இயந்திரமயமான இந்த உலகில் நொடிக்கு நொடி மணிக்கு மணி, நாளுக்கு நாள் புவி வெப்பமடைந்து வருகிறது. ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்துள்ளது. இதனால் அண்டார்டிகா உருகும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது என்று ஆராய்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இவ்வாறு வெப்பமடைவதால் உலகின் பல்வேறு பகுதிகள் பாதிப்படைந்துள்ளது. இதற்கு உதாரணமாக அன்மையில் ஹைட்டி தீவிலும், சிலி நாட்டிலும் பூமியதிர்வு, சுனாமியால் பல பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய வானிலை ஆய்வுத்துறை 2009 ஆம் ஆண்டை கடந்த 110 ஆண்டுகளில் மிகவும் வெப்பமான ஆண்டாக அறிவித்தது. கடந்த 2001 ஆம் ஆண்டிற்குப் பிறகு வருட வெப்பநிலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இவ்வாறு வெப்பநிலை உயர்ந்து கொண்டே சென்றால் இன்னும் 50 ஆண்டுகளில் கடல்நீர் மட்டம் உயர்ந்து உலகில் 200 கோடி பேர் வெள்ளத்தால் சூழப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளனர். இவ்வாறு வெள்ளத்தால் சூழப்பட்டால் கடற்கரை நகரங்கள் அனைத்தும் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படும்.
வளரும் நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைவது இந்த பருவநிலை மாற்றம்தான். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கடந்த 100 ஆண்டுகளில் பேரிடர்களினால் மனித உயிர் இழப்புகள் எத்தகையதாய் இருக்கிறது என்பதை பெல்ஜி புருசேல்ஸ் கத்தோலிக்க பல்கலைக்கழக சர்வதேச பேரிடர் தகவல் தொகுப்பு மையம் ஒரு புள்ளிவிபரத்தை வெளியிட்டிருக்கிறது. நமது நாட்டில் ஏற்பட்ட வறட்சியால் மட்டும் சுமார் 42,00,000 பேரும் கொள்ளை நோய் பரவல் மூலம் சுமார் 45,00,000 பேரும், சுறாவளி புயல்களால் 1,40000 பேரும், பேரலைகளின் தாக்கத்தால் 17,000 பேரும் வெள்ளப் பெருக்கால் 52,000 பேரும் உயிரிழந்துள்ளனர் என்று வெளியிட்டிருக்கிறது.
உலக வெப்பமயமாதலின் தாக்கத்தை உணர இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்தியாவில் அதன் தாக்கத்தை உணரமுடிகிறது. உதாரணமாக கொல்கத்தாவை ஒட்டியுள்ள வங்கக் கடலில் 10 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட ஒரு தீவு கடலில் மூழ்கியிருக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தை ஒட்டிய கடற்பகுதியில் இச்சாமதி ஆறும், இராய்மங்கல் ஆறும் கலக்குமிடத்தில் மூர் என்ற தீவு இருந்தது. இது 3 கி.மீ. நீளமும் 3.5 கி.மீ. அகலமும் கொண்டது. இந்த தீவு யாருக்கு சொந்தம் என்று 1980ல் இந்தியாவங்க தேசம் இடையே பிரச்சனை எழுந்து பின்பு இந்தியாவிற்கே சொந்தம் என்று கூறப்பட்ட அந்தத் தீவு, பருவநிலை மாற்றத்தால் கடல்நீர்மட்டம் உயந்து மூழ்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தீவைப் பற்றி விளக்கிய ஜாதவ்பூர் பல்கலைக்கழத்தின் கடல் ஆராய்ச்சிப் பிரிவு இயக்குநர் "சுகதோ ஹஸரா" மூர் தீவு இருந்ததற்கான அடையாளங்கள் இப்போது இல்லை என்றும் 2009 ஆம் அண்டு எடுக்கப்பட்ட செயற்கைக் கோள் படங்கள் மூலம் மூர் தீவு கடலில் முழ்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஹிக்ஸி முகத்துவாரத்தை ஒட்டியுள்ள கோமார தீவு, ஐம்பு தீவு ஆகியவை படிப்படியாக மூழ்கி வருவதாக கடல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இவ்வாறு உலகில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க கூட்டம் டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் நகரில் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 7 முதல் 18ந் தேதி வரை நடைபெற்றது. இதில் 2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாலித்தீவில் நடைபெற்ற பேச்சுகளை அடிப்படையாகவும், கியோட்டர் உடன்படிக்கையின் படி 37 தொழில் மய நாடுகள் 2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு கடைபிடிக்க வேண்டிய பசுமை இல்ல வாயு வெளியேற்ற குறைப்பு நடவடிக்கைகளுக்கான உறுதி மொழியைப் பெறுவது பற்றியும் விவாதிக்கப்பட்டது.
உலகில் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்படும் கார்பன்டை ஆக்ஸைடு அளவில் இந்தியாவின் பங்களிப்பு 4 சதவீதம் தான் என்றாலும் தட்பவெப்பநிலையை பாதுகாக்க தன் பங்களிப்பைச் செய்ய இந்தியா உறுதி பூண்டுள்ளது. இவ்வாறு அனைத்து நாடுகளும் ஒன்றினைந்து பசுமை இல்ல வாயுக்களின் அளவை கட்டுப்படுத்தவேண்டும். வரும் 2020 ஆண்டிற்குள்ளாக குறைந்த அளவு 2 டிகிரி செல்சியஸ் அளவாவது வெப்பத்தை கட்டுப்படுத்தவில்லையென்றால் இந்த உலகம் பல்வேறு இயற்கை சீற்றங்களை எதிர்நோக்க வேண்டிருக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆகவே நமது பூமித் தாயை பாதுகாப்பது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். பசுமை இல்ல வாயுக்களை குறைப்போம். வளமான எதிர்காலத்தை பெறுவோம்.
நன்றி: திருமிகு அரசுமதி
No comments:
Post a Comment