Friday, November 12, 2010

சர்வதேச விருது பெற்ற மாணவ விஞ்ஞானிகள்

குஜராத் ராஜ்காட்டிலுள்ள எஸ்.ஜி. தோலாக்கியா உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர் ஹீடல் காந்திபாய் வைஷ்ணவ். பி.வி. மோடி பள்ளியில் படிக்கும் மாணவர் ஆங்குர் காந்திபாய் வைஷ்ணவ். இவர்கள் இருவரும் இணைந்து விவசாயக் கழிவுப் பொருட்கள், பூண்டுக் கழிவு இரண்டிலிருந்தும் உருவாக்கிய பசையைப் பயன்படுத்தி ஒரு துகள் பல கையைத் தயாரித்துள்ளனர்.

துகள் பலகை என்பது மரத்தூள்களிலிருந்தும் மரத்துண்டுகளிலிருந்தும் பொருத்தமான பசையைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் ஒரு பலகை. துகள் பலகைகளைக் கொண்டு மேஜை, நாற்காலி, கட்டில் போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் செய்யப்படுகின்றன. சுற்றுச் சூழலுக்கும் உடல்நலத்திற்கும் கேடு விளைவிக்கும் ஃபீனால் ஃபார்மால் டிஹைட், மெலாமின் ஃபார்மால்டிஹைட் போன்ற பொருட்கள் அடங்கிய பசை களைக் கொண்டு துகள் பலகைகள் தயாரிக்கப்படுகின்றன.

சுற்றுச்சூழலுக்கு ஆபத்து விளைவிக்காதது

சுற்றுச்சூழலுக்கு ஆபத்து விளைவிக்காத புதிய கண்டுபிடிப்புகளைத் தருவோருக்கு `ஐ-ஸ்வீப்’ என்ற நிறுவனம் சர்வதேச விருது அளித்து கவுரவிக்கிறது. ஹீடலும், ஆங்குரும் தயாரித்த துகள் பலகை அப்படிப்பட்ட கண்டுபிடிப்பு என்பதால் அவர்கள்அந்த விருதைத் தற்போது பெற்றுள்ளனர். அம்மாணவர்களிடமிருந்து கிடைத்த விவரங்கள் :

அறுவடை முடிந்தபிறகு, கோதுமை அல்லது நிலக்கடலை உமி, பருத்தி எடுத்தபிறகு மிச்சமிருக்கும் காய்ந்த செடி போன்ற கழிவுகளை விவசாயிகள் அவற்றை எரித்துவிடுவது வழக்கம். இப்படி எரிப்பதால் காற்று மாசுபடுகிறது. பி.டி. விதைகளிலிருந்து வளர்க்கப்பட்ட பயிர்கள் மண்புழுக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துபவை. அப்பயிர்களின் கழிவுகள் மண்ணிலேயே நீண்ட காலத்திற்கு இருந்தால் அவை மண்வளத்தையே கெடுக்கக் கூடியவை. பி.டி. பயிர்க்கழிவுகளை பசுமை உரங்களாகவும் பயன்படுத்த முடியாது.

பூண்டின் ஆயுள் 6-லிருந்து 8 மாதங்கள் வரைதான். அறுவடை செய்ததிலிருந்து நுகர்வோரைச் சென்றடைவதற்குள் 25 சத பூண்டு வீணாகிவிடுகிறது. ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியிருப்பதாலும் சேமிப்புக் கிடங்குகளில் நீண்ட காலத்திற்கு வைத்திருப்பதாலும் இவ்வாறு நேர்கிறது. இப்படி வீணாகும் பூண்டு அப்படியே தூக்கியெறியப்படுகிறது. அந்தக் கழிவையும் வேளாண் கழிவுகளையும் பயன்படுத்தியே ஹீடலும், ஆங்குரும் துகள் பலகையைத் தயாரித்துள்ளனர்.

விவசாயிகளுக்கு கூடுதல் நன்மை

இதனால் விவசாயிகளுக்கு ஒரு நன்மை. வேளாண் கழிவுப் பொருட்களையும் பூண்டுக் கழிவையும் விற்று வருமானம் ஈட்டக் கூடிய வாய்ப்பை இப்புதிய கண்டு பிடிப்பு அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அத்துடன் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதால் கிராமப்புற வேலையின்மையைக் குறைக்க முடியும். இப்படி பல்வேறு விதங்களில் மாணவர்களின் கண்டுபிடிப்பு சமூகத்திற்குப் பயன்பட உள்ளது.

ஹீடலும், ஆங்குரும் விவசாயிகள் வீட்டுப் பிள்ளைகள் என்பதால் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவி செய்ய அவர்கள் பண்ணைக்குச் செல்வார்கள். அப்படிச் சென்றபோது, விளையும் பயிரின் அளவைவிட பயிர்க் கழிவுகளின் அளவு கூடுதலாக இருப்பதை அவர்களால் பார்க்க முடிந்தது. எனவே, வேளாண் கழிவுகளைப் பயன்படுத்தி ஏதாவது உபயோகமான பொருட்களைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குத் தோன்றியது.

மண்ணெண்ணெய் விளக்கின் கண்ணாடிக் கூடு உடைந்தபோது அதை ஒட்ட வைப்பதற்கு பூண்டைப் பயன்படுத்தியதாக அவர்களது பாட்டி ஒரு முறை கூறியிருந்தார். இவர்களும் அது உண்மைதான் என்பதைப் பரிசோதித்துப் பார்த்துத் தெரிந்து கொண்டனர். பூண்டுக் கழிவுக்கு வேளாண் கழிவுகளை ஒட்ட வைக்கும் அளவுக்கு திறன் இருக்கிறதா என்பதையும் வேறொரு பரிசோதனை மூலம் அறிந்து கொண்டனர். சர்வதேச அளவில் நடந்த கண்காட்சிக்குச் சென்று மிகச் சிறந்த விஞ்ஞானிகளைச் சந்தித்து அவர்களிடம் உரையாடி, சுற்றுச்சூழல் பற்றி பல தகவல்களைத் தெரிந்து கொண்டு இவர்கள் திரும்பியிருக்கின்றனர். இப்படி அறிவியல் கண்டுபிடிப்புகளில் நேரத்தைச் செலவிட்டதால் தங்கள் படிப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்பட வில்லை என்று இவர்கள் கூறுகின்றனர்.

இந்த சர்வதேச விருதைப் பெறுவதற்கு முன் இவ்விரு மாணவர்களும் தேசிய அளவில் அறிவியல் கண்காட்சிகளில் பங்கேற்று விருது பெற்றுள்ளனர். புத்தகங்களிலிருந்து பெறும் அறிவைத் தாண்டி அறிவியல் படைப்புத்திறன் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ள வேண் டும், பல அறிவியல் கண்காட்சிகளில் பங்குபெற்றுத் தங்கள் படைப்புத் திறனை அவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் இந்த மாணவச் செல்வங்கள்.

No comments: