Monday, June 20, 2011

நெகிழியா? காகிதமா?

நெகிழி (பிளாஸ்டிக்) பைகள் மிகப் பெரிய சூழல் கேட்டை உருவாக்குகின்றன என்பது தெரிந்த விஷயம்தான். இதற்கு எதிராக காகித பைகளை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறது. ஆனால் இரண்டுமே இயற்கை வளத்தை அழித்து, சூழலை சீரழிக்கின்றன என்பதுதான் உண்மை. அப்படியானால் இந்த இரண்டில் நாம் எதைத் தேர்ந்தெடுப்பது? மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதுதான், இவற்றின் பயன் பாட்டை குறைப்பதற்கான நல்ல வழி என்று தோன்றுகிறது.

இரண்டையும் பற்றி ஓர் ஒப்பீடு:

உலகம் முழுவதும் 400 கோடி பிளாஸ்டிக் பைகள் ஒவ்வோர் ஆண்டும் கழிவாக்கப்படுகின்றன. இவற்றை தொடர்ச்சியாகக் கோர்த்தால், பூமியை 63 முறை சுற்றலாம்.

உற்பத்தி

மரங்களை அழித்தே காகிதம் தயாரிக்கப் படுகிறது.

நெகிழி என்பது பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் சுத்திகரிக்கப்படும்போது, பாலிஎதிலின் என்ற துணைப்பொருளாகக் கிடைக்கிறது. ஞெகிழிப் பையை தயாரிக்க ஆகும் எரிபொருளை விட 4 மடங்கு அதிக எரிபொருள் காகித பையை உருவாக்க பயன்படுகிறது.

மூலப்பொருள்

காகிதபை உருவாக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருள்கள் காற்று மாசு, அமில மழை, நீர் மாசுபாட்டை உருவாக்கலாம்.

நெகிழி உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ஆறு பொருள்களில் ஐந்து மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தவை.

நெகிழிப் பைகளை உண்டு ஆயிரக்கணக்கான காட்டுயிர், கடலுயிர்கள் ஆண்டுதோறும் அழிகின்றன. கடலாமைகள் இவற்றை இழுதுமீன் என்று கருதுகின்றன. உணவுக்குழலில் சிக்கி இறந்துபோகின்றன.

மறுசுழற்சி

மறுசுழற்சி செய்ய காகிதத்தை கூழாக்கி, வெளுப் பேற்ற பிளீச் செய்தாக வேண்டும். நெகிழியைவிட காகித மறுசுழற்சி எளிது என்றாலும், காகித பைகள், காகிதங்கள் புதிய மரங்களை அழித்தே செய்யப் படுகின்றன. அப்பொழுதுதான் இழுவைத்தன்மை, வலு கிடைக்கும். மறுசுழற்சி காகிதம் அட்டைப்பெட்டி தயாரிக்கவே பயன்படுத்தப்படுகிறது. மேலும் காகிதத்தை மறுசுழற்சி செய்வதற்கு அதிக எரி பொருள் தேவைப்படுகிறது. பெரும்பாலான நேரம் மறுசுழற்சிக்காக வாங்கப்படும் நெகிழி பைகள், அதைச் செய்யாமல், வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டு எரிக்கப்படுகின்றன.

மக்குமா, மக்காதா?

காகிதம் மக்கக்கூடியது. ஆனால் இன்றைக்குள்ள குப்பை கொட்டும் முறை காரணமாக, தண்ணீர், ஒளி, ஆக்சிஜன் கிடைக்காமல் போவதால் அவற்றால் மக்க முடிவதில்லை.

பிளாஸ்டிக் என்பது எக்காலத்திலும் மக்காதது.

நாம் என்ன செய்யலாம்?

மறு பயன்பாட்டுக்கு உரிய தரமான துணிப் பைகளை பயன்படுத்தலாம். இதன் மூலம் ஆயிரக் கணக்கான நெகிழிப் பைகளின் பயன்பாட்டைத் தடுக்கலாம்.

எளிதாக கையில் எடுத்துச்செல்லும் பொருளுக்கு ஏன் ஒரு நெகிழிப் பையை வீணாக்கத் தேவை யில்லையே.

பழைய நெகிழிப் பைகளை குப்பை பெட்டிகளில் பயன்படுத்தலாம். அதற்கென தனி நெகிழிப் பை வாங்காமல் தவிர்க்கலாம்.

மேலும், எப்பொழுதெல்லாம் கடைக்குச் செல்கிறீர்களோ, அப்போது மறக்காமல் கையில் துணிப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும். குறைந்தபட்சம் நம்மிடம் ஏற்கெனவே உள்ள நெகிழிப் பைகளையாவது எடுத்துச் செல்லுங்கள்.


பிளாஸ்டிக் எமன்

அதிநவீன அறிவியல் வசதிகள் பெருகிய இன்றைய வாழ்வில், அதன் பலன்களில் ஒன்றாக நம்மிடையே புற்றுநோய் பல்கிப் பெருகிவிட்டது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் பெரும் பங்காற்றுகிறது என்கின்றன ஆராய்ச்சிகள். இது தொடர்பாக ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனையின் சுற்றறிக்கை கூறும் தகவல்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

மைக்ரோவேவ் அவனில் நெகிழி பாத்திரங்களைப் பயன்படுத்தாதீர்கள். குளிர்பதனப் பெட்டியின் ஃபிரீசரில் தண்ணீர் குப்பிகளை வைக்காதீர்கள். மைக்ரோவேவ் அவனுக்குள் உணவுப்பண்டத்தை வைக்கும்போது அதன் மீது நெகிழி தாளை சுற்றாதீர்கள் என்கிறது அந்த எச்சரிக்கை.

காரணம்: டையாக்சின் எனப்படும் புற்றீணி புற்றுநோயை, குறிப்பாக மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்துகிறது. நெகிழி குப்பிகளை ஃபிரீசரில் வைக்கும்போது, நெகிழியில் இருந்து டையாக்சின் தண்ணீரில் கலக்கிறது. அதேபோல, நெகிழி பாத்திரங்களில் உணவுப்பண்டங்களை வைத்து மைக்ரோவேவ் அவனில் சூடேற்றக் கூடாது என்று கேஸ்டில் மருத்துவமனை மருத்துவர் எட்வர்ட் ஃபியூஜிமாட் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, கொழுப்பு அதிகமுள்ள உணவுகள் சூடேற்றப்படும்போது, நெகிழி டையாக்சினை வெளியிடுகிறது. இது நாம் சாப்பிடும்போது உடலில் சேர்கிறது.

இதற்கு பதிலாக கண்ணாடி, மங்கு பாத்திரங்களை சூடேற்றுவதற்கு பயன்படுத்தலாம். அதேபோல துரித உணவுகளையும் ஞெகிழித்தாள் சுற்றி சூடேற்றக் கூடாது

நன்றி: பூவுலகு

No comments: