Sunday, November 28, 2010

வெப்பத்தை பூட்டிவைக்க முடியுமா?

மின்னாற்றலை சேமிக்கக்கூடிய சேம மின்கலங்களை நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வருகிறோம். இவைகளைப் போன்று வெப்ப ஆற்றலை சேமித்து வைத்து மீளவும் பயன்பாட்டிற்கு அளிக்கவல்ல சேம வெப்ப கலங்கள் சாத்தியமா? இதுவரையில் வெறும் வினாவாக இருந்துவந்த இந்த வாக்கியத்திற்கு இப்போது விடை கிடைத்திருக்கிறது. மசாசூஸட்ஸ் தொழில் நுட்பக்கழக அறிவியலாளர்கள் சூரியனிடமிருந்தோ, வேறு வெப்ப மூலங்களில் இருந்தோ வெப்ப ஆற்றலை பெற்று சேமிக்க முடியும் என்றும், நமக்குத் தேவையானபோது மீளவும் பெறமுடியும் என்றும் கண்டறிந்துள்ளனர்.


Ruthenium என்னும் தனிமத்திற்கு ஒளி ஆற்றலை சேமிக்கும் திறன் உண்டு. மிக அரிதாக இந்த தனிமம் கிடைப்பதால் இதன் விலையும் அதிகம். Ruthenium த்தின் கூட்டுப்பொருளான fulvalene diruthenium எனும் கூட்டுப்பொருள் வெப்ப ஆற்றலை சேமித்து வைக்கவும், நாம் வேண்டும்போது வெப்ப ஆற்றலை மீள அளிக்கவும் வல்லது என இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

1996ல் கண்டுபிடிக்கப்பட்ட fulvalene diruthenium எனும் கூட்டுப்பொருள் Ruthenium ஐக்காட்டிலும் விலை குறைவானது. அக்டோபர் 20ல் வெளியாகி உள்ள Angewandte Chemie என்னும் இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. சூரிய ஒளியை fulvalene dirutheniumத்தின் மூலக்கூறு ஈர்த்துக்கொள்ளும்போது அணுக்களின் ஆற்றல் மட்டங்கள் உயர்வடைகின்றன. இவ்வாறு உயர்வடைந்த ஆற்றல் மட்டங்கள் நிலையாக இருப்பதால் வெப்ப ஆற்றலை சேமித்தல் சாத்தியமாகிறது. ஒரு சிறு அளவிலான வெப்பத்தையோ, வினை ஊக்கியையோ அளிப்பதன்மூலம் மூலக்கூறு தன்னுடைய பழைய வடிவத்தை அடையும். இந்த நிகழ்வின்போது வெப்ப ஆற்றல் மீள வெளிப்படும். இத்தகைய வெப்ப சேமிப்புக்கலங்களின் மூலம் 200 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரையில் மீளப்பெறமுடியுமாம்.

இந்த வெப்ப நிலையைக்கொண்டு வீட்டின் உட்புறத்தை வெப்பமாக்கலாம். அல்லது ஒரு வெப்ப மின் உற்பத்தி சாதனத்தை இயக்கலாம். வெப்ப ஆற்றலை ஒரு எரிபொருளாக சேமிக்க இயலும்; அதுவும் நீண்ட காலம் சேமிக்க முடியும் என்பதும் கூடுதல் சிறப்புகள். இவை எங்கும் எடுத்துச்செல்லக்கூடியவை.

Ruthenium அரிதாக கிடைக்கக்கூடிய தனிமம் என்பதால் விலையும் அதிகம். ஆனால் rutheniumஐக்கொண்டு மூலக்கூறின் உள்ளே நடக்கும் செயல்பாடுகளை அறிவியலாளர்கள் அறிந்துகொண்டுள்ளனர். இனிமேல் rutheniumஐப்போன்று செயல்படக்கூடிய விலை குறைவான எளிதில் கிடைக்கக்கூடிய தனிமங்களையோ, கூட்டுப்பொருட்களளயோ உருவாக்குவது இந்த ஆய்வின் அடுத்த இலக்கு.

No comments: