Thursday, October 7, 2010

தஞ்சை கோயில்: ஆயிரமாண்டு அதிசயம்

தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாண்டு விழாவைக் கொண்டாடியிருக்கிறது தமிழக அரசு. இந்தச் சமயத்தில் புராதனக் கலை-இலக்கியங்கள் பற்றி மாமேதை மார்க்ஸ் கூறி யது நினைவுக்கு வருகிறது. “கிரேக்கக் கலை யும், இதிகாசக் கவிதைகளும் சமுதாய வளர்ச் சியின் சில குறிப்பிட்ட வடிவங்களுடன் தொடர்பு கொண்டிருக்கின்றன என்பதை புரிந்து கொள்வதில் நமக்குச் சிரமம் இல்லை. ஆனால், அவை இன்னும் நமக்கு அழகியல் இன்பத்தைத் தருகின்றன. சில அம்சங்க ளில் அவை உயர்தரமானதாக, நாம் எட்டவே முடியாத இலக்காக நிற்கின்றன என்பதுதான் வியப்பளிக்கும் விஷயமாகும்” என்றார் அவர்.

தஞ்சை கோயிலுக்குள் நுழையும் போது, அதன் கோபுரத்தை நிமிர்ந்து பார்க்கும்போது நம்முள் ஏற்படும் பரபரப்பை, பரவசத்தை தவிர்க்க முடியவில்லை. கம்பீரமான அழகிற்கு, தொன்மையான அதிசயத்திற்கு இருக்கும் தனி ஈர்ப்பு அது. அழகியலுக்கு என்று தனி விதிகள் இருக்கின்றன. அவை வேலை செய்கின்றன.

அந்த 216 அடி உயர கோபுரத்தைச் சற்று தொலைவிலிருந்து பார்க்கும் போது அது வானத்தைத் தொட்டு நிற்பதாகப் படும். மேகத் திரள்கள் அதை உரசிக் கொண்டு போவதாகத் தெரியும். அதன் 16 அடுக்குகளும் ஓராயிரம் ஆண்டுகளாக ஒன்றாக நின்று அந்த ஜாலத் தைச் செய்கின்றன.

உயர் கோபுரங்கள் எல்லாம் பொதுவாகக் கோயிலின் சுற்றுச்சுவர் வாயில்களில் இருக் கும். தஞ்சை பெரிய கோயிலிலோ அது கரு வறை மீதே இருக்கிறது. பிற கோபுரங்களில் எல்லாம் உச்சியானது பல கும்பங்களைப் பொருத்துகிற அளவுக்கு நீள் செவ்வகமாக இருக்கும். இதுவோ மன்னனின் சிரசில் இருக்கும் மணி மகுடம் போல உருண்டை யாக அமைந்து, ஒரே கும்பத்தைத் தாங்கி நிற் கிறது. இந்த பாணி கோபுரத்தில் உலகத்தி லேயே இதுதான் மிக உயரமானது.

கோபுரம் மட்டுமல்ல, அதன் அடிவாரத்தி லிருந்து புறப்படும் முழுக் கோயிலும் அந்தப் பிரகாரத்திற்குள்ளேயே நமக்கு அப்படியே காட்சியளிக்கிறது. அது பூரணமானது. அந்தப் பூரணத்தை எதுவும் மறைக்கவில்லை. மேகங்கள் மறைக்காத முழு நிலா போல அது பூமியில் அமர்ந்திருக்கிறது.

இதெல்லாம் சேர்ந்துதான் அந்த அழகி யல் இன்பத்தை நமக்கு அளிக்கிறது போலும். சில மகத்தான கலைஞர்களின் கற்பனை யில் இது முதலில் எழுந்திருக்க வேண்டும். அதைக் கல்லில் கொண்டு வந்தது சாதாரண சாதனை அல்ல, உலக மகா அற்புதம்.

வினோதம் என்னவென்றால், தஞ்சை யிலும் அதன் சுற்றுப்புறத்திலும் குன்றுகள் இல்லை. அவை சுத்தமான சமவெளிகள். கோயிலுக்கான கற்கள் புதுக்கோட்டையிலி ருந்து வந்திருக்கவேண்டும் என்கிறார்கள். கொண்டு வந்து கொட்டியிருக்கலாம். அந்தக் கற்களை, அவற்றைக் கோபுரமாகக் கட்டி முடிக்க எவ்வளவு கணித ஆற்றல், கட்டடக் கலை நுட்பம், இயந்திரவியல் ஆளுமை இருந்திருக்க வேண்டும்! அனைத்திற்கும் மேலே எவ்வளவு மனித உழைப்பு இருந் திருக்க வேண்டும்! இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்துச் செயல்படுத்த வைக்க ஓர் அரசமைப்பு இருந்திருக்க வேண்டும்! அது, உழைப்புக்கேற்ற ஊதியம் கொடுக்கா மல் உத்தரவால் உழைப்பாளரை ஆட்டி வைக் கிற வல்லாண்மை அரசாங்கமாக இருந்தி ருக்க வேண்டும்! இல்லையென்றால் இது சாத்தியமில்லை.

அதனால்தான் மார்க்ஸ் கச்சிதமாகச் சொன்னார் - “கலைத்துறையின் சில முக் கியமான படைப்புகள் அதன் ஆரம்பகட்ட வளர்ச்சியில்தான் சாத்தியம்”. இன்னொரு தஞ்சை பெரிய கோயிலை மனித சமுதாயம் உருவாக்கப்போவதில்லை. அது ராஜராஜன் காலத்தில்தான் சாத்தியம். அவனது சமகா லத்து ராஜாக்கள் யாரும் இந்த சாத்தியப்பாட் டைப் பயன்படுத்தவில்லை. அவனது மகன் ராஜேந்திரன் கூட கம்பீரத்திலும் அழகிலும் சற்றே குறைவான ஒரு கோயிலைத்தான் கங்கைகொண்ட சோழபுரத்தில் கட்ட முடிந் தது. அதனால்தான் ராஜராஜன் பெருமைக்கு ரியவன் ஆகிறான். நமக்கோ இனி “எட்டவே முடியாத இலக்கு” ஒன்று நம் முன்னாலேயே எழுந்து நிற்கிறது! எனவே, இந்த ஆயிரமாண்டு அதிசயத்தைக் கொண்டாடுவது இயல்புதான்.

ஆனால், தமிழக அரசு இதைக்கொண்டா டிய விதம் இருக்கிறதே, அது பொருத்தமற்றது. தஞ்சைப் பெரியகோயில் எனும் கலை அதி சயத்தை, கட்டட அற்புதத்தைக் கொண்டாடு வதைவிட அது ராஜராஜனின் ஆட்சியைப் புகழ்வதில் அதிக ஆர்வம் காட்டியது. “மக் களாட்சியைத் திறம்பட நடத்தி வாழ்ந்தவன் ராஜராஜன்” என்று முதல்வர் கலைஞர் நற் சான்றிதழ் வழங்கினார். “மத்தியிலும் மாநிலத் திலும் ராஜராஜனின் காலத்தைப் போன்ற தொரு நல்லாட்சி நடைபெற்று வருகிறது” என்று ஒரு போடு போட்டார் காங்கிரசின் மத் திய அமைச்சர் ஜி.கே.வாசன். மாநில அமைச் சர்கள் விடுவார்களா என்ன? கலைஞர்தான் இன்றைய ராஜராஜ சோழன் என்று ஒருவர் சொல்ல, மு.க.ஸ்டாலின்தான் ராஜேந்திர சோழன் என்று இன்னொருவர் முத்தாய்ப்பு வைத்தார். இதற்கு மேல் உச்ச ஸ்தாயிக்குப் போக யாரால் முடியும்? விழா இனிதே முடிந்தது!

ஆனால், தெரிந்தோ தெரியாமலோ ராஜரா ஜன் காலத்து, சில யதார்த்தங்கள் இந்த விழா விலும் வெளிப்பட்டன. ஓதுவார்கள் சிலர் பரி தாபமாக ஒரேயொரு தமிழ்ப்பாடலைப் பாடி னார்கள். பத்மா சுப்பிரமணியமோ ஆயிரம் நடனமங்கையரோடு கணபதி துதியிலிருந்து தனது நிகழ்ச்சியைத் துவக்கி ஆதி சங்கரரின் ஒரு சமஸ்கிருதப் பாடலுக்கு அபிநயம் பிடிப் பதோடு நிகழ்ச்சியை முடித்தார். நிகழ்ச்சித் தொகுப்பாளரோ ராஜராஜன் ஓதுவார்களை மட்டுமல்லாது, வேதபாராயணக் காரர்களை யும் நியமித்திருந்ததை மிகப்பெருமையோடு எடுத்துரைத்தார்.

அது மட்டுமா? இன்று போல அன்றும் பல நூறு அழகு மங்கையர்கள் இதே கோயி லில் ஆடிப்பாடியதை நினைவு கூர்ந்தார். அன்று... இன்று... என்பதெல்லாம் ஒன்றாகிப் போனதாகப் புளகாங்கிதப்பட்டார். அன்று இதே பெரிய கோயிலில் ஆடிய மங்கையர்கள் தேவதாசிகள். இந்தக்காலத்துப் பெண்மணி களை அவர்களோடு ஒப்பிட்டது இவர்களுக் குப் பெருமை சேர்க்குமா என்றெல்லாம் அவர் யோசிக்கவில்லை. உற்சாகத்தின் உச்சியில் அவர் வருணித்துக் கொண்டு போனார். இந்த நிகழ்ச்சிக்குத் தான் ஏகப்பட்ட முக்கியத் துவம், விளம்பரம். நாட்டுப்புறக் கலைகள் எல் லாம் பின்னுக்குத்தள்ளப்பட்டன.

வருணாசிரம எதிர்ப்பையும், ஆணாதிக்க எதிர்ப்பையும் தனது வாழ்நாள் முழுக்க வெளிப் படுத்தி வந்த பெரியார் இன்று இருந்தால் என்ன சொல்லியிருப்பார்? பெரியாரின் மாண வர்கள் என்றும், அண்ணாவின் தம்பிகள் என்றும் சொல்லிக்கொண்டு முதல்வர் உள் ளிட்ட திமுக தலைவர்கள் நிகழ்ச்சியை ரசித் துக் கொண்டிருந்தார்கள். பக்கத்திலே பாஜக வின் இல.கணேசன் உட்கார்ந்திருந்தார். முடி வில் பேசிய முதல்வருக்கு அப்போதுதான் தனது தலைவர்களின் நினைவு வந்தது போலும். “இந்த நிகழ்ச்சியின் சில கருத்துக் களை நாம் ஒப்புக்கொள்ளாவிட்டாலும்” என்று சற்றே காபந்து செய்து கொண்டு பத்மா சுப்பிரமணியத்தைப் பிரமாதமாகப் பாராட்டி னார். மார்க்சியவாதிகளும் பரதநாட்டியம் என்கிற அற்புத நடனவடிவத்தை ரசிப்பவர் களே. ஆனால் அதன்மூலம் சொல்லப்படுகிற கருத்தையும் கவனிக்கிறார்கள்.

விஷயம் இதுதான். எத்தனை மூடிகள், எவ்வளவு திரைகள் போட்டு மறைத்தாலும் வரலாற்று உண்மைகள் வெளிப்பட்டுத்தான் நிற்கும். பழம்பெருமை பேசும்போது எது மெய் யான பெருமை என்பதை உணர்ந்து, எது இன் றைக்கு சமூக வளர்ச்சிக்கு உதவும் என்ப தைப் புரிந்து பேச வேண்டும். நடந்தது எல் லாம் நல்லதே என்று பேச ஆரம்பித்தால், பிறகு ஏன் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட் டங்கள் நடத்தப்பட்டன என்பதற்கு விடை கிடைக்காமல் போய்விடும்.

இதே ராஜராஜன் காலத்திற்குப் பிறகுதான் தமிழகத்தில் சாதியத்தின் கொடூரப்பிடி இறுகி யது. ஆணாதிக்கத்தின் ஆலவட்டம் அதிக ரித்தது. 1940களில் நடந்த இனாம்தாரி ஒழிப் புப் போராட்டங்களும், தேவதாசி முறை ஒழிப்பு இயக்கங்களும் அவை 20ம் நூற் றாண்டிலும் தொடர்ந்தன என்பதற்குத் தெளி வான சாட்சியங்கள்.

தஞ்சை பெரிய கோயிலுக்கு எப்படி ஓரா யிரம் ஆண்டு வரலாறு உண்டோ, அதே கால வரலாறு நிலப்பிரபுத்துவத்திற்கும் உண்டு. இந்தக்கோயில் அன்றையத் தமிழகத்தின் கலையியலுக்கும், கட்டடத் தொழில்நுட்பத் திற்கும் எப்படி அற்புதமான எடுத்துக்காட்டோ, அதேபோல இது அன்றைய நிலப்பிரபுத்துவ ஆதிக்கச்சமூகத்தின் நெடிதுயர்ந்த அடையா ளமும் கூட. புராதனங்களுக்கெல்லாம் இத்த கைய இரட்டைத் தன்மை உண்டு.

இதை உணர்ந்து முன்னதைப்போற்றிப் புகழலாம், பின்னதைப் படிப்பினையாக நினைத்துப்பார்க்கலாம். இத்தகைய தெளி வான வரையறை எல்லாம் தமிழக ஆட்சியா ளர்களுக்கு இல்லை. அவர்கள் கோயில் கட்டுமானத்தின் பெருமையோடு, ராஜராஜன் காலத்து சமூக அமைப்பையே புகழ ஆரம் பித்துவிட்டார்கள். கூடவே தங்களையே ராஜராஜனாகவும், ராஜேந்திரனாகவும் நினைத் துக் கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். இது அர சியல் ஆதாயக்கணக்கு, தற்பெருமை உத்தி.

இதில் எல்லாம் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள் என்றாலும், இதனால் எழும் சரித் திர அபத்தத்தைப் புரிந்து கொள்ள ராஜராஜன் காலத்து சமூக வாழ்வைச் சற்றே நினைவு படுத்த வேண்டியுள்ளது. அவன் தமிழைக் காத்தான், வளர்த்தான் என்பது எவ்வளவு தூரம் உண்மை என்பதையும் பார்க்க வேண்டும்.

Courtesy to: Theekkathir

No comments: