இன்டக்ஷன் குக்கர் பயன்படுத்தினால் உடல்நலத்திற்குத் தீங்கு ஏற்படுமா?
பொதுவாக நாம் பயன்படுத்தும் குக்கர்களில் எரிபொருளை எரிப்பதாலோ, மின்சக்தியை உபயோகித்தோ வெப்பம் உருவாக்கப்படுகிறது. சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பாத்திரம் இதனால் சூடுபடுத்தப்படுகிறது. இன்டக்ஷன் குக்கரில் பாத்திரமே சூடுபடுத்தும் வேலையைச் செய்துவிடும்.
இது மின்காந்தத் தூண்டுதலினால் நிகழ்கிறது. வேகமாக மாறும் ஒரு காந்தப்புலத்தை ஒரு மின்னோட்டமுள்ள கம்பிச்சுருள் உருவாக்குகிறது. பாத்திரம் கம்பிச்சுருளின் மீது பொருத்தப்பட்டிருப்பதால் அதில் சுழல் மின்னோட்டங்கள் தூண்டப்படுகின்றன. பாத்திரம் ஒரு காந்த சக்தியுள்ள பொருளால் ஆனதெனில், காந்தப் புலத்திற்கு அதோடு நல்ல இணைப்பு ஏற்படுகிறது. 40 கிலோ ஹெர்ட்ஸிலிருந்து 100 கிலோ ஹெர்ட்ஸ் வரை மாறும் காந்தப் புலத்தின் அதிர்வெண் இருக்கும். இது மைக்ரோவேவ் அடுப்புடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவானது. மைக்ரோவேவ் அடுப்பில் பாத்திரத்தில் உள்ள உணவு நேரடியாகச் சூடுபடுத்தப்படுகிறது. பாத்திரம் சூடு அடைவதில்லை. ஆனால் இன்டக்ஷன் குக்கரில் சுழல் மின்னோட்டங்கள் காரணமாக பாத்திரத்தின் அடிப்பாகம் சூடுபடுத்தப்படுகிறது. அந்த சூடு பாத்திரத்தில் இடப்பட்டுள்ள பொருளுக்குக் கடத்தப்படுகிறது.
மைக்ரோவேவ் அடுப்பில் மின்காந்த அலைகளின் கசிவு முற்றிலும் தடுக்கப்படுகிறது. அப்படி கசிவு ஏதும் ஏற்படின், அது உடல் நலத்திற்குத் தீங்கினை உண்டாக்கும். இன்டக்ஷன் குக்கர் குறைவான அதிர் வெண்ணில் செயல்படுவதால், மின்காந்த அலைகளினால் உடல்நலத்திற்கு தீங்கு ஏதும் ஏற்படாது.
No comments:
Post a Comment