Monday, March 14, 2011

கணினித் துறை மட்டும் போதுமா... அடிப்படை அறிவியல் துறைகள் வளர வேண்டாமா?

கணினித் துறை இன்று தொழில் நுட்பப் பட்டதாரிகளுக்கும், பிற பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் மிகப் பெரிய துறையாக வளர்ந்திருக்கிறது. ஊதியம் அதிகமாகக் கிடைப்பதால் பட்டதாரிகள் தகவல் தொழில்நுட்ப வேலைகளை நோக்கி ஓடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கணினித் துறையின் பணபலத்தோடு போட்டியிட முடியாமல் உற்பத்தித் துறை பின்தங்கிவிட்டது.

மாணவர்களுக்குத் தேவையான திறன்களை கற்றுக் கொடுக்கவில்லை என கணினி நிறுவனங்கள் நம் கல்வித் திட்டத்தைக் குறை கூறி வருகின்றன. அவர்கள் எதிர்பார்க்கும் திறன்கள்தான் என்ன? மாணவர்களுடைய சமூகப் பார்வையை விரிவானதாகவும் மனிதநேயமிக்கதாகவும் உருவாக்கும் விதத்தில் கற்றலுக்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பை வலுப்படுத்த வேண்டும் என்கிறார்களா? பழகிய பாதையிலிருந்து விலகி சிந்திக்கவும் புதியனவற்றைத் தேடும் ஆர்வத்தையும் கேள்வி கேட்டு விடைகளைக் கண்டு பிடிக்கும் இயல்பையும் வளர்க்க வேண்டும் என்கிறார்களா? வாழ்க்கையை, அதன் அனைத்துவிதமான அற்புதங்கள், அனுபவங்கள், புரிதல்களோடு பார்த்து ஒட்டுமொத்தமான பார்வையைத் தர வேண்டும் என்கிறார்களா? தேசநிர்மாணம் பற்றி மாணவர்கள் நன்கு அறிந் திருக்க வேண்டும் என்கிறார்களா?

இது எதைப்பற்றியும் அவர்கள் கவலைப்படவில்லை. அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் ஆங்கிலத்தில் உரையாடும் திறனையும் குழுவாக இயங்கி கணினித்துறை சந்திக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் திறனையும் பற்றி மட்டுமே. இவற்றுக்கு `மென்மையான திறன்கள் என அவர்கள் பெயரிட்டுள்ளனர். அறிவியலையும் தொழில் நுட்பத்தையும் கற்பதற்குப் பதிலாக, இந்த மென்மையான திறன்களைக் கற்பித்து இளைஞர்களை கணினித்துறைக்கு ஏற்றவர்களாக மாற்ற வேண்டும் என்பது உயர்கல்வியின் இலக்காக இன்று மாற்றப்பட்டுள்ளது.

இந்தியா இன்று கணினித்துறையில் வல்லரசாக இருக்கலாம். ஆனால் தொழில்நுட்பத்துறையில் பின்தங்கியே இருக்கிறது. ஒருவிதத்தில், அறிவியல்-தொழில்நுட்பத்துறைகள் வளர்வதற்குத் தடையாக கணினித் துறை இருக்கிறது என்றே சொல்லலாம். தரமான தொழில் நுட்ப மேலாண்மையைப் பெறாமல் எந்த நாடும் வல்லரசாக ஆகிவிட முடியாது. ஆராய்ச்சிக்கும் நாட்டு வளர்ச்சிக்கும் புகழ்பெற்ற ஐஐடி நிறுவனங்களின் பங்களிப்பு என்ன? இயந்திரவியல், வேதியியல், மின்சாரவியல் மேற்படிப்பு படித்த ஐஐடி பட்டதாரிகள் உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கு உழைப்பதற்குப் பதிலாக, கணினித்துறையில் பொறியாளர்களாகவும் ஆலோசனை நல்கும் நிபுணர்களாகவும் பணிபுரிவது சரிதானா?

ஒவ்வொருவருக்கும் தன்னுடைய தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் மக்களின் வரிப்பணத்தில் மானிய சலுகைகளைப் பெற்று கல்வி பயிலும் ஐஐடி மாணவர்கள் அதற்குப் பிரதிபலனாக தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சிகள் செய்து, நாட்டு வளர்ச்சிக்கு உதவவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறு உண்டா? ஐஐடி படிப்பை முடித்ததும் அமெரிக்காவுக்குப் பறந்தோட நினைக்கும் இளைஞர்கள் குறைந்தது மூன்றாண்டுகளுக்கு இங்குள்ள ஆய்வுக் கூடங்களில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை விதிக்க முடியாதா? இங்கேயே தங்கி நம் நாட்டு வளர்ச்சிக்கு உதவ நினைக்கும் இளைஞர்களை ஊக்குவிக்க சில நடவடிக்கைகளை எடுக்க முடியாதா?

ஏராளமான வேலைவாய்ப்புகளையும் கணிசமான அந்நியச் செலாவணியையும் ஈட்டித் தரும் கணினித் துறைக்கு எதிராக நாம் வாதிடவில்லை. உலகின் கணினித் தலைநகரமாக இந்தியா பெயர் வாங்குவதில் நமக்குப் பெருமைதான். அதே சமயம், இந்தியாவின் ஏழ்மை, வேளாண் உற்பத்தி, நீர்ப்பாதுகாப்பு, பூமி சூடேறுதல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டுபிடிக்கும் வல்லமை உடைய தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குவதும் அவசியம் இல்லையா? அறிவியல் மனப்பான்மையையும் பண்பாட்டினையும் பேணிப் பாதுகாக்க அடிப்படை அறிவியல் கல்விக்கு உரிய முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பதே நம் வாதம். சுதந்திரமான அறிவுத்திறன் உடைய விஞ்ஞானிகள் நமது ஆய்வுக்கூடங்களில் பயனுள்ள பரிசோதனைகள் செய்யும் வாய்ப்புகள் பெருக வேண்டும். அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் கற்பிக்கப்பட வேண்டிய `கடினமான திறன்கள் தான் இந்தியாவின் உன்னதமான எதிர் காலத்தை உத்தரவாதப்படுத்த முடியும். இத்துறைகளில் என்ன கற்பிக்கப்பட வேண்டும் என்பதை கணினித் துறை தீர்மானிக்க நாம் அனுமதிக்கக்கூடாது.

நன்றி: தீக்கதிர்

No comments: