நம்மைச் சுற்றி சத்தம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல குழந்தைகள் அவர்களுடைய மென்மையான காதுகள் தாங்கக் கூடிய அளவிற்கு மேலாகவே பல்வேறு ஒலிகளைக் கேட்க நேரிடுகிறது. இதன் காரணமாக பருவ வயதை எட்டும்போது அவர்களது கேட்கும் திறன் குறைந்து விடுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இந்தக் குறைபாடு அதிகரித்திருக்கிறது என்பது நாம் மிகவும் கவலைப்பட வேண்டிய விஷயம்.
ஒலி அலைகள் உருவாகி காற்று ஊடகத்தின் வழியே பயணித்து, நம் செவிப்பறைகளில் பட்டு அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. செவிப்பறைகளோடு இணைந்த நுண்ணிய நரம்புகள் இந்த அதிர்வுகளை மூளைக்கு எடுத்துச் சென்றதும் நாம் அந்த ஒலியைக் கேட்கிறோம். இது இயற்கை நமக்கு அளித்த ஒரு அதிசயிக்கத்தக்க கொடை. இதற்கு இணையாகச் சொல்ல வேண்டுமானால் நாம் கண்களால் பொருட்களைப் பார்க்கமுடிகிற திறனைத்தான் கூற முடியும். மிக அருகில் பலமாகக் கேட்கும் சத்தங்கள், நீண்ட நேரம் ஒலிக்கும் சத்தங்கள் காதுகளில் உள்ள நுண்ணிய செல்களை சேதப்படுத்தக் கூடியவை. இந்த தாக்குதல் தொடர்ந்து நடக்கும் போது கேட்கும் திறனை காது படிப்படியாக இழந்து விடுகிறது. இது சூடிளைந-என அழைக்கப்படுகிறது.
டெசிபல் என்ற அளவுகோல் ஒலியை அளக்கப் பயன்படுத்தப்படுகிறது. சத்தமே இல்லாத இடத்தை பூஜ்யம் டெசிபல் உள்ள இடமாகக் கருதலாம். உங்களிடம் ஒருவர் காதோடு சொல்லும் ரகசியக் குரல் 15 டெசிபல், சாதாரண உரையாடல் 60 டெசிபல், ஒரு காரின் ஹாரன் ஒலி 110 டெசிபல், ஒரு ஆம்புலன்ஸ் எழுப்பும் சைரன் ஒலி 120 டெசிபல், பட்டாசு வெடியின் ஒலி 140 டெசிபல் ... என இந்த அளவுகோலைப் புரிந்து கொள்ளலாம்.
85 டெசிபலுக்கு மேற்பட்ட எந்த சத்தமும் காதுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. சத்தம் எவ்வளவு டெசிபல் என்பதையும் அது எவ்வளவு நேரம் தொடர்ந்து காதில் விழுகிறது என்பதையும் பொறுத்து தீங்கு அமையும். ஓர் ஒலி 85 டெசிபல் என்பதை அறிந்துகொள்ள ஓர் எளிய வழி இருக்கிறது. அருகில் உள்ளவரிடம் பேசும்போது நீங்கள் குரலை உயர்த்திப் பேசினால்தான் அவருக்கு நீங்கள் பேசுவது கேட்கிறது எனில் உங்களைச் சுற்றி 85 டெசிபல் சத்தம் உள்ளதாகக் கொள்ளலாம்.
பலவீனமான ஒலியைப் போல 10 மடங்கு ஒலி 10 டெசிபல், 100 மடங்கு ஒலி 20 டெசிபல், 1000 மடங்கு ஒலி 30 டெசிபல் ... என அதிகரிக்கும். 150 டெசிபல் உள்ள ஒரு வெடிப்புச் சத்தம் (நஒயீடடிளiடிn) கேட்கும் திறனை உடனடியாக சேதப்படுத்தக் கூடியது. அதிக சத்தம் எழக்கூடிய இடங்களில் வேலை செய்பவர்கள் காதுகளைப் பாதுகாக்க சிறப்புக் கவசங்கள் அணிய வேண்டியது அவசியம்.
நாம் பயன்படுத்தும் பல்வேறு கருவிகள் சத்தம் எழுப்பக்கூடியவை. திருவிழாக் காலங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஒலிபெருக்கிகளை அலற விடுவது நம் கலாச்சாரமாகவே மாறிவிட்டது. பேருந்துகளில் பாடல்களையும், வீடியோ காட்சிகளையும் மிக மிக சத்தமாக வைத்துக் கேட்பது மற்றொரு கலாச்சார நடவடிக்கையாகி இருக்கிறது. வளர்ந்த நாடுகளில் கார் ஓட்டுபவர்கள் ஹார்னை மிக தேவைப்படும் தருணங்களில் மட்டுமே பயன்படுத்துவார்கள். நம் நாட்டில் தேவையின்றி ஹார்னை அலற விடுவது, திடீர் பிரேக் போடுவது இரண்டும்தான் பேருந்து மற்றும் கார் ஓட்டுவதற்கான அடிப்படைத் திறன் என ஓட்டுநர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். அதிக சத்தம் உள்ள சூழ்நிலைகளால் நமது செவிப் பறைகளுக்கு மீட்க முடியாத சேதாரத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை எப்போது உணரப் போகிறோம்? அல்லது அரசாவது உணர்ந்து சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவரப் போவது எப்போது? இவ்விரண்டும் நடக்கவில்லையெனில், பலரது கேட்கும் திறன் கடும் பாதிப்புக்கு உள்ளாகி நாம் சைகைகளால் பேசிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது.
தேவைக்கு அதிகமான சத்தம் எழுப்பும் சூழ்நிலைகளைத் தவிர்க்க வேண்டிய அவசியத்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும்; காதில் ஏதாவதொரு குச்சியை வைத்துக் குடைவது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்; அதிக சத்தம் உள்ள இடங்களில் இருக்க நேரிடும்போது காதுகளைப் பாதுகாக்க இயர்-பிளக் அணிவது, பஞ்சை வைத்து காதை அடைத்துக் கொள்வது போன்ற சில பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும்.
நன்றி: தீக்கதிர்
No comments:
Post a Comment