Wednesday, January 5, 2011

அறிவியல் தேடலில் சாதனை நிகழ்த்திய குழந்தைகள்

உயிரினங்களிலேயே தாங்கள்தான் புத்திசாலிகள் என்ற எண்ணம் மனிதர்களுக்கு உண்டு. வேறு சில உயிரினங் களுக்கும் நம்மைப் போலவே புத்திசாலித்தனம் உண்டு என்று அறிந்துகொள்வது அவற்றைப் புரிந்துகொள்வதற்கும், அவற்றுக்கு உதவுவதற்கும், அவைகளிடமிருந்து உதவியைப் பெறுவதற்கும் பயன்படும். குரங்குகள் மனித இனத்திற்கு நெருக்கமானவை என்பதால் விஞ்ஞானிகள் அவற்றின் மீது சோதனை செய்து பார்ப்பது வழக்கம். தேனீக்களை நாம் பார்த்திருக்கிறோமே தவிர, அவை மனிதர்களைப் போல சுடோக்கு மாதிரியான புதிர்களை விடுவிக்க முடியும் எனக் கற்பனை செய்து பார்த்ததில்லை. ஆனால் அவைகளுக்கும் சில புதிர்களை விடுவிக்கும் திறமை உண்டு என்பதை அறிந்து கொண்டால் எப்படி இருக்கும்?

இங்கிலாந்து தேவோனில் உள்ள பிளாக்காட்டன் தொடக்கப்பள்ளியில் படிக்கும் 8 வயதிலிருந்து 10 வயது வரை உள்ள 27 குழந்தைகள் தேனீக்களுக்கு அத்தகைய திறமை உண்டு என நிரூபித்துள்ளனர் என்பதை நம்ப முடிகிறதா? அவர்களது சிந்தனையில் உதித்த ஒரு கருத்தை பரிசோதனைக்கு உட்படுத்தி, தாங்கள் கண்டுபிடித்த விஷயத்தை பள்ளி நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்தனர். அந்தக் குறிப்பு ஒரு சர்வதேசத்தரம் வாய்ந்த அறிவியல் இதழ் ஒன்றில் (ராயல் சொஸைட்டியின் `பயாலஜி லெட்டர்ஸ்’ என்ற இதழ்) பிரசுரமாகும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை! ஓர் எளிய ஆனால் புதுமையான அறிவியல் கேள்வி எழும்போது அதை அறிவியல் ரீதியாக அணுகினால் சரியான விடையைக் கண்டுபிடிக்க முடியும் என்பதை அந்தக் குழந்தைகள் உலகிற்கு அறிவித்துள்ளனர்.

அந்த இளம் பிஞ்சுகளின் தேடல் என்னவெனில், க்ஷரஅடெநநெநள எனும் பெரிய தேனீக்களுக்குப் பயிற்சியளித்தால் அவைகளால் வண்ணக்கோலங்களின் அடிப்படையில் சில காட்சிகளை நினைவில் வைத்து, சர்க்கரைக் கரைசல் உள்ள துளைகளை அடையாளம் கண்டுகொள்ள முடியுமா என்பதை அறிந்துகொள்வது தான். குழந்தைகள் என்பதால் விஷயத்தைத் தள்ளிப் போடவில்லை. உடனே செயலில் இறங்கினர். தேனீக்களுக்குப் பயிற்சியளிக்க 16 துளைகள் கொண்ட ஒரு சட்டத்தை அவர்கள் தயாரித்தார்கள். உள்பக்கமாக உள்ள 4 துளைகளில் நீலவண்ணம் ஏற்றப்பட்ட சர்க்கரைக் கரைசலையும் வெளிப்பக்கம் உள்ள 12 துளைகளில் மஞ்சள் வண்ணம் ஏற்றப்பட்ட உப்புக் கரைசலையும் வைத்தனர். பிறகு உள்பக்கத்துளைகளில் மஞ்சள் வண்ணமும் வெளிப்பக்கத் துளைகளில் நீலவண்ணமும் இருக்குமாறு மாற்றியiமைத்து சோதித்தனர். வேறு புதுப்புது வண்ணக் கோலங்களை வைத்தும் சோதித்தனர். இப்பரிசோதனை களின் மூலம் ஒரு குறிப்பிட்ட வண்ணத்தையும் அதைச் சுற்றியுள்ள வண்ணத்தையும் நினைவில் வைத்து சர்க்கரைக் கரைசல் உள்ள துளைகள் எங்கே உள்ளன என்ற புதிரை தேனீக்களால் சரியாக விடுவிக்க முடியும் என்பதைக் குழந்தைகள் கண்டுபிடித்துவிட்டனர்! தங்களுடைய உணவை எந்த வண்ணமுடைய பூவிலிருந்து சேகரிப்பது என்ற முடிவை தேனீக்களால் எடுக்க முடிகிறது என்பதை இந்தப் பரிசோதனை அவர்களுக்கு உணர்த்தியது. திறமையான ஆசிரியர்கள், அறிவியல் வல்லுநர்களின் வழிகாட்டுதல்கள் இரண்டும் கிடைத்துவிட்டால் தலைசிறந்த விஞ்ஞானிகளுக்குச் சமமாக குழந்தைகளால் சிந்திக்கவும் சோதனைகள் செய்து பார்க்கவும் முடியும் என்பதை இந்த நிகழ்ச்சி நிரூபித்திருக்கிறது.

இந்தப் பரிசோதனை குழந்தைகளின் அறிவியல் பற்றிய பார்வையையே மாற்றிவிட்டது. அறிவியல் என்பது எங்கோ எட்டாத உயரத்தில் இருப்பதல்ல, தாம் விளையாடக் கூடிய விளையாட்டையே புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டால் அதை ஓர் அறிவியல் பரிசோதனையாக மாற்ற முடியும் என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். இந்தக் கண்டுபிடிப்பு அறிவியலை எப்படிப் போதிக்க வேண்டும் என்ற பார்வையை நமக்குக் கொடுக்க வேண்டும். இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான பள்ளிகளில் கடைப்பிடிக்கப்படும் மனப்பாடவழிக் கற்றல், கற்பித்தல் முறை, முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட முடிவுகளைத் தரவல்ல சோதனைச்சாலை செய்முறைகள் எல்லாமாகச் சேர்ந்து அறிவியல் மீதான ஆர்வத்தையும், புதியனவற்றைத் தேடும் ஊக்கத்தையும், படைப்பாற்றலையும் குழந்தைகளிடம் ஏற்படுத்தத் தவறிவிட்டன என்றே கூறலாம். பழக்கப்பட்ட பாதையிலேயே பயணிக்குமாறு குழந்தைகளை நிர்ப்பந்திப்பதால்தான் வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்தும் ஆய்வு முடிவுகளை நம்மால் தர இயலாமல் போகிறதோ? நம் நாட்டில் உள்ள புகழ்பெற்ற அறிவியல் கூடங்களில் பணியாற்றும் விஞ்ஞானிகளும் ஆசிரியர்களும் சிந்திக்க வேண்டும்.

பிளாக்காட்டன் நிகழ்ச்சியிலிருந்து அவர்கள் உத்வேகம் பெற்று நம் பள்ளிக் குழந்தைகளுக்கு உண்மையான அறிவியலையும் தேடல் மனோபாவத்தையும் அறிமுகப்படுத்தத் தொடங்கினால் ஒளிமயமான எதிர்காலம் கண்முன்னே விரிவதைப் பார்க்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.

நமது விஞ்ஞானிகளும், ஆசிரியர்களும் இந்தச் சவாலுக்குத் தயாராவார்களா?

நன்றி : தி இந்து ஜன. 1 தலையங்கம்

No comments: