Wednesday, November 17, 2010

ஆக்கிரமிப்பாளர் யார்?

தன்னுடைய வயலின் அருகில் ஒரு முதியவர் நாற்காலி போட்டு அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றிலும் கண்ணைக் கவரும் காட்சிகள். மரங்களால் மூடப்பட்ட மலையுச்சியின் மேலே கருமேகங்கள் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தன. மாலைச் சூரியன் மேகங்கள் வழியாக ஊடுருவி மலையடிவாரக் காடுகளின் மீது ஒளி வீசிக் கொண்டிருந்தது. காடுகளை ஒட்டி பசுமையான வயல்கள் பரந்து விரிந்து கிடந்தன. ஆனால் இந்த அழகையெல்லாம் ரசிக்கும் மனநிலையில் அந்த முதியவர் இல்லை. முதல் நாள் இரவு பக்கத்துக் கிராமத்திற்கு வந்த ஒரு யானைக் கூட்டம் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்கதிர்களையெல்லாம் தின்று தீர்த்துவிட்டுப் போய்விட்டது. யானைகள் வந்தால் அவற்றை விரட்டி விட்டு தமது வயல்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கிலேயே அவர் அங்கே உட்கார்ந்திருந்தார். காட்டுக் கரடிகளும் புள்ளி மான்களும் கூட வயல்களுக்கு வருகை தருவது உண்டு. ஆனால் யானைகளோடு ஒப்பிடும்போது அவை விளைவிக்கும் நாசம் குறைவுதான். அவற்றை விரட்டிவிடுவதும் எளிது.

கிராமத்தாருடைய வேலை இது மட்டுமல்ல. கடந்த சில ஆண்டுகளாக, ஒரு சிறுத்தை கிராமத்துக்குள் நுழைந்து ஆடுமாடுகளை அடித்து எடுத்துச் சென்றுவிடுகிறது. சமயங்களில் சிறு குழந்தைகளை அது தூக்கிக்கொண்டு சென்றுவிடும். அவ்வப்போது பழத்தோட்டங்களுக்கு வரும் குரங்குகள் பழங்களைக் காலி செய்துவிட்டுப் போவதும் நடக்கும். சில காட்டுப் பறவைகள் நிலக்கடலை, சூரியகாந்தி வயல்களுக்கு வந்து நாசம் விளைவிப்பதும் உண்டு.

காட்டு விலங்குகளால் ஏற்பட்ட பயிரிழப்புக்கான இழப்பீட்டினை அரசு ஓரளவுக்கு வழங்குகிறது. ஆனால் மாதக் கணக்காக உழைத்து உருவாக்கிய விளைபொருள் இப்படி வீணாகப் போவதையோ, அருமையாக வளர்த்த வீட்டுப் பிராணிகள், குழந்தைகள் காணாமல் போவதையோ யாரால் தாங்கிக் கொள்ள முடியும்?

காட்டு விலங்குகளிலிருந்து வயல்களைப் பாதுகாக்க மக்கள் பல்வேறு வழிகளைக் கையாண்டு பார்த்துவிட்டனர். வயல்களைச் சுற்றி மின்சார வேலிகள் அமைத்தனர் ; சிறுத்தையைப் பொறி வைத்துப் பிடிக்க ஆடுகள் கட்டப்பட்ட கூண்டுகளை வைத்தனர் ; சில சமயங்களில் சிக்கும் விலங்குகளை சுட்டுக்கொன்றனர் ; அல்லது விஷம் வைத்துக் கொன்றனர். இதனாலெல்லாம் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை.

முன்பு நிலைமை இப்படி இல்லை. காட்டை விட்டு விலங்குகள் எப்போதாவதுதான் வயல்களுக்கு வரும். மக்கள் தொகை வளர வளர, மனிதத் தேவைகள் அதிகரிக்கின்றன. அதனால் காடுகளை அழித்து வசிப்பிடங்களாகவோ, வயல்களாகவோ மாற்றுவதும் அதிகரித்துவிட்டது. காட்டு விலங்குகளின் இருப்பிடங்களை ஆக்கிரமித்துக் கொண்டதோடு மட்டுமல்ல, அவற்றின் உணவு ஆதாரங் களையும் மனிதர்கள் அபகரித்துக் கொண்டு விட்டனர். தற்போது பெரிய காடுகள் சிறு சிறு காடுகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றைச் சுற்றிலும் வயல்களாகவும் இருப்பிடங்களாகவும் இருக்கும் நிலைமை தோன்றிவிட்டது. விலங்குகள் ஒரு காட்டிலிருந்து இன்னொரு காட்டிற்குச் செல்லும் பாதைகளும் அடைபட்டுவிட்டன. எனவே, வேறுவழியின்றி, அவை மக்கள் இருப்பிடங்களை நோக்கிவரத் தொடங்கிவிட்டன.

விலங்குகள் கிராமங்களில் நுழைவதை ஆக்கிரமிப்பு என்கிறோம். ஆனால் உண்மையில் ஆக்கிரமிப்பாளர்கள் யார்?

விலங்குகளைப் பிடித்து வேறு இடங்களில் கொண்டு விடுவதோ அல்லது விரட்டி விடுவதோ தற்காலிகத் தீர்வு தான். நீண்டகால நோக்கில் அவை பிரச்சனையைத் தீர்ப்பதில்லை. அந்தந்த இடத்திற்குத் தகுந்த, அறிவியல்பூர்வமான, நடைமுறைக்கேற்ற வழிமுறைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். விலங்குகளின் சுற்றுச்சூழலையும் அவை இடம் பெயரும் பாதைகளையும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இனியும் காடுகள் அழிபடுவதைத் தடுத்து நிறுத்தி விலங்குகள் பாதுகாப்பாக உணரக் கூடிய சரணாலயங்களை உருவாக்க வேண்டும்.

காட்டுவிலங்குகளால் பயிருக்கும் மனித உயிர்களுக்கும் ஏற்படும் இழப்பையும் மீறி உலகின் மற்ற பகுதிகளோடு ஒப்பிடும்போது இந்தியர்கள் காட்டுயிர்கள் மீது பரிவையே காட்டி வந்துள்ளனர். நமது வாழ்க்கையில் கலாச்சார ரீதியாக பல மிருகங்களுக்கு கொடுக்கும் முக்கி யத்துவம் இதற்கு ஒரு காரணம். ஆனாலும் அவ்வப்போது விலங்குகளோடு நமக்கு ஏற்படும் முரண்பாடுகளைக் களைந்து தற்போதிருக்கும் விலங்கினங்களையும் பறவையினங்களையும் அழியாது பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு நம்மிடையே இருப்பதாகக் கூற முடியாது. அப்படிப்பட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் காலத்தின் கட்டாயம்.

(ஆதாரம் : இந்து இதழின் `யங் வோர்ல்ட்’ இணைப்பில் திரு பி. ஜெகந்நாதன் எழுதிய கட்டுரை)

No comments: