“யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’’... இது மாட்சிமை தங்கிய யானைகளை செயற்கையாக்கி விட்டதாகக் களித்த மனிதன் உருவாக்கிய பழமொழிகளில் ஒன்று.
அனைத்துண்ணியான மாந்தரினம் கடந்த பல்லாயிரம் ஆண்டுகளாகவே தன் உணவுக்காகவும், உறைவிடத்திற்காகவும் விலங்குகளைக் கொன்று வந்துள்ளது. இந்தப் பண்பாடு ஒரு அர்த்தத்துடன் அன்றைக்கு இருந்திருந்தாலும், இன்றைய காலத்திலும் அது போன்ற (வேட்டை) ஆசைகள் பலருக்கும் வருவதன் காரணம்: மூடநம்பிக்கை, குறிக்கோளற்ற இலக்கியவெறி, சோம்பல், டாம்பீகம் மற்றும் சாதியமைப்பு போன்றவைதான்.
13,000 ஆண்டுகளுக்கு முன்னரே சடையானைகளை மனிதர்கள் வேட்டையாடிய சான்றுகள் அகழ்வாராய்ச்சிகளின் வழியே கிடைத்துள்ளன. வேட்டையாடிய யானையின் மத்தகத்தைப் பிளந்து அதன் மூளையைக் கூட தின்றிருக்கின்றனர் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டோர். அதுமுதல் இன்றுவரை எல்லா விலங்குகளையும் வேட்டையாடுகிறான் மனிதன். துப்பாக்கி கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு ஈட்டி, வேல், அம்பு போன்ற ஆயுதங்கள் நேரடியாகவும், விஷத்தில் துவைத்தும் யானைகளைப் பதம் பார்த்திருக்கின்றன.
1000 ஆண்டுகளுக்கு முன்னர், யானை விக்னேசுவரக் கடவுளாக்கப்பட்ட காலம் முதல், இன்று விமரிசையாகக் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி காலம்வரை, யானைகளுக்கு ஏற்படும் அநியாயத்தை யாருமே கேட்பதில்லை. சரித்திர கால மன்னர்கள் நாடு பிடிக்கும் பேராசையுடன் போரில் பயன்படுத்த பயிற்சியளிப்பதற்கும், பட்டத்து யானை என பவிசு காட்டவும் காட்டு யானைகளைக் கண்மூடித்தனமாகப் பிடித்தனர். பழைய பிடிப்பு முறையாக யானைகளுக்கு `குழி பறித்து’ ஏமாற்றி வீழ்த்தி பிடித்தபோது, நூற்றுக்கணக்கான யானைகள் எலும்பு ஒடிந்து செத்துப் போனதற்கும், மனிதப் போரில் ஆயிரக்கணக்கான யானைகள் கொல்லப்பட்டதற்கும் கணக்கு வழக்கில்லை. ஒரு கணக்கின்படி கடந்த 200 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் சுமார் 1,30,000 யானைகள் கொன்று அழிக்கப்பட்டிக்கின்றன.
தற்போது அசாம், மேகாலயா பகுதிகள், ஒரிசா, பீகார், ஜார்கண்ட், உத்தராஞ்சல், உத்தரபிரதேசம் மாநிலங்களில் நில ஆக்கிரமிப்பு, காட்டழிப்பு, வேளாண்மை, சமூக மோதல் போன்றவற்றால் பெருமளவு காட்டுப்பகுதிகள் அழிக்கப்பட்டும் அவற்றின் தரத்தில் பெருங்கேடும் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னணியில் அங்கு நடக்கும் யானைக் கொலை விதங்கள் பல: துப்பாக்கிச் சூடு, விஷ அம்பு, மின்னதிர்ச்சி, விஷமிட்ட உணவு, கண்ணிவெடி, ரயில் மோதல் அவற்றுள் சில. இத்தகைய கொடூரங்களுக்கான முதன்மை காரணங்கள்: தந்தம், இறைச்சி மற்றும் பயிர்ப்பாதுகாப்பு என்பனவே. அசாம் மாநிலம் சோனிட்பூர் மாவட்டத்தில் மட்டும் யானைகளின் மீது ஒரு இரகசியப் போர் 2003ம் ஆண்டு நடத்தப்பட்டது. அப்போது 70 நாட்களில் 31 யானைகள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டன. இச்செய்தி உலகையே குலுக்கியது.
தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களில் துப்பாக்கி வேட்டை மிகக் குறைவென்றாலும் மின்னதிர்ச்சியால் யானைகள் மடிவது கூடுதலாகும். ஆனால் யானைகள் அழிப்புப் பணியில் தென்-னிந்தியாவைவிட வட இந்தியாவே முதலிடம் பெறுகிறது. மொத்தத்தில் வட இந்தியாவில் அசாம், தென்னிந்தியாவில் கேரளா முதலிடம் பெறுகிறது. (இங்கு 25 பெண் யானைகளுக்கு 1 ஆண் யானை என்று சமன்கெட்ட விகிதமே உள்ளது.) கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது 3 நாட்களுக்கு ஒரு யானை வீதம் இந்தியாவில் கொல்லப்படுவதாகப் புரிந்து கொள்ளலாம்.
மனிதர் அன்போடு வளர்ப்பதாகக் கூறப்படும் யானைகள் வண்டி இழுத்தன, கடும் வெயிலில் ஏர் உழுதன, மூட்டை சுமந்தன, கல்லையும், கட்டைகளையும் இழுக்கின்றன. வழிபாட்டுத்தலங்களில் வெந்ததைத் தின்று விதி வந்து சாகும்வரை வதைபட்டு பெருமை காட்டுகின்றன. சர்க்கஸ் செய்கின்றன, தன் சகோதரனுடன் சண்டையிட வைக்கப்பட்டன. மன்னர்கள் என்ற மமதை கொண்ட குண்டர்களைத் தூக்கிச் சுமந்தன, பிச்சை எடுக்கின்றன, அடிமையாக சந்தைகளில் விற்பனைக்குள்ளாகின்றன, கெட்டவார்த்தைகளால் திட்டு வாங்குகின்றன, அடி உதைகளால் ரத்தம் சிந்தி அழுகின்றன.
வேண்டிய நீரும், உணவும், நிழலும் கிடைக்காமல் துடிக்கின்றன, அழுக்கடைந்த, கூச்சல் மிகுந்த வீதிகளில் அலைக்கழிக்கப்படுகின்றன, தனிமையில் தவிக்கின்றன, மொட்டை வெயில், புகைதூசிகளால் மன உளைச்சலடைகின்றன, இயற்கையான சத்துள்ள ஆகாரமின்றி நோயால் கஷ்டப்படுகின்றன, தன் வாழ்விடத்தை தானே அழிக்கவும், தன் இனத்தை தானே பிடிக்கவும் உள்ளாக்கப்படுகின்றன. “இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’’ என கொல்லப்பட்டு தனது தந்தத்திலேயே செய்த தன் உருவத்தைச் சுமக்கும் கொடுமைக்கு ஆளாகின்றன. ஆனால் இவ்வளவையும் பரிதாபத்திற்குரிய யானைகள் மகிழ்ச்சியோடு செய்வதாகவே நினைக்கிறது `ஆறறிவு கொண்ட’ மாந்தரினம்.
கொடும் கூண்டிலடைத்து, கடும் சங்கிலியால் பிணைத்து, ஒரு விலங்குயிரின் பிறப்புரிமை புரியாத மக்களால் தலைவர், ஞானி, முனிவர், விஞ்ஞானி என கருதிக் கொண்டிருக்கும் பலர், வளர்ப்பு யானையின் தெய்வத் தன்மையையும், அறிவுக்கூர்மையையும், புத்தியையும், பலத்தையும் மெச்சி சிலாகிப்பர். அப்படியானால் மாவுத்தன் கையில் கொடிய அங்குசமும், தடியும், இரும்புச் சங்கிலியும், ஈட்டியும் எதற்கு என ஒரு கணமும் சிந்திக்கமாட்டார்கள். நம்மைச்சுற்றி “பாரம்பரிய சுற்றுச் சூழல், ஆரண்யப் பண்பாடு, திராவிடம், தேசியம்‘’ என்று முழங்குவோர் ஒருபுறம், “உயிர்களிடத்தில் அன்பு வேண்டும், ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம்‘’ என போதிப்போர் மறுபுறம். இந்நிலையில் எதிர்காலத்தில் மிஞ்சப் போவது மேற்கண்டோரின் மாளிகைகளில் யானைத் தந்தத்தில் செய்து பூஜிக்கப்படும் ஸ்ரீ மகா கணபதியின் சிலைகள் மட்டுமே எனத் தெரிகிறது. ஆங்கிலேயர் அரசின் துவக்க காலத்திலும் இந்தியாவில் யானையும் ஒரு “தீங்கிழைக்கும் மிருகமாகக்‘’ கருதப்பட்டது. எனவே, வேட்டையாடிக் கொல்லப்படும் ஒவ்வொரு யானைக்கும் பரிசாக ரூபாய் 50 தரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது ஒரு காலம். 1870களில் வெளியான அத்தகைய அறிவிப்புகளை அப்போதைய அஹிம்சாவாதிகள், ஆன்மிக ஞானிகள், விநாயக பக்தர்கள் யாரும் எதிர்த்து நின்றதாகத் தெரியவில்லை.
இன்றும் யானை ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட இயற்கையியலாளர்கள், காட்டுயிர் ஆர்வலர்கள், சுற்றுச்சூழல்வாதிகள், வனத்துறையினர் ஆகியோரில் 90 விழுக்காட்டினர் சமூகப் புரிதல்களோ, பகுத்தறிவோ பெற்றவர்களல்லர். மேலும், அவர்கள் தங்கள் சாதி, மத பொருளியல் சார்புகளுடன்தான் இயற்கை பாதுகாப்பு பற்றி பேசுகிறார்கள். நம்நாட்டைப் பொறுத்தவரை அறிவியல் துறையில் பணிபுரியும் விஞ்ஞானிகளும் சரி, அல்லது அரசு சாரா அமைப்பினர்களும் சரி, தங்கள் ஆய்வுகளுடன் தங்கள் பாரம்பரிய மூடநம்பிக்கைகளை ஒரு போதும் ஒப்பிட்டுப் பார்த்து உண்மைகளை உணர்வதில்லை. ஏனெனில் இவர்கள் மனிதரை ஒருபோதும் நவீனப்படுத்தாத இந்தியப் பாரம்பரியங்களையும், பண்பாடுகளையும் மனத்தளவில் பெருமையோடு போற்றுபவர்களாகவே நடமாடுகிறார்கள். இந்த வேளையில் நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்:
நம்மைப் போலவே யானைகள் அதனளவுக்கு மேல் சிந்தித்தல், செயல்படுதல், பிரச்சனைகளைச் சமாளித்தல், புரிதல், நினைவாற்றல், வருந்துதல், பிரிவு, மகிழ்தல், ஏமாறுதல், கோபம் என பல மனநிலைமைகளைப் பெற்றுள்ளன. ஆனால் மனிதர்க்கு உள்ளதைப் போல வஞ்சனை, சுயநலம், பழிவாங்கல், தாக்குதல், கொள்ளை, அட்டகாசம், போக்கிரித்தனம் போன்ற எதுவும் அவற்றிடம் இல்லை. எனவே, உயிர் இலக்கணம் புரியாமல் அதன் ஒரு செயல்பாட்டை `தவறு’ என எண்ணும் போது, அச் செயலின் பின்னேயும் ஒரு காரணம் இருக்கும், ஆனால் அதை யோசிக்க மாட்டோம். ஏனெனில் எதையும் சுயநலத்தோடு லாபக் கணக்கிட்டுப் பழகியவர்களாயிற்றே நாம்.
காட்டு யானைத் தாக்குதல் என்பது பெரும்பாலும் விரட்டி விடுவதே ஆகும். ஒருவேளை அதனிடம் மனிதன் சிக்கிக் கொள்ளும் போது நாம் நினைப்பது போல் மிதிப்பதில்லை. காலால் உதைக்கலாம், தந்தத்தால் நசுக்கலாம், தலையால் முட்டலாம். ஆனால் பொதுவாக 10, 20 மீட்டர்கள் விரட்டித் துரத்திவிட்டுத் திரும்பிவிடும். இத்தகைய நிலையில் விரட்டப்படுபவர் தன்னிலை இழந்து, தவறி விழுந்து விடுவதால் கடும் காயங்கள் அடையக்கூடும். மேலும், அவர் கனவில்கூட அப்படி ஒரு காட்சியை கற்பனை செய்து பார்த்திராததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மாரடைப்பு, மயக்கம், காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. இவை எல்லாம் கூட யானைத் தாக்குதல் என்றே அவதூறாகக் கூறப்படுகின்றன.
1992ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட Project Elephant என்ற திட்டம் பத்தாண்டுகள் நிறைவுற்று (1991_2001) பல நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. இன்னும் சில குறைபாடுகள், நடைமுறைச் சிக்கல்கள் கண்டறியப்பட்டு அவற்றை நீக்க வனத்துறை எடுத்து வரும் முயற்சிகளும், உத்திகளும் ஆர்வலர்களால் ஓரளவு பாராட்டப்படுகின்றன. யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஏற்படும் பிணக்குகளுக்கு காரணம் யானைகளின் வாழிடக் குறைவு மற்றும் அது துண்டாடப்பட்டதேயாகும் என்பது ஒரு முக்கியப்புள்ளி. சில சமயங்களில் காடுகளில் ஏற்படும் உணவுத் தட்டுப்பாடு யானைகளை பாதிக்கும்போது, யானை மனிதர் பிணக்குக்கு அது வழிவகுக்கிறது. உணவு தேடிப் போகும் இப்பேருயிர்கள், தமது நடமாடும் வழியில் அமைந்த வேளாண் நிலங்களில் அப்போதே நுழைகின்றன. இந்த உண்மையை அறிந்து கொண்டு `வாழு வாழ விடு’ என்ற முறையில் மக்களிடமிருந்தும் விவசாயிகளிடமிருந்தும் போதுமான புரிதல்களும் உதவிகளும் வேண்டப்படுகின்றன.
யானைப் பாதுகாப்பு திட்டத்தின் குற்றங்குறைகளைத் தவிர்க்க மேலதிகப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இருப்பினும் யானை உய்விட தீவிர ஆராய்ச்சிகளின் முடிவாக மேலும் பல நடவடிக்கைகள் அவசியமாகின்றன. இவையே முழுமையாக, உறுதியாக யானைகளைக் காப்பாற்ற உதவும் என்பது வல்லுநர் முடிவு. அவையாவன: துண்டாடப்பட்டு சிதறுண்டு மாறிப்போன கானகப்பகுதிகளை ஒன்றிணைத்தல், கானகப் பரப்பை அதிகரித்தல், கள்ள வேட்டையை முற்றிலுமாக ஒழித்தல், ஆராய்ச்சி அடிப்படையில் இயற்கையான தாவரங்களை வளர்த்தல், யானைகள் அழிந்துவிட்ட காடுகளில் பாதுகாப்புடன் யானைகளை மீண்டும் விடுதல், குற்றவாளிகளின் மூல காரணமறிந்து அவர்களின் கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகைசெய்தல், மக்களிடையே மாநில மொழிகளில் அறிவியல் கண்ணோட்டத்தில் யானைகளின் மீது புரிதல், அகச்சார்பு, அன்பு மலர அச்சு, திரைப்பட ஊடகப் பிரச்சாரங்களை மேற்கொள்ளுதல் ஆகும்.
யானைகளுக்காக, சில தவிர்க்க முடியாத நிலையில், பழங்குடிகள் மற்றும் காட்டோரங்களில் வாழும் மக்களை காடுகளிலிருந்து இடம்பெயர்த்து, ஊர்ப்புறங்களில் குடியமர்த்தி வசதி செய்துதரல்; காடுகளில் விறகு, காய், இலை, புல் போன்ற பொருள் சேகரிப்பை நிறுத்தி, மக்கள் காட்டுக்குச் செல்வதை தவிர்க்க அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்தல்; நவீன எரிபொருட்களைத் தந்து, உபயோகிக்க அவர்களை ஊக்குவித்தல்; காடுகளை நம்பி வாழ்ந்தவர்களுக்கு மாற்று வேலை, கைவினைத் தொழில் போன்றவற்றை ஏற்படுத்துவது; மேலும் காபி, தேயிலை, தைலம், இரப்பர், சீகை மற்றும் வணிக மரங்கள் ஏனையவற்றின் பயன்பாட்டைக் குறைக்க பிரச்சாரம் செய்தல்; சுரங்கங்கள், மிகப் பெரிய அணைகள் அமைப்பது தவிர்க்கப்படல் போன்றவை அவசரமான அடிப்படை செயல்திட்டங்களாக இருக்க வேண்டும். இன்னும் முக்கியமாக மத்திய, மாநில அரசுகள் காட்டோரமுள்ள தனியார் நிலங்களைக் கையகப்படுத்தி, காடுகளை இணைத்து பெரிதாக்குவதும் அதன் எல்லைக் கோடுகளாக இயற்கையான ஆறுகள், ஏரிகள் போன்றவற்றை நிர்ணயிப்பதும் மிக முதன்மையானவை.
யானைகளின் வாழ்க்கையில் ஒரு பெரும் பிரச்சனையே மனிதன்தான். இதை யானைகளும் புரிந்து கொண்டிருக்கின்றன. ஆகையால் யானைகளின் நல வாழ்வு சீரழியக் காரணமான மனிதப் புத்திகளில் முக்கியமானவை ஐந்தாகும். முதலாவது, மனிதத் தொகை அதிகரிப்பு. இரண்டாவது, மிதமிஞ்சிய பொருள் நுகர்வு. மூன்றாவது, இயற்கையன்பர் எனக் கூறிக் கொள்வோரின் அறியாமை, தைரியமின்மை, நேர்மையின்மை. நான்காவது, எந்த அரசியல் கட்சியினரும் யானைகள் உள்ளிட்ட உயிரினங்கள் மீது ஒரு ஆழமான அறிவியல் அக்கறை கொள்ளாதது. கடைசியாக, பலதுறை சார்ந்த அறிவாளிகள், பகுத்தறிவாளர், சிந்தனையாளர், இலக்கியவாதிகள் எவரும் இயற்கையை மேலைத்துவ அறிவியலாகப் பார்க்காதது.
யானையினப் பாதுகாப்பில், இந்திய ஊடகங்களின் நிலை என்ன? வருந்தத்தக்க நிலையே! பொதுவாக மக்களின் சிந்தனைகளை முடக்குவதாகவே நமது எல்லாவித அறிவியல் ஊடகங்களின் போக்கும் அமைக்கப்பட்டிருக்கின்றன. நமது ஒலி, அச்சு, தொலைக்காட்சி, திரைப்பட, நாடக ஊடகங்கள் யாவும் எதார்த்தத்திற்கு எதிராகச் செயல்பட்டு குமுறும் பிரச்சனைகளை மறைப்பதோடு, அறிவு என்பதற்கு `புது’ வியாக்கியானம் சொல்வதாகவும் செயல்படுகின்றன. இது இயற்கைப் பாதுகாப்புத் தளத்திலும் எதிரொலிக்கவே செய்கிறது. இதனால்தான் நமது புறச்சூழலும், புலனறிவும் நமக்கே அந்நியமாகிப் போயுள்ளன.
மனிதரின் செயல்பாடுகளுக்கு உண்டான சொற்றொடர்கள் யானைகள் மீதும் மற்ற உயிரினங்கள் மீதும் ஏற்றப்படுகின்றன. ஒரு பத்திரிகை, நீரைத் தேடி தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்த யானைக் கூட்டம் ஒன்றினை `தேயிலைத் தோட்டத்திற்குள் யானைகள் கும்மாளம்‘ என்று தலைப்பிட்டது. மற்றொரு நாளிதழ் `யானைகள் வாழைத் தோட்டத்தினுள் படையெடுத்துக் கொள்ளயடித்தன’ என்றது. இன்னொரு நாளிதழ் `ஓட, ஓட விரட்டிச் சென்று சிறுமியை மிதித்துக் கொன்றது சிறுவாணி யானை’ என செய்தி போடுகிறது. பத்திரிகைகள் இன்னும் எழுதுகின்றன... `மதம் பிடித்த அந்த யானை ஓடஓட அவரைப் பிடித்து தூக்கிப் போட்டு மிதித்தது’ என்று ஆய்வுக் கண்ணோட்டத்தோடு நேரில் பார்த்ததுப் போல.
மேலும் பேட்டி என்று வந்து விட்டால் யானையால் தற்செயலாக பாதிக்கப்பட்டவர்கள்கூட இழப்பீடு நோக்கத்தில் வேண்டுமென்றே பொய் சொல்கிறார்கள். இது யானைகளைப் பற்றிய உண்மை நிலைமைகளை மறைத்து விடுகிறது. இவற்றையே தொலைக்காட்சி சானல்களும், தம் பங்கிற்கு படங்களாகக் காட்டின. திரைப்படமும் இதே வழியில்தான் என்பதை விளக்கத் தேவையில்லை. இந்த ஊடகங்களில் வருகின்ற யானைகள் சம்மந்தப்பட்ட செய்திகள் முக்கால்வாசிக்கும் மேல் தவறானவை, கண்டிக்கத்தக்கவை. எனவே அவற்றை அப்படியே நம்பாதீர்; விமர்சனப்படுத்துங்கள். குறிப்பாக யானைகளின் மேலான “அட்டகாசம், கொள்ள, கும்மாளம், சூறையாடுதல்’’ போன்ற தகாத வார்த்தைப் பிரயோகங்களைக் கண்டித்து அவற்றைப் பயன்படுத்தக் கூடாதென சம்மந்தப்பட்ட நிருபர், நிர்வாகி, ஆசிரியர்க்கு கடிதம் எழுதுங்கள்.
இப்படிப்பட்ட நிலையில், இத்தகைய மனிதரின் சொல் அட்டூழியத்தை தடுத்து நிறுத்திட வல்லோர் ஏதாவதொன்று செய்ய வேண்டும். மாறாக கணபதி ஹோமமும், கஜ பூஜையையும்தான் நடத்திக் கொண்டிருக்கின்றனர். மக்களின் எண்ணிலடங்கா மூடநம்பிக்கைப் பொருள்களில் பிரபலமானவற்றுள் ஒன்று யானை வாலின் உரோமம். இது அணிகலன்களில், குறிப்பாக மோதிரங்களில் சுற்றப்படுகிறது. இந்தியாவிலும், ஆப்பிரிக்காவிலும் இத்தகைய யானை மயிர் மோதிரங்கள் அணிவது அதிர்ஷ்டம் என நம்பப்படுகிறது. இது போன்ற குருட்டு நம்பிக்கைகளாலும் யானை என்ற பேருயிர் அழிந்துபோகிறது. இதன் பொருட்டு நாம் செய்ய வேண்டியது என்ன? யானைத் தந்தங்களால், வனப்படுபொருள்களால் செய்யப்பட்ட பொம்மைகளையோ, வளையல்களையோ, யானை வாலின் முடிகளையோ, யானையின் சிறுநீர், சாணத்தையோ வாங்கக்கூடாது. இவை யாவும் அநாகரிக மூடநம்பிக்கைகள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் யானையின் தும்பிக்கையால் ஆசிர்வாதம் பெறுவது, அதற்கு பிச்சை இடுவது, உணவு தருவது, வணங்குவது, சாணத்தை மிதிப்பது, இப்படி எந்தச் செயல்களையும் செய்ய வேண்டாம். இவற்றாலும் யானைகளின் மறுபுறம் வேதனைக்குரியதாக இருக்கிறது என்பதை உணர வேண்டும்.
யானைக்கும், நமக்கும் பங்காளி, பகையாளி, வரப்புவாய்க்கால், கொடுக்கல் வாங்கல் பிரச்சனை என்ன உள்ளது? யானை ஒரு விலங்கு, அதன் மனதில் உணவுத் தேடலும், தண்ணீர் நாடலும், காட்டு வழித்தடத் தேவையும்தான் ஒரே நோக்கமாக இருக்கும்; சொத்து சேர்ப்பதல்ல, அகப்பட்டதைச் சுருட்டுவதல்ல. காட்டுத் தீவனம் கிடைக்காத வகையில் தடுக்கப்படும்போது, பசியால் உந்தப்பட்டு, வேறு வழியின்றி, உயிரைப் பணயம் வைத்து துணிவான முயற்சியை எடுக்கிறது யானை. இதில் குறுக்கீடு செய்யும் மனிதனுடன் மோதும் நிலையில் இரு தரப்பிலும் தற்செயலாக விபத்துக்கள் ஏற்படுகின்றன. உடனே, சிறிதும் பகுத்தறிவின்றி பிரச்சனை ஊதிப் பெரிதாக்கப்பட்டு “காட்டுயானைகள் அபாயகரமானவை’’ எனத் தூற்றப்படுகின்றன. இது போன்ற நிலையில் யானையின் சார்பாக நின்று பேச, மனிதன் எப்போதும் முன்வந்ததில்லை. காரணம் கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும் மனிதர்கள்தானே. எனவே சமுதாய மன மாற்றத்திற்கும் சம்மந்தப்பட்டோர் பாடுபட வேண்டும். உயிரினங்கள் குறித்த நியாயமான ஒருமித்த கருத்துக்களும், தகவல்களும் மக்களுக்குக் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாணயமான காட்டுயிர் பாதுகாப்புச் சங்கங்களுக்கும் இயற்கை மற்றும் காட்டுயிர், சுற்றுச்சூழல் கழகங்களுக்கும், அறக்கட்டளைகளுக்கும் உதவி, ஊக்குவித்து, ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி இவர்களைக் கொண்டு ஊர்க்காவல் படை போல வனக்காவல் படை ஒன்றை அமைக்கவேண்டும். மேலும் சுற்றுச்சூழல் விருதுகள், பரிசுத் திட்டங்களை அரசு நிறுவுதல் வேண்டும்.
அரசியலில் மாறுபாடுகள், பண்பாட்டில் வேறுபாடுகள், சமூக நீதியில் முரண்பாடுகள், குடும்பத்தில் கூறுபாடுகள் என்றே வாழும் மனிதன், யானைகள் உட்பட்ட காட்டுயிரினங்கள் குறித்த சங்கதியிலாவது ஓரணியில் திரள வேண்டும். ஏனெனில் முன்னர் சொன்னவற்றுக்கெல்லாம் ஒரு மாற்று இருக்கக்கூடும். ஆனால், காட்டுயிர் பிரச்சனைகளில் மாற்றுக்கு வழியே இல்லை. எனவே... நாம்... “டுமீல்’’. அதோ கோடிக்கணக்கான ஆண்டுகள் பரிணாமத்தில் இப்புவியில் வாழும் உரிமையை நமக்கு முன்பே பெற்றுவிட்ட, தந்தம் தாங்கிய ஆண் யானை ஒன்று துப்பாக்கியால் சுடப்பட்டு காடே எதிரொலிக்கும் கதறலுடன் கீழே சாய்கிறது., இப்போது நாம் என்ன செய்யப் போகிறோம்?
நன்றி: இளைஞர் முழக்கம்
1 comment:
யானைகள் குறித்த விரிவான விளக்கம் , நாம் எப்போதும் யானைகளை ஒரு சுயநலனுக்காக அடிமைப்படுத்துகிறோம் அல்லது விரட்டுகிறோம்..உங்கள் கட்டுரை சரியான புரிதலை உருவாக்கும் என நம்புகிறேன். அனைவருக்கும் செல்ல முயற்சி எடுப்போம்..வாழ்த்துக்கள்
Post a Comment