நம் பூமியில் சுமார் 70 % நீர் உள்ளது. இந்த நீர்தான் உயிர்களின் ஆதாரம். நீரின்றி உயிரில்லை. வட தென் துருவங்களில் பனி உறைந்து போய் கிடக்கிறது. மனிதன் தவிர பிற உயிரினங்கள் அந்த வாழ்நிலைக்குத் தகுந்தாற்போல் தம்மை தகவமைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. பனிப்பாறை இன்றி பனிக்கரடி, பனி சிறுத்தை, பெங்குவின், பனி நரிகள், சீல், மற்றும் பனிக்கட்டிகளில், அந்த உறைப் பனிக்குளிரை அனுபவித்து, சந்தோஷமாய் விளையாடி வாழும் விலங்கினங்கள்,, ஏராளம், ஏராளம். அந்த விலங்கினங்கள் பற்றி இன்னும் முழுமையாக நமக்குத் தெரியவில்லை. வெப்பத்தை உண்டாக்கி உணவு தயாரித்து பழகிய மனிதனுக்குத்தான் உறைபனியை அனுபவிக்கத் தெரியவில்லை. உறைபனிப் பாறைகளுக்குள் கோடிக்கணக்கான பாக்டீரியா, வைரஸ், பூச்சி வகைகள் வாழுகின்றன. ஆனால் வெப்பம் அதிகரித்தால் உயிரோடு இருக்க முடியாது. நம்மால்தான் அங்கு போய் நிம்மதியாய் வாழ முடியாது. நாம் அப்பகுதியைப் பற்றி ஆராய்ச்சி செய்ய, சில காலம் போய் தங்கி பணி செய்யலாம்.
இந்த பூமி நமக்கு மட்டும்தான் சொந்தமானதா? நமக்கு முன்பே இப்புவியை தனதாக்கிக் கொண்டு வாழும் உயிரினங்களையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டாமா? நம்மைவிடவாழ்விட சீனியர்கள் அவை. அவை உரிமைப் பிரச்சனை எழுப்பினால் நம் நிலைமை என்ன? ஏதோ பூமி பந்து என்பது நமக்கு மட்டும்தான் சொந்தம் என்று நாம் நினைத்து செயல் பட்டுக்கொண்டு இருக்கிறோம். இது நியாயமா. ? பனிக்கட்டி என்றால் அது உலகை குளிர்ச்சி படுத்திக் கொண்டு இருக்கிறது என்றுதான் நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அவற்றின் பணி மனிதனைவிட மகத்தானது என தற்போதைய அறிவியல் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. பனிப்பாறைகளும், பனிமலைகளும் உள்ளதால்தான், உயிரிகள் உலகின் அங்கமாக வாழுகின்றன. ஆறுகள் வற்றாத ஜீவநதியாய் ஓடி வருவதன் காரணி பனிப்பாறைகளே. உலகம் ஆதவனின் வெப்ப கதிர் வீச்சிலிருந்து உயிரிகளைப் பாதுகாப்பதும் இவைகளே.
இப்போது அவற்றிலிருந்து ஆதிகால உலகின் வெப்பநிலையை, வளிமண்டல நிலையை, மற்றும் கரியமில வாயுவின் அளவை புட்டு புட்டு வைக்கிறது பனிக்கட்டி துண்டுகள். அது மட்டுமா? அதைவிட முக்கியமாக, அப்போது பூமி எவ்வாறு தன் தாயகத்தை, சூரியனை சுற்றிவருகிறது என்ற இயற்பியல் தகவலையும் தருகிறது என்றால். . நீங்கள் நம்ப மாட்டீர்கள். ஆனால் இதுதான் உண்மை நண்பா. !
புவிபரப்பின் மேலிருந்து கிழே செல்ல செல்ல அங்குள்ள பனிக்கட்டியில் காணப்படும் காற்றின் அளவு குறைகிறதாம். பூமியின் மேல் படிந்திருக்கும் பனிக்கட்டியில் காற்று ஏராளமாய் கலந்துள்ளது. 15 மீட்டர் ஆழம் வரை இதே கதைதான். ஆனால் அதை விட ஆழமாக கிழே போகப் போக பனிப்பாறையில் உள்ள காற்றின் அளவு குறைந்து கொண்டே வருகிற தாம். இந்நிலை 50 மீட்டர் ஆழம் வரைமட்டுமே. அதற் கும் கீழே உள்ள பனிப் பாறையில் இருந்து பனிக் கட்டியை எடுத்துப் பார்த்தால், அது சொல்லும் கதையே வேறாக இருக்கிறது. ஆமாப்பா. . இங்கே காற்று பனிக்கட்டிக்குள் சிறைப்பட்டு விட்டது. காற்றுக் குமிழியை சுற்றி பனிக்கட்டிதான்!
பூமியின் மேல் படிந்து கிடந்த பனிப்பாறையைக் குடைந்து, அதன் ஆழ் மடி யில் புதைந்து போன காற்று. . அது வாழ்ந்த காலத் தின் வரலாற்றை மிகத் தெளிவாக. . சொல்லுகிறது. ஒருக்கால் அப்போது பதிவு செய்ய சாதனங்கள் இருந்து பதிவு செய்து வைத்திருந்தால் கூட, இவ்வளவு துல்லிய மான பதிவு கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
இந்த பனிக்கட்டி துண்டு அண்டார்டிக் பகுதியிலிருந்து எடுத்ததாகும். இவை 500 ஆண்டுகளுக்கு முன் இருந்த உலகின் வளிமண்டல நிலையை தெளிவாகச் சொல்கிறது. அப்போது கரியமில வாயுவின் அளவு 315 தான் . ஆனால் இன்று அதன் அளவு. 378 . கடந்த 30 ஆண்டுகளில், சுமார் 50 கரியமில வாயுவின் அளவு கூடி இருக்கிறது ஆழத்தில் இருந்து எடுத்த பனிப்பாறையின் சிறு துண்டு, அப்போது இருந்த வளிமண்டல காற்றின் அளவு, அதில் கலந்துள்ள வாயுக்கள், கரியமில வாயுவின் அளவு போன்றவற்றை, கண்ணாடி போல் பிரதிபலிக்கிறது.
- பேரா.சோ.மோகனா
No comments:
Post a Comment