Friday, November 19, 2010

மீண்டும் நெருக்கடி!

“முடியவே முடியாது...” என்று பலமாகத் தலையாட்டிருக்கிறார்கள் 51 அமெரிக்கப் பொருளாதார வல்லுநர்கள். தங்கள் நாட்டின் பொருளாதாரம் நடப்பாண்டு மற்றும் அடுத்தாண்டு ஆகிய இரண்டு ஆண்டுகளில் முன்னேறுமா என்று கேட்டதற்குத்தான் உலுக்காத குறையாகத் தலையாட்டிவிட்டார்கள். ஓரிரண்டு வல்லுநர்களின் கருத்துகளைக் கேட்டால் அது ஒருதரப்பாகவே முடிந்து விடுகிறது என்ற எண்ணத்தில் இந்த ஆய்வை வாஷிங்டனைச் சேர்ந்த ஒரு ஆய்வு நிறுவனம் நடத்தியது.

புளு சிப் பொருளாதாரக் குறியீடுகள் என்று அழைக்கப்படும் இந்த ஆய்வில், அடுத்த ஆண்டின் மத்தியப் பகுதி வரையிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்குப் போதுமான அளவில் வளர்ச்சி இருக்கப்போவதில்லை என்று தெரிய வந்துள்ளது. நாடாளுமன்றத்தில் இரண்டு பெரிய கட்சிகளின் பலம் மாறியுள்ளதையும் இந்த வல்லுநர்கள் கணக்கில் எடுத்துக் கொண்டு கருத்து சொல்லியிருக்கிறார்கள்.

நவம்பர் 4 மற்றும் 5 ஆகிய இரு தேதிகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டாலும், கடந்த இரண்டு ஆண்டுகளோடு ஒப்பிடும்போது பரவாயில்லை என்றிருக்கும். ஆனால் நெருக்கடியிலிருந்து மீட்கும் அளவுக்கு இருக்காது என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்கள்.

வல்லுநர்கள் தெரிவித்துள்ள கருத்துகளில், வீடுகளின் விலைகள் குறித்து கருத்து மிகவும் முக்கியமானதாகும். அடுத்த மாதம் ஜூன் மாதத்தில் தற்போதுள்ளதை விட வீடுகளின் விலைகள் குறைவாக இருக்கும் என்று எச்சரித்துள்ளார்கள். வீடுகளின் விலைகள் விழுந்ததால் கடன்கள் கட்டாமல் போய் வங்கிகள் திவாலாகின.

வீட்டு அடமானக்கடன்தான் நெருக்கடியைத் துவக்கியது. மீண்டும் விலைகள் உயர்ந்தால் மறுபடியும் நெருக்கடிதானே...?

எந்தக் காலம் வளர்ச்சிக்காலம்?

2009 ஆம் ஆண்டில் பொருளாதார ரீதியாக நல்ல வளர்ச்சி கண்ட 40 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று உலக வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது. ஏழ்மையிலும் பெரும் “வளர்ச்சி”யைக் கண்டிருக்கிறது என்பதை கண்டும் காணாமல் விட்டுவிட்டால், மகிழ்ச்சியான விஷயமாகத் தான் இருக்க முடியும்,

அது ஒருபுறமிருக்க, உலக வங்கி எதை வளர்ச்சி என்று கூறுகிறது? 2005 ஆம் ஆண்டிலிருந்து வர்த் தகத்தை தாராளமயமாக்கும் வகையில் 18 சீர்திருத்தங் களை இந்தியா செய்திருக் கிறது. கூடுதல் வாய்ப்பு களை இந்த சீர்திருத்தங்கள் உருவாக்கின என்று உலக வங்கி புளகாங்கிதமடைந்து “ஆஹா.. ஓஹோ...” என்று பாராட்டியுள்ளது.

மக்களின் வாழ்நிலையில் பெரும் மாற்றம், வறுமைக் குறைப்பு, வேலை வாய்ப்புகள் உருவாக்கம், சுகாதார வசதிகள் அதிகரிப்பு, மக்களின் வருமான உயர்வு என்ப தெல்லாம் பொருளாதார வளர்ச்சிக்கான அம்சங்களாக இல்லாமல் போய்விட்டது. இதைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், முதுகைத் தட்டிக்கொடுத்து மேலும் சுரண்டுவதற்கான வாய்ப்பு பறிபோய் விடுமல்லவா?

அது சரி, இவர்களின் கணக்கிலே கூட இந்தியா எந்த நிலையில் இருக்கிறது? 183 நாடுகளில் 134வது இடத்தில் இருக்கிறது. 2008 ஆம் ஆண்டில் 135வது இடத்தில் இருந்தது. இதைத் தான் நல்ல வளர்ச்சி என் கிறது உலக வங்கி. 20 ஆண்டுகளுக்கு முன்பும், தற்போதும் கிசான் விகாஸ் பத்திரங்களில் முதலீடு செய் துள்ள நடுத்தர, சாமானிய மக்களுக்கு பொருளாதார வளர்ச்சியின் வித்தியாசம் நன்றாகவே புரியும். ஐந்தரை ஆண்டுகளில் இரண்டு மடங்கு ஆனது அந்தக் காலம். எட்டரை ஆண்டு கள் ஆவது இந்தக்காலம். இதில் எது பொருளாதாரம் நன்றாக இருந்த காலம்..??

No comments: