Monday, December 5, 2011

பறவையியல் அறிஞர் சாலிம் அலி - வாழ்வும் பணியும்

இன்று நாம் பார்த்து மகிழ்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கும் காடு, மலைகள், ஏரிகள், பறவைகள், விலங்குள், பூச்சிகள் யாவும் சாலிம் அலி என்ற ஒற்றைச் சொல்லின் பின்னணியில் அடங்கியுள்ளது.

பத்தாவது வயதில் தனது தாய் மாமா பரிசாக கொடுத்த காற்று விசை துப்பாக்கி மூலம் இயற்கையுடனான தமது நேசத்தை தொடங்கிய சாலிம் அலி, இறக்கும் வரை, சற்றேறக் குறைய எண்பது ஆண்டுகள் பறவையியல் துறையில் கடுமையாக களமாற்றினார்.

சாலிம் அலி யார் என்று கேட்டால், பள்ளி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், பெரியவர்களுக்கும் இன்று தெரியாத நிலை. இதுதான் நமது சூழல் அறிவு. நமக்கான சூழல் பாடங்களும் பொத்தாம் பொதுவாகவே உள்ளது. சூழல் ஆர்வலர்களுக்கு மட்டுமே தெரிந்தவராக சாலிம் அலி உள்ளார் என்பது பள்ளிகளின் தோல்விகளில் ஒன்றாகும். கி.பி 1896ம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி மும்பையில் சாலிம் அலி பிறந்தார். ஐந்து சகோதரர்கள், நான்கு சகோதரிகளுக்கு கடைக்குட்டியாக பிறந்தார். பிறந்த சில வருடங்களில் தாய், தந்தை இருவரையும் இழந்த சாலிம் அலி, குடும்பத்தை அவருடைய மாமா அமரிருத்தீன் குழந்தைகள் அனைவரையும் கல்வி கற்பித்து வளர்த்தார்.

தனது பத்தாவது வயதில் வீட்டில் கூடு கட்டியிருந்த மஞ்சள் குருவியை சுட்டு, அது குறித்து விளக்கம் பெற பம்பாய் இயற்கை வரலாற்று கழகத்தை அணுகியதில் இருந்து அவருடைய இயற்கை வரலாறு தொடங்கியது எனலாம்.

பள்ளியில் சாதாரண மாணவனாகவே பள்ளிப் படிப்பை முடித்த சாலிம் அலி, உறவினர்களின் வற்புறுத்தலுக்காகவே மேற்படிப்பு படித்தார். ஆனால், மனம் முழுக்க இயற்கை மீதே இருந்தது. பழைய மியான்மரில் (பர்மா) தனது சகோதரர் நடத்தி வந்த தொழிலை நிர்வகிக்க பத்தாண்டுகளுக்கும் மேலாக இருந்த போதும் விடுமுறை நாட்களில் குதிரையை எடுத்துக் கொண்டு காடு, மலைகள் என சுற்றியலைவது தான் அவருக்கு பிடித்தமான பொழுது போக்காக இருந்தது.

மும்பை திரும்பிய பின் 1918 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தெஹ்பினாவை கரம் பிடித்தார் சாலிம் அலி. பறவைகள் பற்றிய தேடல், காடு, மலைகள் என சுற்றுவது என அனைத்திலும் தெஹ்பினா கணவரின் மனம் ஒத்து பங்கேற்றார்.

சாலிம் அலிக்கு பல நேரங்களில் வேலை கிடைக்காமல் சுற்றிக் கொண்டிருப்பதை பார்த்த உறவினர்கள் மிகவும் கேவலமாக பேசினர். தெஹ்பினா அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கணவரின் வேலைகளுக்கு உதவிகரமாக இருந்தார்.

1929ஆம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள பெர்லின் பல்கலைக் கழகத்தில் பறவையியல் குறித்து முறையானதொரு கல்வி கற்க கடும் பொருளாதார சிரமத்தில் புறப்பட்டுச் சென்றார். பேரா. இர்வின் ஸ்ட்ரிங்ஸ்மர் அவர்கள் வழிகாட்ட கல்வியுடன் அனுபவ அறிவை பக்கத்தில் அமைந்துள்ள தீவுகளில் வலசை வரும் பறவைகள் பற்றி சுற்றியலைந்து கற்றுத் தேர்ந்தார்.

1930ம் ஆண்டு இந்தியா திரும்பிய பிறகும் சரியான வேலை கிடைக்காமல் மிகவும் அவதியுற்றார். பறவைகளை பற்றி கணக்கெடுக்க ப.இ.வ.க சாலிம் அலியை கேட்க உடனடியாக ஒப்புக் கொண்டார். அதே சந்தர்ப்பத்தில் அதற்குரிய நிதியை டீசniவாடிடடிபல ளுரசஎநல என்ற தலைப்பின் கீழ் தர ஐதராபாத் சமஸ்தானம் சம்மதம் தெரிவித்தது.

5 மாதங்கள் கடுமையான காட்டுப் பாதை, ஏரி, குளம், மாட்டு வண்டி சவாரி, மலைகள், சதுப்பு நிலங்கள் என பல்வேறு பறவைகளின் வாழ்விடங்களில் நேரிடையாக பார்த்து குறிப்புகள் எழுதி, அதை ஆவணமாக்கினார். இந்த அரும் பணி அவருக்கு பெரும் புகழைத் தேடித் தந்தது.

1939ம் ஆண்டு ஜூலை மாதம் அவரது அன்பு மனைவி தெஹ்பினாஅறுவை சிகிச்சையில் எதிர்பாராத விதமாக இறக்க சாலிம் அலி மிகவும் சோர்வுற்றார். சிறிது கால இடைவெளியில் அவரது பணி மீண்டும் தொடங்கியது.

1941ம் ஆண்டு Book of Indian Birds என்ற சாலிம் அலியின் புகழ் பெற்ற முதல் நூல் வெளியானது. இந்நூல் இதுவரை 20 பதிப்புகளை கண்டுள்ளது. பாரம்பரிய மூடநம்பிக்கைகள், பத்தாம் பசலித் தனமான கருத்துக்கள் நிரம்பியுள்ள இந்திய சமூகத்தில் பறவையியல் துறையில் விஞ்ஞான பூர்வமான அணுகுமுறையை நடைமுறைப்படுத்தினார்.

குஜராத் மாநிலத்தில் கட்ச் பகுதியில் 50 லட்சம் பூ நாரைகள் ஒன்று கூடி, கஞ்முகப் பகுதியில் இனப்பெருக்கம் செய்வதை கண்ட சாலிம் அலி, ஆசியாவின் பெரிய பூ நாரைகள் நகரம் என குறிப்பிட்டார்.

1938 நவம்பரில் இந்திய பிரதிநிதி (வைஸ்ராய்) வின் லித்கோ பிரபு தமது நண்பர்களுடன் இணைந்து ஒரே நாளில் 4233 வாத்துக்களை சுட்டுக் கொன்றதை நேரில் பார்த்து வேதனையுற்ற சாலிம் அலி, ஆழமில்லாத அபூர்வமான ஏரியை காக்க போராடி வென்றார். அந்தப் பகுதியே இன்று உலகப் புகழ்பெற்ற பரத்பூர் பறவைகள் சரணாலயம் ஆகும். இது இராஜஸ்தானில் அமைந்துள்ளது.

இந்திய பறவைகளின் வலசை முறையை ஆராய வளையமிடுதலை பரத்பூரில் தான் சாலிம் அலி அறிமுகப்படுத்தினார். சைபீரியக் கொக்கு, சரகக் கொக்கு, பட்டை தலை வாத்து போன்ற பல பறவையினங்களுக்கு ஏற்ற உறைவிடமாக பரத்பூர் அமைந்துள்ளது.

சர்குஜா மன்னர் 1970ம் ஆண்டு வரை தமது பிரதேசங்களில் 1170 க்கும் மேற்பட்ட புலிகளை கொன்றிருக்கிறார். அங்கு சென்ற சாலிம் அலி இந்திய புலிகளின் நிலையை எண்ணி, அதனைக் காக்க அரசியல் தலைவர்களுக்கு தமது கருத்தாழமிக்க கடிதங்கள் மூலம் புரிய வைத்து அந்த பகுதியை காப்பாற்றினார். அந்தக் காடுகள் தான் இன்று கன்ஹா புலிகள் சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா வாக உலகப் புகழ்பெற்று விளங்குகிறது.

கேரள மாநிலத்தில் அமைந்துள்ள அமைதி பள்ளத்தாக்கு சாலிம் அலியின் கடின போராட்டத்தின் மூலம் காப்பாற்றப்பட்டு இன்று புகழ்பெற்று விளங்குகிறது.

சாலிம் அலி தனது நண்பரான தில்லானின் உதவியோடு இந்தியா, பாகிஸ்தானின் பறவைகள் கையேடு என்ற நூலை 10 தனித் தனி தொகுதியாக வெளியிட்டார். அனைத்து நூல்களும் உலகப் புகழ் பெற்றன.

சாலிம் அலியின் திறமைகளை அங்கீகரித்த இந்திய அரசு, நிலையானதொரு ஆய்வுக் கூடம் கட்டுவதற்கான ஒப்புதலை வழங்கி கட்டியது தான் இன்று அமைந்துள்ள ஹார்ன் பில் பவனாகும்.

சாலிம் அலியின் இந்தியா என்ற தலைப்பில் அவரது வாழ்வை 1983ம் ஆண்டு ஆவணப்படமாக்கி சிறப்பித்தது இந்திய அரசின் செய்தி, தகவல் தொடர்புத் துறை. ஒரு சிட்டுக் குருவியின் வீழ்ச்சி என்ற சுயசரிதையை நண்பர்கள் உதவியுடன் தமது கடைசி காலத்தில் சாலிம் அலி செய்து முடித்தார்.

தனது 70 வது வயதில், ஆரம்ப பாடம் கற்ற பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது அவரது உழைப்பிற்கான அங்கீகாரமாக கருதப்பட்டது.

முனைவர் சாலிம் அலியை பல்வேறு பரிசுகள் பதவிகள் தேடிச் சென்று புகழ் ஈட்டிக் கொண்டன. இந்திய அரசின் பத்மபூஷன் 1958, பத்ம விபூஷன் 1976 விருதுகளை தமது பறவையியல் சேவைக்காக பெற்றார்.

நோபல் பரிசுக்கு இணையான ஜே. பால்கெய்பு பன்னாட்டு பரிசை 1976ம் ஆண்டு காட்டுயிர் பாதுகாப்புக்காக பெற்றார். இந்திய அரசு நாடாளுமன்றத்தில் நியமன உறுப்பினர் பதவியை சாலிம் அலிக்கு வழங்கி கௌரவித்தது. இதுபோல் எண்ணற்ற விருதுகள் அவரை தேடிச் சென்றன. 1987 ம் ஆண்டு தாம் இறக்கும் வரை 10 க்கும் மேற்பட்ட நூல்களை இந்திய சமூகத்திற்கு அளித்துள்ளார்.

தமது வாழ்நாள் முழுவதும் இயற்கை, காட்டுயிர் பாதுகாப்பு என்று விளங்கிய சாலிம் அலி, தாம் அனுபவித்த எழிலார்ந்த இயற்கை, காடுகள், மலைகள், காட்டுயிர்கள் என அனைத்தையும் காப்பாற்றி நம் கையில் ஒப்படைத்துள்ளார்.

நன்றி: இளைஞர் முழக்கம்

No comments: