சென்னைக்கு அடுத்தபடியாக அதிக தொழில் முதலீடுகள் செய்யப்படும் மாவட்டமாக தூத்துக்குடி உள்ளது. ஸ்பிக் தூத்துக்குடி அனல்மின் நிலையம், தூத்துக்குடி அல்கலி கெமிக்கல்ஸ், கனநீர் தொழிற்சாலை, தாரங்க தாரா கெமிக்கல்ஸ், கில்பர்ன் கெமிக்கல்ஸ், ஸ்டெர்லைட் மற்றும் ஸ்பின்னிங் மில் உள் ளிட்ட உற்பத்தி தொழில்கள் ஏற்கெனவே இயங்கி வருகின்றன. உப்பு மற்றும் தீப்பெட்டி ஆகிய பாரம்பரிய தொழில்கள் இம்மாவட்டத்தின் சிறப்பம்சம். துறைமுகம், விமான நிலையம், ரயில் இணைப்பு, சாலைப்போக்குவரத்து உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் பலமாக உள்ள மாவட்டம். கனிமவளம், நீராதாரம், மனிதவளம், நிலம் ஆகியவை தொழில் முதலீட்டுக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தி யிருக்கிறது; வேலைவாய்ப்பையும் அதிகரித்திருக்கிறது.
மேற்கண்ட காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக பல தொழிற்சாலைகளை அமைப்பதற்கான முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் பிரதானமாக அனல்மின் நிலையங்கள் உள்ளன. கடந்த காலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதி அனல் மின்சார மாக இருந்தது. அனல்மின்சாரம் மூலம் கிடைத்த 2970 மெகாவாட்டில் 1050 மெகாவாட் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கிவரும், கட்டுமான நிலையிலிருக்கும் அனுமதி பெற்றிருக்கும் அனல்மின்நிலையங்கள் பற்றிய விவரம் கீழே உள்ள பட்டியலில் உள்ளது.
இவற்றில் பிஎச்இஎல் (உடன்குடி) - 1600, இந்த் பாரத் (மணப்பாடு) - 1800, தவிர இதர அனைத்து மின் நிலையங்களும் தூத்துக்குடி நகரின் மையப்பகுதியிலிருந்து அதிகபட்சம் 20 கி.மீக்குள் அமைந்துள்ளவை. அதாவது தூத்துக்குடி நகரைச்சுற்றி மட்டும் 7410 மெகாவாட் நிலையங்கள் அமைக்க உத்தேசிக்கப்பட்டு, பலவற்றில் கட்டு மானப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதாவது இன்றைய தமிழகத்தின் தேவை முழு வதற்குமான ஒட்டுமொத்த மின் உற்பத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் நடைபெறும். ஒருவகையில் இது மகிழ்ச்சிக்குரிய விஷயம். அதேசமயம் அனல்மின்நிலையங்கள் கூடுதலாக வருவதென்பதும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் குவிவது என்பதும் அந்த பகுதியின் இதர தொழில்களின் மீதும் மக்களின் வாழ்வாதாரத்தின் மீதும் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விவாதத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
முடிவுக்கான பின்னணி
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் ஒரு தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் மாசுக்கள் குறித்து அளவிடும்போது பிரதானமாக 3 வகை மாசுக்களை அளவிடுகின்றன. மாசு ஏற்படுத்தும் பிரதான பொருட்களாக 1) சல்பர் ஆக்சைடுகள், 2) நைட்ரஜன் ஆக்சைடுகள், 3) காற்றில் தங்கும் துகள் பொருட்கள் ஆகிய வற்றை குறிப்பிடுகிறார்கள். தூத்துக்குடி நகரைச் சுற்றி வரவிருக்கும் 7410 மெகாவாட் அனல்மின் நிலையங்களில் 1260 மெகாவாட் மட்டும் உற்பத்தி செய்யப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் இந்த மாசுப்பொருட்கள் தற்போதுள்ள அளவும் எதிர்காலத்தில் இதன் தாக்கமும் குறித்த விவரங்கள் கீழ்வருமாறு:-
1) 1000 மெகாவாட் மின் உற்பத்திக்கு ஒரு ஆண்டுக்கு 55 லட்சம் டன் இந்திய நிலக்கரி தேவை. ஏற்கெனவே இயங்கிவரும் மற்றும் கட்டுமான பணிகள் நடந்து வரும் மின் நிலையங்களுக்கான ஒட்டுமொத்த தேவை 2 கோடியே 15 லட்சம் டன் ஆகும். தூத்துக்குடி அனல்மின் நிலையம் மற்றும் அதன் அருகில் அமைந்துள்ள என்டிபிஎல் நிறுவனம் ஆகியவை தவிர, இதர நிறுவனங்களுக்கான நிலக்கரி, சாலைகள் மூலமாகவே கொண்டு செல்லப்பட வேண்டும். இப்படிக்கொண்டு செல்லப்படும்போது ஆண்டொன்றிற்கு குறைந்தபட்சம் 25000 டன் நிலக்கரி சாலை களில் சிந்தி அப்பகுதியின் மண்ணையும் காற்றையும் மாசுபடுத்தி விடும். சூழல் மாசுபாடு சகிக்க முடியாததாகிவிடும்.
2) இந்திய நிலக்கரியில் 45 சதவீதம் சாம்பல் வெளிப்படும். அதாவது ஒரு ஆண்டிற்கு ஒரு கோடி டன் சாம்பல் தூத்துக்குடியைச் சுற்றியுள்ள அனல்மின்நிலையங்களிலிருந்து வெளிவரும். கடந்த காலங்களைப் போல் அல்லாமல் உலர் சாம்பல் சிமெண்ட் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுவதால் பெரும்பாலான அளவு சாம்பல் சிமெண்ட் தொழிற்சாலைகளால் எடுத்துச் செல்லப்படுகிறது. ஆனால், மிக இலகுவான தாகவும், பறக்கும் தன்மை உடையதாகவும் இருப்பதால் இந்த அனல்மின் நிலையங்களிலிருந்து வரும் சாம்பல் அருகிலுள்ள உப்பளங்களில் படிவதால் உப்பின் தரம் பாதிக்கப்பட்டு, உப்பு உற்பத்தியாளர்கள் கடும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். இது மேலும் விஸ்த ரிக்கப்படுகிறபோது கூடுதல் பகுதி உப்பளங்களும் விவசாயமும் கடல்வளமும் பாதிக்கப்படும்.
3) இந்திய நிலக்கரியில் 0.5 சதவீதமும் இறக்குமதி நிலக்கரியில் 0.9 சதவீதமும் கந்தகம் உள்ளது. இது மிகக்குறைந்த அளவு என்று தோன்றினாலும் கூட பயன்படுத்தப்படும் நிலக்கரியின் அளவு கோடிக்கணக்கான டன்களில் இருப்பதால் எரிக்கப்படும் ஒட்டுமொத்த கந்தகத்தின் அளவு சுற்றுச்சூழலை கடுமையான அளவிற்கு பாதிக்கக் கூடியதாகும்.
4) காற்றுவெளியில் கலக்கும் பாதரசத்தில் 65 சதவீதம் நிலக்கரியை எரிப்பதால் உருவாவதாகும். நிலக்கரியில் பாதரசத்தின் அளவு மிக மிக குறைவானதாகும். அதாவது 40 லட்சம் கிலோ நிலக்கரியில் 1 கிலோ பாத ரசம் இருக்கும். இந்தக் கணக்கின்படி தூத்துக்குடி நகரைச்சுற்றி இப்போதுள்ள அனல்மின் நிலையங்களிலிருந்து 5,362 டன் பாதரசம் வெளிப்படும்.
5) நிலக்கரி இறக்குமதி லாரிகளில் அனல்மின் நிலையங்களுக்கு கொண்டு செல்வது, அனல்மின் நிலையங்களில் திறந்தவெளியில் சேமித்து வைப்பது (திறந்த வெளியில்தான் சேமிக்க வேண்டும்) அரைப்பது ஆகியவற்றின் காரணமாக காற்றில் தங்கும் துகள் பொருட்கள் அதிகரிக்கும். தேசிய காற்றுத்தன்மை ஆய்வுகள் தரும் விவரப்படி காற்றில் தங்கும் துகள் பொருட்களின் அளவு தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதிகளில் அதிகம் என்கிற அளவை எட்டி யுள்ளது.
6) பெருமளவு கடல்நீர் குளிரூட்டியாக பயன்படுத்தப்பட்டு மீண்டும் கடலுக்குள் விடப்படுவதால் இப்பகுதியில் கடல்நீரின் உப்புத்தன்மை அதிகரிக்கும்.
அனல்மின் நிலையம் குறித்த அணுகுமுறை
மேற்கண்ட உண்மைகளின் அடிப்படையில் தூத்துக்குடி நகரைச்சுற்றி அமையவிருக்கும் அனல்மின் நிலையங்கள் குறித்து மத்திய மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரிய ஆவணங்களின் துணையுடன் நிபுணர் குழு விவாதித்து கீழ்க்கண்ட பரிந்துரைகளை அளித்துள்ளது.
1) ஒரு அனல்மின் நிலையம் பற்றி மட்டும் தனித்து ஆய்வு செய்து, மாசு தாக்கம் பற்றி முடிவு எடுக்க முடியாது. தூத்துக்குடியில் துறைமுகம் இருப்பதாலும், ஏராளமான அனல்மின் உற்பத்தி நிலையங்களும், நிலக்கரியை பயன்படுத்தும் வேறு தொழில்களும் தூத்துக்குடியையொட்டியே அமைக்க முயற்சிகள் அதிகரித்துள்ளன. ஆகவே, இவற்றின் ஒட்டுமொத்த மாசு மற்றும் இதர சுற்றுச்சூழல் தாக்கத்தை கணக்கில் கொள்ளாமல், தனித்தனியாக ஒவ்வொரு தொழிற் சாலையையும் பரிசீலிப்பது ஒரு அபாயகரமான அணுகுமுறையாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை செயல்படுகின்ற மற்றும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள மின் நிலையங்கள் மற்றும் இதர ஆலைகளின் மொத்த சுற்றுச்சூழல் தாக்கம் பற்றிய அதிகாரப் பூர்வ அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்.
2) தூத்துக்குடி கந்தக ஆக்ஸைடுகள் காற்றில் தங்கும் துகள் மாசு சுவாசிக்கப்படும் இத்தகைய மாசு ஆகிய அனைத்திலும் அபாய விளிம்பில் உள்ளது என்பதே மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மதிப்பீடு. தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் இதுபற்றி எச்சரிக்கை விடுத்துள் ளது. எனவே, தூத்துக்குடியில் ஏற்கெனவே அனல்மின் நிலையங்களாலும், வேறு பல ஆலைகளாலும் சுற்றுச்சூழல் பெரிதும் மாசு அடைந்துள்ள நிலையில், எனர்ஜன் அனல் மின் உற்பத்தி விரிவாக்கத்திற்கு வேறுஇடம் தேடுவதே பொருத்தமாக இருக்கும்.
எனவே, தூத்துக்குடி அருகில் கோஸ்டல் எனர்ஜன் உத்தேசித்துள்ள விரிவாக்கத்திட்டத்தை எதிர்க்கிறது. இது ஒட்டுமொத்தமாக அனல்மின்நிலையங்களே கூடாது என்ற அர்த்தமல்ல. மாறாக, அனல் மின்நிலையங்கள் வருவதால் ஏற்படும் மாசுகள் மக்களை கடுமையாக பாதிக்கிற அளவிற்கு ஒரு இடத்தில்அடர்த்தியாக இருப்பதை தவிர்ப்பதே இதன் நோக்கம். எனவே, தொழில்வளர்ச்சி குன்றிய வேறு பகுதிகளுக்கு மாவட்டத்திற்குள்ளேயும் இதர மாவட் டங்களிலும் அனல்மின் நிலையங்கள் அமைப்பதை எதிர்க்கவில்லை.
ஏற்கெனவே அமைந்துள்ள அனல்மின் நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அவற்றிலிருந்து வெளிவரும் மாசுகள் ஆகியவற்றை பற்றி முழுமையாக ஆய்வு நடத்தி, உரிய தொழில்நுட்பங்கள் மூலம் மாசுக்களை குறைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
நன்றி: தீக்கதிர்
No comments:
Post a Comment