இந்திய நகரங்களில் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, காற்று மாசு கடுமையாகி வருகிறது. இதனால் மக்களுக்கு சுவாசப் பிரச்சனையும் தீவிரமடைந்துள்ளது.
இந்திய நகரங்களில் வாழும் நடுத்தர வர்க்கத்து மக்கள், தங்கள் வீடுகளில் இரு சக்கர மோட்டார் வாகனங்கள் இருக்க வேண்டுமென அதிக அளவில் வாங்கி வருவதால் வாகனப் புகையால் காற்றுப் பகுதி மாசடைந்து, மக்களுக்கு பெரும் தீங்கு விளைவிப்பதாக உள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிலும், சீனாவில் உள்ள நகரங்களிலும் கடல்போல, மோட்டார் வாகனங்கள் பெருகி உள்ளன. தீவிரமான மற்றும் நீண்ட கால சுவாசப் பிரச்சனைகள், நுரையீரல் புற்றுநோய் ஆகியவை காற்று மாசடைவதால் ஏற்படுகின்றன என ஐக்கிய நாடுகள் சபையின் இந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
எஸ்யுவி எனப்படும் இலகுரக வாகனங்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் போன்றவை அளவுக்கு அதிகமாக பெருகி, சாலைகளில் ஓடுவதால் மக்களின் ஆரோக்கியத்தில் விபரீத விளைவை ஏற்படுத்தியுள்ளது.
சுவாச நோய்கள் மற்றும் புற்றுநோய் காரணமாக 13 லட்சத்து 40 ஆயிரம் முன்கூட்டிய மரண நிகழ்வுகள் 2008ம் ஆண்டில் நிகழ்ந்துள்ளன. வாகனப் புகையால் காற்று மாசடைந்திருப்பதன் காரணமாகவே இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளன என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனா, இந்தியா மற்றும் இதர வளரும் நாடுகளில் உள்ள தொழில் நகரங்கள் பெருக்கத்தால் நுரையீரல் நோய்கள் ஏற்படுகின்றன. 2008ம் ஆண்டில் 10 லட்சத்து 90 ஆயிரம் முன்கூட்டிய மரணங்களை தவிர்த்திருக்க முடியும் என்று இந்த அமைப்பின் பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் நிர்வாக இயக்குநர் மரியா நெய்ர்ஸ் தெரிவித்தார்.
91 நாடுகளில் உள்ள ஆயிரம் நகரங்களில் காற்றின் தன்மைக்குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் மாசடைந்த காற்றால் ஏற்படும் அபாயகரமான நோய்கள் விவரம் பற்றி தெரியவந்தது. பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக சீனா மற்றும் இந்தியா நகரங்கள் உள்ளன. இந்த நாடுகளின் நகரங்களில் அதிகபட்ச தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று நெய்ர்ஸ் தெரிவித்தார். இந்த நாடுகளில் நீண்டகால சுவாசப் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. போர்க்கால அடிப்படையில் இந்த நாடுகளில் காற்றின் தூய்மையை சூழலை மேம்படுத்தத் தவறினால் இதயம் மற்றும் நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா மற்றும் தீவிர சுவாசத் தொற்றுகள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார். தொழில் நகரங்களில் தொழிற்சாலைப் புகை, வாகனப்புகைகள் கடுமையாக இந்திய நகரங்களின் காற்றை மாசுபடுத்தி வருகின்றன. 10 மைக்ரோ மீட்டர் அல்ல, அதற்கு சற்றுக் குறைவான மாசுத் துகள்கள் நுரையீரலில் கலந்து ரத்த ஓட்டத்தில் கலக்கும். இதன் காரணமாக இதய நோய் மற்றும் இதர நோய்கள் ஏற்படும் என்றும் நெய்ர்ஸ் எச்சரித்தார்.
உலக சுகாதார அமைப்பின் காற்று வரையறையை பல நகரங்கள் மீறியுள்ளன.கன அடி மீட்டருக்கு 300 மைக்ரோ கிராம் என்ற அளவில் இந்தியா, சீனா, தொழில் நகரங்களில் காற்று மாசுத் துகள்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கனமீட்டரில் 20 மைக்ரோ கிராம் அளவே காற்று மாசுத் துகள்கள் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியிருந்தது.
1 comment:
பகிர்வுக்கு நன்றி
Post a Comment