கண் பார்வையில் நிற உணர்வும் நிறப் பார்வையின்மையும் (Color sense and Color Blindness)
பார்வை உணர்வுகள் ஒளி உணர்வு (Light sense), பார்க்கும் பொருளின் திட உணர்வு (Form sense), நிற உணர்வு (Color sense) என மூன்று வகையாகப் பிரிக்கலாம். நிற உணர்வு என்பது பல்வேறு பரிமாண ஒளிக்கற்றைகளினால், வெவ்வேறு நிறப் பரிமாணங்களை உணரும் தன்மையே ஆகும். நிறப் பார்வை பகல் ஒளியின் அலைவரிசை, ஒளியின் தன்மை மற்றும் ஒளியின் அடர்த்தி ஆகியவைகளால் தீர்மானிக்கப்படுகிறது.
கண்ணின் விழித்திரையில் உள்ள Cones என்ற அமைப்பே நிறங்களை உணரும் தன்மையுடையது. இந்த நிறங்களின் உணர்வை பகலில்தான், நல்ல வெளிச்சத்தில் சரியாக உணர முடியும். வெளிச்சக் குறைவான சூழ் நிலைகளில் நிறங்களை உணர்வதில் வேறுபாடு ஏற்படலாம். ஒளிக் கற்றைகளின் அலைவரிசைகளுக்குத் தக்கபடி, சிகப்பு, பச்சை, நீலம் ஆகிய வெவ்வேறு நிறமிகளை உள்வாங்கும் வகையில் Cones அமைந்திருக்கின்றன.
குறிப்பிட்ட விகிதத்தில் சிகப்பு, பச்சை, நீலம் ஆகிய ஒளிக்கற்றைகள் சேரும்போது வெண்மை நிறம் கிடைக்கிறது. இந்த மூன்று நிறங்களும் முதன்மை (Primary Colors) நிறங்களாகும். நல்ல நிறப்பார்வை (Normal Color Vision) உள்ளவர்களை Trichromatic (Red, Green, Blue) என்றழைக்கின்றனர்.
நிறப் பார்வையின்மையும் அதன் வகைகளும்:
1. பிறவியிலேயே (Congenital) ஏற்படலாம். விழித் திரையில் உள்ள cஒனெ களில் சிகப்பு, பச்சை, நீலம் ஆகிய நிறமிகள் பகுதியாகவொ, முழுமையாகவோ இருக்காது. இது வம்சாவழியில் பெண் சந்ததி வழியாக வருகிறது. இது இரண்டு கண்களையும் பாதிக்கிறது. இதற்கு சிகிச்சையில்லை.
2. (Acquired) பிறந்த பின் வளரும் பருவத்தில், வளர்ந்தபின் கண்ணில் ஏற்படும் பிற நோய்களின் பாதிப்பால் Cone களும், கண்ணின் நரம்பும் பாதிக்கப்பட்டு ஒரு கண் அல்லது இரு கண்களிலும் நிறம் அறியாக் குறைபாடு ஏற்படலாம். ஆரம்ப நிலையில் சிகிட்சைக்குப் பின் சரியாகலாம்.
நல்ல நிறப்பார்வையையும் (Normal Color Vision), நிறப்பார்வை குறைபாடு (Color Vision Defect) மற்றும் நிறப்பார்வையின்மையை (Color Blindness) கண்டறியும் சோதனைகள்:
1. Ishihara's Isochromatic Color Vision Chart சோதனை: வெவ்வேறு நிறங்களால் அமைந்த பல வட்ட வடிவங்களைச் சேர்த்து அட்டைகளில் எண்கள் உருவாக்கப் பட்டுள்ளன. ஒற்றை எண்களாகவும், இரட்டை எண்களாகவும் அடுத்த அடுத்த அட்டைகளில் அமைந்துள்ளன. ஒவ்வொரு அட்டையிலும் நல்ல நிறப்பார்வை உடையவர்கள் ஒரு எண்ணையும், நிறப்பார்வை குறைபாடு உள்ளவர்கள் வேறு எண்களையும் சொல்வார்கள். நிறப்பார்வையின்மையால் பாதிக்கப்பட்டவர்களால் எந்த எண்ணையும் சொல்ல இயலாது. கடைசியில் சில அட்டைகளில் எண்களில்லாமல் வளைந்து நெளிந்த கோடுகள் அமைக்கப்பட்டிருக்கும். எண்கள் வாசிக்கத் தெரியாதவர்களுக்கு இந்த அட்டைகளிலும் சோதிக்கலாம்.
2. Edridge Green's (Lantern) விளக்கு சோதனை: இது ரயில்வே துறையைச் சேர்ந்த ஓட்டுனர்கள், புகைவண்டி நிலையப் பொறுப்பாளர்கள், ரயில் பாதுகாப்பாளர்கள் (Gaurds) ஆகியோர்களைப் பரிசோதிக்கப் பயன்படுகிறது.
பெரும்பாலும் ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகள் வழியாக உரிமம் பெறுபவர்களை சான்றிதழ் வழங்கும் மருத்துவர்கள் பார்ப்பதேயில்லை.
ஓட்டுனர் உரிமம் வழங்கும்போதே சரியான மருத்துவப் பரிசோதனை செய்து வழங்க வேண்டும்.
தனியார் மருத்துவர்களிடம் சான்றிதழ் பெறுவதைவிட அரசு மருத்துவமனையிலுள்ள மருத்துவரிடம் உரிமம் விண்ணப்பிப்பவர்களை அழைத்துச் சென்று சான்றிதழ் பெறலாம்.
தொழில்முறை ஓட்டுனர்கள், காவல் துறை பணிக்குச் செல்பவர்களுக்கு கண்கள் மாறுகண் இன்றி, கண்ணாடியில்லாமல் நல்ல பார்வை (6/6) யுடன், நல்ல நிறப்பார்வையும் இருக்க வேண்டும்.
மேற்கண்ட தொழிலுக்குச் செல்ல விரும்புபவர்கள் விண்ணப்பிப்பதற்கு முன்னாலேயே தங்கள் உடல் தகுதியையும், கண்கள் தகுதியையும் கண்டிப்பாக சோதனை செய்து கொள்ளவேண்டும்.
குறைபாடு உள்ளவர்கள் அதிகாரிகள், அரசியல்வாதிகள் சிபாரிசு செய்தும், மருத்துவர்களுக்கு சிபாரிசு செய்தோ பணம் கொடுத்தோ முயற்சிப்பதும் தவறு. இதைத் தவிர்த்து, முயன்றால் வேறு நல்ல தொழிலும், வளமான எதிர்காலமும் காத்திருக்கிறது.
குறைபாடு உள்ளவர்கள் பழக்கத்தின் காரணமாக வாகனங்களை ஓட்டினாலும், எந்த நேரத்திலும், குறிப்பாக இரவு நேரங்களில் போக்குவரத்து விளக்குகள் மாறுவது சரியாகத் தெரியாமல் விபத்து ஏற்பட வாய்ப்புண்டு. இதனால் ஓட்டுனர்களுக்கும், உடன் பயணிப்பவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம்.
நன்றி:வ.க.கன்னியப்பன்
No comments:
Post a Comment