Friday, April 30, 2010

பொதுமக்களின் உடல்நலப்பாதுகாப்பு யார் பொறுப்பு?

உலக சுகாதார தினம் (ஏப்ரல் 7) ஒவ்வொரு வருடத்தையும் போல் இந்த வருடமும் நம்மைக் கடந்து சென்றிருக் கிறது. ஆனால் இந்தியாவில் இப்போது தான் கிராமப்புற ஏழைகளுக்கு மருத்துவ கவனிப்பு, உடல்நலக் காப்பீடு போன்ற அடிப்படையான விஷயங்களைப் பற்றிப் பேசத் தொடங்கியிருக்கிறோம். பெரிய ஐந்து நட்சத்திர மருத்துவமனைகளோ தங்களுடைய சாம்ராஜ்யத்தை விரிவுபடுத் தும் கனவில் இருக்கின்றனர். பணபலம் மிக்க பிரபல புள்ளிகள் மேலும் பல நகரங்களில் மெகா மருத்துவமனை களைத் திறந்து வைத்துக்கொண்டு, புதிய புதிய நோய்களோடு மக்கள் வருவதை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கப் போகின்றனர். நாட்டு மக்களின் உடல் நலப் பாதுகாப்பை முற்றிலும் தனியாரிடம் விட்டுவிட்டு, காப்பீட்டுக்கான நிதிச் சுமையை மட்டும் அரசு ஏற்க வேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பு. அரசின் பயணமும் அவர்களது உள்ளக் கிடக்கையை நிறைவேற்றிவைக்கும் திசையில்தான் சென்று கொண்டிருக் கிறது.

80 சத நோய்களுக்குக் காரணம்

நம் நாட்டிலுள்ள எல்லா நோய்களை யும் எடுத்துக் கொண்டால் அவற்றில் 20 சத நோய்களுக்கு மட்டுமே சிகிச்சை யளிக்க மருத்துவமனைகளில் உள்ள ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள் பயிற்சி பெற்றவர்கள். நாட்டு மக்கள் அனைவருக்கு மான உடல்நலப் பாதுகாப்பை இந்த ஸ்பெஷலிஸ்டுகளிடம் மட்டும் விடுவது இன்ஸ்டண்ட் நூடுல் தயாரிப்போரிடம் பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் சத்துணவு அளிக்கும் பொறுப்பை விடுவதற்குச் சமமானது.

சுத்தமான குடிநீர் கிடைக்காதது, அசுத்தமான வாழ்நிலைச் சூழல்கள், காற்று உட்பட அனைத்துமே மாசுபட்டி ருத்தல், சத்துணவுப் பற்றாக்குறை, மனஅழுத்தம் ஆகிய ஐந்து காரணங்களால்தான் நம் நாட்டில் 80 சத நோய்கள் உருவாகின்றன. டைபாய்டு, மலேரியா, வயிற்றுக்கடுப்பு, காசநோய், தோல் மற்றும் நுரையீரல் பாதிப்புகள் போன்ற நோய்கள் வருடாவருடம் லட்சக்கணக்கானோரை பலிகொள்கின்றன. இதயக்கோளாறு, உயர் ரத்த அழுத்தம், குடல் புண்கள், ஆஸ்துமா, அலர்ஜி, மனநோய் போன்ற நோய்களுக்கு மனஅழுத்தமே காரணமாகிறது. மனஅழுத்தம் பலரும் நினைப்பதுபோல உயர்வர்க்கத்தினருக்கு மட்டுமே சொந்தமானதல்ல. பசி, வீடின்மை, வேலையின்மை, பணியிடங் களிலும் வீட்டிலும் கௌரவமின்மை போன்ற பல்வேறு காரணங்களால் ஏழைகளும் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்ற னர். அவர்களை நோய்வாய்ப்பட அனு மதித்துவிட்டு, தரமான மருத்துவ சிகிச் சை அளிக்கப் போவதாகக் கூறுவது மிகவும் குரூரமானது.

இரண்டடுக்கு உடல்நலக் கவனிப்பு முறை

உட்கொள்ளும் உணவின் தரம், குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் இறப்பு போன்ற பொதுசுகாதார அம்சங்களில் உலகத்தர வரிசையில் இந்தியாவின் இடம் மிகவும் கீழாகவே இருக்கிறது. சில நாடுகளில் மக்கள் உடல்நலம் எப்படிப் பேணப்படுகிறது என்று கவனித்து, அதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள முடியும். இங்கிலாந்தில் தேசிய உடல்நல சேவை அமைப்பு இருக்கிறது. அரசு நிதியுதவி அளிக்கிறது. அத்துடன் பணியிலிருக்கும் ஒவ்வொருவரது ஊதியத்திலிருந்தும் காப்பீட்டு நிதி பிடித்தம் செய்யப்பட்டு இந்த பொது நிதியில் சேர்க்கப்படுகிறது. பொதுவான மருத்துவர்கள், ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள் என இரண்டடுக்கு உடல்நலக் கவனிப்பு முறை கடைப்பிடிக்கப்படுகிறது. பொது வாக வரக்கூடிய பாதிப்புகளுக்கு பொது மருத்துவர்கள் சிகிச்சையளிக்கின்றனர். சிறப்பு கவனம் தேவைப்படும் நோயா ளிகள் மட்டுமே ஸ்பெஷாலிடி மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைக்கப் படுகின்றனர்.

வருமுன் காப்பதே சிறந்தது

மக்களைப் பீடிக்கும் 80 சத நோய் களை சில எளிமையான வழிமுறைகள் மூலம் தடுத்துவிட முடியும். வளர்ச்சி யடைந்த நாடுகள் தம் நாட்டு மக்களை சாதாரண நோய்களிலிருந்தும் தொற்று நோய்களிலிருந்தும் காப்பாற்றும் நட வடிக்கைகளை எப்போதோ எடுத்து முடித் துவிட்டன. மக்கள் அனைவருக்கும் சுத்த மான குடிநீரை அரசால் உத்தரவாதப் படுத்த முடியாதா? முடியும். குப்பைகளை அகற்றி மறுசுழற்சி செய்யவும் கழிப்பறை களைக் கட்டித்தரவும் முடியாதா? முடியும். ஒரு நோயைக் குணப்படுத்துவதை விட வருமுன் காப்பதே சாலச்சிறந்தது என் கிறோம். அதை வெறும் அலங்காரச் சொல்லாடலாக மட்டும் பயன்படுத்தாமல் அரசு, மருத்துவர்கள், மருத்துவமனைகள் இணைந்து நம் மக்கள் அனைவருக்கும் உடல்நலப் பாதுகாப்பை அளிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

‘தி இந்து’ நாளிதழில் டாக்டர் காவேரி நம்பீசன் எழுதிய கட்டுரை

No comments: