித்து, சூழலை சீரழிக்கின்றன என்பதுதான் உண்மை. அப்படியானால் இந்த இரண்டில் நாம் எதைத் தேர்ந்தெடுப்பது? மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதுதான், இவற்றின் பயன் பாட்டை குறைப்பதற்கான நல்ல வழி என்று தோன்றுகிறது.

இரண்டையும் பற்றி ஓர் ஒப்பீடு:

உலகம் முழுவதும் 400 கோடி பிளாஸ்டிக் பைகள் ஒவ்வோர் ஆண்டும் கழிவாக்கப்படுகின்றன. இவற்றை தொடர்ச்சியாகக் கோர்த்தால், பூமியை 63 முறை சுற்றலாம்.

உற்பத்தி

மரங்களை அழித்தே காகிதம் தயாரிக்கப் படுகிறது.

நெகிழி என்பது பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் சுத்திகரிக்கப்படும்போது, பாலிஎதிலின் என்ற துணைப்பொருளாகக் கிடைக்கிறது. ஞெகிழிப் பையை தயாரிக்க ஆகும் எரிபொருளை விட 4 மடங்கு அதிக எரிபொருள் காகித பையை உருவாக்க பயன்படுகிறது.

மூலப்பொருள்

காகிதபை உருவாக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருள்கள் காற்று மாசு, அமில மழை, நீர் மாசுபாட்டை உருவாக்கலாம்.

நெகிழி உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ஆறு பொருள்களில் ஐந்து மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தவை.

நெகிழிப் பைகளை உண்டு ஆயிரக்கணக்கான காட்டுயிர், கடலுயிர்கள் ஆண்டுதோறும் அழிகின்றன. கடலாமைகள் இவற்றை இழுதுமீன் என்று கருதுகின்றன. உணவுக்குழலில் சிக்கி இறந்துபோகின்றன.

மறுசுழற்சி

மறுசுழற்சி செய்ய காகிதத்தை கூழாக்கி, வெளுப் பேற்ற பிளீச் செய்தாக வேண்டும். நெகிழியைவிட காகித மறுசுழற்சி எளிது என்றாலும், காகித பைகள், காகிதங்கள் புதிய மரங்களை அழித்தே செய்யப் படுகின்றன. அப்பொழுதுதான் இழுவைத்தன்மை, வலு கிடைக்கும். மறுசுழற்சி காகிதம் அட்டைப்பெட்டி தயாரிக்கவே பயன்படுத்தப்படுகிறது. மேலும் காகிதத்தை மறுசுழற்சி செய்வதற்கு அதிக எரி பொருள் தேவைப்படுகிறது. பெரும்பாலான நேரம் மறுசுழற்சிக்காக வாங்கப்படும் நெகிழி பைகள், அதைச் செய்யாமல், வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டு எரிக்கப்படுகின்றன.

மக்குமா, மக்காதா?

காகிதம் மக்கக்கூடியது. ஆனால் இன்றைக்குள்ள குப்பை கொட்டும் முறை காரணமாக, தண்ணீர், ஒளி, ஆக்சிஜன் கிடைக்காமல் போவதால் அவற்றால் மக்க முடிவதில்லை.

பிளாஸ்டிக் என்பது எக்காலத்திலும் மக்காதது.

நாம் என்ன செய்யலாம்?

மறு பயன்பாட்டுக்கு உரிய தரமான துணிப் பைகளை பயன்படுத்தலாம். இதன் மூலம் ஆயிரக் கணக்கான நெகிழிப் பைகளின் பயன்பாட்டைத் தடுக்கலாம்.

எளிதாக கையில் எடுத்துச்செல்லும் பொருளுக்கு ஏன் ஒரு நெகிழிப் பையை வீணாக்கத் தேவை யில்லையே.

பழைய நெகிழிப் பைகளை குப்பை பெட்டிகளில் பயன்படுத்தலாம். அதற்கென தனி நெகிழிப் பை வாங்காமல் தவிர்க்கலாம்.

மேலும், எப்பொழுதெல்லாம் கடைக்குச் செல்கிறீர்களோ, அப்போது மறக்காமல் கையில் துணிப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும். குறைந்தபட்சம் நம்மிடம் ஏற்கெனவே உள்ள நெகிழிப் பைகளையாவது எடுத்துச் செல்லுங்கள்.


பிளாஸ்டிக் எமன்

அதிநவீன அறிவியல் வசதிகள் பெருகிய இன்றைய வாழ்வில், அதன் பலன்களில் ஒன்றாக நம்மிடையே புற்றுநோய் பல்கிப் பெருகிவிட்டது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் பெரும் பங்காற்றுகிறது என்கின்றன ஆராய்ச்சிகள். இது தொடர்பாக ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனையின் சுற்றறிக்கை கூறும் தகவல்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

மைக்ரோவேவ் அவனில் நெகிழி பாத்திரங்களைப் பயன்படுத்தாதீர்கள். குளிர்பதனப் பெட்டியின் ஃபிரீசரில் தண்ணீர் குப்பிகளை வைக்காதீர்கள். மைக்ரோவேவ் அவனுக்குள் உணவுப்பண்டத்தை வைக்கும்போது அதன் மீது நெகிழி தாளை சுற்றாதீர்கள் என்கிறது அந்த எச்சரிக்கை.

காரணம்: டையாக்சின் எனப்படும் புற்றீணி புற்றுநோயை, குறிப்பாக மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்துகிறது. நெகிழி குப்பிகளை ஃபிரீசரில் வைக்கும்போது, நெகிழியில் இருந்து டையாக்சின் தண்ணீரில் கலக்கிறது. அதேபோல, நெகிழி பாத்திரங்களில் உணவுப்பண்டங்களை வைத்து மைக்ரோவேவ் அவனில் சூடேற்றக் கூடாது என்று கேஸ்டில் மருத்துவமனை மருத்துவர் எட்வர்ட் ஃபியூஜிமாட் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, கொழுப்பு அதிகமுள்ள உணவுகள் சூடேற்றப்படும்போது, நெகிழி டையாக்சினை வெளியிடுகிறது. இது நாம் சாப்பிடும்போது உடலில் சேர்கிறது.

இதற்கு பதிலாக கண்ணாடி, மங்கு பாத்திரங்களை சூடேற்றுவதற்கு பயன்படுத்தலாம். அதேபோல துரித உணவுகளையும் ஞெகிழித்தாள் சுற்றி சூடேற்றக் கூடாது

நன்றி: பூவுலகு

Monday, June 13, 2011

மாயமாகும் மயில்களின் உலகம்

தூரிகை நுனியில் வண்ணங்கள் சொட்ட, படைப்பு குறித்த மோனதவத்தில், வீற்றிருக்கும் பள்ளிக்குழந்தைகளின் பிஞ்சு விரல்களில், அவிழும் ஓவியங்களைக்காணக் கிடைக்கும் வாய்ப்பை, நான் தட்டிக் கழித்ததில்லை, எந்தத் தருணத்திலும். மொட்டு அல்லது மலர் வகுப்புகளில் பயிலும் மூன்று நான்கு வயதுள்ள சின்னஞ்சிறு குழந்தைகளின் ஓவியங்களில் தவறாது இடம் பிடித்து விடுகிறது இயற்கையும், கூடவே பறவைகளும். பறவைகளில் மயில்களை அதிகக் குழந்தைகள் வரைந்திருப்பார்கள். மயில்களை இக்குழந்தைகள் நேரில் பார்த்திருப்பார்களா என்கிற சந்தேகம் தோன்றிமறையும் இடைவெளிக்குள் நிறங்களின் திரட்சியோடு ஓர் மயிலை வரைந்து நம் பார்வைக்கு பரிமாறிவிடுகின்றனர் குழந்தைகள்.

மயில் மனித குலத்தின் மரபணுவோடு கலந்த பறவை. தொன்மையான வரலாற்றுச் செய்திகளில் உயிர்ப்போடு சித்தரிக்கப்பட்ட பறவை. வேட்டைச் சமூக அமைப்பில் குகைகளில் வாழ்ந்த நமது முன்னோர்கள் பாறைகளில் மயிலை ஓவியமாக வரைந்துள்ளார்கள். சீகூர், சிறுமலை, மல்லசமுத்திரம், கோத்தகிரி அருகே உள்ள கொணக்கரையிலும் மயில்கள் பாறை ஓவியமாக நிலைத்திருக்கும் காட்சி இன்றளவும் நம் வரலாற்று பாரம்பரிய சாட்சியாய் உள்ளன.

இந்தியாவில் இயற்கைச் சூழலில் வாழும் பெரிய பறவை மயில்கள் தான். இவைகள் கோழிக்குடும்பத்தை சார்ந்தவை. சங்க இலக்கியங்களில் “மஞ்சை” என்னும் சொல் மயிலைக் குறிக்கிறது. காட்டு மஞ்சை கழனி மஞ்சை எனும் சொல்லாடல்களிலிருந்து வேளாண்நிலங்களிலும் மயில்கள் வாழ்ந்திருப்பதை அறிய முடிகிறது. ஆனாலும் காடும், காடு சார்ந்த முல்லை நிலமும், வெப்பமண்டலப் பகுதிகளும் தான் மயில்களின் வாழ்விடம்.

புழுபூச்சிகள், பூரான், சிறுபாம்புகள், விதைகள் மற்றும் தானியங்களை விரும்பி உண்ணும் மயில்கள் காலை, மாலை நேரங்களில் தீவிரமாக இரைதேடும் தன்மை கொண்டவை. நீலப்பச்சை நிறக் கழுத்தையும், அழகிய கொண்டையும், நீண்ட தோகையும் கொண்டது ஆண்மயில். பழப்புநிற மேலுடலும், கழுத்திற்கு கீழே வெள்ளை நிறவயிற்றுப்பகுதியும் கொண்டது பெண் மயில். எழுப்பும் குரலை அகவல் என்கிறோம். காடுகளில் மயில்களின் குரல் மற்ற விலங்குகளுக்கு எச்சரிக்கை ஒலியாக உள்ளது.

ஆண் மயிலை விட பெண்மயில்கள் உருவில் சிறியவை. நன்குவளர்ந்த ஆண் மயிலின் உடல் இரண்டிலிருந்து மூன்றடி நீளம் கொண்டவை. வளர்ந்த ஆண்மயிலின் தோகை மட்டும் நான்கிலிருந்து ஐந்தடி நீளமிருக்கும். ஆண்மயில்கள் எடை நான்கு கிலோவிலிருந்து ஆறுகிலோ வரையும் பெண் மயிலின் உடல் எடை மூன்று கிலோ முதல் நாலரை கிலோ வரையும் இருக்கும்.

இரண்டிலிருந்து மூன்றாண்டுகளுக்குள் மயில்கள் பருவடைகின்றன. மயில்களின் இனப்பெருக்கக் காலம் சித்திரை தொடங்கி புரட்டாசி வரை. இனப்பெருக்க காலத்தில் தான் ஆண் மயில்களுக்கு நீண்ட தோகை வளரும், வருடம் ஒருமுறை வால்பகுதியின் மேலடுக்குகளில் வளரும் தோகை ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் உதிர்ந்துவிடும். இனப்பெருக்க காலங்களில் ஆண் மயில்கள் நிறப்பொலிவோடு காணப்படும். வானவில்லின் நிறம் ஏழு என்றால் ஒன்பது நிறம் மயிலுக்கு. பெண் மயில்களை கவரவே ஆண்மயில்களுக்கு தோகை வளர்கிறது. வெப்பம் குறைந்து கார்மேகம் சூழ்ந்த குளிர்ந்தவேலையில்தான் இனச்சேர்க்கைக்கு தயாராகின்றன மயில்கள். நான்கைந்து பெண் மயில்கள் மேயும் இடத்திற்கு அருகில் ஆண்மயில்கள் தோகை விரித்தபடி அசைந்து கொண்டிருக்கும். இந்த நேரத்தில் ஆண்மயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ள நேரும், வலதுகாலில் ஆண்மயிலின் பலம் உள்ளது. பலமாக உதைபட்ட ஆண்மயில் ஒதுங்கிக் கொள்ள, வெற்றிக்களிப்பில் பெரும் குரலில் கத்தியவாறு தமது தொண்டைப்பகுதியை தானே கொத்தவும் செய்யும். தன்னைத்தானே வருத்திக் கொள்வதைப் போல தோன்றினாலும், பெண்மயில்களின் கவனத்தை ஈர்க்கும் உத்திதான் இது. பறவை இனங்களில் மயில்களுக்கு மட்டும் வாய்த்த தனிச்சிறப்பாக ஆய்வாளர்கள் இதனை கருதுகிறார்கள்.

மயில்களின் இனச்சேர்க்கை குறித்து நம்மில் பலருக்கும் தவறான கருத்துள்ளது. ஆண்மயில் வாய்வழியே விந்தை உமிழ்வதாகவும். உமிழ்ந்த விந்தை பெண்மயில்கள் கொத்தி விழுங்கி அதன் பொருட்டு கருவுறுவதாகவும் காலம் காலமாய் நம்புகிறார்கள். (பறவைகள் குறித்த அறிவியல் தேடல் இல்லாததும் இதற்கு ஒரு காரணம்). சேவலைப்போல தான் இணை சேர்கிறது மயில்களும். கருவுறும் பெண்மயில் 28நாட்கள் வரை அடைகாத்து குஞ்சுகள் பொரிக்கின்றன. முட்டையிலிருந்து வெளிப்படும் குஞ்சுகள் இரண்டு மணிநேரத்தில் நடக்கவும், 9 நாட்களில் பறக்கவும் கற்றுக்கொள்கின்றன. தாய் மயில் தனது குஞ்சுகளுக்கு உணவையும், எதிரிகளின் நடமாட்டத்தையும் பலவிதமான குரல்களை எழுப்பி உணர்த்தும். மயில்களின் ஆயுட்காலம் இருபதாண்டுகள் என்று பறவை ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அழகிய தோகைதான் மயில்களுக்கு சில நேரங்களில் ஆபத்தாகவும் இருக்கிறது.

மேலை நாடுகளில் துகி என்னும் கிரேக்க சொல்லாடல் தோகை என்னும் தமிழ் சொல்லிலிருந்து வந்ததுதான். கி.மு. பத்தாம் நூற்றாண்டில், சாலமன் அரசனால் தாமிரபரணி நதிக்கரையிலிருந்து உவரித் துறை முகம் வழியாக கப்பலில் கட்டுக்கட்டாக மயில் தோகைகளை தூக்கிச்சென்று, ரோமானிய மக்களுக்கு அறிமுகம் செய்தனர். பிறகு கடலோடி வணிகர்கள் ஆன பினீசியர்கள் கப்பல் கப்பலாய் ஏற்றி ரோமானிய வீதிகளில் தமிழ்நாட்டு மயில்களின் தோகைகளை கடை பரப்பினார்கள். ரோம் நாகரீகத்தில் மயில்களின் தோகை பலவிதமான உணவுப்பொருள்களோடு கலந்து உண்ணும் பழக்கமிருந்தது. நாகரிக காலத்திலும் ரோமானிய செல்வந்தர்கள் தமது விருந்து மேசைகளின் மீது பல்வேறு விதங்களில் மயில் தோகைகளை அழகுபடுத்தி வைத்திருக்கிறார்கள். தமிழர்களின் பண்பாட்டுத் தளங்களில் மயில்களின் அடையாளம் ஆழமாய் பதிந்துள்ளது. பழனி மலைக்கருகில் உள்ள திருஆவினக்குடியில், தொல்பொருள் அகழ்வாய்வில் கிடைக்கப்பெற்ற செம்புக்காசுகளில் மயிலின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆற்காடு நவாப் சந்தா சாயுபு போன்ற முகமதிய மன்னர்களும், விஜயரகுநாத நாயக்கர் ஆட்சியிலும் மயிலின் உருவம் பொரிக்கப்பட்ட நாணயங்கள் புழக்கத்தில் இருந்துள்ளன. போர்க்களத்தில் தாய் மண்காக்க எதிரிகளோடு போராடி, வீரமரணம் அடையும் தமிழர்களுக்கு நடுகல் நட்டு மயில் பீலிகளால் அழகு செய்து, ஆண்டுக்கொருமுறை உணவுப் பண்டங்களையும், மதுபானங்களையும் படைத்து வழிபடும் பழக்கம் பதினான்காம் நூற்றாண்டு வரை இருந்துள்ளது. மயிலாட்டம் என்கிற கலையும், மயிலாசனம் என்கிற உடற்கலையும் மயில்களின் பெயராலே இன்றும் விளங்குகிறது. சதிராட்டம் என்கிற ஆடல் கலைக்குள் நிகழ்த்தப்பட்ட மயிலாட்டம் பிறகு பரதக்கலைக்குள்ளும் பரவியது.

பருவமடைந்த ஆண்மயில் பெண் மயிலைக் கவர தோகை விரித்து அசைவதை நடனத்தின் நளினமாகவே தமிழர்கள் பாவித்துக் கொண்டார்கள். மயிலின் அசைவின் போது ஒருக்களித்தல், குதித்தல், சுற்றுதல் என்கிற மூன்று அடவுகளை நிகழ்த்தும். இந்த அடவுகளிலிருந்தே தமிழர்களுக்கு காவடியாட்டம் என்கிற கலை கிடைத்தது. மயிலூர், மயிலாடும்துறை, மயிலம்பாடி, மயிலாப்பூர், மயிலம்பட்டி, மயிலாடும்பாறை, மயிலேறி பாளையம், மயிலம் போன்ற சில ஊர்களைக் குறிப்பிடலாம்.

தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்த வைத்துக் கொள்ளும் பெயர்களில்கூட மயிலம்மாள், மயிலாள், அன்னமயில், பொன்மயில், மயில்சாமி, மயிலாம்பதி, மயிலேறு, மயில்வாகனம், மயிலானந்தம் போன்ற பெயர்களில் இன்றளவும் அழைக்கப்படுகிறார்கள். இறந்த மயிலின் உடலிலிருந்து எடுக்கப்படும் கொழுப்பே மயிலெண்ணெய் ஆகும். இது மூட்டுவலி, வாதநோய்களை குணமாக்கும் என்பதும், மயில் பீலியை தீயில் கருக்கி சாம்பலாக்கி தேனோடு குழைத்து குழந்தைகளுக்கு ஊட்ட தீராத சளியும், இருமலும் குணமாகும் என்பதும் கடைந்தெடுத்த மூடத்தனம். ஏனெனில் மயில்களுக்கு மருத்துவகுணம் என்பது இம்மியளவு கூட இல்லை.

இந்தியாவின் தேசியப்பறவையாகவும் மயில் உள்ளது. ஆனால் மயிலை தேசியப்பறவையாக இந்திய அரசு எந்த ஆண்டு அறிவித்தது, என்ற வினாவை எழுப்பினால், பலரும் பதில்சொல்ல முடியாமல் மௌனமாகிவிடுவார்கள். இந்தியாவில் வறண்ட, நீரற்ற, புதர்க்காடுகளில் வாழ்ந்த அடையாளம் அருகிப்போன கானமயிலைத்தான் முதலில் தேசியப்பறவையாக இந்திய அரசு தெரிவு செய்தது. அதன் ஆங்கிலப் பெயரால் அச்சுப்பிழை நேர்ந்துவிட்டால் வேறுபிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிற விவாதம் தலை தூக்க தற்போது அழிவின் விளிம்பில் அல்லாடும் மயிலுக்கு அந்த வாய்ப்பு வந்து சேர்ந்த ஆண்டு 1963.

1972 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த வனச்சட்டத்தின்படி மயில்கள் வேட்டையாடுதல் அல்லது வேறுவகையில் துன்புறுத்துதல் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டது. மயில் மியான்மாரிலும் (பர்மா) தேசியப்பறவையாக உள்ளது. உயிரியல் பூங்காவில் ஓரிரண்டு வெள்ளை மயில்களை நீங்கள் காண நேர்த்திருக்கலாம். இதை தனித்த இனமென்றும், அரியவகைப் பறவையென்றும், இது வண்டலூர், கோவை உயிரியல் பூங்காவில் வசிக்கிறது உண்மையில் வெள்ளை மயில்கள் தனித்த இனமன்று. வெள்ளை மயில்கள் வெள்ளுடல் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவை என்ற கருத்தாய்வுகள் கூட இன்னும் முழுமையாக்கப்படவில்லை. வெள்ளை மயில்கள் நிறம் மங்கும் பண்புகளை கொண்ட நிறப்பிறழ்வு நோய் கொண்டவைகள். வெள்ளை மயில்களின் கண்கள் நீலநிறத்தில் உள்ளன. ஆண் வெள்ளை மயில்களின் தோகையில் உள்ள புள்ளிகள் மங்கலாக வெளிர்ந்து காணப்படுகின்றன.

இன்றைய உலகமயமாக்கல் சூழலில் வேளாண்மை குடிமக்களின் வேண்டாத பறவையாய் மயில்களின் தோற்றம் மாறிப்போனது. தொடர்ந்து அழிக்கப்பட்டுவரும் காடுகளால் வாழ்விடங்கள் பறிக்கப்பட்டு காட்டுயிர்களின் வாழ்வு புலம் பெயர்ந்து வாழும் நொம்பலத்திற்குள்ளானது. இன்று வேளாண் நிலங்கள் தான் மயில்களின் புகலிடம். விளைநிலங்களில் இரைதேடி வரும் மயில்கள் முளைப்பயிர் மக்கா சோளம், தக்காளி, சூரியகாந்தி போன்றவற்றைக் கொத்திக் குதறிவிடுவதாக முறையிடும் வேளாண்மக்கள் மயில்களின் மீது மாளாத கோபத்தில் உள்ளார்கள்.

காடுகளில் மயில்களின் பெருக்கத்தை கட்டுக்குள் வைத்திருந்த நரி, காட்டுப்பூனை, கீரி போன்ற பாலூட்டிகளின் வாழ்வை சீரழித்து சிதிலமாக்கிவிட்டோம். எந்த அறிவியல் முயற்சியாலும் இணைக்க முடியாத இயற்கையின் உணவுக் கண்ணிகள் உடைந்துவிட்டன. விளைநிலங்களிலும், அதனை சுற்றியுள்ள தோப்புகளிலும் மிகுதியாக மயில்கள் பெருக இதுவும் ஒரு காரணம்.

விளைநிலங்களில் பயிர்களை நாசம் செய்கிறது மயில்கள் என குற்றம் சாட்டும் வேளாண்மக்கள் விளை நிலங்களில் சிறுபாம்பு, பூரான், பூச்சிகள், சிதறிய தானியங்கள் என்று மயில்கள் இரைதேடுவதை கவனிப்பதில்லை. பூச்சிகளை கட்டுப்படுத்தும் மயில்களும் உள்ளன என்பதை வேளாண்மக்கள் உணர வேண்டும். எல்லா பூச்சிகளும் பயிர்களை நாசம் செய்யும் என்பதும் தவறான கருத்து. பூச்சிகளையும், பறவைகளையும் தவிர்த்து விட்டு வேளாண் நிலங்கள் செழிக்க முடியாது. கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, திருச்சி, நெல்லை போன்ற மாவட்டங்களில் விளைநிலங்களுக்கு வரும் மயில்களை விரட்டுதல் நஞ்சு வைத்து கொல்லுதல் போன்ற அடாத செயல்கள் செய்தித்தாள்களில் தினமும் அச்சேறுகின்றன.

கொங்குநாட்டு விளைநிலங்களில் ஆங்காங்கே மயில்கள் செத்துக்கிடப்பதை நாளும் பார்க்கலாம். பருத்திக்காடுகளில் தெளிக்கப்படும் உலக நாடுகளில் தடை செய்யப்பட்ட “எண்டோ சல்பான், மோனோ குரோட்டோபோஸ்” போன்ற உயிர்க்கொல்லி மருந்துகளால் செத்துவிழும் புழுக்களை கொத்தி தின்னும் மயில்கள் ஆறேழுநாட்களில் செரிமான உறுப்புகளில் நஞ்சுபடிந்து குடல் புண்ணாகி இறந்து விடுகின்றன என்பதை பிரேத பரிசோதனையில் அறியமுடிகிறது.

பண்ணைகளில் பொதிப்பொதியாய் வளர்க்கப்படும் கோழிகளின் மூலம் பரவும் தொற்றுநோய்க்கிருமிகளால் ஏற்படும் பறவைக்காய்ச்சல் நோய் மயில்களையும் விட்டு வைப்பதில்லை.

விளைநிலங்களில் விரட்டப்பட்ட மயில்கள் கோவை மாநகரப்பகுதிக்கு குடிவந்துவிட்டன. சிங்காநல்லூர், வெள்ளலூர், பட்டணம் பகுதிகளில் மனிதமலம், எச்சில் கழிவுகள், அழுகிய கோழி இறைச்சி, கெட்டுப்போன காய்கறிகள் என்று தேடித்தின்று இரசாயன நஞ்சு நுரைத்த நொய்யலில் நீரைக்குடித்து உயிர் வாழ்கிறது.

பல்லுயிர்களை பாதுகாக்க உலக நாடுகள் முனைப்போடு செயலாற்றும் தருணத்தில் உயிர்களின் வாழ்வை உருக்குலைக்கும் செயல் இயற்கைக்கு மட்டுமல்ல அறிவியலுக்கும் எதிரானது.

பூமியின் வேர்பிடித்த எல்லா உயிர்களுக்கும் வாழும் உரிமை சமமாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. வலியது வாழும் என்கிற நியதிகளுக்குள் மனித குலம் எந்திரத்தனமாய் தள்ளப்பட்டுள்ளது. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு கொங்குமண்ணில் பாடப்பட்ட ஓர் நாட்டுப்புறப்பாடல் ஞாபகத்திற்கு வருகிறது.

மருத பூத்தவனம்

மயிலாடும் சோலைவனம்

மருத மரத்தே சாச்சுபுட்டோம்

மயில் போயி எங்கடையும் – பொன்னு

மயில் போயி எங்கடையும்?

என்ற எமது முன்னோர்கள் இசைத்த நாட்டுப்புற பாடலில் ஊடாடும் குற்ற உணர்வு காலம் கடந்தும் நம்மை உறுத்துகிறது

(கட்டுரையாளர் - “மயிலு” ஆவணப்பட இயக்குனர்/பறவை ஆர்வலர்)

நன்றி: இளைஞர் முழக்கம்

Tuesday, May 24, 2011

12 பறவைகள்சரணாலயங்கள் - லட்சக்கணக்கில் விருந்தாளிகள்

தமிழகத்தில் உள்ள 9 சதவிகித வனப்பரப்பில் கண்ணுக்கும் மனதுக்கும் இதமாக உள்ள பறவைகள் 60 குடும்பங்களில் 350 எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் மழைக்கால ஆரம்பத்தில் நமது சூழலை விரும்பி நீர் நிலைகளை நாடி விருந்தாளிகளாக வரும் பறவைகள் சில லட்சத்தை தொடும். உள்ளுர் விருந்தாளிகளாக மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் பறவைகளும் இதில் அடங்கும்.

அந்த வகையில் நீர் நிலைகளில் காணப்படும் கொக்குகள், நாரைகள், நீர்க்காகங்கள் யாவும் உள்ளூர் பறவைகளே.பலவித வாத்துகள், உள்ளான்கள், பவழக்காலிகள், ஆலாக்கள் போன்றவை இலங்கை, மியான்மர், பாகிஸ்தான், சைபீரியா போன்ற நாடுகளிலிருந்து இடம்பெயர்ந்து வருகின்றன.

தமிழகத்தில் 12 முக்கிய நீராதாரங்களில் பறவைகள் வந்து செல்வதை கணக்கில் கொண்டு பறவைகள் சரணாலயங்களாக அறிவித்து பராமரித்து வருகிறது மத்திய அரசு.

1. பழவேற்காடு பறவைகள் சரணாலயம்
2. வெள்ளோடு பறவைகள் சரணாலயம்
3. கரிக்கிலி பறவைகள் சரணாலயம்
4. கரைவெட்டி பறவைகள் சரணாலயம்
5. உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம்
6. வடுவூர் பறவைகள் சரணாலயம்
7. சித்திரன்குடி பறவைகள் சரணாலயம்
8. கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்
9. மேல்வல்வனூர் + கீழ்செல்வனூர் பறவைகள் சரணாலயம்
10. கஞ்சிரன்குளம் பறவைகள் சரணாலயம்
11. வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்
12. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

மேற்கண்ட சரணாலயங்கள் தவிர ஏரி, குளங்கள், ஆறுகள், நீர்நிலைகளையும் பலவித நீர்ப்பறவைகள் வசிப்பிடமாகக் கொள்வதைக் காணலாம்.

பழவேற்காடு பறவைகள் சரணாலயம்

தமிழக, ஆந்திர கடற்கரையோரத்தில் 481 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. பழவேற்காடு பறவைகள் சரணாலயம். 153.67 சதுர கி.மீ தமிழக எல்லைக்குட்பட்டது. 800 முதல் 2000 மி.மீ வரை ஆண்டு தோறும் மழை வளம் பெறும் பழவேற்காடு பூ நாரைகளுக்கு ஏற்ற இடமாக அமைந்துள்ளது. ஒரிசாவில் அமைந்துள்ள சில்கா ஏரிக்கு அடுத்து அதிகப்படியான பூ நாரைகள் வரும் இடம் பழவேற்காடு.

பூ நாரைகளோடு, உள்ளான்கள், பட்டைத்தலை வாத்து உள்ளிட்ட பலவித வாத்து வகைகள். பவழக்காலிகள், ஆலாக்கள் என ஆயிரக்கணக்கில் வலசை பறவைகள் வந்து செல்கின்றன. இவை தவிர கொக்குகள், நாரைகள், கரண்டி வாயன் உள்ளிட்ட பறவைகளும் வந்து செல்கின்றன.

160 விதமான பறவைகள் வந்து செல்வதாக கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 90 கி.மீ தொலைவிலும், பொன்னேரியில் இருந்து 19 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது சரணாலயம். பார்வையாளர்கள் வந்து செல்ல நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் ஏற்ற காலமாகும்.

வெள்ளோடு பறவைகள் சரணாலயம்

77.185 ஏக்கர் பரப்பில் ஈரோடு மாவட்டத்தில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. ஈரோட்டில் இருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இங்கு, மஞ்சள் மூக்கு நாரை, கரண்டி வாயன், கூழைக்கடா, நத்தைகுத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் போன்ற பறவை இனங்களை காணலாம். நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலம் பார்வையாளர்கள் வந்து செல்ல ஏற்ற காலமாகும்.

கரிக்கிலி பறவைகள் சரணாலயம்

சென்னையில் இருந்து 86 கி.மீ தொலைவில் மதுராந்தகம் தாலுகாவில் 61.21 ஏக்கர் பரப்பில் கரிக்கிலி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. செப்டம்பர் மாத துவக்கத்தில் ஆரம்பிக்கும் பருவம் மார்ச், ஏப்ரல் வரை பறவைகள் இங்கு இருக்க காணலாம். வாத்து வகைகளுக்கும், உப்புக் கொத்திகளுக்கும் ஏற்ற உறைவிடமாக உள்ளது. ஊசிவால் வாத்து, தட்டை வாயன், முக்குளிப்பான், புள்ளிமூக்கு வாத்து ஊசிவால் வாத்து, மஞ்சள் மூக்கு நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், குருட்டுக்கொக்கு, சின்னக்கொக்கு போன்ற பறவை இனங்களை காணலாம். டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலம் பார்வையாளர்களுக்கு ஏற்ற காலமாகும்.

கரைவெட்டி பறவைகள் சரணாலயம்

தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் 454 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது தான் கரைவெட்டி பறவைகள் சரணாலயம். திருச்சியில் இருந்து 50 கி.மீ தொலைவிலும், தஞ்சாவூரில் இருந்து 35 கி.மீ தூரத்திலும் கரைவெட்டி அமைந்துள்ளது. மிக அருகாமை நகரமாக அரியலூர் 12 கி.மீ தொலைவில் உள்ளது. 321 ஏக்கர் சரணாலயமாக உள்ள கரைவெட்டியில் நவம்பர் முதல் மே மாதம் வரை பறவைகள் வந்து செல்லும் காலமாகும். ஆண்டிற்கு 800 முதல் 2000 மி.மீ வரை மழை பொழிகிறது.90 வகையான நீர்ப்பறவைகளும், 100 வகையான வாழிடப் பறவைகளும், ஒட்டு மொத்தமாக 188 பறவை இனங்களும் இங்கு வந்து செல்வது கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 16 வகையான வாத்துக்களும் அடங்கும்.பட்டைத் தலை வாத்து, செங்கால் நாரை, கூழைக்கடா, விரால் அடிப்பாள், பொரி வல்லூறு, ஆளிப் பருந்து, சேற்றும் பூனைப் பருந்து போன்ற பறவைகளை இங்கு காணலாம்.கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் அதிகபட்சமாக 50,000 பறவைகள் ஓராண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர், ஜனவரி மாதங்கள் பறவைகளை பார்க்க ஏற்ற காலமாகும்.

உதயமார்த்தாண்டம் பறவைகள் சரணாலயம்

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் 1999 ஆம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. திருவாரூரில் இருந்து 65 கி.மீ தொலைவிலும், தஞ்சாவூரில் இருந்து 68 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. உதயமார்த்தாண்டபுரம் சரணாலயத்திற்கு நீர் ஆதாரமாக மேட்டுர் அணையின் நீரே உள்ளது. 45 ஏக்கர் பரப்பளவில் சரணாலயம் அமைந்துள்ளது.ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை வறண்டு இருக்கும் சரணாலயம் ஆகஸ்ட், டிசம்பர் மாதம் வரை பறவைகளின் வருகையால் அழகு மிளிர்ந்து காணப்படும்.சாம்பல் நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், நத்தை குத்து நாரை, வாக்கா போன்ற பறவை இனங்களில் அதிகளவாக நத்தை குத்தி நாரைகள் காணப்படுகிறது. அதிகபட்சமாக 10,000 பறவைகள் வந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் சுற்றிப்பார்க்க ஏற்ற காலமாகும்.

வடுவூர் பறவைகள் சரணாலயம்

1999 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட வடுவூர் பறவைகள் சரணாலயம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து 25 கி.மீ தொலைவில் அமைந்த வடுவூர் 40 விதமான நீர்ப் பறவைகளால் காண்போரை கவர்ந்திருக்கிறது. நவம்பர் மாத வாக்கில் 20,000 பறவை இங்கு குவிந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்டில் துவங்கி டிசம்பர், ஜனவரி முடிய பறவைகள் வந்து செல்லும்.பறவைகளைக் காண நவம்பர், டிசம்பர் மாதங்களில் இங்கு வரலாம். வெள்ளை அரிவாள் மூக்கன், கூழைக்கடா, நீர்க்காகங்கள், கிறவை, ஊசிவால் வாத்து, நாரை என பலவித பறவைகள் இங்கு இனப்பெருக்கம் செய்கின்றன.

சித்திரன்குடி பறவைகள் சரணாலயம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் தாலுகாவில் பலவித வண்ணப் பறவைகளால் எழிலுடன் காட்சி தரும் சித்திரன்குடி பறவைகள் சரணாலயம் 1989 ஆம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. 47.63 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள சித்திரன்குடியில் கூழைக்கடா நத்தைகுத்தி நாரை, சின்ன, பெரிய கொக்கு, குருட்டுக்கொக்கு, நாரைகளை காணலாம்.பறவைகளை காண ஜனவரி ஏற்ற மாதமாகும். 12. கி.மீ தொலைவில் சாயல்குடி அமைந்துள்ளது. இராமநாதபுரத்தில் இருந்து 45 கி.மீ தொலைவில் உள்ளது.

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்

திருநெல்வேலியில் இருந்து 33 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள கூந்தன்குளம் 1994 ஆம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. கூந்தன்குளம், காடன் குளம் என இயற்கையாக அமைந்துள்ள பகுதிகளில் 129.33 ஏக்கர் பரப்பில் விரிந்துள்ள பறவைகள் புகலிடத்தில் பூ நாரைகளின் வரவு அழகு சேர்க்கிறது. கூந்தன் குளம் கிராம மக்களின் பாதுகாப்பில் பறவைகள் யாவும் மனிதர் பயம் இன்றி அனைத்து வீடுகளிலும் கூடு கட்டுவது சிறப்பம்சமாகும்.

43 வகையான நீர்ப்பறவைகள் இங்கு வருவது கணக்கிடப்பட்டுள்ளது. செந்நிற நீண்ட கால்களையும், மெல்லியதாக நீண்டு வளைந்த கழுத்தையும், ரோஜா வண்ணத்தையும் ஒத்த பூ நாரைகள் தவிர சைபீரியா பகுதியில் இருந்து நாரை, மஞ்சள் மூக்கு நாரை, மூன்று வித கொக்குகள் கரண்டி வாயள், வாத்து வகைகள் என வண்ணக்கலவையாக கூந்தன்குளத்திற்கு அழகு சேர்க்கிறது.ஓர் ஆண்டில் அதிகபட்சமாக 1 லட்சம் பறவைகள் வந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது. அருகாமை நகரமாக நாசரேத் 15 கி.மீ தொலைவில் உள்ளது. நவம்பர், டிசம்பர் வருகை புரிய தொடங்கும் பறவைகள் மே மாத வாக்கில் தங்கள் இருப்பிடத்திற்கு திருப்பிச் செல்கின்றன. பறவைகளை பார்க்க ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் ஏற்ற காலமாகும்.

மேல்செல்வனூர் - கீழ் செல்வனூர் பறவைகள் சரணாலயம்

இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் அமைந்துள்ள மேல்- + கீழ் செல்வனூர் பறவைகள் சரணாலயம் தமிழகத்தின் பெரிய பறவைகள் சரணாயலமாகும். 593.08 ஏக்கர் பரப்பில் விரிந்துள்ள பறவைகள் புகலிடம் 1998 ஆம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. கொக்குகள், கூழைக்கடா, நத்தைகுத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் உட்பட இங்கு இனப்பெருக்கம் செய்கின்றன. சாயல்குடியில் இருந்து 12 கி.மீ தொலைவிலும், கடலாடியில் இருந்து 15 கி.மீ தூரத்திலும் இராமநாதபுரத்திலிருந்து 45 கி.மீ தூரத்திலும் இப்பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.

கஞ்சிரன்குளம் பறவைகள் சரணாலயம்

170 பறவை இனங்களுக்கு வாழ்விடமாக உள்ள கஞ்சிரன்குளம் 1989ஆம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. 66.66 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள சரணாலயத்தில் மஞ்சள்மூக்கு நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், சின்ன, பெரிய கொக்கு என பலவித பறவை இனங்கள் வாழ்கின்றன.முதுகுளத்தூரில் இருந்து 8 கி.மீ தொலைவிலும், மதுரையில் இருந்து 117 கி.மீ தொலைவிலும் கஞ்சிரன்குளம் அமைந்துள்ளது.

வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்

சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரே பறவைகள் சரணாலயம் வேட்டங்குடியாகும். 38.4 ஏக்கர் பரப்பில் விரிந்துள்ள வேட்டங்குடி ஜூன் 1977 ஆம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. திருப்பத்தூர் தாலுகாவில் அமைந்துள்ள வேட்டங்குடியில் நத்தை குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், சாம்பல் நாரை, வக்கா, பாம்புத்தாரா, கரண்டி வாயன் போன்ற பறவை இனங்கள் கூடுகட்டி குஞ்சு பொரிக்கின்றன. காரைக் குடியில் இருந்து 32 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

நாட்டின் பழமையான பறவைகள் சரணாலயங்களில் வேடந்தாங்கலும் ஒன்று. 250 ஆண்டுகளாக கிராம மக்களின் பாதுகாப்பில் பறவைகளின் வாழ்விடமாக வேடந்தாங்கல் உள்ளது. சென்னையில் இருந்து 75 கி.மீ தொலைவிலும், செங்கல்பட்டில் இருந்து 30 கி.மீ தூரத்திலும் வேடந்தாங்கல் பறவைகள் சரணலாயம் அமைந்துள்ளது. அக்டோபர் மாத மத்திய வாக்கில் வரத் தொடங்கும் பறவைகள் ஏப்ரல் மாத இறுதியில்தான் தங்களது இருப்பிடத்திற்கே திரும்பிச் செல்கின்றன. ஆண்டின் அதிகபட்ச அளவாக 40000 முதல் 50000 வரையிலான பறவைகளை ஜனவரி மாதத்தில் வேடந்தாங்கலில் காணமுடியும்.

115 விதமான பறவைகள் வருகை புரியும் இங்கு.தமிழ்சங்க இலக்கியங்களில் பாடப்பெற்ற ‘அன்றில்’ என்ற அழகிய பறவை இனம், இன்று அரிவாள் மூக்கன் என்று பறவையியலாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. வேடந்தாங்களில் மூன்று வித அரிவாள் மூக்கன்களை காணலாம். 1. வெள்ளை அரிவாள் மூக்கன், 2. பழுப்பு நிற அரிவாள் மூக்கன், 3. கருப்பு அரிவாள் மூக்கன். இவை தவிர கொக்குகள், நாரைகள், ஊசிவால் வாத்து, நீர்க்கோழி, புள்ளி மூக்கு வாத்து போன்ற எண்ணற்ற பறவைகளை வேடந்தாங்கலில் காணலாம். மீன்கொத்தி, வால் காக்கை, சின்னான், புள்ளி ஆந்தை, கதிர்க்குருவி, மண்கொத்தி, குக்குறுவாள்கள், என வாழிட பறவைகளையும் காணலாம்,1960 களில் உள்ளான்கள், ஆற்று ஆலாக்கள், பருந்து வகைகள் காணப்பட்டதாகவும், கூழைகடாக்கள் ஒரு சிலவற்றையே கண்டதாக சூழலியலாளகும் ஒளிப்படக் கலைஞருமான மா. கிருஷ்ணன் தனது பறவைகளும், வேடந்தாங்கலும் நூலில் பதிவு செய்துள்ளார்.

ஆனால், கடந்த பல ஆண்டுகளாக உள்ளான்கள், ஆலாக்கள் பருந்துகளை கண்டதாக எந்தப் பதிவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வேடந்தாங்கலில் கூழைக்கடாக்கள் அதிகளவில் இனப்பெருக்கம் செய்கின்றன. சில பறவைகளின் வரத்து நின்றுவிடுவதும், சில பறவைகளின் வரவு அதிகரிப்பதற்குண்டான ஆய்வுகள் அவசியம்.ஆண்டுதோறும் 1200 மி.மீ மழை பெய்யும் வேடந்தாங்கல் நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் பார்வையாளர்கள் வந்து செல்ல ஏற்ற நாட்களாகும். தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழகத்தில் பறவைகள் சரணாலயங்கள் தவிர. ஆயிரக்கணக்கான குளங்கள், ஏரிகள், நீர்நிலைகள் காணப்படுகின்றன. அவையாவற்றிலும் நீர்ப்பறவைகளும், கொக்குகள், நாரைகள் என பறவை இனங்கள் அதிகளவில் வாழ்கின்றன. நமது வாழ்வாதரத்திற்கு நீர் எவ்வாறு அவசியமோ? அதுபோல பறவைகளின் வாழ்விற்கும் நீர்நிலைகள் அவசியம். உயிரினங்களின் அச்சாணியாக விளங்கும் நீர்நிலைகளை பாதுகாப்போம்! பறவைகளை காப்போம்!!

நன்றி: இளைஞர் முழக்கம்

Wednesday, March 30, 2011

புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..

இந்தியாவில் கடந்த 2006 ஆம் ஆண்டு 1411 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது 1706 ஆக, உயர்ந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள புலிகள் காப்பகங்களிலும், தேசிய வன விலங்கு சரணாலயங்களிலும் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையின் படி புலிகளின் எண்ணிக்கை பதினைந்து சதம் உயர்ந்துள்ளது.

இதே அறிக்கை தெரிவிக்கும் மற்றொரு தகவல், தற்போதைய கணக்கெடுப்பில் 612 புலிகள் இரண்டு வயதுக்கு உட்பட்டவை. எனவே இந்த புலிகள் 2006 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் இருந்திருக்காது. எனவே புதிதாக பிறந்த இந்த 612 புலிகளை 1411 உடன் கூட்டினால் 2023 புலிகள் இருக்க வேண்டும். ஒருவேளை சில புலிகள் இயற்கையாகவே இறந்திருக்கலாம். புலியின் வயது 12 முதல் 15 க்குள் இருக்கும். எனவே கடந்த நான்கு ஆண்டுகளில் இறந்து போன எல்லா புலிகளும் 317 (2023 - 1706 ) புலிகளும் வயது முதிர்ந்து இறந்திருக்குமா என்பது சந்தகேமே. மத்திய அமைச்சர் புலிகள் வேட்டையாடப்பட்டதை ஒப்புக்கொள்கிறார். எனவே புலிகளை பாதுகாப்புக்காக மேலும் தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.

இந்த முறை புலிகள் கணக்கெடுப்புக்காக முற்றிலும் அறிவியல் முறைகள் பின்பற்றப்படவில்லை. Camera Trapping என்ற முறை கொண்டு புலிகள் ஒவ்வொன்றையும் தனித் தனியாக அடையாளம் காண முடியும். எனவே துல்லியமான கணக்கெடுப்புக்கு இந்த முறை பின்பற்றப் பட வேண்டும். பெரும்பாலான மாநிலங்களில் இன்னமும் காலடி தடத்தை வைத்தே எண்ணிக்கை கணக்கெடுக்கப்படுவதாக தெரிகிறது. மேலும், புலிகளின் கழிவுகளை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தி, புலிகளை தனித் தனியாக அடையாளம் காண முடியும்.

புலிகள் தங்களுக்கென்று ஒரு தனி எல்லையை நிர்ணயிப்ப்பதால் அவற்றின் இடப்பெயர்ச்சிக்கு இடையூறு இல்லாத வண்ணம் காடுகளை இணைக்க வேண்டும். இரவு நேர போக்குவரத்தை வனப் பகுதிகளில் முற்றிலும் தடை செய்ய வேண்டும்.

மத்திய அரசின் சமீப கால முயற்சிகள் பாராட்டுக்குரியதே. ஆனால், இன்னும் தீவிரமான நடவடிக்கைகளை நிச்சயம் மேற்கொண்டாக வேண்டும்.

புலிகள் வேட்டையாடப்படும் தகவல் தெரிந்தாலோ, அல்லது புலியின் தோலையோ, உறுப்புகளையோ யாராவது வியாபாரம் செய்தாலோ, கீழ்காணும் இணையதள முகவரியில் புகார் செய்யலாம்.

Report a crime:http://projecttiger.nic.in/reportacrime.asp

Friday, February 18, 2011

மனங்கவரும் பறவைகள்

உயிர் வாழத் தகுதியான ஒரே இடமான பூமியில் தாவரங்கள், செடி, கொடிகள், புழு, பூக்கள், பறவைகள், விலங்கினங்கள், இவற்றுடன் மனிதர்களும் வாழ்கிறார்கள். இந்த உறவு பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.

கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக மனித இனத்தின் பேராசைக்கு பலியாகி காடுகளும், காட்டுயிர்களும் பெரும் அழிவுக்குள்ளாகி வருகின்றன. பலவகை விலங்கினங்கள் பறவைகள் அழிந்தே விட்டன. சில எடுத்துக்காட்டுகள். நம் நாட்டில் பரவலாக இருந்த சிவிங்கி புலி கானமயில், மொரிஷியஸ் தீவை கண்டுபிடித்த போர்ச்சுகீசியர்களால் அழிக்கப்பட்ட டோடோ என்ற பறவை இனம் பலவித தாவர வகைகள் என நீள்கிறது பட்டியல்.

அழிவின் விளிம்பில் புலி, யானை, சிங்கம், கிளிகள், சிருவாசிகள், ஆந்தைகள், பிணம் தின்னிக் கழுகுகள் என பலப்பல காட்டுயிர்கள் உள்ளன. காடுகளையும், காட்டுயிர்களையும் மறந்த சமூகம் அடுத்த கட்டத்திற்கு முன்னேற வாய்ப்புகள் மிகமிக குறைவு. இன்று அந்த ஒரு மோசமான சூழலில் தமிழ் சமூகம் சிக்கித் தவிக்கிறது.

தமிழின் சங்க இலக்கியப் பாடல்கள் பலவற்றில் தாவரங்களையும், பறவைகளையும், விலங்குகளையும் பற்றிய கூர்ந்தறிந்த பல பாடல்கள் வருகின்றன. பழந்தமிழர்கள் இயற்கையுடனும், காட்டுயிர்களுடனும் நெருக்கமான உறவைப் பேணிக் காத்தனர்.

காட்டுயிரில் பேருயிரான யானை மா, கரி, சிந்தூரம், அத்தி, அறுகு, ஆம்பல், ஆனை, இபம், இம்மடி, களிறு, கைம்மா என சுமார் 50 புனைப் பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது கவனத்திற்குரியது.

தற்காலப் பள்ளி மாணவர்கள் யானையே இல்லாத ஒரு நாட்டின் மொழியில் Elephantஐ பற்றி படித்துக் கொண்டிருப்பது வெட்கப்படக்கூடியது. இது போலவே பறவைகள், விலங்குகள், தாவரங்களுடனான நெருக்கத்தை மறந்ததுடன் அதற்குரிய அழகான தமிழ்ப் பெயர்களையும் மறந்து ஆங்கில மோகத்தில் வாழ்கின்றனர். அழகிய அருவி என்ற சொல் மறந்து நீர்வீழ்ச்சி மாறியது போல.

இயற்கை சூழலமைப்பில் பறவைகள், விலங்குகள், பூச்சிகள், செடி, கொடிகள், தாவரங்கள் என அனைத்தும் இணைந்துள்ளன. இதில் பறவைகள் பல அளவுகளில் நிறங்களில் காணப்படுகின்றன. இதன் காரணமாகவே பெரும்பான்மை மக்களால் (நம் நாட்டில் அல்ல) வெகுவாக இரசிக்கப்படுகின்றன. இனிமையான குரலொலிக்காகவும் இரசிக்கப்படுகின்றன.

விடியற்காலையில் இனிய குரலொலியால் எழுப்பும் பல வித சிரிப்பான்கள் பனைமரங்களில் காற்று தாலாட்டும், பல அறைகளைக் கொண்ட கூடு கட்டும் தூக்கணாங் குருவிகள் மிக நேர்த்தியான தையல் கலையுடன் கூட்டை வடிவமைக்கும் தையல் சிட்டு, மரங்களுக்கு வைத்தியம் பார்க்கும் மரங்கொத்திகள் என பலவிதங்களில் பறவைகள் நம்மை சுற்றி வாழ்கின்றன அவற்றை காண நமக்கேது நேரம்.

பறவைகள் யாவும், புழு, பூச்சிகளை கட்டுப்படுத்தி சுற்றுச் சூழலுக்கு பெரும் பங்களிப்பை செலுத்துகின்றன. பலவித தாவரங்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.

இந்திய அளவில் 1330 வகைப் பறவைகளும், தமிழகத்தில் 350 வகைப் பறவைகள் 60 குடும்பங்களில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. ஒவ்வொரு பறவையும் தனக்கென்று ஒரு வாழ்வு எல்லையை வைத்துக் கொள்கிறது. அதற்குள் மட்டுமே உணவு தேடல், இணை தேடல், கூடுகட்டல், இனப்பெருக்கம் செய்தல் போன்ற அனைத்தையும் செய்கின்றன. இதுவே “வாழ்வு எல்லை’’ எனப்படுகிறது.

தமிழகத்தின் மாநிலப் பறவையான மரகதப் புறா மரங்களடர்ந்த காடுகளில், தரையில் இரை தேட காணலாம். இத்துடன் சேர்த்து தமிழகத்தில் 13 வகையான புறாக்கள் காணப்படுகின்றன. கிளிகளைப் போலிருக்கும் பச்சை நிறப் புறாக்களில் 5 இனங்களும் இதில் அடங்கும்.

மரங்களின் இயற்கை வைத்தியர் எனப்படும் மரங்கொத்திகளின் 13 வகைகள் நம் தமிழகத்தில் காணப்படுகிறது. சிறியது சிறு மரங்கொத்தி பெரியதான காக்கா மரங்கொத்தியும் இவற்றில் அடங்கும்.

பழந்தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்படும் அன்றில் எனப்படும் ஒரு வகையான கொக்கு காணப்படுகிறது. மூக்கு வளைந்து அரிவாள் போன்று காணப்படுவதால் ‘அரிவாள் மூக்கன்’ ஆயிற்று 3 வகையான அரிவாள் மூக்கன்களை நாம் காணலாம்.

வெள்ளை அரிவான் மூக்கன் சாம்பல நிற அரிவாள்மூக்கன் கருப்பு அரிவாள் மூக்கன் போன்ற மூன்று வகையான பறவைகளையும் சென்னையை அடுத்துள்ள வேடந்தாங்கல், கரிக்கில பறவைகள் சரணாலயத்தில் காணலாம்.

நீர்நிலை காணப்படும் பகுதிகளில் சிறிது நேரம் நின்று கவனித்தால் வெள்ளை நிற கொக்குகளை காணலாம். இந்த வெள்ளை நிற கொக்குகளில் 4 வகைகள் இங்கு காணப்படுகின்றன. சின்ன கொக்கு நடுத்தர கொக்கு, பெரிய கொக்கு, உண்ணிக்கொக்கு போன்றவையாகும். இதில் முதல் மூன்றை நீர்நிலைகள், குளங்கள், ஏரிக்கரை ஒட்டிய பகுதிகளில் காணலாம். கடைசியாக உள்ள உண்ணிக் கொக்கை கால்நடைகள் மேயும் இடங்களில், கால்நடைகளை பின்தொடர்ந்து அதன் காலடித்தடத்தில் இருந்து வெளிக் கிளம்பும் பூச்சிகளை பிடித்து தின்னக் காணலாம்.

ஆறு வகையான நாரைகளை நம் தமிழகத்தில் காணலாம். நத்தை குத்தி நாரை, வர்ண நாரை, கட்பளி நாரை, கரு நாரை, பூ நாரை, செங்கால் நாரை போன்றவைகளை நாம் காணமுடியும்.

இதில் முதல் 4 வகைகளை வயற்காடுகள், ஏரிக்கரையை ஒட்டிய பகுதிகளில் காணலாம். நீண்டு வளைந்த கழுத்தையும், நீண்ட கால்க¬ளையும், ரோஜா வண்ணத்தை (சிகப்பு) ஒத்த சிறகுகளையும் கொண்ட அழகிய பூ நாரைகள் தமிழகத்தின் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு நவம்பர், டிசம்பர் மாதங்களில் 50 ஆயிரத்திற்கும் மேல் வருகின்றன. சென்னையை ஒட்டிய பழவேற்காடு பறவைகள் சரணாலயத்திற்கும் ஆயிரக்கணக்கில் வருவது குறிப்பிடத்தக்கது. இவற்றில் செங்கால் நாரை ஐரோப்பாவிலிருந்து குளிர்காலத்தில் வலசை வருபவையாகும்.

நமது ஏரிக்கரை, குளங்களில் 6 வகையான மீன் கொத்திகளை காணலாம். 1. சிரால் மீன் கொத்தி, 2. சிறு மீன் கொத்தி, 3. பெரிய அலகு மீன் கொத்தி, 4. வெண்மார்பு மீன் கொத்தி, 5. கருந்தலை மீன் கொத்தி, 6. கருப்பு வெள்ளை மீன் கொத்தி போன்றவையாகும். ஏரிக்கரை குளங்கள், நீர்நிலைகள் உள்ள பகுதிகளில் மரக்கிளைகளில் மீனுக்காக நீண்ட நேரம் காத்திருப்பதை காணமுடியும்.

தமிழகத்தில் இருவகையான ஆள்காட்டிகளை காணலாம். அரளிப்பூ ஆள் காட்டி, ஆவாரம்பூ ஆள்காட்டி போன்ற இரு வகையாகும். நீர்வளம் மிக்க பகுதிகளில் காணமுடியும். எதிரி தம்மை நெருங்குவது கண்டால் டிட்யு டூயுட் என கத்திக் கொண்டே தம்மை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் பண்புள்ளதால் ‘ஆள்காட்டி’ என்ற பெயர் வந்தது.

இருவாசி அல்லது இருவாயன் என்றழைக்கப்படும் நமது அடர்காடுகளில் 4 வகையான அழகு சேர்க்கின்றன. பெரிய வான்கோழி அளவுக்கு இருவாசிகள் ஒரு மரவாழ் பறவையாகும். ஒற்றை இருவாயன், சாம்பல் இருவாயன், கருப்பு வெள்ளை இருவாயன், பெரிய கருப்பு வெள்ளை இருவாயன் என்ற 4 வகைகள் நமது காடுகளுக்கு வளம் சேர்க்கின்றன.

சிறுகாய்கள், பழங்கள், காட்டு பல்லிகள், காட்டு பறவைகளின் குஞ்சுகள் போன்றவற்றை உணவாகக் கொள்கின்றன. சில வகை மரங்கள் பெருக இருவாசிகளே முக்கிய காரணமாகின்றன. இவைகள் உண்ட பழங்களின் விதைகள் வீரிய மிக்க விதைகளாக செல்லுமிடமெல்லாம் பரவ காடுகளின் வளர்ச்சிக்கு பங்காற்றுகின்றன. இருவாசிகளின் அழிவு காடுகளின் அழிவுக்கு முன்னறிவிப்பாகும்.

மேற்குறிப்பிட்ட பறவைகளைத் தவிர பலவித பறவைகளும் நம்முடன் வாழ்கின்றன. நகரங்களை சுத்தப்படுத்தும் காக்கை, சிட்டுக்குருவிகள், நாகணவாய் (மைனா, சமஸ்கிருதப் பெயர்) போன்ற பறவைகளோடு பலவித கிளிகள், கதிர்குருவிகள், தேன்சிட்டுகள், பஞ்சுருட்டான்கள், குக்குறுவான்கள், சிலம்பன்கள், கரிச்சான் குருவிகள் என பலப்பல பறவை இனங்கள் நம்மை சுற்றி வாழ்கின்றன. கண் தெரிந்தும் குருடர்களாக இரசிப்புத்தன்மை இருந்தும் இரசிக்காத மூடர்களாக மூட நம்பிக்கைகளின் மொத்த உருவமாக நாம் தான் இருக்கிறோம்.

காடுகளின் துப்புரவாளனாக உள்ள பிணம் தின்னிக் கழுகுகள் விவசாயத்திற்கு நண்பனாக உள்ள இரவாடிகளான பலவித ஆந்தைகள், குயில்கள், காதாரிகள், பலவித ஈப்பிடிப்பான்கள் மலர் கொத்திகள் என அனைத்தும் மனதை கவரும் ஆழகுடன் பல வண்ணங்களில் நம்முடன் இணைந்தே வாழ்கின்றன.

பறவைகள் பற்றிய அறிவை இழந்த தமிழர்கள், இயற்கை, காட்டுயிர்கள் மேல் இருக்கும் மற்ற அனைத்து வகை மூட நம்பிக்கைகளை அறவே ஒழித்து மேற்குலக அறிவியல் கண்ணோட்டத்தில் பகுத்தறிவு சிந்தனையோடு செயல்படுவது ஒன்றே தமிழர்கள் தலைநிமிர இழந்த அறிவுச் செல்வத்தை மீட்க வீரத்தை மீட்க தன்மானத்தை மீட்க ஒரே வழி.

பறவைகளோடு பிணைப்பை ஏற்படுத்துவோம். சூழல் மகத்துவம் காப்போம்..

நன்றி: இளைஞர் முழக்கம்

Monday, April 26, 2010

வீட்டிற்குள்ளே சூழல் பாதுகாப்பு

சுற்றுப்புற சூழலில் மாசுபாடு என்றதுமே நாம் பொதுவாக வெளி உலகத்தை மட்டுமே கருத்தில் கொண்டு புரிந்து கொள்கிறோம். அதாவது நமது வீட்டிற்கு வெளியே உள்ள இடம், நமது தெரு, நமது ஊர் என்று. ஆனால் சுற்றுச்சூழல் என்பது நாம் வசிக்கின்ற வீட்டுக்குள்ளேயும் இருக்கிறது. அதில் மாசுக்குறைவு ஏற்பட்டால் விபரீத விளைவுகள் உண்டாகும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த உணர்வு ஏற்படாத காரணத்தினால் வீட்டுக்குள்ளே இருக்கின்ற காற்று மாசுபட்டு அதனால் பலவிதமான நோய்த் தொல்லைகள் ஏற்படுகின்றன.

வீட்டுக்குள்ளே இருக்கின்ற காற்று மாசடைந்தால் கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம், உடலில் எரிச்சல், மயக்கம், வாந்தி, கண்பஞ்சடைதல் போன்றவை ஏற்படும். கட்டை, கரி, மண்ணெண்ணெய் ஆகியவற்றை சமையலுக்குப் பயன்படுத்துகின்ற கிராமத்து மக்கள் காற்று மாசுபாடு குறித்து அறிந்து கொள்ளவேண்டும். புகையும், கரியும் வெளியே செல்ல போதுமான ஜன்னல் வசதிகள் வீட்டில் இருக்க வேண்டும். இல்லை என்றால் அடுப்பில் இருந்து வெளிப்படும் புகை மூச்சடைப்பு, இருமல், கண் எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். நாளடைவில் ஆஸ்துமா, நுரையீரல் நோய்கள் ஆகியவை தோன்றும். எனவே இந்த விஷயத்தை அலட்சியப்படுத்தாமல், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்வது அவசியம்.

நாம் வீட்டிற்குள்ளே இருக்கும் போது மிகவும் சுகமாக இருக்கிறோம், பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற உணர்வில் சிறிய மாறுதல்களை கவனிக்காமல் இருப்பது வழக்கம். ஆனால் முன்னெச்சரிக்கையோடு சில மாறுதல்களை கவனிக்க நாம் பழகிக் கொள்ள வேண்டும். இதன் மூலமாக பெரிய ஆபத்துக்களை தடுக்க முடியும். உதாரணமாக வீட்டிற்குள்ளே நாம் சுவாசிக்கும் காற்று அசுத்தம் அடைந்து உடலுக்கு தீங்கு விளைவிப்பதை உடனுக்குடன் அறிந்து கொள்ள சில எச்சரிக்கைகள் தேவை.

அவையாவன

1. வழக்கத்திற்கு மாறான, குறிப்பிடத்தக்க நாற்றம்
2. அழுகிய வாடை, அல்லது காற்றின் அடர்த்தி
3. காற்றின் சுற்றோட்டக்குறைவு
4. பழுதுபட்ட குளிர்பதனப் பெட்டி, குளிர்சாதன இயந்திரங்களின் இயக்கம்.
5. புகைபோக்கியில் ஓட்டை பெட்ரோல், டீசலை எரிக்கும் போது போதுமான அளவிற்கு காற்றோட்டம் இருந்து புகை வெளியே செல்லுகிறதா என்பதை கவனிப்பது.
6. வீட்டிற்குள்ளே இருக்கின்ற காற்றில் அதிக அளவு ஈரப்பதம்
7. வெளிச்சமோ அல்லது காற்றோ வராமல் கட்டப்பட்ட வீடுகள்
8. வீட்டில் எங்காவது பூஞ்சைக்காளான் மற்றும் ஸ்போர்கள் இருப்பது
9. புதுப்பிக்கப்பட்ட வீட்டிற்கோ அல்லது புதிய வீட்டிற்கோ சென்ற உடன் உடலில் ஏற்படும் மாறுதல்கள்.
10. வீட்டு உபயோகப் பொருட்களுக்கு புதிய வண்ணம் பூசிய உடன் அடிக்கடி ஏற்படும் தும்மல், கண் எரிச்சல்.
11. வீட்டிற்குள்ளே இருப்பதை விட வெளியே இருக்கும் போது உடல் ஆரோக்கியமாக இருத்தல்

இவற்றை சரியாக கவனிப்பதன் மூலமாக வீட்டிற்குள்ளே உண்டாகும் காற்றுமாசை கட்டுப்படுத்தவும், நமக்கு நோய் வராமல் தடுக்கவும் முடியும். நம்மைச் சுற்றியுள்ள இயற்கைச்சூழல் நமக்கு பலவிதமான நன்மைகளைச் செய்து வருகிறது. மரங்களும், செடிகொடிகளும் நாம் வெளிவிடும் ஏராளமான கரியமில வாயுவை கிரகித்துக்கொண்டு, பிராணவாயுவை வெளியிடுகின்றன. இதன் காரணமாக நம்மைச் சுற்றி உள்ள காற்று மண்டலத்தில் கரியமிலவாயுவின் அளவு பெருகுவது தடைசெய்யப்படுகிறது. சராசரி வெப்ப நிலை உயர்வு, சூழல் வெப்பநிலை உயர்வு போன்ற விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுவது தாவரங்களின் சேவையினால் தடுத்து நிறுத்தப்படுகிறது.

சூரியனில் இருந்து வெளிப்படும் புறஊதாக் கதிர்கள் நமக்கு புற்றுநோயை ஏற்படுத்தும். இவ்வாறு நடக்காமல் காற்றுவெளியில் உள்ள ஓசோன் படலம் ஒரு கவசமாக இருந்து, புறஊதாக் கதிர்களை வடிகட்டி பூமிக்கு அனுப்பி வைக்கிறது. மண்புழுக்கள், சாணவண்டுகள், இன்னும் பெயர் தெரியாத நூற்றுக் கணக்கான உயிரினங்கள் மண்ணில் உள்ள கழிவுப்பொருட்களை உரமாக மாற்றுகின்றன. இதன் காரணமாக விவசாய நிலத்தின் சத்துக்கள் அதிகமாகின்றன. உற்பத்தி பெருகுகிறது.

பறவைகள், விலங்குகள், வண்டுகள், பூச்சிகள் ஆகிய உயிரினங்களைக் கொண்ட ஆரோக்கியமான சூழல், மனித வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். தாவரங்களில் மகரந்த சேர்க்கை ஏற்பட வண்டுகளும், பூச்சிகளும் உதவுகின்றன. பயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளி, போன்ற பூச்சிகளை அழிக்க பறவைகள் பயன்படுகின்றன.

எரிபொருட்கள், கடல் உணவு, காட்டு விலங்குகள், கயிறுகள், ஆகியவற்றை காடுகள் மற்றும் கடல்கள் நமக்கு அளிக்கின்றன. இவை மட்டும் அல்லாமல், இயற்கையாக ஏற்படும் கழிவுகள், மனிதனால் ஏற்படும் குப்பைகள், கழிவுகள் ஆகியவற்றை அழிப்பதிலும் இயற்கை பெரும்பங்கு ஆற்றுகிறது. இவைகளை மனதில் கொண்டு நாம் சுற்றுச்சூழல் மாசுபடுவதை எல்லாவகையிலும் முழுமுயற்சி செய்து தடுப்பது அவசியம்.