இந்தியாவில் இன்று வேகமாக வளர்ந்துவரும் நோய்களில் நீரிழிவும் ஒன்று. உலக சுகாதார நிறுவனம் அடுத்த 20 ஆண்டுகளுக்குள் இந்தியாவுக்கு ஏற்பட இருக்கும் ஆபத்து பற்றி எச்சரித்திருக்கிறது. 1995-ல் நீரிழிவு பாதிப்பு அடைந்த இந்தியர்களின் எண்ணிக்கை
1 கோடியே 80 லட்சமாக இருந்தது. 2030-ல் அது 8 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. நீரிழிவு நோயாளிகளில் 18 சதம் பேருக்கு `ரெட்டினோபதி’ எனும் கண் பார்வை பாதிப்பு ஏற்படுகிறது.
பார்வையைப் பறித்துவிடும் நோய்
நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு தங்களுக்கு அந்த பாதிப்பு இருக்கிறது என்பதே தெரியாது. நீரிழிவு தாக்கியவர்களில் மிகச் சிறிய சதவீதத்தினருக்கே கண் பார்வை பரிசோதிக்கப்படுகிறது. நீரிழிவினால் ஏற்படும் ரெட்டினோபதிக்கு சிகிச்சை அளிக்க எல்லா மருத்துவர்களுக்கும் பயிற்சி கிடையாது. ரெட்டினோபதி கண்பார்வையையே பறித்துவிடக் கூடிய நோய் என்பதால் நாம் அனைவரும் அதைப் பற்றி அவசியம் தெரிந்து கொண்டாக வேண்டும்.
பொதுவாகவே நீரிழிவு நோயை சரியாகக் கவனிக்கவில்லையெனில் அது பார்வையிழப்பு, இதயக்கோளாறுகள், சிறுநீரக செயலிழப்பு, கைகால்கள் துண்டிப்பு போன்ற ஆபத்துகளுக்கு இட்டுச் சென்றுவிடும். சரியான உணவு, போதுமான உடற்பயிற்சி, தனிப்பட்ட மருத்துவக் கவனிப்பு ஆகிய மூன்று நடவடிக்கைகளின் மூலம் நீரிழிவைக் கட்டுக்குள் வைக்க முடியும். ஒருவருக்கு `ரெட்டினோபதி’ நோய் இருந்தால் பார்வையிழப்பு ஏற்படுவதற்கு முன்பே கவனித்து குணப்படுத்திவிட முடியும். (தகவல் : தி இந்து)
ரெட்டினோபதி என்றால்...
கண் ஒரு காமிராவைப் போல செயல்படுகிறது. கண்ணின் முன்புறம் உள்ள விழிப்படலத்தின் வழியாக உள்ளே புகும் ஒளி, விழித்திரையின் மீது விழி லென்ஸினால் குவிக்கப்படுகிறது. விழித்திரை ஒளியை நரம்புத் தகவல்களாக அவற்றை மூளைக்கு அனுப்புகிறது.
விழித்திரையில் உள்ள பல்வேறு ரத்தக் குழாய்களிலிருந்தே அதற்குத் தேவையான சக்தி கிடைக்கிறது. பொதுவாக, ரத்தக் குழாய்களில் கசிவு இருக்காது. ஆனால் நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களின் விழித்திரை ரத்தக்குழாய்களில் ரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் பாதிப்படையும் விழித்திரை சரியாகச் செயல்படாமல் போகும். இதுவே நீரிழிவு ரெட்டினோபதி எனப்படுகிறது.
முறையான பரிசோதனை தேவை
இந்த பாதிப்பு வருவதில் பிரச்சனை என்னவெனில், உடனடியாக அறிகுறிகள் ஏதும் தெரிவதில்லை. பாதிப்பு கடுமையாகும் வரை பார்வையில் குறைவு ஏதும் ஏற்படாது. எனவே, நீரிழிவு உள்ளவர்கள் ரெட்டினோபதி பாதிப்பு இல்லாமல் இருக்கிறதா என்று முறையாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும். சிறந்த கண் மருத்துவமனைகளில் மட்டுமே இந்த பரிசோதனை செய்யப் படுகிறது. ஒரு சாதகமான அம்சம் என்னவெனில், ரெட்டினோபதி முற்றிய நிலையில் கூட விழித்திரை கடுமையாகப் பாதிப்படைவதற்கு முன் சிகிச்சை எடுத்துக் கொண்டால் பார்வை மேலும் மோசமாகாமல் தடுத்துவிட முடியும். இருக்கிற பார்வையைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.
நீரிழிவு உள்ளவர்கள் கீழ்க்கண்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் :
* ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
* புகை பிடிப்பவராக இருப்பின், அதை விட்டுவிட வேண்டும்.
* ஆரோக்கியமான உணவு முக்கியம். கார்போஹைட்ரேட், கொழுப்புச் சத்துள்ள உணவுகளை அளவோடு உட்கொள்ள வேண்டும்.
* நீண்ட காலமாக நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் கண் பார்வையை வருடத்திற்கொரு முறை சோதித்து விழித்திரை பாதிப்பு அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment