Wednesday, July 27, 2011

பார்வையற்றவர்களுக்கு உதவ மின்னணுக் கண்ணாடிகள்

பார்வையற்றோருக்கு உதவ மின்னணுக் கண்ணாடிகளைத் தயார் செய்ய விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். சிறப்புத் தன்மை வாய்ந்த இக்கண்ணாடிகளை இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். எடை அதிகமின்றி லேசாக இருக்கும் இக்கண்ணாடிகளை அணிந்து கொண்டால், பார் வையற்றவர்கள் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் கூட பிறர் உதவியின்றி நடந்து செல்ல முடியும். அவர்கள் பஸ் நம்பர்களைக் கூடப் `பார்க்க’ முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். வயதின் காரணமாக பார்வைக் குறைபாடு ஏற்படும் முதியவர்களுக்கு இந்தக் கண்ணாடிகள் வரப்பிரசாதமாக அமைய இருக்கின்றன.

பார்ப்பதற்கு சாதாரணக் கண் ணாடிகள் போலவே இவையும் இருக்கும். ஒளி உமிழும் டயோடுகளும் குண்டூசி முனையளவே இருக்கும் காமெராக்களும் மின்னணுக் கண்ணாடிகளில் பொருத்தப்படும். எதிரே உள்ள பொருட்களைப் படம் பிடிக்கும் காமெராக்கள், பிம்பங்களை செல்பேசியளவுள்ள கணினிக்கு அனுப்பி வைக்கும். கணினியை பார்வையற்றவர்கள் சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம். கிடைக்கும் தகவலைப் பிரித்து புள்ளிகள் வடிவத்திற்கு கணினி மாற்றிவிடும். அந்த வடிவத்திற்கேற்றபடி ஒளி உமிழும் டயோடுகள் ஒரு பிம்பத்தை உருவாக்கி பார்வையற்றவருக்கு எதிரில் உள்ள பொருளைப் பற்றிய தகவலைத் தெரிவித்துவிடும்.

2014-ல் விற்பனைக்கு வர இருக்கும் இக்கண்ணாடிகள் ஆயிரக்கணக்கான பார்வையற்றோருக்கு கண் இல்லாத குறையைப் போக்க இருக்கின்றன. கண்ணாடியின் விலை சாதாரண மக்கள் வாங்கி அணியும் அளவுக்கு மலிவானதாக இருக்க வேண்டியது அவசியம். இந்த அம்சத்தில் அரசும், அரசு சாரா அமைப்புகளும் பெருமளவுக்கு உதவ முடியும்.

(தகவல் : 2011 ஜூலை 7 தேதியிட்ட தி இந்து -சயன்ஸ் அண்ட் டெக்னாலஜி பக்கம்)

இந்த நல்ல செய்தியை உங்களுக்குத் தெரிந்த பார்வையற்றோருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

No comments: