Wednesday, February 9, 2011

விளைச்சலைப் பெருக்க `ஃபெர்டிகேஷன்’ முறை

“மானியங்களையும் உதவித் திட்டங்களையும் விட நிலத்திலிருந்து கிடைக்கும் உத்தரவாதமான வருமானமே ஒரு விவசாயியை வேளாண்துறையில் தொடர்ந்து நீடிக்க வைக்க முடியும்; இளைஞர்களிடம் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்த முடியும். ஒரு விஞ்ஞானமோ, தொழில்நுட்பமோ விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தைத் தருமானால் அந்த முறையைப் பயன்படுத்திக் கொள்ள அவர்கள் தயாரா கவே இருப்பார்கள்” என்கிறார் திரு வெண்ணைநல்லூரில் தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநராக இருக்கும் டேவிட் ராஜா பியூலா.

விழுப்புரம் மாவட்டம் ஓகையூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி கோகிலா குமார் தன்னுடைய இரண்டு ஏக்கர் நிலத்திலிருந்து 26,000 கிலோகிராம் மஞ்சளை அறுவடை செய்து ஒன்பதே மாதங்களில் 11 லட்ச ரூபாய் வருமானத்தை ஈட்ட முடிந் தது என்றால், அவர் `ஃபெர்டிகேஷன்’ முறையை மேற்கொண்டதுதான் காரணம். இதைப் பார்த்ததும் அப்பகுதியி லுள்ள ஏராளமான விவசாயிகள் அதே முறையைப் பயன்படுத்தி மஞ்சள் சாகுபடியில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

தோட்டக்கலை அதிகாரிகள்தான் திருமதி கோகிலாவுக்கு இந்த புதிய முறையை அறிமுகப்படுத்தினர். உரங்களையும் தண்ணீரையும் கலந்து சொட்டுநீர்ப் பாசனத்தை மேற்கொள்வதுதான் `ஃபெர்டிகேஷன்’ முறை. இந்தத் தொழில் நுட்பத்தை செயல்பாட்டிற்குக் கொணர சுமார் ஒரு லட்ச ரூபாய் முதலீடு தேவைப் படும். இதில் 50000 ரூபாயை அரசு மானியமாகப் பெற முடியும். “ஃபெர்டிகேஷன் முறையின் மூலம் விளைச்சலைப் பெருக்க முடியும், களைகளைக் குறைக்க முடியும் என்பதைத் தற்போது நான் நேரடியாகத் தெரிந்து கொண்டு விட்டேன்” என்கிறார் கோகிலா.

“ஃபெர்டிகேஷன் முறையை நிறுவிக்கொள்ள வங்கிக் கடன்களுக்கு விண்ணப்பிப்பதைவிட, சொந்தப் பணத்தை முதலீடு செய்வதே சிறந்தது. காரணம், வங்கிக் கடன் கிடைப்பதற்கு ஆகும் ஒரு வருட காலத்திற்குள் விவசாயிகளின் ஆர்வமே தணிந்துபோய் விடுகிறது.
கருணை, சேனை, மரவள்ளிக் கிழங்குகள், மஞ்சள் ஆகியவற்றைப் பயி ரிடும் பல ஓகையூர் விவசா யிகள் இந்தப் பணத்தை முதலீடு செய்யுமளவுக்கு வசதியாகவே உள்ளனர். அதே சமயம், மூன்று கிலோ மீட்டர் தள்ளியுள்ள பக்கத்து கிராமங்களில் உள்ள விவசாயிகள் கடன்களில் மூழ்கியுள்ளனர். அவர்களிடமும் இந்த ஃபெர்டிகேஷன் முறையைக் கொண்டு செல்ல தோட்டக்கலைத் துறை முயற்சி செய்து வருகிறது.... புதிய பாசன முறையை நேரடியாகப் பார்த்து திருப்தியடைந்தால்தான் எந்தவொரு விவசாயியும் அதை ஏற்கவேண்டும் என்ற முடிவுக்கு வருவார். மாறாக, இனிமையாகப் பேசி மட்டும் அவரை ஏற்கவைத்துவிட முடியாது” என்கிறார் டேவிட் பியூலா.

“பல தலைமுறைகளாக நாங்கள் விவசாயம் செய்து வந்தாலும் மிகக் குறைந்த நிலத்திலிருந்து அதிகமான வருமானத்தை நாங்கள் ஈட்டுவது இதுவே முதல் முறை. இன்று விவசாயம் பல்வேறு காரணங்களால் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. வேளாண் துறை ஒரு தங்கச் சுரங்கம் என்பதை உணர்ந்து கொள்ள நமது ஆட்சியாளர்கள் தவறி விட்டதால்தான், பன்னாட்டுக் கம்பெனிகள் உள்ளே நுழைந்து நம் விவசாயிகள்பால் அக்கறை உள்ளவர்கள்போல் நடித்து இந்தியச் சந்தையைக் கைப்பற்ற முடிந்துள்ளது” என்று விவசாயத்தைப் பற்றிய தெளிவான புரிதலுடன் பேசுகிறார் கோகிலா.

ஓகையூர் உதாரணத்தை நாட்டிலுள்ள மற்ற பயிர்களுக்கும் விரிவுபடுத்த முடியுமானால் நமது விவசாயிகள் மவுனமாகத் துன்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படாது என்பது கோகிலாவின் கருத்து. மேலும் இந்தப் புதிய வகைப் பாசன முறை பற்றித் தெரிந்து கொள்ள அவரையோ (செல் : 9047618171) டேவிட் பியூலாவையோ (செல் : 9486285704) தொடர்பு கொள்ளலாம்.

ஆதாரம் : தி இந்து நாளிதழில் திரு எம்.ஜெ. பிரபு எழுதிய கட்டுரை.

No comments: