Tuesday, November 23, 2010
கல்லீரல் புத்துருவாக்கம்
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக ஏராளமானோர் காத்திருக்கும் நிலையில், கல்லீரலை கொடையாக வழங்கக்கூடியவர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை. இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கான கண்டுபிடிப்பு ஒன்று அண்மையில் நிகழ்த்தப்பட்டுள்ளது. Wake Forest University Baptist Medical Center அறிவியலாளர்கள் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள். ஆய்வுக்கூட சூழலில் ஒரு கல்லீரல் புத்துருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வு தற்போது வெற்றிகரமாகக் கருதப்பட்டாலும் நடைமுறை செயல்பாட்டுக்கு வர இன்னும் பல படிநிலைகளை கடக்க வேண்டியுள்ளது.
இந்த ஆய்வில், விலங்குகளின் கல்லீரலில் உள்ள அனைத்து செல்களும் மென்மையான டிட்டர்ஜண்ட் உதவியால் அகற்றப்பட்டன. ஆனால் செல்களை தாங்கிப்பிடிக்கும் அடிப்படைக் கட்டமைப்பு மட்டும் அப்படியே இருக்குமாறு செய்யப்பட்டது. இந்த நிகழ்வு decellularization என்றழைக்கப்படுகிறது. Decellularization காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்தில் முதிர்ச்சியடையாத நிலையில் உள்ள மனிதசெல்கள் (progenitors) நிரப்பப்பட்டன. இரத்தக்குழாய்களை உருவாக்கும் endothelial செல்களும் இந்த வெற்றிடங்களில் நிரப்பப்பட்டன. இந்த அமைப்பு முழுவதும் ஒரு உயிரி உலையினுள் (bioreactor) வைக்கப்பட்டது. உயிரி உலைகள் உறுப்பு முழுமைக்கும் ஆக்சிஜனையும் உயிரூட்டப் பொருட்களையும் வழங்கவல்லவை. ஒரு வாரம் கழித்து உருவான மனித திசுக்கள் ஆராயப்பட்டபோது அவற்றில் மனித கல்லீரலின் செயல்பாடு காணப்பட்டது. ஆய்வுக்கூடத்தில் இதற்கு முன்பாக விலங்குகளின் கல்லீரல்கள் உருவாக்கப்பட்ட போதிலும் மனித கல்லீரலை உருவாக்கும் முயற்சியின் தொடக்கநிலை வெற்றி இது.
உயிரி தொழில்நுட்பத்தால் விளைந்த கல்லீரலைக்கொண்டு புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் மருந்துகளின் செயல்பாடுகளைக்கூட ஆராய முடியும். ஆய்வுக்கூடத்தில் சிறுநீரகம், பித்தப்பை போன்ற உறுப்புகளை புத்துருவாக்கம் செய்வதற்கான வழிவகைகளை அறிவதற்கு இந்த ஆய்வு உதவக்கூடும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
தகவல்: மு.குருமூர்த்தி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment