மின்னணுக்கழிவுகளை வெளியிடுவதில் முன்னணியில் இருக்கப்போவது யார்? வளர்ந்த நாடுகளா? அல்லது வளரும் நாடுகளா? இன்னும் 6 முதல் 8 ஆண்டுகளுக்குள் வளரும் நாடுகள் வெளியேற்றும் மின்னணுக் கழிவுகளின் அளவு வளர்ந்த நாடுகள் வெளியேற்றும் மின்னணுக்கழிவுகளைப்போல இருமடங்காக இருக்குமாம். இப்படித்தான் சொல்கிறது Environmental Science & Technology வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரை. 2030 ஆம் ஆண்டில் வளர்ந்த நாடுகள் 200 முதல் 300 மில்லியன் கம்ப்யூட்டர்களை குப்பையில் வீசி எறிந்தால், வளரும் நாடுகள் 400 முதல் 700 மில்லியன் கம்ப்யூட்டர்களை குப்பைக்கு அனுப்புமாம்.
வளர்ந்த நாடுகளிலும், வளரும் நாடுகளிலும் தனிநபர் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருவது உண்மை. தொழில் நுட்பம் வளர்ந்து வருவதால் மின்னணு சாதனங்களின் ஆயுள் முன்பைவிட குறைந்து வருவதும் உண்மை. மின்னணு சாதனங்களின் பாகங்களில் நச்சுப்பொருட்கள் கலந்திருக்கும் நிலையில் பயன்படாத மின்னணு சாதனங்களை பாதுகாப்பாக அழித்தொழிக்கும் அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது.
உலகெங்கும் தூக்கி எறியப்படப்போகும் தனிநபர் கணினிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டதில், 2016 ஆம் ஆண்டுவாக்கில், வளரும் நாடுகள் வீசியெறியும் பயனற்ற கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை வளர்ந்த நாடுகள் வீசியெறியும் கம்ப்யூட்டர்களைக்காட்டிலும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கழிவுகளின் பாகங்களில் நச்சுப்பொருட்கள் இருப்பதால் மிகப்பெரிய பொருளாதார சமூக சீர்கேடுகள் உருவாகவும் வாய்ப்பு உள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மின்னணு சாதனங்களை அழித்தொழிப்பதற்கான சட்டதிட்டங்களில் உடனடியாக மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் என்பது அறிவியல் அறிஞர்களின் கருத்தாகும்.
No comments:
Post a Comment