உயிர்களை ஓரறிவு, ஈரறிவு, மூன்றறிவு, நான்கறிவு, ஐந்தறிவு, ஆறறிவு என்று வகுக்கும் நாம் மனிதனுக்கு மட்டும் ஆறறிவுத் திறன் அதாவது சுயபிரக்ஞை என்ற திறன் உள்ளதாகக் கற்பிதம் செய்து கொள்கிறோம். பிறக்கும் போதே இந்த தன்னுணர்வு உள்ளதா? இல்லை பின்னர் உருவாகும் திறனா?
1972ல் நடத்தப்பட ஒரு ஆய்வு உள்ளபடியே சுமார் 20-24 மாத வயதுக்குப் பிறகே நமக்கு தன்னுணர்வு முழுமையாக வளர்சியுறுகிறது என சுட்டுகிறது. 1972ல் வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பெஹூலாஹ் அம்ஸ்டர்டாம் என்பார் நடத்திய ஆய்வு இதனை சுட்டியது. சுமார் ஆறிலிருந்து இருபத்திநான்கு மாத வயதுடைய குழந்தைகளை ஆய்வுக்கு உட்படுத்தினார் இவர். குழந்தையின் முகத்தில் மூக்கு நுனியில் பேனாவால் கறை ஏற்படுத்தினார். இந்தக் குழந்தைகளை தாய் கைகளில் தூக்கி “செல்லமே...இது யார் தெரியுதா?” என கண்ணாடி முன் பிடித்து கேட்க குழந்தையின் நடவடிக்கையை ஆய்வாளர்கள் உற்றுநோக்கினர்.
மொத்தம் 88 குழந்தைகளிடம் இந்த சோதனை நடத்தப்பட்டாலும் 16 குழந்தைகளின் தரவுகள் தாம் பயனுள்ளதாக இருந்தது. குழந்தைகள் குழந்தைகள் தானே! சில கண்ணாடியைப் பார்க்கமாட்டேன் என சேட்டை பிடித்தது, சில அம்மா முகத்தை பார்ப்பதில் கவனம் செலுத்தியது. 16 குழந்தைகள் கண்ணாடியைப் பார்த்துத்தான் பிம்பத்தைக் கண்டு எதிர் வினை புரிந்தன. இந்த 16 குழந்தைகளின் எதிர்வினையைத் தொகுத்துப் பார்த்தப்போது, முக்கியமாக மூன்று விதமான எதிர்வினை புலப்பட்டது.
கைக்குழந்தையால் கண்ணாடியில் காணும் தன் பிம்பத்தை தான் என உணரமுடியாது.
சுமார் 6-12 மாத வயதுக் குழந்தைகள், கண்ணாடியில் காணும் தன் உருவம் வேறு ஒரு குழந்தை என்பதுபோல நடந்து கொண்டது. கண்ணாடி யில் தெரியும் பிம்பக் குழந்தையைப் பார்த்துச் சிரிப்பது; கை நீட்டி விளையாடுவது, தொட முயற்சிப்பது, மழலை மொழியில் அந்தக் ‘குழந்தையுடன்’ பேச முயற்சிப்பது என செயல் புரிந்தது. கண்ணாடியில் தெரியும் உருவம் தான்தான் என உணர்ந்ததற்கான எந்த வித அறிகுறியும் இல்லை. கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்து வியந்தது. முழுமையாக தான் என அறிய மாட்டது. தன்னைப்போல வேறு சிறு குழந்தை எனக் கருதி அதனைத் தொட முயற்சித்தது; கண்ணாடியில் தன் கை கொண்டு அந்தக் குழந்தையைத் தொட முயற்சித்தது. தனது முகம்தான் கண்ணா டியில் தெரிகிறது என் றோ, தனது முகத்தில் ஏதோ கறை உள்ளது என்றோ அந்தக் குழந்தை இனம் காணவில்லை.
16 மாதத்திற்கும் குறைவான வயது வளர்ச்சி உடைய குழந்தை கண்ணாடியில் தெரியும் உருவம் வேறு ஒரு குழந்தை எனக் கருது வதுபோல நடவடிக்கைகள் அமைந்திருக்கும்.
13-20 மாத குழந்தைகள் செய்த எதிர்விளைவு வித்தியாசமாக இருந்தது. சில, கண்ணாடியில் புலப்படும் பிம்பத்தைக் கண்டு வியந்து திகைத்து நின்றன; சில குழந்தைகள் தாம் தம் முகத்தில் எதோ கறை என உணர்ந்து நீக்க முயற்சிசெய்தன. ஆனால் பெரும்பாலான குழந்தைகள் பிம்பத்தைப் பார்த்து எரிச்சல் போக்குக் கொண்டன; பிம்பத்தை நோகிய பாராமுகம் என்ற போக்குத் தென்பட்டது. பெரும் பாலானவை கண்ணாடியைத் தொட முயற்சித்தன. பிம்பத்தில் உள்ளது நானா என்ற ஊகம்; நம்மைப் போல நம்மை மாதிரியே கை ஆட்டுவது போன்ற பாசாங்குச் செயல்கள் பிம்ப உருவமும் செய்கின்றது என்ற எரிச்சலா? வேறு குழந்தையைக் கண்டு பொறாமையா? எதுவாகிலும், 13-20 மாதக் குழந்தைகளின் நடவடிக்கை 6-12 மாத வயது குழந்தைகளிடமிருந்து வித்தியாசமாக இருந்தது என்பது மட்டும் நிச்சயம்.
20-24 மாத குழந்தைகள் எளிதில் பிம்பம் தான் தான் என இனம் கண்டுகொள் வதுடன் கண்ணாடி பிம்பத் தைப் பயன்படுத்தவும் முயன் றன. தனது முகத்தில், மூக்கில் உள்ள கறையை அம்மாவுக்குச் சுட்டிக்காட்டின; கண்ணாடி பிம்ப துணைகொண்டு கறையை நீக்க முயற்சித்தன, கறையை நீக்குவது மட்டுமல்ல, தனது முடியை நேர் செய்வது உட்பட பல தன் உணர்வுச் செயல்களில் ஈடுபட்டன. கண்ணாடி கொண்டு தமது முகத்தை அழகு பார்த்தன. சந்தேகத்திற்கு இடமின்றி கண்ணாடியில் தெரியும் பிம்பம் தான் தான் என இவை உணர்ந்துவிட்டன என்பது உறுதி.
இந்த ஆய்வு சுட்டியது கொண்டு, மனிதனுக்கு பிறக்கும் போதே முழுமையான சுயபிரக்ஞை இருப்பதில்லை; கைக்குழந்தையாக உள்ளபோது குழந்தை ‘தான்’ என பகுத்து அறிவது குறைவு. பசி போன்ற பல உணர்வுகள் பிறக்கும் குழந்தைக்கும் இருந்தாலும் சுய பிரக்ஞை போன்ற உயர் சிந்தனைத் திறன் காலப் போக்கில் வளர்சியுறுகிறது. குழந்தையின் மன வளர்ச்சியின் பாகமாக பிரக்ஞை வளர்கிறது என உளவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பெஹூலாஹ் அம்ஸ்டர்டாம் நடத்திய ஆய்வுக்கு பிறகு, பலர் இந்த ஆய்வை செய்து பார்த்தனர். மேலும் துல்லியமாக 1979ல் மிசேல் லூயிஸ் என்பாரும் ப்ரூக்ஸ் குன் என்பாரும் சேர்ந்து ஒரு பரிசோதனை நடத்தினர். இவை எல்லாம் பொது வாக பெஹூலாஹ் அம்ஸ்டர்டாம் சோதனை முடிவுகளை உறுதிபடுத்தின.
பிறக்கும் மனித குழந்தைக்கு தன்னுணர்வு இல்லை; காலபோக்கில் தன்னுணர்வு வளர்கிறது என்பது இந்த ஆய்வில் விளங்கினாலும், விலங்குகளுக்கு தன்னுணர்வு உண்டா என்ற கேள்வி தொக்கி நின்றது.
சிறுவர் இலக்கியம் மற்றும் மாஜிக்கல் ரியலிசம் எனப்படும் வகை சார்ந்த மந்திர புனைவு இலக்கியத்தில் விலங்குகளுக்கு தன்னுணர்வு கற்பிதம் செய்யப்படுகிறது. இந்த இலக்கியங்களில் விலங்குகள் தன்னை உணரும், பகுத்தறிவோடு செயல்படும். பூனை பேசும், புலி திட்டமிடும். தன் உணர்வு திறன் மனிதனிடம் மட்டும் உள்ள சிறப்பு இயல்பா அல்லது வேறு விலங்குகளிடமும் காணப்படுகிறதா?
“புத்திசாலி முயலும் முட்டாள் சிங்கமும்” பஞ்சதந்திர கதை சிறு வயதில் படித்த ஞாபகம் உள்ளதா? கிணற்று நீரில் சிங்கத்தின் பிம்பத்தை காட்டி அதோபார் உனக்கு எதிரி என்று முயல் கூற, முட்டாள் சிங்கம் கோபத்துடன் உறுமிக்கொண்டு பிளிறிக்கொண்டு கிணற்று நீரில் பாய்ந்து மாண்ட கதை நாம் எல்லோரும் அறிந்தததுதான். கதையில் சிங்கம் நீரில் காணும் தன் பிம்பம் தான் தான் என உணரவில்லை. அதாவது 3-16 மாத குழந்தை போல தான் வளர்ந்த சிங்கத்திற்கும் தன்னுணர்வு என கதை கற்பிதம் செய்கிறது. இது வெறும் கற்பிதம் இல்லை உள்ளபடியே சிங்கம் முதற்கொண்ட விலங்குகள் தம்மை கண்ணாடி பிம்பத்தில் அறிந்து கொள்ளும் திறன் வாய்ந்தவையா?
திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் கூண்டுக்குள் இருந்த சிங்கத்தை பார்த்து “நீ விலங்குகளுக்கு ராஜா; நான் கவிகளின் அரசன்; வா இருவரும் சந்திப் போம்” எனக் கூறி சிங்கத்துடன் கை குலுக்க சிங்க கூண்டுக்குள் புக முயன்றாராம் பாரதி. பாரதிபோல சிங்கத்திடம் நேரே சென்று சோதனை நடத்த வில்லை என்றாலும், உயிரியல் அறிஞர் சார்லஸ் டார்வின் லண்டன் உயிரியல் காட்சி சாலையில் இருந்த ஓராங்குட்டானிடம் முகம் பார்க்கும் கை கண்ணாடியை கொடுத்தார்- சோதனை செய்தார். கண்ணாடியை பெற்ற ஓரங்குடன் தன் பிம்பத்தைப் பார்த்து ஒழுங்கு காண்பித்தது. உதட்டை பிதுக்கி பார்த்தது. தனது முகம் முதல் உடற்பகுதிகளை கண்ணாடி கொண்டு ஆராய்ந்து பார்த்தது. ஓரங்உ டான் போன்ற மனித குரங்குகள் பரிணாமத்தில் மனிதனுக்கு அடுத்த படிநிலை. பரிணாம பார்வை யில் நமது நெருங்கிய உறவினர்கள். எனவே மனித குரங்கு வகை விலங்குகளுக்கு மனிதன் போன்ற ஒருசில உயர் மூளைத் திறன்கள் இருக்க வேண்டும் என டார்வின் கொண்ட கருத்திற்கு இது உறுதி செய்ததது.
மிசேல் லூயிஸ் மற்றும் ப்ரூக்ஸ் குன் ஆகியோரது ஆய்வினை ஒட்டி, கண்ணாடிப் பரிசோத என்ற ஒரு முறையை உருவாக்கினர் உளவியல் அறிஞர்கள். மூளை பாதிப்பு கொண்ட நோயாளிகள், விபத்தில் சிக்கி யோர் முதலியோரின் தன்னுணர்வு நிலையை அறிய இந்த “கண்ணாடி பரிசோதனை” உளவியல் மருத்து வர்களால் கைகொள்ளப்படுகிறது. இதே பரிசோதனை முறையை சற்றே மாற்றி விலங்குகள் இடையே சுயபிரக்ஞை உள்ளதா என அறிய முற்பட்டனர் விலங்கு ஆய்வாளர்கள்.
விலங்கால் தன் பிம்பத்தை தான் தான் என அறிந்துகொள்வது என்பது உயர் சிந்தனையின் வெளிப்பாடு ஆகும். கண்ணாடியில் தெரிவது கண்ணடிக்கு பின்புறமோ அல்லது கண்ணாடிக் குள்ளோ உள்ள விலங்கு அல்ல, உள்ளபடியே தனது பிம்பம் தான் என்ற சிந்தனை திறன் வேண்டும். கண்ணாடி பிம்பத்தில் விலங்கின் உடல் பகுதியை மட்டுமல்ல விலங்கு உள்ள சூழலின் பிரதிபலிப்பும் பிம்பமாக புலப்படும். இதை பகுத்து அறிந்து, நான் உள்ள பகுதிதான் கண்ணாடியில் தெரி கிறது என உணர வேண்டும். தன் உடல சைவுகள் தாம் கண்ணாடியில் தெரியும் பிம்பத் தின் அசைவுகள் என தொடர்புபடுத்தி பார்க்கவேண்டும். தன்னிலை அறிந்து தன்னுணர்வு பெற்றால்தான் பிம்பத்தை தான் என உணர முடியும், கண்ணாடி தேர்வில் தேற முடியும் என்கின்றனர் உளவியல் வல்லுனர்கள்.
இந்த சோதனையின் முதற்கட்டத்தில் விலங்கை மயக்கமுறச் செய்வர். மயங்கிய விலங்கின் முகத்தில் எதாவது நிற வர்ணம் கொண்டு கறை ஏற்படுத்துவர். விழித்தெழும் விலங்கின் கூண் டில் முகம் பார்க்கும் கண்ணாடி பொருத்தப் படிருக்கும். அந்த கண்ணாடியில் தன் பிம்பத்தை அந்த விலங்கால் காண முடியும். தமது முகம் மற்றும் உடலினை கண்ணாடியில் காணும் போது எந்ததெந்த விலங்கு எத்தகைய எதிர் வினை புரி கிறது என்பதை வீடியோ கருவி மூலம் படம் எடுப்பர். பின்னர் இந்த எதிர்வினை செயல்களை பகுத்து ஆராய்ந்து முடிவு எட்டுவர். சுயபிரக்ஞை உள்ள விலங்குகள் தமது முகத்தில் கறை உள்ளது என அறிந்து அதனை ஆராய்ந்து பார்க்க முயலும். தனது கைகளால் கறை உள்ள பகுதியை தொட்டு பார்க்கும். கறையை துடைத்து நீக்க முயற்சிக்கும். கண்ணாடியில் தனது முகத்தை வைத்து ஒழுங்கு காட்டி சோதனை செய்யும். தனது உடலின் பாகங் களை குறிப்பாக பால் உறுப்புகளை பரிசோதிக் கும். தனது உடலை துருவி துருவி ஆராய்ந்து பார்க்கும்.
தான் என்ற சுயபிரக்ஞை இருந்தால் தான் தனது முகத்தில் வித்தியாசமான என்றும் இல்லாத கறை உள்ளது என்பதை அறியமுடியும். கையை அசைக்கும் போது அதற்கு ஏற்றார்போல பிம்பமும் அசைகிறது என்பதை பகுத்து அறிந்தால் தான் கண்ணாடியில் காண்பது தான்தான் என உணர முடியும். எனவே சுயபிரக்ஞை உள்ள விலங்கு மட்டும்தான் கண்ணாடிப் பரிசோதனையில் வெற்றி கொள்ள முடியும்.
சுயபிரக்ஞை இல்லாத விலங்குகள் கண்ணாடியில் உள்ள உருவம் தான் என பகுத்து அறியாது. முட்டாள் சிங்கம் போல பிம்பம் வேறு ஒரு விலங்கு என கருதி ஒன்று அதனுடன் சண்டை யிட துவங்கலாம் அல்லது நட்பு பாராட்டி விளை யாடத் துவங்கலாம். தனது கறையை நீக்கவோ, தனது உடல் பாகங்களை துருவி ஆராய்ந்து பார்க்கவோ முயலாது.
எடுத்துக்காட்டாக முகம் பார்க்கும் கண்ணாடி முன்பு நாய் வரும் போது அதன் வினை என்ன? நாய் கண்ணாடியில் உள்ள பிம்பம் தான் தான் என அறியாது வேறு நாய் எனக் கருதி தன் இடத்திற்கு வந்துவிட்ட தாகத் தப்புக் கணக்குப் போட்டுக் குறைக்கத் துவங்கும். அதேசமயம் குழந்தை கொரில்லா தனது முகத்தில் கறை உள்ளது என கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்து அறிந்து கறையை நீக்க முயலுகிறது. ஆனால் நாய் தன் பிம்பத்தை அறிவதில்லை. இதன் தொடர்ச்சியாக நாய்க்கு சுயபிரக்ஞை அறவே இல்லை எனவும் கொரில்லா குரங்கிற்கு ஓரளவு தன் உணர்வு உள்ளது எனவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இதுவரை மனிதன் தவிர கண்ணாடி பரி சோதனைத் தேர்வினை வெற்றி கொண்ட விலங்கு கள் மனிதக் குரங்கு வகைகளான ஓராங்உடான், கொரில்லா போநோபோஸ் சிம்பன்சி, பாட்டில் மூக்கு திமிங்கலம், ஒர்கஸ், யானை ஐரோப்பிய மக்பீஸ் எனும் பறவை முதலியவை ஆகும். பயிற்றுவிக்கபட்ட புறா தனது முகத்தில் உள்ள கரையை நீக்குகிறது; ஆனால் இயல்பில் உள்ள, பயிற்றுவிக்க படாதா புறா தேர்வில் தோல்வியை தழுவுகிறது. மக்பை எனும் பறவை தனது மூக்கில் ஓட்டப் பட்டுள்ள ஸ்டிக்கரைக் கண்ணாடியில் கண்டுணர்ந்து நீக்கும் திறன் வாய்ந்தது என ஆய்வு கள் நிறுவியுள்ளன.
பதினெட்டு மாதத்திற்குக் குறைவான வயது டைய மனிதக் குழந்தைகள், பூனை, நாய், சில வகை குரங்குகள் முதலியவும் தேர்வில் தோல்வி. வியப் பான செய்தி பன்றி ஓரளவு தன்னுணர்வு உடையது எனக் கருதுகிறார்கள். நேரடியான பரிசோதனையில் தோல்வி அடைந்தாலும், பன்றிகள் வேறு ஒரு வகைக் கண்ணடிப் பரிசோதனைத் தேர்வில் வெற்றி கண்டுள்ளன.
முகத்தில் இடப்பட்ட கறையைக் கண்ணாடி பிம்பத்தைக் கொண்டு விலங்கால் உணரமுடிகிறது என்பது தான் கண்ணாடித் தேர்வு.
இந்தப் பரிசோதனை முறை குறித்து சில கருத்து வேறுபாடுகளும் உள்ளன. சிலர் இந்த முறை சரியானது இல்லை என குறை சொல்கின்றனர். எடுத்துகாட்டாக சில ஆதிவாசி சிறுவர் சிறுமியரிடைய இந்தப் பரிசோதனை செய்யப் பட்டது. இந்த சிறுவர்கள், இரண்டு வயதிற்கு மேற்பட்டவர் ஆயினும் இவர் கள் தமது முகக் கறையை நீக்க முயலவில்லை. இதி லிருந்து இந்த ஆதிவாசி மனிதர்களுக்கு சுய பிரக்ஞை இல்லை எனக் கூற முடியுமா என சிலர் இந்தப் பரிசோதனையைக் குறை கூறுகின்றனர். வேறு ஒரு ஆய்வில் இதே ஆதி வாசிச் சிறுவர்களிடம் முகக் கறை உள்ள பொம்மையைக் காட்டினர். அந்த பொம்மையின் கறையை நீக்கினர், அது போல உங்கள் முகத்தில் உள்ள கறையை நீக்குங்கள் என குறிப்பாகக் கூறியபோது இதே சிறுவர்கள் கண்ணாடியின் உதவியுடன் தமது முகத்தில் உள்ள கறைப் பகுதியைக் கண்டறிந்து அகற்றினர். எனவே கண்ணாடித் தேர்வில் வெற்றி பெறாவிட்டால் சுயபிரக்ஞை இல்லை எனக் கூறமுடியாது. ஆனால் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டால் சுய பிரக்ஞை உண்டு என உறுதிபடுத்த முடியும் என்கின்றனர் உளவியல் அறிஞர்கள்.
கண்ணாடி முன்பு நின்று “கண்ணாடியே கண்ணாடியே உலகிலேயே மிக அழகான பெண் யார்?” என்று கேட்டல் பதில் சொல்லுமோ சொல்லாதோ, ஆனால் சுயபிரக்ஞை உள்ளதா என்பதைக் குறிப்பால் உணர்த்தும் கண்ணாடித் தேர்வு.
நன்றி: த.வி.வெங்கடேஸ்வரன்
No comments:
Post a Comment