உயிர் வாழத் தகுதியான ஒரே இடமான பூமியில் தாவரங்கள், செடி, கொடிகள், புழு, பூக்கள், பறவைகள், விலங்கினங்கள், இவற்றுடன் மனிதர்களும் வாழ்கிறார்கள். இந்த உறவு பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.
கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக மனித இனத்தின் பேராசைக்கு பலியாகி காடுகளும், காட்டுயிர்களும் பெரும் அழிவுக்குள்ளாகி வருகின்றன. பலவகை விலங்கினங்கள் பறவைகள் அழிந்தே விட்டன. சில எடுத்துக்காட்டுகள். நம் நாட்டில் பரவலாக இருந்த சிவிங்கி புலி கானமயில், மொரிஷியஸ் தீவை கண்டுபிடித்த போர்ச்சுகீசியர்களால் அழிக்கப்பட்ட டோடோ என்ற பறவை இனம் பலவித தாவர வகைகள் என நீள்கிறது பட்டியல்.
அழிவின் விளிம்பில் புலி, யானை, சிங்கம், கிளிகள், சிருவாசிகள், ஆந்தைகள், பிணம் தின்னிக் கழுகுகள் என பலப்பல காட்டுயிர்கள் உள்ளன. காடுகளையும், காட்டுயிர்களையும் மறந்த சமூகம் அடுத்த கட்டத்திற்கு முன்னேற வாய்ப்புகள் மிகமிக குறைவு. இன்று அந்த ஒரு மோசமான சூழலில் தமிழ் சமூகம் சிக்கித் தவிக்கிறது.
தமிழின் சங்க இலக்கியப் பாடல்கள் பலவற்றில் தாவரங்களையும், பறவைகளையும், விலங்குகளையும் பற்றிய கூர்ந்தறிந்த பல பாடல்கள் வருகின்றன. பழந்தமிழர்கள் இயற்கையுடனும், காட்டுயிர்களுடனும் நெருக்கமான உறவைப் பேணிக் காத்தனர்.
காட்டுயிரில் பேருயிரான யானை மா, கரி, சிந்தூரம், அத்தி, அறுகு, ஆம்பல், ஆனை, இபம், இம்மடி, களிறு, கைம்மா என சுமார் 50 புனைப் பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது கவனத்திற்குரியது.
தற்காலப் பள்ளி மாணவர்கள் யானையே இல்லாத ஒரு நாட்டின் மொழியில் Elephantஐ பற்றி படித்துக் கொண்டிருப்பது வெட்கப்படக்கூடியது. இது போலவே பறவைகள், விலங்குகள், தாவரங்களுடனான நெருக்கத்தை மறந்ததுடன் அதற்குரிய அழகான தமிழ்ப் பெயர்களையும் மறந்து ஆங்கில மோகத்தில் வாழ்கின்றனர். அழகிய அருவி என்ற சொல் மறந்து நீர்வீழ்ச்சி மாறியது போல.
இயற்கை சூழலமைப்பில் பறவைகள், விலங்குகள், பூச்சிகள், செடி, கொடிகள், தாவரங்கள் என அனைத்தும் இணைந்துள்ளன. இதில் பறவைகள் பல அளவுகளில் நிறங்களில் காணப்படுகின்றன. இதன் காரணமாகவே பெரும்பான்மை மக்களால் (நம் நாட்டில் அல்ல) வெகுவாக இரசிக்கப்படுகின்றன. இனிமையான குரலொலிக்காகவும் இரசிக்கப்படுகின்றன.
விடியற்காலையில் இனிய குரலொலியால் எழுப்பும் பல வித சிரிப்பான்கள் பனைமரங்களில் காற்று தாலாட்டும், பல அறைகளைக் கொண்ட கூடு கட்டும் தூக்கணாங் குருவிகள் மிக நேர்த்தியான தையல் கலையுடன் கூட்டை வடிவமைக்கும் தையல் சிட்டு, மரங்களுக்கு வைத்தியம் பார்க்கும் மரங்கொத்திகள் என பலவிதங்களில் பறவைகள் நம்மை சுற்றி வாழ்கின்றன அவற்றை காண நமக்கேது நேரம்.
பறவைகள் யாவும், புழு, பூச்சிகளை கட்டுப்படுத்தி சுற்றுச் சூழலுக்கு பெரும் பங்களிப்பை செலுத்துகின்றன. பலவித தாவரங்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.
இந்திய அளவில் 1330 வகைப் பறவைகளும், தமிழகத்தில் 350 வகைப் பறவைகள் 60 குடும்பங்களில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. ஒவ்வொரு பறவையும் தனக்கென்று ஒரு வாழ்வு எல்லையை வைத்துக் கொள்கிறது. அதற்குள் மட்டுமே உணவு தேடல், இணை தேடல், கூடுகட்டல், இனப்பெருக்கம் செய்தல் போன்ற அனைத்தையும் செய்கின்றன. இதுவே “வாழ்வு எல்லை’’ எனப்படுகிறது.
தமிழகத்தின் மாநிலப் பறவையான மரகதப் புறா மரங்களடர்ந்த காடுகளில், தரையில் இரை தேட காணலாம். இத்துடன் சேர்த்து தமிழகத்தில் 13 வகையான புறாக்கள் காணப்படுகின்றன. கிளிகளைப் போலிருக்கும் பச்சை நிறப் புறாக்களில் 5 இனங்களும் இதில் அடங்கும்.
மரங்களின் இயற்கை வைத்தியர் எனப்படும் மரங்கொத்திகளின் 13 வகைகள் நம் தமிழகத்தில் காணப்படுகிறது. சிறியது சிறு மரங்கொத்தி பெரியதான காக்கா மரங்கொத்தியும் இவற்றில் அடங்கும்.
பழந்தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்படும் அன்றில் எனப்படும் ஒரு வகையான கொக்கு காணப்படுகிறது. மூக்கு வளைந்து அரிவாள் போன்று காணப்படுவதால் ‘அரிவாள் மூக்கன்’ ஆயிற்று 3 வகையான அரிவாள் மூக்கன்களை நாம் காணலாம்.
வெள்ளை அரிவான் மூக்கன் சாம்பல நிற அரிவாள்மூக்கன் கருப்பு அரிவாள் மூக்கன் போன்ற மூன்று வகையான பறவைகளையும் சென்னையை அடுத்துள்ள வேடந்தாங்கல், கரிக்கில பறவைகள் சரணாலயத்தில் காணலாம்.
நீர்நிலை காணப்படும் பகுதிகளில் சிறிது நேரம் நின்று கவனித்தால் வெள்ளை நிற கொக்குகளை காணலாம். இந்த வெள்ளை நிற கொக்குகளில் 4 வகைகள் இங்கு காணப்படுகின்றன. சின்ன கொக்கு நடுத்தர கொக்கு, பெரிய கொக்கு, உண்ணிக்கொக்கு போன்றவையாகும். இதில் முதல் மூன்றை நீர்நிலைகள், குளங்கள், ஏரிக்கரை ஒட்டிய பகுதிகளில் காணலாம். கடைசியாக உள்ள உண்ணிக் கொக்கை கால்நடைகள் மேயும் இடங்களில், கால்நடைகளை பின்தொடர்ந்து அதன் காலடித்தடத்தில் இருந்து வெளிக் கிளம்பும் பூச்சிகளை பிடித்து தின்னக் காணலாம்.
ஆறு வகையான நாரைகளை நம் தமிழகத்தில் காணலாம். நத்தை குத்தி நாரை, வர்ண நாரை, கட்பளி நாரை, கரு நாரை, பூ நாரை, செங்கால் நாரை போன்றவைகளை நாம் காணமுடியும்.
இதில் முதல் 4 வகைகளை வயற்காடுகள், ஏரிக்கரையை ஒட்டிய பகுதிகளில் காணலாம். நீண்டு வளைந்த கழுத்தையும், நீண்ட கால்க¬ளையும், ரோஜா வண்ணத்தை (சிகப்பு) ஒத்த சிறகுகளையும் கொண்ட அழகிய பூ நாரைகள் தமிழகத்தின் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு நவம்பர், டிசம்பர் மாதங்களில் 50 ஆயிரத்திற்கும் மேல் வருகின்றன. சென்னையை ஒட்டிய பழவேற்காடு பறவைகள் சரணாலயத்திற்கும் ஆயிரக்கணக்கில் வருவது குறிப்பிடத்தக்கது. இவற்றில் செங்கால் நாரை ஐரோப்பாவிலிருந்து குளிர்காலத்தில் வலசை வருபவையாகும்.
நமது ஏரிக்கரை, குளங்களில் 6 வகையான மீன் கொத்திகளை காணலாம். 1. சிரால் மீன் கொத்தி, 2. சிறு மீன் கொத்தி, 3. பெரிய அலகு மீன் கொத்தி, 4. வெண்மார்பு மீன் கொத்தி, 5. கருந்தலை மீன் கொத்தி, 6. கருப்பு வெள்ளை மீன் கொத்தி போன்றவையாகும். ஏரிக்கரை குளங்கள், நீர்நிலைகள் உள்ள பகுதிகளில் மரக்கிளைகளில் மீனுக்காக நீண்ட நேரம் காத்திருப்பதை காணமுடியும்.
தமிழகத்தில் இருவகையான ஆள்காட்டிகளை காணலாம். அரளிப்பூ ஆள் காட்டி, ஆவாரம்பூ ஆள்காட்டி போன்ற இரு வகையாகும். நீர்வளம் மிக்க பகுதிகளில் காணமுடியும். எதிரி தம்மை நெருங்குவது கண்டால் டிட்யு டூயுட் என கத்திக் கொண்டே தம்மை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் பண்புள்ளதால் ‘ஆள்காட்டி’ என்ற பெயர் வந்தது.
இருவாசி அல்லது இருவாயன் என்றழைக்கப்படும் நமது அடர்காடுகளில் 4 வகையான அழகு சேர்க்கின்றன. பெரிய வான்கோழி அளவுக்கு இருவாசிகள் ஒரு மரவாழ் பறவையாகும். ஒற்றை இருவாயன், சாம்பல் இருவாயன், கருப்பு வெள்ளை இருவாயன், பெரிய கருப்பு வெள்ளை இருவாயன் என்ற 4 வகைகள் நமது காடுகளுக்கு வளம் சேர்க்கின்றன.
சிறுகாய்கள், பழங்கள், காட்டு பல்லிகள், காட்டு பறவைகளின் குஞ்சுகள் போன்றவற்றை உணவாகக் கொள்கின்றன. சில வகை மரங்கள் பெருக இருவாசிகளே முக்கிய காரணமாகின்றன. இவைகள் உண்ட பழங்களின் விதைகள் வீரிய மிக்க விதைகளாக செல்லுமிடமெல்லாம் பரவ காடுகளின் வளர்ச்சிக்கு பங்காற்றுகின்றன. இருவாசிகளின் அழிவு காடுகளின் அழிவுக்கு முன்னறிவிப்பாகும்.
மேற்குறிப்பிட்ட பறவைகளைத் தவிர பலவித பறவைகளும் நம்முடன் வாழ்கின்றன. நகரங்களை சுத்தப்படுத்தும் காக்கை, சிட்டுக்குருவிகள், நாகணவாய் (மைனா, சமஸ்கிருதப் பெயர்) போன்ற பறவைகளோடு பலவித கிளிகள், கதிர்குருவிகள், தேன்சிட்டுகள், பஞ்சுருட்டான்கள், குக்குறுவான்கள், சிலம்பன்கள், கரிச்சான் குருவிகள் என பலப்பல பறவை இனங்கள் நம்மை சுற்றி வாழ்கின்றன. கண் தெரிந்தும் குருடர்களாக இரசிப்புத்தன்மை இருந்தும் இரசிக்காத மூடர்களாக மூட நம்பிக்கைகளின் மொத்த உருவமாக நாம் தான் இருக்கிறோம்.
காடுகளின் துப்புரவாளனாக உள்ள பிணம் தின்னிக் கழுகுகள் விவசாயத்திற்கு நண்பனாக உள்ள இரவாடிகளான பலவித ஆந்தைகள், குயில்கள், காதாரிகள், பலவித ஈப்பிடிப்பான்கள் மலர் கொத்திகள் என அனைத்தும் மனதை கவரும் ஆழகுடன் பல வண்ணங்களில் நம்முடன் இணைந்தே வாழ்கின்றன.
பறவைகள் பற்றிய அறிவை இழந்த தமிழர்கள், இயற்கை, காட்டுயிர்கள் மேல் இருக்கும் மற்ற அனைத்து வகை மூட நம்பிக்கைகளை அறவே ஒழித்து மேற்குலக அறிவியல் கண்ணோட்டத்தில் பகுத்தறிவு சிந்தனையோடு செயல்படுவது ஒன்றே தமிழர்கள் தலைநிமிர இழந்த அறிவுச் செல்வத்தை மீட்க வீரத்தை மீட்க தன்மானத்தை மீட்க ஒரே வழி.
பறவைகளோடு பிணைப்பை ஏற்படுத்துவோம். சூழல் மகத்துவம் காப்போம்..
நன்றி: இளைஞர் முழக்கம்
No comments:
Post a Comment